Saturday 30 April 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 4

Rate this posting:
{[['']]}
தந்தை
ந்தகுமாரனுக்கு சில காலமாகவே குழப்பம் செய்த தவறுகளுக்கு மறு ஜென்மத்தில் தண்டனை கிடைக்கும் என்கின்றார்களே... உண்மையா ? சிலர் இந்த ஜென்மத்திலேயே கிடைத்து விடுகிறது நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் என்று’’ம் சொல்கின்றார்கள் யாராவது நான் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கின்றார்களா ? நந்தகுமாரன் தான் உணர்ந்து கொண்டதாக நினைத்து வாழ்கிறான் நிகழ்காலத்தில்... ஆம் உணர்ந்து கொண்டும் இருக்கின்றான் இது மிச்சமுள்ள இவனது கடைசி காலம்வரை தொடருமா ?இவனுக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது இவன் விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை. இதை எல்லாம் தடுக்க இவன் தமிழ்த் திரைப்படங்களின் நாயகன் அல்ல ! யதார்த்த மனிதன் இவனுக்கு ஒரு வேதத்தில் சொல்லப்பட்டது இவனது நினைவுகளை மீட்டிச் செல்லும் அது //அநியாயங்களை தட்டிக்கேட்க முடியாதெனில் மனதளவிலாவது வெறுத்து ஒதுங்கு//

ம் இவன் இதைத்தான் கடைப்பிடித்து வருகிறான் இந்தக் கோபங்கள் நாளடைவில் விரிவாகி மனிதர்களுடன் பேசுவதையே நிறுத்தினால் என்ன ? என்ற விபரீத சிந்தனையைக் கொடுத்தது ஒருக்கால் நாம் ஊமையாக பிறந்திருந்தால் ? யாருடனும் பேசாமல்தானே வாழ்ந்திருப்போம் ஆகவே பேசாமல் வாழ்ந்து பார்ப்போமே நம்மால் நினைத்ததை நடத்தி காட்ட முடியும் என்ற நமக்குள் நாம் சோதனையும் செய்ய முடியுமே என்று மனிதர்களுடன் பேசுவதை நிறுத்தினான் அப்படியானால் நாம் யாரிடம் பேசுவது ?நாமே நம்மிடம் ? இப்படிப் பேசிக்கொண்டால் சமூகம் வேறு முத்திரையல்லவா குத்தும் வேண்டாம் அப்படியானால் மன ஆறுதலுக்காக எழுத்துகளோடு பேசிக்கொள்வோம் ஆம் இவன் பேசினான்... பேசினான்.. மணிக்கணக்காய், நாட்கணக்காய், எழுத்துக்களுடன் பேசினான் யாரிடமும் பேசமாட்டான் முதலில் இதை குடும்பத்து நபர்களிடமிருந்து தொடங்கினான் பத்து கேள்விகள் கேட்டார்கள் என்றால் அதில் மிகவும் அவசியமானது என்று கருதி மூன்று பதில்கள் கொடுப்பான் அதுவும் சுருக்கமான பதிலாகத்தான் இருக்கும் இதனால் பலருக்கும் இவனை பிடிக்கவில்லை அதனால் என்ன ? இவனுக்கு இந்த உலக மானிடர்கள் அனைவரையுமே பிடிக்க வில்லையே இதை அப்படியே வெளி நபர்களிடமும் கொண்டு வர ஆரம்பித்தான் பேச்சைக் குறைத்து தலை அசைப்பில் காலம் கடத்தினான் டீக்கடைக்குப் போனால் அமைதியாக தினசரி படிப்பான் சிந்துபாத் கதை முதல் வரிவிளம்பரங்கள் வரை. டீயோ, வடையோ விரல்கள் மூலம் சைகையால் கேட்பான் திரைப்படங்களின் நாயகன் பத்து நபர்களை அடித்து வீழ்த்துவது இவனுக்கு பிடிக்கவில்லை அதைவிட இதற்கு மக்கள் கை தட்டுவது பிடிக்கவில்லை திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தினால் என்ன ? தியேட்டருக்கு போவதை நிறுத்தினான் தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எப்படி இருப்பாரோ அதைப் போலத்தான் இவனது அப்பா கடைசி காலம்வரை இருந்தார் இன்றும் அந்தப் படத்தின் சுவரொட்டிகள் பார்த்தால் இவனது அப்பாவின் நினைவுகள் வந்து செல்லும் அவரின் உருவத்தையும், மீசையையும் பார்த்தாலே யாருக்கும் நடுக்கம் வரும் ஓங்கி அடிச்சா½ டன் வெயிட் என்று வசனம் பேசுகின்றார்கள் உண்மையிலேயே இவனது அப்பாவின் அடியும் இப்படித்தான் என்று வாங்கியவர்கள் சொல்லக் கேள்வி இவனுக்குத் தெரியாது காரணம் இவனது அப்பா இவனை மட்டும் அடித்ததில்லை சராசரி பிள்ளைகளைவிட இவன்மீது கூடுதல் பாசம் வைத்திருந்தவர் என்பதும் இவனுக்கு நன்றாகவே தெரியும் இவனது நியாயமான கேள்விகளுக்கு பல நேரங்களில் அவரே பதில் சொல்ல முடியாமல் திணறியது உண்டு திடகாத்திரமான மனிதர் அவர் காய்ச்சல் என்று படுத்ததாக சொல்லிக் கேட்டதில்லை அவர் சொல்லிச் சென்ற ஒற்றை வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்ததை இன்று அனுபவித்து உணர்கின்றான் இவனது சகோதரருக்கு பெண் பார்க்க போன இடத்தில் திடீரென விழுந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விஷேசமாக கவனிக்கப்பட்டு எட்டு நாட்கள் இருந்தார் அந்த எட்டு நாட்களும் இவனுக்காகத்தான் உயிர் இருந்ததோ என்று அடிக்கடி நினைப்பான் காரணம் ஊட்டி, மைசூர், பெங்களுர், திருப்பதி சுற்றுலா சென்ற இவன் வந்து பார்தவுடன்தான் உயிர் பிரிந்தது. ஆனால் ? இவன் அவரை மதிக்க மாட்டான் காரணம் சராசரி எல்லா மனிதர்களைப் போல இவனது அப்பாவும் சிறிய சிறிய தவறுகள் செய்ததே அன்று அவர் மனதை நோகடித்ததை நினைத்து இன்று இவன் ஆத்மார்த்தமாய் வருந்தி அழும் நிலை அதிகமாகி இவனை விரட்டுகிறது... இவனது தந்தையை இவன் வெறுத்ததற்கு காரணம் இவன் இளம் வயதிலேயே பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற சிந்தை குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் பெரிய பணக்காரன் ஆகவேண்டும் மிராசுதார் பரம்பரையில் பிறந்த நம்மை இப்படி கஷ்டப்பட வைத்து விட்டாரே என்ற கோபம் இவனுக்கு முன்னாள் பிறந்தவர்கள் எல்லோருமே நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றார்கள் இவனையும் நல்லாத்தான் வைத்து வளர்த்தார்கள் இவனது பார்வையில்தான் கோளாறு காரணம் புதுமை, புரட்சி, புண்ணாக்கு, என்ற சித்தாந்தம் இவன் பிறந்த பிறகுதான் தறுத்திணியம் தாண்டவமாடி இருக்கின்றது அதற்கு காரணம் பிறக்கும் பொழுதே சனியனை கக்கத்தில் கட்டிக்கொண்டு வந்தது இதே நந்தகுமார்தான்.

னது தந்தையின் மனதை இவன் எப்படியெல்லாம் காயப்படுத்தினானோ அதில் துளியளவும் மாற்றமின்றி மகன் இன்று இவன் மனதை காயப்படுத்துகின்றான் இதற்காக இவன் கவலைப்படவில்லை காரணம் கவலைப்பட்டால் மனம் வேதனிக்கும், வேதனை மன உலைச்சலைக் கொடுக்கும், உலைச்சல் கோபத்தைக் கொடுக்கும், கோபம் ஆத்திரத்தை உண்டாக்கும், ஆத்திரம் திட்டச்சொல்லும் திட்டல் சாபமாக மாறக்கூடும் சாபம் பலிக்கக்கூடும் காரணம் இவன் நியாயமானவனல்லவா ! இவனது கோபம் உண்மையானதல்லவா !அப்படியானால் ? இவனது மகனின் வாழ்க்கைதானே பாதிக்கும் இதற்காகவா ஆசைப்பட்டாய் நந்தகுமாரா இவன் வழக்கம்போல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பொதுவாக யாரோ ஒருவன் யாரையோ கொலை செய்து விட்டான் என்றால் கூட மறுநொடியே அவன் ஏன் ? கொலை செய்தான் என்றே இவன் மனம் நினைக்கும் அதற்காக அவன் செய்தது சரி என்று இவன் சொல்வதாக அர்த்தமல்ல ! ஒருவன் பிட்பாக்கெட் அடித்து விட்டான் காரணம் என்னவென்று பின்புலம் தேடுவான் அவனுக்கு பணம் வேண்டும் எதற்கு ? சாப்பிட அவனிடம் பணமில்லையா ? இல்லை. காரணமென்ன ? வேலையில்லை. ஏன் வேலையில்லை ? நாட்டில் எங்கும் ஊழல். ஏன் ஊழல் ? கொள்ளையர்களின் ஆட்சி கொள்ளையர்களை கொண்டு வந்தது யார் ? மக்கள். ஏன் கொண்டு வந்தார்கள் ?பணத்தை வாங்கியதால். இது தவறில்லையா ? அவனது இந்த இழிநிலைக்கு சமூகமும் ஒரு காரணம்தானே அதற்காக அடுத்தவன் பணத்தை எடுத்தது தவறில்லை என்று இவன் சொல்வதாக அர்த்தமல்ல ! இப்படித்தான் தனது மகனையும் நினைத்துப் பார்க்கின்றான் மகனும் நல்லவன்தான் நம்மைப் புரிந்து கொண்டதில் தவறு அன்று இவன் தனது தந்தையை தவறாக புரிந்து கொள்ளவில்லையா ?இன்று சரியாக புரிந்து கொள்ளவில்லையா ? மகன் பிறருடன் பேசுவதில் காட்டும் அன்பு நம்மிடம் பேசுவதில் சிக்கனம் என்ன ? இதை ஏன் ? நாம் அன்று தந்தையிடம் செய்த தவறுக்கு இன்று மகன் மூலமாய் இறைவன் கொடுக்கும் தண்டனையாக நினைத்துக் கொள்ளக்கூடாது ? அப்படியானால் இறைவன் இருக்கின்றாரா ? இனி நமது தந்தை வந்து தண்டனை தரமுடியாதே பிறராலும் தண்டனை தரமுடியாது கொடுத்தாலும் செவுலைப் பெயர்த்து விடுவோம் மகன் என்றால் பாசம் கையைக் கட்டி விடும் இதுதானே நடைமுறை யதார்த்தம் மகனுக்காகத்தானே வாழ்வு முழுவதையுமே இழந்தோம் இன்று கோபப்பட்டால் ? மகனின் வாழ்க்கைதானே பாதிக்கும் அல்லது நமது வாழ்க்கையைத்தான் ரிவர்ஸில் கொண்டு வர முடியுமா ? கறந்த பால் மடு ஏறுமா ? உடைந்த சங்கு ஊற்றுப் பொரியுமா ?கருவாடு மீன் ஆகுமா ? முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு ? வாழ்வின் விளிம்பில் நிற்கும் எனக்கு வீம்பு எதற்கு ? எதிர் வரும் முதுமை எனக்கு பரிசு தருமா ? தண்டனை தருமா ?
தனது மகன் நம்மை தவறாக புரிந்து கொண்டதற்கு காரணமென்ன ? சிறிய வயதில் அவனது மூளைக்குள் செலுத்தப்பட்ட தவறான தகவல்கள் யார் ? நமது மனைவியின் வகையறாக்கள் ஏன் ? நாம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு குழந்தையை நடுத்தெருவில் விட்டு விடுவோம் என்ற எண்ணங்கள் இன்று என்னவாயிற்று ? தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இன்று உணர்ந்து விட்டார்கள் இவர்கள் மட்டும்தானா தவறு செய்கின்றார்கள் சமூகத்தின் பெரும் பகுதியாளர்கள் இப்படித்தானே... ஆனால் ? அன்று நமது மகனின் பிஞ்சு மூளையில் செலுத்தப்பட்ட தவறான தகவல் களஞ்சியத்தை வெளியில் எடுப்பது யார் ? உடன் முடியும் செயலா ?தவறை உணர்ந்த அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை நமது கடைசி மூச்சுவரை பேசாதது மட்டுமே அதற்காக நமது மகனுக்கும் தண்டனை கொடுக்க முடியுமா ? நமது மனைவியின் மறைவோடு நமது செல்வத்தையும், மற்ற செல்வங்களையும் சுருட்டிக் கொண்ட பிறகு நமது முதல் செல்வத்தை மட்டும் மீட்டு வருவதற்கு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டதே இப்பொழுது மற்ற செல்வத்தோடு எங்கள் செல்வமும் உங்களுக்கே என்றால் ? வாயைப் பிழப்பதற்கு நந்தகுமார் சராசரி மானிடன் இல்லையே யாருக்கு வேண்டும் அவர்கள் சொத்து ? மகன் வெறுப்பதற்கு நாமும் ஒரு காரணம்தானே இருபது வருடங்களுக்கும் மேலாக தாயில்லாத பிள்ளையை பிரிந்து வாழ்ந்து விட்டு இப்பொழுது என் மீது பாசமழை பொழி என்றால் எப்படி ? பொருளைத் தேடித்தான் பிரிந்தோம் அது மட்டுமா நாட்டில் எப்படியாவது சொந்த பந்தங்கள் மகனுக்கு ஒரு சித்தியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டால் ? மகனுக்கு சித்தி அம்மாவாக முடியுமா ? இதுவும் மகனின் வாழ்வாதாரத்துக்கே இதைப் புரிந்து கொள்ள அவனுக்கு காலஅவகாசம் வேண்டுமே இதை நாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை ? காலம் வரும் காத்திருப்போம் வராமலும் போகலாம் மறந்து விடு மனமே எதையும் எட்டுத் திசையிலும் சிந்தித்து பார்க்கும் உனக்கு இது மட்டும் தெரியாதா ?

னவேதனை வரும் போதெல்லாம் யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றும் யாரிடம் சொல்வது ? யார் நின்று கேட்பார்கள் ? தனது மகனே நின்று கேட்காதபோது... வேறு வழி இவள்தான் ஆம் இவள்தான் தனது மனைவியின் கல்லறைக்கு செல்வான் அருகில் உட்கார்ந்து மனம் விட்டு சொல்லி அழுவான் ஆரம்ப காலத்தில் ஒரு சில வேண்டப்பட்டவர்கள் இவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுப் போவார்கள் பிறகு இவன் அடிக்கடி போக ஆரம்பித்தான் காரணம் இவனது மகனின் வார்த்தைகள் வாழ்க்கையில் பணமிருந்தும் நிம்மதியில்லாமை, பிடிமானம் இல்லாமை ஊர் மக்கள் வேறு மாதிரியாக பேசத் தொடங்கினார்கள் பிறகு விட்டு விட்டார்கள் சில நேரங்களில் நினைப்பான், நாமும் சராசரி மானிடனாய் வாழ்ந்திருந்தால் இந்த உலக சந்தோஷங்கள் அனைத்தையுமே அனுபவித்து இருக்கலாமோ ? இறைவன் அதற்கான பொருளாதாரத்தை தந்து தாரத்தை மட்டும் தரவில்லையோ... வாழ்வின் மிகப்பெரிய பிடிமானம் என்று நினைத்துக் கொண்டு இருந்தபோது மகன் தன்னை எடுத்தெரிந்து பேசியதும் கடந்த சில வருடமாக கிட்டத்தட்ட நடைபிணமானான் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் சிறுவயதில் யாருடனும் பேசாமல் வாழ்ந்த அந்த பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடுவோமா ? அந்த வாழ்க்கையில் ஒர் அமைதியை நாம் அனுபவித்தது உண்மைதானே... வீதியில் சென்றவனின் சிந்தனையைக் கலைத்தது கோயில் மணியின் ஓசை.

கோயில் வாசலில் படி ஏறாதவன் நின்று கோயிலைப் பார்த்தான் அந்தக் கோபுரக் கலசங்களைப் பார்த்தான் ஏனோ தெரியவில்லை கலசங்கள் இவனது கண்களுக்கு இன்று மட்டும் ஏதோவொரு சொல்ல முடியாத, விவரிக்க முடியாத உணர்வைக் கொடுத்தது... தெய்வம் இருப்பது உண்மையா ? நாளை நாம் இறந்து விட்டால் ? யாரிடம் செல்வோம் ? பேயாகி விடுவோமோ ? இல்லை அந்தரத்தில் நின்று கொண்டு நம்மகனை பார்த்துக்கொண்டு நிற்போமோ ? இல்லை என்னவள் எனக்காக காத்திருப்பாளோ ? அவளைக் காண்போமோ ?மீண்டும் அவளுடன் இணைந்து வாழ்வோமோ ? இல்லை அப்பா.. அப்பா... பாசமான அப்பா என்னை அரவணைக்க காத்திருப்பாரோ ?அவரை நாம் கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்போமோ ? இப்படி நடக்க சாத்தியமா ? யாரிடம் கேட்பது சந்தேகத்தை ? இதோ இறைவன் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்து இப்படி அமைதியான கோயில்களை கட்டி வைத்து இருக்கின்றார்களே... இது உண்மைதானோ ? உள்ளே செல்வோமா ? இல்லை பிரச்சினை வரும்பொழுது மட்டுமே நம்மைநாடி வருகின்றான் என்று இறைவன் கோபப்படுவாரோ ? அன்பே கடவுள் என்கின்றார்களே... கடவுள் கோபப்பட சாத்தியமில்லையே அப்படியானால் காளி கோயிலில் சூலாயுதம் வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக நிற்பதும் கடவுள்தானே... அது மட்டும் எப்படி ? நாம் யாருக்காவது துரோகம் செய்து இருக்கின்றோமா ? மனதறிந்து செய்ததில்லையே... அப்படியானால் மனதறியாமல் செய்திருக்கின்றோமோ ? அப்படித்தானே அர்த்தமாகின்றது அப்படியானால் அதற்கு பரிகாரம் என்ன ? மன்னிப்பா ? யாரிடம் கேட்பது ? இதோ இறைவன் என்கின்றார்களே... இவரிடமா ? தயங்கினான் உள்ளே செல்வோமா ? யாரும் பார்ப்பார்களா ? எவ்வளவு மக்கள் கோயிலுக்குள் சென்று வருகின்றார்கள் உள்ளே போய் என்ன செய்வார்கள் ? சிறு வயதில் அம்மா கையைப் பிடித்து அழைத்துச் சென்ற நினைவலைகள் வந்து போயின உள்ளே சென்றதும் அடுத்த தெரு மகாதேவன் மனைவியோடு வந்தவர் நந்தகுமாரை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சற்று விலகிச் சென்றார்கள் உள்ளே சென்று கோயிலின் உள்ளே வீற்றிருந்த தெய்வத்தை பார்த்தான் கைகள் நடுங்கியது மெல்ல உயர்த்தி வணங்கினான் மனதுக்குள் வேண்டினான் இறைவா எனது தவறுகளுக்கு தண்டனையை நான் ஏற்கிறேன் உம்மிடம் ஒரேயொரு கோரிக்கை செவி சாய்ப்பாய் என்ற நம்பிக்கையில்..
அன்று நான் எனது தந்தைக்கு கொடுத்த வேதனையை...
இன்று எனது மகன் எனக்கு கொடுத்த வேதனையை...
நாளை எனது பேரன் எனது மகனுக்கு கொடுக்காதிருப்பானாக...
அப்படியொரு வாழ்க்கையை எனது சந்ததியினருக்கு கொடு.
வணங்கி விட்டு வெளியேறினான் மனம் எதையோ இறக்கி வைத்து இலவம் பஞ்சு பறப்பது போன்ற உணர்வு நந்தகுமாருக்கு...

காலங்கள் உருண்டோடியது அன்று மகன் தன்னை விட்டுப் போகும் பொழுது மகனிடம் சொல்லியது நினைவில் ஓடியது..
//நீ என்னைப் புரிந்து கொள்ளும் பொழுது நான் இருக்க மாட்டேன் காரணம் உனக்கு அவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது எனது கணிப்பு அன்று அளவுக்கு அதிகமாக வேதனைப்படுவாய் அன்று நீ வேதனைப் படப்போவதை நினைத்து இன்று நான் வேதனைப்படுகிறேன்//
முதுகில் ஏதோ அழுத்துவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க.. கையில் கம்புடன் போ... போ.... சாப்பிடப்போ என்று சைகையால் சொன்னவனை பார்த்து நகைத்து விட்டு சமூகம் நம்மை இப்படி முடிவு செய்து விட்டதே என்றாவது ஒருநாள் மகன் நம்மை புரிந்து கொண்டு நம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று பேரன், பேத்தியை கொஞ்சி மகிழும் காலம் வராதா ? கண்டிப்பாக வரும்... ஒரு விதமான ஊமையாகிய பெரியவர் நந்தகுமார் எழுந்து போனார் அந்த குணாலயா மனநல காப்பகத்தின் சாப்பாட்டுக் கூடத்துக்கு...

முற்றியது (பெரியவர் நந்தகுமாருக்கு அல்ல) கதை.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 3

Rate this posting:
{[['']]}
அப்பாடி


அப்பாடி ஒருவழியா... புதுவீட்டுக்கு குடித்தனம் வந்தாச்சு...


கொசுவர்த்தி சுருள் சுழலுகிறது.... 45 வருடம் முன்னால்.... ஒரு பாட்டி அரக்கப்பறக்க கிராமத்திலிருந்து எப்பாவது வரும் பேருந்தை மூன்று மைல் நடந்து வந்து மணிக்கணக்கில் காத்திருந்து கையில் அதிரசத்தை சுட்டெடுக்க இரவு முழுதும் கண்விழித்து அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாமல் தயார்செய்து ஒரு வெளுத்துப்போன மஞ்சப்பையில் போட்டுக் கொண்டு கோட்டையை நோக்கி பயணிக்கிறார்... பேருந்து, சின்னையாபிள்ளை சத்திரத்தில் இறக்கிவிட.. மகனையும் மருமகளையும் பார்க்கும் ஆவலில் நடையை எட்டிப்போட்டு அடுத்த அரைமணியில் அடுக்கடுக்கான இண்டு இடுக்கில் கட்டப்பட்ட ஓட்டுவீடுகளில் ஒன்றில் வாசலில் நிற்கவும், கதவில் தொங்கிய பூட்டைக்கண்டவுடன் பாட்டிக்கு ஆவல் சட்டென இறங்கியது..அடுத்தவீட்டில் இருந்த அருக்காணி அக்கா பரபரப்புடன் வந்து, பாட்டியை (இது அந்தக்காலம்) வரவேற்று தன்வீட்டில் அமரவைத்து காப்பி தண்ணீ கொடுக்கிறார்.. அப்போதான் அந்த செய்தியை ரோட்டில் சைக்கிளில் சென்ற ஒருவர் அந்த ஒண்டுகுடுத்தனக்காரர்களுக்கு தெரிவித்து
செல்லவும், அந்த செய்தி வீடுமாறி வீடுமாறி அருக்காணி வீட்டிற்கு வரவும் தான்  பாட்டிக்கே தெரியவந்தது.. 1 மணி முன்னால்தான் தனது மகனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் பேரன் பிறந்திருக்கிறான்னு... 

இன்று... அந்தபேரனின் லேப்டாப் உயிர்ப்பிக்க, இந்த கதையை தட்டச்சு செய்யும் பொழுது அந்தப்பாட்டி எப்பொழுதோ போய்சேர்ந்திருந்தாள்.. பேரன் பிறந்தஉடன், அவனது அப்பாவிற்கு அடுத்தடுத்து அதிர்ஷடமும் வாய்ப்புகளும் வந்து சேர,, தான் சிறியஅளவில் பார்த்து வந்த டைலர் கடையை விரிவுபடுத்தி கிட்டத்தட்ட 30 நபர்கள் வேலைசெய்யும் அளவிற்கு வளர, சொந்தமாக கடைவீதியில் கடையும், குடியிருக்க மாடிவீடும் கட்டிக்கொண்டு, ஸ்கூட்டரில் தினந்தோறும் கடைக்கு செல்லவும், தொழில் நிமித்தம் ஏரியாவில் பிரபலமாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது. நாளொருபொழுதும், தனது மகன் வளர்ந்து வந்தாலும், தனது தொழிலேயே மொத்த கவனமும் இருந்தததால், அந்த மகன் தானாகவே எல்லாவற்றையும் கற்று அப்படி இப்படின்னு அலைந்து திரிந்து ஒரு சுபயோக தினத்தில் நல்லவேலையிலும் அமர்ந்துவிட்டார்.

அவ்வப்பொழுது, அந்தமகனுக்கு தனது அப்பா மேல் வெறுப்பு வரும் அளவிற்கு எந்தவிதமான கவனமும் தன்னிடம் காண்பிக்கவில்லைன்னு எண்ணிக்கொண்டு, வெறுப்புடனும், அடிக்கடி சண்டையிட்டும்
ஆனால் கூடவே இருந்தும் வந்துகொண்டிருந்தார். இப்படியே தினமும் வருடங்களும் நகர, அப்பா பார்த்த பொண்னையை கட்டிக்கொண்டும், ஆனொன்றும், பெண்ணொன்றுமாய் தகுந்த இடைவெளியில் பெற்றுக்கொண்டும் நமம் கதைமாந்தரின் வாழ்க்கை மனையிட்ம் சண்டையிட்டுக்கொண்டும் அப்பாவிடம் அம்மாவிடம் அவ்வளவாக ஒட்டாமலும் ஆனால், அதே வீட்டில் வளையவந்துகொண்டிருந்தார். மகன் சம்பாதித்தாலும், தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளவோ
வாங்கிவைக்கவோ முய்ற்சிசெய்யாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்க,உறவினர்களோ சொந்தமா ஒரு வீடு  வாங்க யோக்கிதை இல்லைன்னு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பார்க்கும்பொழுது ஜாடையாகவோ எப்படியோ பேசியது எல்லாம் இவருக்கு தெரிந்திருந்தது. விலைவாசியோ விர்ன்னு இறக்கைகட்டி ரியல் எஸ்டேட் தூக்கிசெல்ல ஒருகட்டத்தில் ஒரளவிற்கு நியாமான சேமிப்புகளை வைத்திருந்தும், மகனால்  ஒரு வீட்டைவாங்க இயலாமல் போய்விட்டது. 

இதுபோன்ற ஒரு சுபதின்த்தில்தான், அப்பாவிடம் எதையோ கேட்டு சண்டையிட, சத்தம் வலுத்து, சண்டை சமாதானம் செய்ய இயலாமல் அம்மா தவிக்க அப்பாவின் வாயிலிருந்து வந்தது.. நான் எனது சொத்துக்களைஎல்லாம் மடத்திற்கு எழுதிவைத்து உங்களை எல்லாம் தவிக்கவிட்டுவிடுவேன்னு... எதற்குமே அசராமல் இருந்த நம்மாளுக்கு
தேள்கொட்டியது போலாகிவிட்டது. அடடா, அப்பா பிடிவாதக்காரர் ஆயிற்றே உண்மையில் அப்படி செய்து விட்டால் நாம தெருவில்தான் போய் நிக்கனும்னு தோன, உடனே தனக்கென ஒரு எலிவளைசிக்குமா அதுவும்
தனது சக்திக்கேற்றவாறு இருக்குமான்னு மனைவிடம் புலம்ப.. நீண்டநாள்களாக மனவொற்றுமை இல்லாமல் இருந்த மனைவியும் இந்த விஷயத்தில் தூபமிட பத்தாதற்கு பிள்ளையும், பெண்னும் எனக்கென எந்த சொத்தை நீ வாங்கி வைத்திருக்கிறாய்ன்னு பிடிங்கி எடுக்க, பல்ஸரை ஸ்டார்ட் செய்து ஊரை வலம் வர ஆரம்பிச்சாரு நம்மாளு.  கட்டியவீடு, காலிஇடம், அடுக்குமாடி, சின்னது பெரிது, டவுனுக்குள் உள்ளே வெளியேன்னு 3 மாதத்தில் 100 கணக்கானவைகளைப் பார்வையிட்டு தனக்கென ஒரு வீட்டையயும் பிடித்து அனைத்து சாங்கியங்களையும் செய்து முடித்து இன்றுதான் .... அப்பாடி ஒருவழியா... புதுவீட்டுக்கு குடித்தனம் வந்தாச்சு...


பின்குறிப்பு... பிற்பாடு எனது உறவினர் மூலமாய் தெரியவந்தது, உண்மையில் எனது அப்பாவிற்கு நான் தனியாக ஒரு வீட்டைக்கட்டிப்பார்க்க வேண்டும் ஆசையாம் மகனுக்கு அப்பா வீட்டிலேயே இருக்க ஆசையாம், அதனால் அப்பா என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான் என்று பிளான் செய்து தனது சொத்தை மடத்திற்கு எழுதிவைக்கப்போகிறேன்னு பிட்டைப்போட்டாராம்... 
என்னாடா நடக்குது இங்க ? அப்பா உண்மையில் வில்லனா, நாயகனா,,, ஸ்ஸ்...... முடியல..... நீங்களே சொல்லுங்க நெட்டிசன்ஸ்.
Read more...

Monday 18 April 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 2

Rate this posting:
{[['']]}
தியாகத்தின் தழும்புகள்...!

பள்ளிகளின் கோடைக்கால விடுப்பில், பிள்ளை சும்மாத்தானே விளையாடிகிட்டு இருப்பான், ஏதாவது விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கட்டுமேன்னு, தன் நண்பர் ஒருவரின் ஆசாரி பட்டறைக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார் ஒரு  ஏழை தந்தை.

பணக்கார அய்யர் வீடு, அருகில் பட்டறை, சுதந்திரமாக சுற்றினான் சிறுவன், விளையாட்டு விளையாட்டாக லேசாக தொழிலும் கற்றுக் கொடுக்கப்பட்டது, பணக்கார வீட்டுனுள்ளும்  சுதந்திரமாக வலம் வந்தான் சிறுவன்...குடிசை வீட்டில் இருந்தவன், பணக்கார மாளிகையைப் பார்த்ததும் அதிசயமாக உணர்ந்தான்...வீட்டு மாமி அவனை நன்றாக நேசித்தாள்.

இவன் கொண்டு வரும் சாப்பாட்டைப் அவள் சாப்பிட்டு, அவள் சமைத்ததை சிறுவனுக்குக் கொடுத்தாள்...இவனுக்கு ஆச்சர்யமாக ஒன்றும் புரியவில்லை...இவனுக்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்கும் என்று அடிக்கடி கேட்டாள், வீட்டு நிலவரங்கள் கேட்பாள், மீன் பிடிக்கும் என்றான்...ஐய்யய்யோ அபச்சாரம் அபச்சாரம் என்றாள்...

மாமியின் இளைய மகன் நண்பனானான் உயிர் நண்பனானான், பலப்பல விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தார்கள்...

அப்பா ஒருநாள் கூடவே வந்தார்..."என்ன அய்யர்வாள்...பையனுக்கு வேலை கத்து குடுத்துட்டு இருக்கீரா ?" என்று, அணைச்சு வச்சிருந்த பாதி பீடியை பற்ற வைத்தார்....

"ஆமாம் ஓய் கத்துண்டு இருக்கான்"

"இல்லை, விடுமுறை முடியுதுல்ல, பிள்ளைய  மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் அதான் கேட்டேன்"

"சரி, அடுத்த லீவுக்கும் அனுப்பி வையும்"

அப்பாவுக்கு மாமி, பால் கலந்த கலவையில் சூடாக ஏதோ குடிக்க கொடுத்தாள். [[அப்புறம் அது ஹார்லிக்ஸ்'ன்னு தெரிந்து கொண்டேன்]]

அப்பாவும், அய்யரும் பேசுவதை மாமி கேட்டுக்கொண்டிருந்தாள்...

அடுத்தநாள், அய்யர் வெளியே எங்கேயோ போயிட்டார் ...மத்தியானம் ரகசியமாக சிறுவனை கிச்சனுக்குள் அழைத்தாள் மாமி, புரியாமல் போனான்.

அங்கே இவனுக்காக, இவன் விரும்பிய மீன் பொறித்தும், கறியாகவும் வைக்கப்பட்டு இவனுக்குப் பரிமாறினாள் மாமி, "ஐ மாமி நீங்க மீன் சாப்புடுவீங்க ?"  "ஸ்ஸ்ஸ் சத்தம்போடாம சாப்புடு முதல்ல" சாப்புட்டு முடித்ததும்..பலநாள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டே விட்டான் சிறுவன்.

"ஏன் மாமி தினமும் நான் கொண்டு வரும் கஞ்சி மற்றும் தேங்காய் தொவையலை நீங்க சாப்புடுறீங்க, எனக்கு தினமும் சுடு சோறும், விதவிதமா கூட்டுகளும் தாறீங்க, நீங்க மீன் சாப்பிட மாட்டீங்கல்லா ? அப்புறம் எனக்கு எதுக்கு மீன் சாப்பாடு தந்தீங்க "ன்னு கேட்டான்...

முகத்தில் கவலைப் படர.....கண்ணில் நீர் சிலிர்க்க, சிரிச்சிகிட்டே மாமி ஒரு கதை சொன்னாள்...

"தம்பி, முன்பு நம்ம ஊர்ல ஒரு கடுமையான  பஞ்சம் வந்துச்சு, அரிசியை கண்ணில் பார்க்கமுடியாத பஞ்சம், குருண அரிசிகூட கிடைக்கல, அதை வாங்கக்கூட காசில்லை...அப்பிடியே வாங்கினாலும் அநியாயமா கல்லையும் கூட அரச்சிப்போட்டு  தருவானுங்க, அப்போ நாங்களும் உங்க ஊர்லதான் இருந்தோம் ஒரு குடிசையில்...

அந்த ஊரில் மனிதாபிமானமுள்ள ஒரு அரிசி வியாபாரி இருந்தார்...பஞ்சத்தில் நாங்கள், பிள்ளைகள், தவித்ததைப் பார்த்து மனது பொறுக்காமல்...ரெண்டு சாக்கு மூட்டை அரிசி பணம் கொடுத்து வாங்கி, சைக்கிளில் வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வார், அங்கிருந்து திரும்பும்போது காய்ந்த மரச்சீனி கிழங்கு துண்டுகளை சீப்பாக வாங்கி, ஊருக்குக் கொண்டு வந்து, மற்ற வியாபாரிகள் காசுக்காக, கிலோ விலை மானாங்கன்னியமா வித்துகிட்டு இருந்தபோதும், அந்த மனிதர் கிலோ பதினைந்து பைசாவுக்கு எங்களுக்கு தந்து, பஞ்சம் தீரும்வரை பசியாற்றியவர், உடம்பில் சட்டை அணியாமல் அவர் கிழங்கை அளக்கும்போது, போலீஸ் அடிகளின் ரத்தவாருகள் கசிந்து கொண்டிருக்கும்...எங்கள் கண்ணிலும் ரத்தம் கசியும்...[[இப்படி அரிசி கடத்துபவர்களை அன்று ஜெயிலில் போடாமல், வடம் என்று சொல்லப்படும் கயிற்றால் போலீசார் அடித்து அனுப்பி விடுவார்களாம், பறிமுதலும் செய்வதில்லையாம், பஞ்சம் அப்படி]]

பஞ்சம் என்றால் பத்தும் இல்ல தம்பி...எல்லாமும் பறந்து போகுமில்லையா ? அப்பிடித்தான் கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் உங்க அம்மா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு சொல்ல...

"எங்கம்மாவை உங்களுக்கெப்பிடி தெரியும் மாமி ?"

"அதான் சொன்னேனே உங்க ஊர்லதான் அப்போ இருந்தோம்ன்னு ?"

"அப்போ அந்த அரிசி வியாபாரி ?"

"உங்க அப்பா."

அன்று இரவுதான் அப்பாவின் உடம்பில் பதிவாகிருந்த தழும்புகளின் அர்த்தம் புரிந்து கண்ணில் கண்ணீர் முட்டியது.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 1

Rate this posting:
{[['']]}
தந்தை



“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!... நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி,தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு வந்திடுங்க!...அப்பத் தான் நான் என் வேலையை சீக்கிரம் முடிக்க முடியும்!....”

“ சரிடி!...இதோ சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்திடறேன்!...” என்று கிளம்பினார் ரத்தினம்.

கறிக்கடை வேலுவுக்கு ஆபிசர் ரத்தினத்தைக் கண்டால் ரொம்ப மரியாதை! ஞாயிற்றுக் கிழமையானா அவரே வருவார் என்று வேலுவுக்கு முன்பே தெரியும்! அதனால் அவருக்கு வேண்டியதைஏற்கனவே ஒரு பக்கம் தயாராக எடுத்து வைத்திருந்தார். அவர் தலையைத் பார்த்தவுடன் உடனே எடுத்து வெட்டிக் கொடுத்து விட்டார்.

கோமதியின் கைப் பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை! ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளும் காலை நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும்.

காலை ஒன்பது மணிக்கு டைனிங் டேபிளில் ரத்தினத்திற்கும், அவர்களின் ஆசை மகள் ரஞ்சிதாவுக்கும் தட்டுக்களை எடுத்து வைத்து, அதில் நாலு இட்லி வைத்து இரண்டு கரண்டி சிக்கன் குழம்பைகறியோடு போட்டு, அருகில் ஒரு சிறிய தட்டில் சிக்கன் வறுவலையும் ஆவி பறக்க எடுத்து வைத்து விடுவாள். 

அடேயப்பா!.....அந்த இட்லிக்கும், அந்த சிக்கன் குழம்புக்கும் இருக்கும் டேஸ்ட்….சொல்ல வார்த்தைகள் இல்லை!

ஒரு பிடி பிடித்து விட்டுத் தான், அப்பாவும் மகளும் டைனிங் டேபிளில் இருந்து எழுவார்கள்!

ரத்தினத்திற்கு மகள் ரஞ்சிதா என்றால் உயிர்! அவளுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் செய்வார்.

மகளை பக்கத்தில் உட்கார வைத்துத் தான் சாப்பிடுவார். ஞாயிற்றுக் கிழமை அவர்கள் வீட்டில் என்றும் அசைவ உணவு தான்! ரஞ்சிதாவுக்கு எது எது பிடிக்கும் என்பது ரத்தினத்திற்கு அத்துபடி. தன் தட்டில் அவளுக்குப் பிடித்த பீஸ் எது விழுந்தாலும் அடுத்த நொடி அது பக்கத்து தட்டிற்குப் போய் விடும்!

ரஞ்சிதாவும் சிரித்துக்கொண்டே சாப்பிடுவாள். அப்பாவுக்கு தன் மேல் உள்ள பிரியம் அவளுக்குத் தெரியும்.

தனக்கு யாராவது தொல்லை கொடுத்தால் கூட அதை அவள் அப்பாவிடம் சொல்ல மாட்டாள். அவருக்கு வரும் கோபத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்!

இரண்டு மணிக்கு மீண்டும் அதே டைனிங் டேபிளில் அவர்கள் இருவரும் வந்து உட்கார்வார்கள். ரஞ்சிதாவுக்குப் பிடித்த சிக்கன் பிரைட் ரைஸ் ஒரு தட்டிலும் சிக்கன் 65 ஒரு தட்டிலும் இருவருக்கும் தனித்தனியாக சுடச் சுட இருக்கும்!

எங்கிருந்து தான் இவ்வளவு சுவையாகச் செய்ய இந்த கோமதி கற்றுக் கொண்டாளோ?

டி.வி. யில் அவள் பார்ப்பது செப் தாமுவின் சமையல் நிகழ்ச்சிகள் மட்டுமே!

“ஏண்டி!....உனக்குத் தான் இவ்வளவு பக்குவமா சமையல் செய்ய வருதே…அதற்கப்புறம் எதற்கடி இந்த சமையல் நிகழ்ச்சிகளை இப்படி விடாமல் பார்க்கிறே?...”

“ உங்களுக்கு சமையலைப் பற்றி என்ன தெரியும்?...அது ஒரு கலை…அதில் ஆயிரம் நுணுக்கங்கள் இருக்கு…..உன்னிப்பா கவனித்தா…புதுசு புதுசா நிறைய விஷயங்கள் கிடைக்கும்!...அதையும் நம் சமையலில்சேர்த்தா…இன்னும் ருசி கூடுமுங்க!.....”

“ போதும்!....போதும் இந்த சமையலே!....நம்ம ரஞ்சிதா காலையில் குழம்பு கறியும், வறுவலும் ஒரு பிடி பிடிச்சிடறா……மத்தியானம் சிக்கன் நூடில்ஸூம், சிக்கன் 65 யும் அவளுக்காக பார்த்துப் பார்த்துசெய்யறே!....அதனாலே அவ இப்ப சாப்பாடே ஒழுங்காச் சாப்பிடறதில்லே!...சிக்கனிலையே வயிற்றை நிரப்பி விடறா …இன்னும் நீ ருசியை அதிகப் படுத்தினா…அப்புறம் சொல்லவே வேண்டாம்….இப்ப எல்லாம்பத்திரிகைகளில் சிக்கனைப் பற்றி தாறு மாறா செய்தி வருது… இவ வயசுக்கு இன்னும் இவ பெருத்தா நல்லா இருக்காது!....”

“நீங்களே கண்ணு வைக்காதிங்க!....ஒரே பொண்ணு……ஆசை ஆசையா வளர்க்கிறோம்!...”



அன்று மத்தியானம் டைனிங் டேபிளில் ரஞ்சிதாவுக்காக வைத்த சிக்கன் நூடில்ஸூம் சிக்கன் 65 ம் தொடாம அப்படியே இருந்தது!

கோமதிக்கு ஆச்சரியமாக இருந்தது. காலையில் கூட ரஞ்சிதா இட்லிக்கு பிரிட்ஜில் இருந்து எடுத்து நேற்றைய சாம்பாரை தொட்டுக் கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது!

காலையில் வயிறு சரியில்லை போலிருக்கிறது என்று யதார்த்தமாக கோமதி இருந்து விட்டாள்!

ரஞ்சிதாவுக்கு என்ன வந்து விட்டது? சிக்கன் நூடில்ஸூம், சிக்கன் 65 ம் அவளுக்கு உசுரு. ஒரு ஞாயிற்று கிழமை சமைக்கா விட்டால் கூட எல்லோரையும் உயிரை எடுத்து விடுவாள்!

கோமதிக்கு ஒரே பதற்றம்!

“ என்ன கண்ணு!......ஏன் சமையல் பிடிக்கலையா?.....”

ரஞ்சிதா சிரித்தாள்.

“உன் சமையலை யாரம்மா குறை சொல்ல முடியும்?...”

“ பின் ஏன் நீ இன்று சிக்கனை கையில் தொடவே இல்லே?....”

“ போன வாரம் நாம நம்ம குல தெய்வம் கோயிலுக்குப் போனோம் இல்லையா?.”

“ ஆமா….அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?..”

“ நீ அங்கு சொன்னாயல்லவா?...நம்ம குல தெய்வம் ரொம்ப சக்தி வாய்ந்த சாமி...நாம நமக்குப் பிரியமானது ஒன்றை விட்டு விட்டு, நமக்குத் தேவையான ஒன்றைக் கேட்டால் நம்ம குல தெய்வம் நிச்சயம்நிறைவேற்றித் தரும் என்று ……. நினைவு இருக்கா? நான் நம்ம குல தெய்வத்திடம் எனக்குப் பிரியமான சிக்கனை விட்டு விட்டு…எனக்குத் தேவையான ஒன்றை தரும்படி வேண்டிக் கொண்டேன்!....இனி மேல்நான் சிக்கன் சாப்பிட மாட்டேன்!..”

“ அடியே….அது ரொம்ப கஷ்டமடி….அப்படி உனக்கு என்ன வேண்டுமென்று சொல்லு……உங்க அப்பாகிட்டே சொன்னா அது எங்கிருந்தாலும் கொண்டு வந்து கொடுத்து விடுவார் .....”

“ போம்மா…உன்னாலேயோ..அப்பாவாலேயோ வாங்கித் தரக் கூடிய சாமானா இருந்தா நான் ஏன் நம்ம குல தெய்வத்திடம் போய் வேண்டுதல் வைப்பேன்? …..”

“ அப்படி உனக்கு என்னடி வேண்டும்?...”

“ அதை இப்ப சொல்லமுடியாது! என் வேண்டுதல் பலித்த பிறகு சொல்கிறேன்!,,,” என்று சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

‘வயசு பதின்நான்கு முடிந்து விட்டது. இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் கோமதி.!

விளையாட்டைப் போல் நான்கு வாரங்கள் ஓடி விட்டன. ரஞ்சிதா சிக்கனைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை!

ரத்தினத்திற்கு அது ரொம்ப வித்தியாசமாப் பட்டது! அருமை மகள் தங்களிடம் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் நிச்சயமாகப் புரிந்தது! அவளுக்கு எது தேவை என்றாலும் அடம் பிடித்து அடுத்த நிமிஷமே வாங்கி விடும் சுபாவம் அவளுடையது! அப்படிப் பட்டவள் தன்னிடம் கூட மறைத்து விட்டு ஆண்டவனிடம் வேண்டுகிறாள் என்றால் ஏதாவது ஒரு முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும்! வயசுக்கு வந்த பெண் அவள்! நம்மிடம் சொல்லக் கூடாத விஷயமாக இருக்குமோ?..இந்த டீன்ஏஜில் தான் அவர்கள் உணர்வுகளை புரிந்து செயல் பட வேண்டியது நம் போன்ற பெற்றோர் கடமை!....ரத்தினம் ரஞ்சிதாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அவளை அறியாமல் உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.



அன்று ரஞ்சிதாவின் நெருங்கிய தோழி கோகிலா வீட்டிற்கு வந்திருந்தாள். கோகிலாவுக்கும் பதின்நான்கு வயசு தான் ஆகிறது. அவளுக்கு வயசுக்கு மீறிய வளர்ச்சி.

பார்க்க லட்சணமாக இருப்பாள். இருவரும் இந்த வருடம் ‘டென்த் ஸ்டேண்ட்டு’ ஒரே ஸ்கூலில் படிக்கிறார்கள் வகுப்பு மட்டும் வேறு வேறு. இருவரும் நெருங்கிய தோழிகள்! எப்பொழுதும் மனம் விட்டு பேசிக்கொள்வார்கள்! 

கோகிலா வந்தவுடன் இருவரும் ரஞ்சிதாவின் ரூம் கதவைச் சாத்திக் கொண்டு ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ கோகிலா!..... எனக்கு வர வர ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலையடி!.....”

“ ஏண்டி?..”

“உனக்குத் தெரியாதா?...வர வர அவர் தொந்தரவு தாங்க முடியலடி!....”

“ என்னடி பண்ணறது….இதை எல்லாம் எப்படி வெளியில் சொல்லறது?..அவர் ரொம்ப புத்திசாலி…நாம ஏதாவது சொன்னா பிரச்னையை நம்ம மேலேயே திருப்பி விட்டாலும் விட்டு விடுவார்…அது தான் என்னசெய்யறது என்று எனக்கும் தெரிய வில்லை!...”

“அது தான் எனக்கும் பயமா இருக்கு…எதையாவது சாக்கு வைத்து என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறார்…நேற்று என்னை பிராக்டிகல் கிளாசில் எதையோ தப்பா செய்து விட்டேன். என்று சொல்லி அதைப்போய் சரி செய்திட்டு வா..என்று என்னை ‘லேப்’ பிற்குத் போகச் சொன்னார். நான் ‘லேப்’பிற்குப் போனேன். அவரும் பின்னாலயே வந்து நெருக்கமா உரசிப் கொண்டே, என் கைகளைப் பிடித்து ஏதோ சொல்லிக்கொடுப்பது போல் பாவனை காட்டினார். நான் முறைத்துப் பார்த்தேன்.

உடனே அவர் “உனக்கெல்லாம் எத்தனை தடவை சொல்லிக் கொடுக்கிறது? படிப்பில் கவனம் இருந்தால் தானே?...” என்று சயின்ஸ் பாடத்தில் எதையோ கேட்கத் தொடங்கி விட்டார். நான் பேசாமல் ‘லேப்’பில்இருந்து வெளியில் வந்து விட்டேன்…குட் டச்’சுக்கும் ‘பேட் டச்’ சுக்கும் கூட நமக்கு வித்தியாசம் தெரியாதாடி?....”

“ஆமாண்டி….. அந்த சயின்ஸ் மாஸ்டர் எமகாதகனடி! லட்சணமா இருக்கிற எல்லாப் பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வதாச் சொல்லறாங்க! நீ எதாவது சொல்லப் போக அவர் நீ தான் அதற்குஅலைவது போல் கதையைத் திருப்பி விட்டாலும் விட்டு விடுவான்!.. அப்பாவி மாதிரி மற்ற டீச்சர்களிடம் எல்லாம் நடித்துக் கொண்டு பெண்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறான். அதனால்…அவன்சொல்வதை மற்றவர்கள் நம்பினால் நாம் என்ன செய்வது?....”

“ ஆமாண்டி இது விஷயத்தில் நல்லா யோசித்து தான் நாம எதையும் செய்ய வேண்டும்….கூட படிக்கிற பசங்களா இருந்தா போகிற போக்கில் நாமே சமாளித்து விடலாம்…நம்ம மாதிரி பொண்ணுக இந்த மாதிரிஆசிரியர்களிடம் சிக்கிக் கொண்டால் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பல இடங்களில் அசிங்கப் பட்டு விடுகிறார்கள்!......அதுமட்டுமில்லையடி! வேண்டுமென்றே என் சயின்ஸ் பேப்பரில் மார்க்குகளைக்குறைத்துப் போடுகிறார்…அதை எல்லாம் கூட நான் பொறுத்துக் கொண்டேன்….ஆனா …இப்ப .என்னை மற்றவர்கள் முன் கேவலமாப் பேசி என்னை அவமானப் படுத்தும் முயற்சியில் ஈடு படுகிறார்,,,”

“ரஞ்சிதா!...இந்த புனிதமான ஆசிரியர் பணிக்கு வந்தவங்க புத்தி ஏன் இப்படி மட்டமா இருக்கு?”

“ நேற்று நடந்ததை மட்டும் நான் எங்கப்பாவிடம் சொன்னா பெரிய பிரச்னை ஆகி விடும்.. அவர் ரொம்பக் கோபக்காரர் என்பது தான் உனக்குத் தெரியுமே?....”

“ அப்படி என்ன தான் நடந்தது?..”

“ நேற்று சயின்ஸ் வகுப்பு….ஆபிஸ் சர்க்குலரை ஆசிரியரிடம் கொடுக்க ஒரு அட்டெண்டர் எங்க வகுப்பறைக்கு வந்தான். அவனுக்கு இருபது வயசிருக்கும், நான் கிளாஸ் ரூமில் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பது தான் உனக்குத் தெரியுமே! அவன் வகுப்பறையிலிருந்து வெளியே போகும் பொழுது, என் பென்சில் தவறி கீழே விழுந்து உருண்டு போனது. அதை பார்த்த அந்த அட்டெண்டர் கீழே கிடந்த அந்தப்பென்சிலை எடுத்து என்னிடம் கொடுத்தான்.

நான் அதை வாங்கிக் கொண்டு “தேங்ஸ்!” என்று சொன்னேன்! உடனே நம்ம சயின்ஸ் மாஸ்டர் “ஒரு வயசு பையன் போனால் கூட விட மாட்டீங்களே!...வயசுக்கு வந்திட்டா எதற்குத் தான் இப்படிஅலையறீங்களோ!..” என்று சொன்னார்.

சிலர் சிரித்து விட்டார்கள்! எனக்கு உயிரே போய் விட்டது! இதை மட்டும் எங்கப்பாவிடம் நான் வந்து சொன்னால் நம்ம ஸ்கூலுக்கு ஒரு நாள் லீவு விட வேண்டி வந்திருக்கும்…எங்க அப்பா குணம் தான் உனக்கும் தெரியுமே!.”

“ அந்தக் காலத்தில் ஆசிரியரை குரு என்று சொல்லுவாங்க….. குருகுலத்தில் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பவர்களே குரு தான்! அதனால்தான் மாதா, பிதா குரு தெய்வம் என்று சொன்னாங்க!

இந்தக் காலத்தில்..ஆசிரியர் வேலை படிப்புக்கும் லஞ்சம்….வேலைக்கு வருவதற்கும் லஞ்சம்…அதனால் தான் அந்த புனிதமான பதவிக்கு பல கழிசடைகளும் பொறுக்கிகளும்........வந்திடறங்க!...நல்ல மாணவர்கள் தான் ஒரு நாட்டின் எதிர் காலம்…. என்பதை உணர்ந்து அரசு ஆசிரியர் பணிக்குத் ஆட்கள் தேர்வு செய்யும் பொழுது போதுமான அக்கறை காட்டுவதில்லை! அதன் விளைவு தான், இது!பத்திரிகைகளில் சிறுமிகளைப் பற்றிய பாலியல் பலாத்கார செய்தி வந்தால் அதில் கூடவே ஆசிரியர்கள் பெயர்களும் சேர்ந்தே வருது! அரசாங்கம் தான் இதை எல்லாம் புரிந்து, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆசிரியர் பணிக்கு ஆள் எடுக்க வேண்டும்! இதை எல்லாம் யோசித்து, யோசித்து எனக்கும் கவலை அதிகமாகி விட்டது!...”

“ நீ ரொம்ப கவலைப் படாதே! எங்க குல தெய்வத்திடம் நம் பிரச்னையை தீர்த்து வைக்கும் படி நான் வேண்டியிருக்கிறேன்!...எங்க குல தெய்வம் ரொம்ப சக்தி வாயந்தது… நம்பிக்கையா இரு….நம்பிரச்னையும் சீக்கிரம் தீர்ந்து போய் விடும்!..”

அதற்குள் கதவை யாரோ விடாமல் தட தட வென்று தட்டினார்கள்! எழுந்து போய் கதவைத் திறந்தாள் ரஞ்சிதா.

வெளியே ரஞ்சிதாவின் அப்பா!

“ அப்பா!...வந்து ….வந்து….”

“என்னம்மா…வந்து போயி!....நீங்க பேசதறதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்!....நீ உங்கப்பாவைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவு தானா?....நான் அநியாயத்தைக் கண்டு பொறுக்காத முரடன் தான்!...ஆனால் சிந்திக்கத் தெரியாதவனல்ல!...நீங்க பேசியதைக் கேட்ட பொழுது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது…இந்தக் காலத்துக் குழந்தைகள் வயசுக்கு மீறி சிந்திக்கிறீங்க……...எங்க காலம் மாதிரி இல்லே! உங்களுக்கு அறிவு அதிகம்! நீங்க பேசறதிலிருந்தே அதைப் புரிந்து கொண்டேன்!

ஆனா நீ தான் உங்க அப்பாவை இன்னும் சரியாப் புரிந்து கொள்ள வில்லை கண்ணு!...நீ வயசு வந்த பொண்ணு… உன்னைப் பற்றி தேவையில்லாமே மற்றவர்கள் பேசும்படியா நான் செயல் படுவேன்?....தப்படா கண்ணு! அம்மாவா இருந்தாக் கூட மனசு கேட்காம யாரிடமாவது புலம்பி விடுவா…..அப்பா அப்படி அல்ல!...பெண்ணின் எதிர் காலம் என்பது கல்யாணம் காட்சியில் மட்டும் இல்லே!....பெத்த தாய் பாசத்திலே அதைப் பற்றி மட்டும் அதிகம் சிந்திப்பா!...ஆனா பொறுப்புள்ள அப்பா இன்னும் ஒரு படி மேலே போய் சிந்திப்பார்! வயசு வந்த தன் பெண் பேரில் எந்த அவ பெயரும் வந்திடக் கூடாது!... சமுதாயத்தில் தன் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா யாரும் பேசி விடக் கூடாது என்பதிலும் ரொம்ப கவனமா இருப்பார்!...அதனால் தான் அப்பானா பல பெண்களுக்கு கொஞ்சம் முரடா தெரியுது! அப்பா பாசம் இல்லாதவன் என்று நினைத்துக் கொள்கிறாங்க!....அவர்கள் பாசத்தில் உங்க மானத்தையும், கௌரவத்தையும் சேர்த்துப் புதைத்து வச்சிருக்காங்க!.......அம்மா பாசத்திற்காக உயிரையே விடுவா….ஆனா அப்பா தன் உயிரை விட்டாவது தன் பெண்ணோட மானத்தையும், குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றுவார். அதற்கு பங்கம் வரும் பொழுது சில அப்பாக்கள் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொள்வாங்க!….வயசு பொண்ணுங்க அப்பாவைப் புரிந்து கொண்டு, தங்களுடைய ஆசையையும் எண்ணத்தையும் தாராளமா தங்களைப் பெற்ற அப்பாவிடம் சொல்லலாம்….எந்த அப்பாவும் தன்னோட பெண்ணின் நியாயமான ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டாங்க!.பருவத்தில் நீங்க சந்திக்கும் கஷ்டமான எந்த பிரச்னையா இருந்தாலும் அப்பாவிடம் நீங்க கலந்து பேசிட்டா அதுவே உங்களுக்கு யானை பலம்!..

காலம் ரொம்ப கெட்டுப் போச்சு! ..ஸ்கூலுக்குப் போகும் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு இப்படி எல்லாம் கூட தொல்லைகள் இருக்கும் என்று இன்று எத்தனை தாய்மார்களுக்குத் தெரியும்? பொண் குழந்தைகள் இதுமாதிரி விஷயங்களை முதலிலே பெத்த அம்மா கிட்டத் தான் முதலில் சொல்ல வேண்டும்…..அவங்க வயசுக்கு இது மாதிரி விஷயங்களில் நிறைய அனுபவப் பட்டிருப்பாங்க!....அதை .எப்படி டீல் பண்ண வேண்டும்என்று அவங்களுக்குத் தான் தெரியும்…பிரச்னை பெரிசாக இருந்து அவர்களால் தீர்க்க முடியாதென்று தோன்றினால், தேவையானதை மட்டும் குடும்பப் பெண்கள் வீட்டு ஆண்களிடம் கொண்டுபோவாங்க!..நல்ல வேளை என் காதில் இப்ப விஷயம் விழுந்து விட்டது!...இனி நீங்க உங்க கவலையை மறந்து சந்தோஷமா இருங்க!...இன்னும் நாலே நாட்களில் உங்கள் பிரச்னை எல்லாம் தீர்ந்துபோயிடும்…….நீங்க நிம்மதியா ஸ்கூலுக்குப் போங்க!...நான் பார்த்துக் கொள்கிறேன்!...”

“ எப்படியப்பா…அவ்வளவு உறுதியாச் சொல்லறே?...”

“ இன்னும் ஒரு வாரம் பொறுத்து வந்து கேள்!..சொல்கிறேன்!...” என்று சிரித்துக் கொண்டே போய் விட்டார்!

அடுத்த வாரம்.

சயின்ஸ் மாஸ்டர் யாரிடமும் மூச்சு விடாம தன் ஆசிரியர் வேலையை ரிசைன் செய்து விட்டு, வேறு எங்கோ தொழிற்சாலை வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதாக கேள்வி! 

ஞாயிற்றுக் கிழமை.

காலை டிபன் வேளை. டைனிங் டேபிளில் ரஞ்சிதாவுக்குப் பிடித்தவைகளை வழக்கம் போல் அவள் தட்டில் எடுத்து போட்டுக் கொண்டே இருந்தார் ரத்தினம்.

“ அப்பா!.... நீங்க சொல்ல விட்டால் நான் எதையும் சாப்பிட மாட்டேன்!....” என்று தட்டை தள்ளி விட்டு சிணுங்கினாள் ரஞ்சிதா.

“ எதைச் சொல்ல வேண்டும்?...”

“ நீங்க எங்க ஸ்கூல் பக்கம் கூட வரலே!...எப்படி இந்த மாறுதல்?..”

“ அதுவா?.... என் பிரண்ட் ராஜா ராமன் I.A.S. தான் நம்ம மாவட்ட எஸ்.பி. அவன் ஒரு டெரர்…அவன் ராமநாதபுரத்தில் எஸ்.பி. ஆக இருந்த பொழுது தான் நாலு என்கௌண்டர் நடந்து பெரிய பரபரப்பு ஏற்பட்டது….ஏதோ காரணம் சொல்லி உங்க சயின்ஸ் மாஸ்டரைக் கூப்பிட்டு விசாரணை செய்தானாம்! அவன் விசாரணை ‘ஒரு மாதிரி’ இருக்கும்!..எப்படியோ உங்க பிரச்னை தீர்ந்த் போச்சு!...இனி பேசாம.....அவரவர் வேலையைப் பாருங்க!..” என்றார் ரத்தினம் சிரித்துக் கொண்டே!


Read more...

Sunday 10 April 2016

வெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016

Rate this posting:
{[['']]}
வணக்கம் வலைப்பதிவர்களே....

வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....!! வெல்லுங்கள்.....!!!
 ********************************************
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 

********************************************

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.

7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும்.

********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும்.
அண்மைய சேர்க்கை: போட்டியின் கடைசி நாள் 15-06-2016 இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு இந்த சுட்டியை வாசிக்கவும்.

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது.

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்

********************************************
நடுவர்கள்:
முதல் சுற்று:

செங்கோவி

பால கணேஷ்

குடந்தை RV சரவணன்

சதீஷ் செல்லத்துரை 
ரஹீம் கஸாலி

வீடு சுரேஷ்குமார்

AG சிவகுமார் (மெட்ராஸ்பவன்)

(ஆனந்த விஜயராகவன்) கோவை ஆவி

தமிழ்வாசி பிரகாஷ்

அரசன்


இரண்டாம் சுற்று:

பிச்சைக்காரன்

ராஜ ராஜேந்திரன் 
கார்த்திக் புகழேந்தி

இறுதிச் சுற்று:

வா.மு. கோமு

செல்லமுத்து குப்புசாமி
********************************************
ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
Read more...