Friday 13 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 10

Rate this posting:
{[['']]}
அய்யா

பஸ் தடக்கென பிரேக் அடித்து நின்றபோது, தலை பக்கவாட்டில் மடேரென இடித்துக்கொள்ள விழிப்பு தட்டியது. தலையைத்தேய்த்துக்கொண்டே சரிந்திருந்த உடலை நேராக்கியபடி, பாக்கெட்டில் இருந்த மொபைலை தேடி எடுத்துப்பாத்தேன். மணி அதிகாலை 2.00. முன் சீட்டுகளில் ஓரிரண்டு சரிந்து கிடந்த தலைகள் மெதுவாக அசைவது அரையிருட்டில் தெரிந்தது. உடல் அசதியாக இருந்தது. பக்கத்து சீட்டுப்பெரியவர் உரிமையுடன் என்மேல் சாய்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். எழுப்ப மனமில்லை.

ஜன்னல் வழியாக சில்லென்ற காற்று முகத்திலடிக்க, வெளியே எட்டிப்பார்த்தேன். அந்த அதிகாலையிலேயே ஏதோ கோயில் திருவிழா. தூரத்தில் நடுப்பகுதியில் நெருப்புப்பொறியுடன் தீ ஜ்வாலை கொளுந்து விட்டெரிந்து கொண்டிருக்க, சுற்றுப்புறத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் அதிர்வேட்டு முழக்கத்துடன், மங்கல வாத்தியம், மைக் செட் சகிதம் அந்தப்பகுதியே கூட்டத்தில் திணறிக்கொண்டிருந்தது. பின், முன் வந்த வாகனங்கள் நான் வந்த பஸ்ஸைக்கடந்தும், முந்தியும் சென்றுகொண்டிருந்தன. சீரான தாளகதியில் பஸ் உறுமியபடி தடுமாறிக்கொண்டிருந்தது. பழையபடி சீட்டில் தலையை சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். அந்த திருவிழாவைப்பார்க்கும்போது, அய்யாவின் முகம் மனக்கண்ணில் வந்துபோனது. சிறிய வயதில், இதே மாதிரி ஒரு திருவிழாவால்தான் அய்யா கோபப்பட்டதை முதன்முறையாக பார்த்தோம். அந்த கோபத்தின் வீரியம் சுமார் இருபது ஆண்டுகள் அவரை பீடித்திருந்தது.

பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.

ஊரில் நேற்று சாயங்காலம் செட்டியார் சொன்னதைக்கேட்டதிலிருந்து, அய்யா, எதோவொரு ரூபத்தில் நினைவிற்கு வந்து போவதைத்தவிர்க்கவே முடியவில்லை. செட்டியார் சொன்னது இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

யப்பா, மவன் மருமவ பேரப்புள்ளைகளோட திருநள்ளாறு சனீஸ்வரங்கோயலுக்குப்போய்ட்டு நேத்து பொழுதுபோலதான் வூட்டுக்கு வந்தேன். வந்ததில இருந்து ஒண்ணு மனசபோட்டு அரிச்சிட்டே இருக்கு அதா சொல்லிப்புடலாம்னு பாத்தேன்…!

என்ன வெசயம் செட்டியாரே , சொல்லுங்க…

ஓ அய்யன் தருமன பாத்தம்பா…

எ.. என்ன சொல்றீங்க செட்டியாரே…

திடுக்கென எதோ ஒன்று அடிவயிற்றில் உருண்டது. அந்த கணத்தில் அய்யா எங்களை விட்டு நீங்கி, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் முழுதாக முடிந்திருந்தது.

அட கோயில்ல வெச்சித்தான் பாத்தேன். பேசலைன்னு வெய்யி… ஆனா பாத்து ரொம்பகாலமாச்சா… எனக்கே கொஞ்சம் தடுமாட்டம், அசப்புல அப்படியே தருமந்தான், ஆனா ஆளே மாறிப்போயிருந்தாப்ல…

அப்போது மனதிற்குள் ஆரம்பித்த குடைச்சல், அடுத்தநாள் செட்டியார் சொன்ன அந்த திருநள்ளாறு கோயிலுக்கு கிளம்பும்வரை விடவில்லை. இதோ இப்போதுகூட அய்யாவைப்பற்றி நினைக்கும்போது, கடந்த காலத்தில் அவர் விட்டுச்சென்ற காயத்தழும்பு மீண்டும் உயிர்பெற்று, உயிரை அறுக்கத்தொடங்குகிறது.

அய்யா…

எல்லோருக்கும் அவரவர் அய்யாதான் அவர்களது முன்னோடி, அய்யாவிற்கு பிடித்ததைப்பார்த்து, கேட்டு, உண்டு, அவர்களின் வழியாகவே நமக்கான உலகத்தை காணத்துவங்குகிறோம். எனக்கும் அப்படித்தான். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். இரண்டு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி. தம்பிக்கு சிறிய வயதிலேயே சவலை வியாதியால், கால்கள் துவண்டுவிட்டன. ஆனால், அய்யா, அவன்மேல் வைத்திருக்கும் அதீத அன்பிற்கு அது மட்டுமே காரணமல்ல.

என்னுடைய ஊர், பொள்ளாச்சியை அடுத்த ஒரு குக்கிராமம், பச்சைப்பசேல் வயல்வெளியுடன், கரும்பு, தென்னந்தோப்பு சூழந்த ஒரு அழகான சிறிய மலைக்கிராமம். நில உச்ச வரம்பு சட்டம் நடைமுறைக்கு வரும்வரை சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய விவசாயக்குடும்பம் எங்களுடையது. இப்போதும் ஓரளவு வசதியான மரியாதையான குடும்பம்தான். அய்யா, அம்மா, அண்ணன்கள், அக்கா, தம்பி என சந்தோஷமான குடும்பம் எங்களுடையது.

நான் உட்பட என் அண்ணன்கள் அனைவருக்கும் ஆதர்சநாயகன் எங்கள் அய்யாதான், கருமையான தேகம், ஆஜானுபாகுவான உருவம், முறுக்கிவிட்டமீசை, மூன்றுமுழ துண்டில், தலையில் எப்போதுமிருக்கும் கிரீடம் போன்ற தலைப்பாக்கட்டு, காலில் டயர் செருப்பு என ஆள் பார்க்க வாட்டசாட்டமாக இருப்பதால் ஊரில் எங்க அய்யாவுக்கென தனி மரியாதை. அய்யாவின் டயர் செருப்பு சரசரக்கும் சத்தம், அவர் தூரத்தில் வரும்போது கேட்டாலே, குதூகலமாக இருக்கும் குடும்பத்தில் சட்டென ஒரு அமைதி குடிகொள்ளும். இத்தனைக்கும், விவரம் தெரிந்து, அய்யா, எங்கள் அம்மா உட்பட யாரையும் இதுவரை கைநீட்டி அடித்ததில்லை.

புதிதாக யாராவது அந்த ஊரில் வெறும் தருமன் என்ற பேரைவைத்துக்கொண்டு அய்யாவைத்தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும், தலைப்பாக்கட்டி அல்லது மீசைக்காரர் என்றால் தான் யாருக்குமே தெரியும். நாங்களே அய்யாவை அந்த தலைப்பாக்கட்டியை இல்லாமல் பார்த்ததில்லை. சில சமயங்களில் பகலில் தூங்கும்போதுகூட தலைப்பாக்கட்டியுடன் தூங்குவார். பெரும்பாலான இரவுகளில் நாங்கள் தூங்கியபின்தான் வருவார். சமயங்களில் அண்ணன், அய்யாவைப்போன்ற தலைப்பாகட்டி கட்டிக்கொண்டு, அவர் நடந்துவரும் பாங்கை நடித்துக்காட்டுவதுகூட நடக்கும்.

முன்னோர்களைப்போலவே ஊர் விவகாரங்களில் முன்னோடும்புள்ளி எங்கள் அய்யா. அதனாலேயே எங்கள் குடும்பம் ஊருக்காக வெகு பொருளை இழந்திருந்தது.


பின்சீட்டில் நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். 
தூரத்தில் கேட்ட அந்த திருவிழா மங்கல வாத்தியம், வேட்டு சத்தம் மெதுவாக அதிகரித்து, மிக அருகில் கேட்பதாகத்தோன்றியது.






அப்போது, எங்கள் முப்பாட்டனார் காலத்தில் கட்டிய கோயில் ஒன்று ஊருக்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்தது. அந்தகோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம், கோயில் குள ஏலம், வாடகை வருமானம் உள்ளிட்ட கோவிலின் வரவு செலவு அனைத்தையும் பராமரிக்கும் அறங்காவலராக இருந்தார் எங்கள் அய்யா. பரம்பரை வழி பதவி அது. இந்த விருட்ச சிக்கலின் வேர்நுனி அந்த கோவில் தான்.



எங்கள் சிறுவயதில், சரியாக சொன்னால், 1997 வாக்கில் ஒருமுறை நாங்கள் வீட்டுத்தாழ்வாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அய்யா, கண்கள் சிவந்து, உடல் வியர்த்து கோபமாக வருவதைப்பார்த்தவுடன் நாங்கள் தூணிற்குப்பின்னால் மறைந்து கொண்டோம். இதற்குமுன் அய்யாவை நாங்கள் அந்தமாதிரி பார்த்ததில்லை. அன்று பார்த்த அந்தக்காட்சி, இன்றும் பசுமையாக நினைவில் தங்கியிருக்கிறது.

வழக்கத்திற்கு மாறான வேகத்தில் வந்த அய்யா, சட்டையை ஆணியில் மாட்டியபடி, முற்றத்திலிருந்த அண்டாத்தண்ணீரை சொம்பில் மொண்டு கால்களில் ஊற்றி, முகத்தில் விசிறியடித்துக்கொண்டிருக்க, அம்மா கையில் துண்டுடன் அரண்டுபோய் ஓடிவந்தாள். முகத்தில் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்க, துண்டை வாங்கியவர்,

என்ன நெனைச்சிக்கிட்டு இருக்கானுக இவனுக… கோயில் வரவு செலவுக்கு கணக்கு கேக்கறானுக…

வாயிலிருந்த தண்ணீரை வெறுப்புடன் துப்பிவிட்டுத்தொடர்ந்தார்,

யாரப்பாத்து என்ன கேக்கறானுக, ம்ம்… கேவலம் காசுக்காக கோயில் சொத்துல கை வைக்கறன்னு நெனைச்சிட்டானுகளா..?! இதுக்கெல்லாம் காரணம் யாருனு தெரியும்.

அய்யா பேசிக்கொண்டே போக, எங்களைப்போலவே அம்மாவுக்கும் என்னவெனப்புரியாவிட்டாலும், எதிர்கேள்வி கேட்காமல், தரையைப்பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தாள். திருவிழா நடத்த, கூடிய பஞ்சாயத்தில் ஏதோ சண்டையென புரிந்தது. அம்மா ஏதும் பேசவில்லை. சற்றைக்கெல்லாம், ஊர்ப்பெரியவர்கள் கூட்டம் வீட்டு வாசலில் குழுமியது. அதில் நடுநாயகமாக இருந்தவர்,

என்னங்க மீசைக்காரரே, இப்பிடி பொசுக்குனு கோவப்பட்டா எப்படிங்க, நாங்க என்ன உங்கள சந்தேகப்பட்டா கேட்டோம், திருவிழா வருதே, வரவு செலவ சரி பாக்கலாமேன்னு தான் கணக்க கேட்டோம், அதுக்கு இப்பிடி கோவிச்சுக்குறீரே…!

இவ்வளவு வருசமா இல்லாத புதுப்பழக்கம் என்னங்க அது… இல்லீங்க, இது நமக்கு சரிவராது, நீங்களும் மனசுல எதுவும் இல்லாம கேட்டு இருக்க மாட்டீங்க..

அதுக்கு சொல்ல வ…

பேசவேண்டாமென கையமர்த்தியவர்,


கணக்கு தான கேட்டீங்க, பொழுதோட கணக்கு வந்து சேரும், இனி உங்களுக்கு தோதான ஆள வெச்சி இதெல்லாம் பாத்துக்குங்க, இனி என்னை கூப்புடாதீங்க… 
அதோடு அய்யா அவர்களிடம் பேசப்பிடிக்காமல் வீட்டினுள்ளே போய்விட்டார். அதுதான் அவர்களுடனான அய்யாவின் கடைசி சந்திப்பு.



கூட்டம் அம்மாவை சமாதானப்படுத்த முயற்சிக்க, அம்மாவும் அய்யாவை மீற முடியாமல் உள்ளே போய்விட்டாள். வேறுவழியில்லாமல், ஊர்க்காரர்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அய்யா இல்லாமலேயே திருவிழாவை நடத்தி முடிக்க, அதோடு சரி, அந்த சம்பவத்திற்குப்பிறகு ஊர்த்திருவிழாவிற்கு மட்டுமல்லாமல், ஏறக்குறைய இருபது வருடங்கள், முழுதாக இருபது வருடங்கள்… மறந்தும்கூட அந்தக்கோயிலுக்கு அய்யாவும் போகவில்லை, எங்களையும் போக அனுமதிக்கவில்லை. அந்த கணக்கு கேட்ட விவகாரத்தை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக நினைத்துக்கொண்டோ என்னவோ, அதன்பின் அய்யா ஊர் பிரச்சனைகளிலும் கலந்து கொள்வதில்லை. என்றாவது அம்மா, அய்யாவிடம் கோவிலைப்பற்றிப்பேச ஆரம்பித்தாலே அய்யாவின் மாறும் முகபாவம், அம்மாவை மேற்கொண்டு பேசவிடாது.

மீசையை முறுக்கியபடி,

சூடு சொரணை வேணும்டி, என்னை மதிக்காத எடம் கோயிலா இருந்தாலும் அது எனக்கு துச்சம்தான்டி. கணக்கு கேக்கறானுகலாம்ல… திருவிழா நடத்த காசுதான் பிரச்சனைன்னு கேட்டு இருந்தா, வீட்ட வித்தாவது கொண்டுபோய் கொட்டியிருப்பேன். ஆனா…

இல்லைங்க.. ஊருத்திருவிழா… கொழந்தைகளையாவது…

ம்ஹும்… எம்புள்ளைக என்னை மாதிரிதான் வளரும், வளரணும்…

அய்யாவின் கண்மூடித்தனமான பாசத்தைப்போலவே, அவரது கோபமும் அம்மாவுக்கு புரிந்ததால், அவள் கோயில் ஆசையை அன்றோடு மறந்து விட்டாள். இப்போது நினைத்தாலும், ஒரு சாதாரண பிரச்சனைக்கு, அய்யாவின் இந்த முரட்டுப்பிடிவாதம் ஆச்சர்யமாகவும், சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கும். அய்யாவை நாங்கள் ஆதர்சமாக நினைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

2008 ல் நடந்த ஒரு சம்பவம், எங்கள் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டது, அது….

திருச்சி வந்தாச்சி, எல்லாம் எறங்கு…

கண்டக்டர் கத்தலில், அரைத்தூக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து எழுந்து சீட்டுக்கடியில், லக்கேஜ் பகுதியில் இருந்த பைகளைத் தேடியெடுத்து, குழந்தைகளை அள்ளிப்போட்டபடி, வரிசையாக இறங்க, நானும் இறங்கி மெதுவாக நடந்தேன்.

திருச்சி பஸ் ஸ்டேண்ட்.

அந்த அதிகாலையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியிலும் கைக்குழந்தைகளை சுமந்தபடி எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம் பெரிதாக ஒன்றும் சுமையில்லை. பையிலும் பணமில்லை என்பதே பெரிய ஆறுதலையும் தைரியத்தையும் தர, டீக்கடைக்குப்பக்கம் ஒதுங்கினேன். பீடியைப்பற்ற வைத்து, டீயைக்குடித்துக்கொண்டே சில பல விசாரணையின் பலனாக, ஏற்கனவே கூட்டமாயிருந்த அந்த கும்பகோணம் பஸ்ஸை தேடிப்பிடித்து அமர்ந்த சிறிதுநேரத்தில் பஸ் கிளம்பியது.

மீண்டும் கடந்தவைகள் எதையும் யோசிக்கக்கூடாதென மனதைக்கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். தூங்க முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. செல்போன் அடித்தது.

ஹலோ, அண்ணே, எங்கண்ணே இருக்க…?!

திருச்சில இருக்கன்டா பூபதி, கும்பகோணம் பஸ்ல போய்ட்டு இருக்கேன்…

சரிணே, திருநள்ளாறு போய்ட்டு கூப்புடுணே…

சரி நீ தூங்கு, காலைல அய்யாவ பாத்துட்டு கூப்புடுறேன்.

இல்லைண்ணே, நீ அய்யாவ பாத்துட்டு கூப்புடு அப்புறம் தூங்கறேன்.

சொன்னா கேட்கமாட்டே… சரி, காலைல கூப்புடுறேன்.

போனை கட் செய்து மேல் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

ஹும்.. பூபதி தூங்கமாட்டான். எங்க எல்லாரையும்விட சொல்லப்போனால் என்னைவிட அய்யாமேல உயிராக இருந்தவன் பூபதிதான். நாங்கள் அனைவரும் அய்யாவை விட்டு விலகியபோதும் தனிமரமாக நின்ற அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இவன்தான் பக்கபலமா இருந்தவன். செட்டியார், அய்யாவை திருநள்ளாறுல பார்த்த விஷயத்தை சொன்னதும், அண்ணன்கள், அப்புறம் என்ன என்ற பார்வை பார்த்தபோது, உடனே திருநள்ளாறு கிளம்பியே ஆக வேண்டுமென்று விடாப்பிடியாக நின்றவன். எனக்கும் உடனே கிளம்ப ஆசை இருந்தும், என்னை பின்னே இழுத்த ஒரே விஷயம், ஜோதி. எங்க அய்யா இப்ப திருநள்ளாறுல அனாதையா இருக்க அவளும் ஒரு காரணம். ஜோதி, என் அருமை மனைவி. 

எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருந்தப்ப 2008 வருஷம் ஒரு மறக்க முடியாத வருஷம். அந்த வருஷந்தான் எங்க குடும்பத்துல தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடந்தது. முதலில் என் கல்யாணம், சரியாக சொன்னால், அண்ணன்களுக்கெல்லாம் கல்யாணம் ஆன பிறகு நடந்த கடைசி கல்யாணம் அது.

என் கல்யாணம் வரை எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பமாத்தான் இருந்தது. முதல் அண்ணன் கல்யாணத்தன்றே, அய்யாவோட கோவத்துக்கு மருமவளுக, கல்யாணம் பண்ண பத்தாவது நாளே பசங்கள கூட்டீட்டு பிச்சிக்குவாங்கன்னு ஊருக்குள் பேசிக்கொண்டது சரியாக என் இரண்டாவது அண்ணன் விஷயத்தில் நடந்தது.

குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஒன்று சேர்ந்து, ஒருநாளில் பூதாகரமாக மாற, இருந்த சொத்து, விவசாய நிலங்களைப்பிரித்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு திசையில் போன அடுத்த மாசமே அய்யாவுக்கு அடுத்த அடி.

அம்மா காலமாகி விட்டாள்.


பஸ் அரைவட்டமடிப்பதை உணரும்போதே, அனைவரும் எழுந்து அவசர அவசரமாக இறங்குவதற்கு தயாராயினர். கும்பகோணம் வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு நானும் இறங்க தயாரானபோது, விடியத்தொடங்கி இருந்தது. அதிகாலையிலேயே பசி வயிற்றைக்கிள்ள, முதலில் திருநள்ளாறு பஸ்ஸை தேடுவது பிறகு சாப்பிட ஏதாவது, என முடிவு செய்து, திருநள்ளாறு பஸ்ஸை தேடத்தொடங்கினேன். கையிலேயே வைத்துக்கொண்டு தேடுவதைப்போல, நான் வந்திறங்கிய கும்பகோணம் பஸ் அருகிலேயே திருநள்ளாறு பஸ் இருப்பதை, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டை முழுதாக இரண்டுமுறை சுற்றியபிறகுதான், தாமதமாகத்தெரிந்து கொண்டேன். 
பஸ்ஸுக்கு பக்கமாக இருந்த டீ கடையில் அவசரகதியில் டீ, பன் சாப்பிட்டுவிட்டு, திருநள்ளாறு பஸ்ஸில் ஏறி, கடைசி சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.



திடீரென தோன்றியது, நான் திருநள்ளாறை சேரும்நேரம், அய்யா ஒருவேளை கோவிலைவிட்டுக்கிளம்பியிருந்தால்…

எண்ணத்தைமாற்றி, மனதைத்தேற்றிக்கொண்டேன்.

திடீரென முன்சீட்டில் குழந்தை வீறீட்டு அழ ஆரம்பிக்க, குழந்தையின் தந்தை குழந்தையைத்தேற்ற படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். என்னென்னவோ செய்தும் குழந்தை படியவில்லை. பஸ்ஸில் அனைவரும் முகத்தை சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்க, பஸ்ஸுக்கு வெளியே எங்கிருந்தோ வந்த அம்மா, குழந்தையை அவரிமிருந்து வெடுக்கென பிடுங்கி, அவரை முறைத்தவாறே குழந்தையை அள்ளி அணைத்த நொடியில் குழந்தை நிம்மதியாகத்தூங்க ஆரம்பித்தது.

அம்மா…

எங்கள் அம்மா காமாட்சி…

நாங்கள் ஒவ்வொருவராக குடும்பத்தை விட்டு பிரியும்போதும், அம்மாதான் அழுது வடித்தாள். ஆனால் அய்யா கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அம்மா, உயிரோடு இருக்கும்வரை அய்யாவின் தன்மானம், பிடிவாதத்தை அவளும்தான் சுமந்தாள். தேக்குமரம் மாதிரி நின்றவர், அம்மா இறந்ததால் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். அய்யாவுக்கு அம்மா வெறுமையை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை. அம்மாவின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு, சொந்தபந்தம், வெளியூரில் தங்கிவிட்ட அண்ணன்களெல்லாம் கலைந்தபோது, அய்யா தனியாக இருந்தார். வேறு வழியில்லாததால், அதுதான், நான் செய்த மிகப்பெரும் தவறாக மாறப்போகிறதெனத்தெரியாமலேயே அய்யாவை என்னுடன் அழைத்துச்சென்றேன்.


ஆரம்பத்திலிருந்தே ஜோதிக்கு, அய்யா, குடும்பத்தில் இருப்பதில் உடன்பாடே இல்லை. விருப்பமில்லையென்றாலும், கொஞ்சநாள் எல்லாம் அமைதியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இல்லை, போவது மாதிரி இருந்தது. அய்யாவும் இப்பெல்லாம் யாருடனும் சரியாகப்பேசுவதில்லை. முன்னிருந்த வேகம், சிறிது தளர்ந்து போனதாகவே தோன்றியது. 
அதே வருஷம் ஆடிமாதத்தில் ஒருமுறை நான் முக்கிய வேலையாக வெளியூர் போயிருந்தேன். பத்துநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்தபொழுது எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. ஆனால், அய்யாவை காணவில்லை என்பதைத்தவிர…!



விசாரித்ததில் அய்யா வீட்டை விட்டுப்போய் அன்றுடன் ஐந்து நாள் ஆனது தெரிந்தது. ஜோதிக்கும் அய்யா எங்க போனாரென்ற விபரம் தெரியவில்லையென சாதித்தாள், அதட்டிக்கேட்டதற்கு,

உங்கய்யாவோட வீம்புக்கு அளவே இல்ல, சாப்பாட்டு தட்ட கொஞ்சம் வெரசா வெச்சா அது குத்தம், சோறு போட்டா அதுல ஒரு குத்தம், தண்ணி கேட்டு எடுத்துட்டுப்போக கொஞ்சம் தாமசமான அதுல ஒரு குத்தம், எல்லாத்துலயும் குத்தம்… அவர வெச்சி என்னால தக்காட்ட முடியாது, ஆனா, அவரு காணாமப்போனதுக்கு நா காரணங்கெடையாது, விட்டா நாந்தான் அவரு கழுத்தப்புடிச்சி தள்ளுனேம்பீங்க போலயே…!

நா ஊருக்குப்போகும்போது நல்லாதான இருந்தாரு, எப்படி திடீர்னு ஒரு மனுசன் காரணமேயில்லாம வீட்டை விட்டுப்போவாரு..!

தயங்கியபடி,

நா என்னத்த கண்டேன், வெள்ளிக்கெழமை, உள்ளூருல இருக்குற கோயிலு, போய்ட்டு வந்ததுல இருந்தே உர்ர்’ருனு தான் இருந்தாரு, அதுக்கு நா என்ன செய்ய…! 

எல்லாம் புரிந்தது. அய்யாவின் பிடிவாதத்தால், அப்போதுவரை எங்கள் குடும்பத்தை சேர்ந்த எவரும் அந்தக்கோயிலுக்கு போனதே இல்லை.


இவள் போயிருக்கிறாள்.


அய்யா ரோஷத்தின் வீர்யம் இன்னும் குறையவே இல்லை எனப்புரிந்தது. நானும் கைக்கெட்டும் தூரம்வரை என்னால் முடிந்த அளவு தேடிப்பார்த்தேன். அண்ணன்களுக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படி அவர்களால் இதை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிகிறதென குழம்பினேன். அப்பிடியே கொஞ்சநாளில் நான் உட்பட எல்லோரும் அய்யாவை மறந்தும் போனோம். எப்பேர்ப்பட்ட பிணைப்பையும் காலம் என்ற வஸ்து கரைத்தே விடுகிறது. ஒருகட்டத்தில், அய்யா கொஞ்சம் கொஞ்சமாக மழைநீரில் அழிந்த மாக்கோலம் போல, நினைவிலிருந்து கரைந்து, மறைந்தே போனார், எல்லாம் செட்டியார் அந்த தகவலை சொல்லும்வரைதான்…



எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆரவார சத்தத்தில் கண்ணை விழித்துப்பார்க்கவும் நன்றாக விடிந்திருந்தது. பஸ், திருநள்ளாறு வந்து சேர்ந்திருந்தது. பஸ்ஸை விட்டு. இறங்கிய உடனே கோயிலைவிட கண்கள் முதலில் அய்யாவைத்தேடி அலைந்தது. கோயில் செல்லும் வழி கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது. கூட்டத்தில் எதிர்ப்படும் மீசைவைத்த, தலைப்பாக்கட்டிய ஆட்களை கடக்கும்போதெல்லாம் அடிவயிற்றில் மெல்லிய இனம் புரியாத உணர்வு சிலிர்த்து அடங்கியது. எதிர்ப்படுவோரிடம் வழிகேட்டு, கோயில் குளத்தை நோக்கி சென்றேன்.

கோயில் குளப்படிகள் துணிகள், செருப்பு, மனிதர்கள் என சகலவித வஸ்துகளும் நிறைந்து காணப்பட்டது. எதிர்ப்பட்ட சிறுவன், ஒரு கை நிறைய நூல் துண்டுகளையும், மறுகையில் சோப்பு எண்ணை பொட்டலத்தையும் வைத்துக்கொண்டு வேகமாக என்னைநோக்கி வந்தான்.

ணா, நளன் குளம்ணா… குளிச்சா பாவம் எல்லாம் போகும்ணா, துண்டு, சோப்பு வாங்கிக்கோங்க….

தேவைதான், பின்னாலே நடந்து வந்தவனிடம், நின்று துண்டு சோப்பு வாங்கிக்கொண்டே கேட்டேன்,

தம்பி, இங்க, கோயில்ல தலைல பெருசா தலைப்பா கட்டிக்கிட்டு, பெரிய மீசை வெச்சிட்டு யாரையாவது பாத்துருக்கியாப்பா…?

தலைப்பா கட்டீட்டா… அப்டி யாரையும் பாத்ததில்லையேணே…


சரி, இந்தா…! காசை கொடுத்துவிட்டு, துண்டையும் சோப்பையும் வாங்கிக்கொண்டு, குளத்தை நோக்கி நடந்தேன். 
துணியை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளத்தில் முழுகியதில் பாவம் கரைந்து போவதாக தோன்றியது. நன்றாகக்குளித்து, கரையேறி, துண்டில் துடைத்து, துடைத்த துண்டை குளத்திலேயே விட்டுவிட்டு, மன நிம்மதியுடன் உடைமாற்றிக்கிளம்பி, கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அய்யாவை எப்படிக்கண்டுபிடிப்பது என்ற எந்த முன்யோசனையும் இல்லையெனினும், ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப்பின் அய்யாவை பார்ப்பதை நினைக்கும்போதே, நீண்டநாளைக்கு முன் தொலைந்த ஒன்று, கையில் கிடைத்தது போல கிளர்ந்தது மனது. மிகுந்த எதிர்பார்ப்புடன் கண்கள் சுழல சுற்றிப்பார்த்தபடி எதிர்ப்பட்ட கோவில் பணியாளர்கள், உள்ளூர் கடைக்காரர்களிடம் அய்யாவின் அடையாளத்தை சொல்லி, விசாரிக்க ஆரம்பித்தேன்.



பூபதிக்கு ஏற்கனவே நான்குமுறை பதில் சொல்லியாகிவிட்டது. அய்யாவின் அடையாளம் அங்கு யாருக்குமே பிடிபடவில்லை. இப்படியே, கோவிலை சுற்றிவந்ததிலேயே ஏறக்குறைய நேரம் மதியத்தை நெருங்கி விட்டது, முதன்முறையாக ஒரு மெலிதான பயம் உள்ளுக்குள் தோன்றி மறைந்தது. ஆனாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்க, மீண்டும் தேடல் ஆரம்பமானது. பசி வயிற்றைக்கிள்ள, சாப்பிட ஹோட்டலைத்தேட வேண்டுமென்பது தாமதமாக உறைத்தது. கண்கள் சுற்றித்தேடியபடி நடக்க, யதேச்சையாக தூரத்தில் மண்டபத்தில் பார்வை நிலைத்தது. அந்தக்கோயில்மண்டபப்படியில் பக்கவாட்டில் சாய்ந்தபடி, சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு வயதான பெரியவரின் ஜாடை அப்படியே அய்யாவின் முகத்தை நினைவுபடுத்த, மீண்டும் உற்றுப்பார்த்தேன்.

இடுங்கிய கண்களுடன், முறுக்கிவிட்டுத்தோற்றுப்போன அந்த மீசை, பழுப்பேறிக்கலைந்துபோன தாடிக்குள் காணாமல் போயிருக்க, தரையில் விரிக்கப்பட்டிருந்த துணியில் சில்லறைக்காசுகள் சிதறியிருந்தன. எனக்கு அடிவயிற்றில் ஏதோ பிசைய ஆரம்பிக்க, தூக்குபோணியிலிருந்த சோற்றை உருட்டி, வாய்க்கு கொண்டுபோக முயற்சி செய்துகொண்டிருந்தவர் அய்யாவே தான்...!

அ…அய்…யா…!!!


உடை பழுப்பேறிக்கிழிந்து, ஆளே மாறிப்போயிருந்தார். அய்யாவின் கம்பீரமான அந்த தலைப்பாக்கட்டி தரையில் விரிக்கப்பட்டிருந்ததைப்பார்த்தபோது ஒருநிமிடம், என்னையும் அறியாமல் பொங்கிய கண்ணீர், கன்னத்தை நனைத்தது. மனதின் தவிப்பும், அங்கலாய்ப்பும் சேர்ந்து முன்னே தள்ளி, ஆவேசம் வந்தவனைப்போல ஓட முயற்சித்த அதே நொடியில், கண்கள் இருண்டு, கால்கள் பின்ன, அப்படியே தடுமாறியபடி, மண்டபத்திட்டில் அமர்ந்தேன். ஒருநொடியில் உடலிலும் மனதிலும் இருந்த பலமெல்லாம் வடிந்து விட்டதைப்போல தோன்றியது. வாயை இரண்டு கைகளாலும் பொத்தியபடி, ஒருகணம் ஐயாவைப்பார்த்தேன். எவ்வளவு முயன்றும் அய்யாவின் கம்பீரமான அந்த பழைய உருவத்தை நினைவுபடுத்தவே முடியவில்லை. ஆனால், அய்யாவின் கவனம் முழுக்க அந்த சாப்பாட்டில் தான் இருந்தது. 
அசைவற்றுப்போனேன். போன் அடித்தது. தடுமாறிய நினைவுகள் சுழன்றடிக்க, மனது அங்கலாய்த்தது. முப்பத்தி ஐந்து வருடங்களாக மனதிற்குள் கட்டிவைத்த அய்யா என்னும் பிம்பம், நிமிடங்களில், அடிக்கட்டை உருவப்பட்ட செங்கல் குவியல் போல் சரியத்தொடங்கியது. தூணில் சாய்ந்து கண்களை மூடினேன். அய்யா எப்பொழுதோ தன் ரோஷத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தி சொன்னவைகளில் என்னவெல்லாமோ நினைவில் வந்து போக, எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் எனத்தெரியவில்லை. அய்யாவின் மனமும் புரியவில்லை.


கண்விழித்தபோது, மதிய சூரியன் கீழ்வானில் இறங்க ஆரம்பித்திருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு எழுந்து, தளர்ந்த உடல், இறுகிய மனதுடன் ஐயாவை நோக்கி நடந்த வேளையில், அய்யா கோயிலுக்கு வருவோர், போவோரை கண்களை சுருக்கிப்பார்த்தபடி, கைகளை ஏந்திக்கொண்டிருந்தார். 
பழைய பாரம் இறங்கி, அதைவிட பெரிய கனம் மனதை அழுத்துவதாகத்தோன்றியது. ஏதோவொன்று மேற்கொண்டு நடக்க விடாமல், கால்களை பின்னே இழுத்தது. தயக்கத்துடன் ஒரு முடிவுக்கு வந்தவனாக திரும்பி, நடக்க ஆரம்பித்தபோது, இருபதாவது முறையாக போன் அடித்தது. 
பூபதி…


அண்ணே… ஏன் இவ்வளவு நேரம், அய்யா…

அ… அய்யாவ காணல பூபதி, நம்ம அய்யா, இனி கெடைக்க மாட்டாரு..!

வெறுமை அழுத்த, கண்களை துடைத்தபடி, எஞ்சியுள்ள இன்னுமொரு பாவத்தைக்கழுவ, மீண்டும் அந்த நளன் குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.