Sunday 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 19

Rate this posting:
{[['']]}

குறிஞ்சி

சலைனில் ஏற்றப்பட்ட ஏதேதோ மருந்துகளும் குளுக்கோசும் சொட்டுச் சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது. அம்முவின் மார்புக் கூடு ஏறித் தாழ்வதையே கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தேன். மூக்கில் செருகியிருந்த ஆக்சிஜன் குழாய் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.அதன் மூலம் தான் அம்முவால் இப்போது சுவாசிக்க முடிகிறது.நகர்ந்தால் சப்தம் எழும்பி அதைக் கேட்டு விழித்து விடுவாள் என்பதால் முடிந்தவரை அசையாமல் இருந்தேன்.உள்ளுக்குள் ஏதோ சிறு திடுக்கிடல் போல. மெல்லக் கண் விழித்தாள்.
“அப்பா...”
“ம்ம். சொல்லுடா கண்ணா”
“இது வரைக்கும் அறுபத்தி மூணு இடத்துல ஊசியால குத்திருக்காங்கப்பா”...என்று கடைசியாகக் கையில் ஊசி குத்தப்பட்ட இடத்தைப் பார்த்தபடியே சொன்னாள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல அந்த இடத்தைத் தடவி விட்டேன். அதற்கு மேல் கண்களைத் திறந்திருக்க முடியாமல் மூடிக் கொண்டாள் அம்மு. நான் மீண்டும் அவள் மார்புக் கூடு ஏறி இறங்குவதையும் சலைன் சொட்டுச் சொட்டாய் இறங்குவதையும் பார்க்கத் துவங்கினேன்.
-------------------------
என்ன அம்மு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” எனக்குக் கவலையாயிருந்தது. ”ஒண்ணுமில்லப்பா” என்று சொல்வாளென்று நினைத்தேன். “ஒண்ணுமில்லப்பா” என்றாள். லேசாகச் சிரிப்பு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தேன். பின் மெல்லத் தலையை வருடியபடிக் கேட்டேன். “ என்னம்மா ஆச்சு?” அடிபட்ட பார்வையில் என்னைப் பார்த்தவள், மெல்லிய குரலில் “தாத்தா திட்டிட்டார்ப்பா” என்று விட்டுக் குனிந்து கொண்டாள்.
சுறுசுறுவென்று கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. இங்கே , இவர்களருகே குடியேற வேண்டாம் என்று மனைவி சொன்னதைக் கேட்காமல் சொந்தம் வேண்டுமென்று இங்கே வந்ததற்கு என்னைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இரண்டில் ஒன்று கேட்டு விடுவது என்று கிளம்பினேன். சட்டென்று என் கையைப் பிடித்துத் தடுத்தது மற்றொரு கை. அம்மு தான். “ வேண்டாம்பா. நம்ம தாத்தா தானேப்பா. சொன்னா சொல்லிட்டு போகட்டும். உன் சித்தப்பா தானேப்பா. அவங்க அப்படி இருந்தா இருந்துட்டு போகட்டும். நாமளும் அவங்க மாதிரி இருக்க வேண்டாமேப்பா” என்றாள். பார்வையில் கெஞ்சல் நிரம்பியிருந்தது.
அம்மு இது போல் பார்வை பார்த்தால் அதைத் தட்டவோ தாண்டவோ முடிவதில்லை. இந்தப் பெண் மனசில் என்னதான் இருக்கிறது? பதினெட்டு வயசுக்கு எதற்கு இப்படியொரு முதிர்ச்சி? அப்பனுக்கே பாடம் சொல்கிறாள். ஒரு பக்கம் மனசு பூரிப்பாக இருந்தது. மற்றொரு பக்கம் என்னவோ இனம் புரியாத சஞ்சலம். “சரிம்மா. போகல” என்றேன் புன்னகைத்து.
-----------------------------------------
“ப்பா..” என்ற தீனமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தேன். எவ்வளவு நேரமாய்க் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. கண் அயர்ந்து விட்டேன் போலிருக்கிறது. அவள் எதற்காகக் கூப்பிடுகிறாள் என்ன கேட்கப் போகிறாள் என்று ஒரு மாதிரி அனுமானித்திருந்தேன். அதைக் கேட்கக் கூடாதென்று வேண்டினேன் மனசுக்குள்.  
எந்தக் கேள்வியை அவள் கேட்டு விடக் கூடாதென்று நினைத்தேனோ அதையே கேட்டாள். “அம்மா எங்கப்பா?”
எச்சில் விழுங்கிக் கொண்டேன். குழந்தையை இந்த நிலைமையில் பார்க்கத் தனக்குத் தெம்பில்லை என்று பயந்து போய் உள்ளே வராமல் இருக்கிறாள் அவள் அம்மா என்பதை அவளிடம் எப்படிச் சொல்வது? “ உனக்காக கோயிலுக்குப் போயிருக்காம்மா” என்றேன்.
“என் கூட இருக்கறத விட கோயில் முக்கியமாப்பா” என்று கேட்டு விட்டு மூச்சிறைக்க, பதிலை எதிர்பாராமல் கண்களை மூடிக் கொண்டாள்.பெருமூச்சொன்றை விடுத்தபடி மீண்டும் அவள் கண் திறக்கக் காத்திருக்கத் துவங்கினேன்.
-----------------------------------
அந்த சுவாமிகள் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் காதில் சுழன்றடித்தபடியே இருந்தது. “ என்னமாப் பாடறது கொழந்தை. இது உண்மையிலேயே தெய்வ கடாட்சம் தான். சாதாரணமா எல்லாருக்கும் கிடைச்சிடறதில்லை இது. போன ஜென்மாவுலே கொழந்தை அம்பாளுக்குத் தேனாலேயே அபிஷேகம் பண்ணிருக்கா. அதான் இப்படியொரு சாரீரம். பாட்டும் வேற அவளே எழுதினதுன்னு சொல்றேள். பிரமிப்பா இருக்கு. இந்தச் சின்ன வயசுல இவ்ளோ ஞானமான்னு.
இன்னும் நல்லா என்கரேஜ் பண்ணுங்கோ. குழந்தை நிறையப் பாடணும். ரொம்ப நல்லா வருவா.” தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணி விட்டுப் போனார்.
மனைவியைப் பார்த்தேன். கண்களால் நன்றி என்றேன். அவள் இல்லையேல் அம்முவுக்கு சங்கீதம் இல்லை. புன்னகைத்தாள்.
--------------------------------------------
வண்டியை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள் அம்மு காணாமல் போயிருந்தாள். பதறித் தேடியபடி போனால் அவசர சிகிச்சைப் பிரிவின் வரவேற்பறை பென்ச்சில் அமர்ந்திருந்தாள். சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடியிருந்த அவளைப் பார்க்கும் போதே கலவரமாக இருந்தது. பதற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மெல்ல அவளருகே போஇத் தலையை வருடினேன்.
லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தவள், சரிந்து என் மேல் சாய்ந்து கொண்டாள். வெயிலில் வதங்கிய கீரையைப் போல் இருந்தாள் குழந்தை. மனசு அடித்துக் கொண்டது. “அப்பா... முதுகு ரொம்ப வலிக்குதுப்பா” என்று என்னை நிமிர்ந்து பார்த்து சொல்லி விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் கண்களை மூடியிருக்கிறாள் என்று திடமாகத் தெரிந்ததும் அது வரை அடக்கி வைத்திருந்த ஒரு துளிக் கண்ணீரை அவசரமாகத் துடைத்தெறிந்து விட்டு அவளை மேலும் இறுக அணைத்துக் கொண்டேன்.
--------------------------------------------
இது நான்காவது சி டி. அம்முவின் குரல் சலிப்பதே இல்லை. வீட்டுக்குள் எங்கே வளைய வந்தாலும் அம்முவின் குரல் வீட்டை நிறைத்தபடியே இருக்கிறது. மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. மனைவிக்கு அவ்வளவு பெருமை. அம்மு ஊருக்குக் கிளம்பும் வரை மிகவும் எதிர்பார்த்தாள் சி டி கைக்குக் கிடைத்து விடுமென்று. ப்ச். வரவேயில்லை. அவள் கிளம்பி மறுநாள் வந்து சேர்ந்தது. அப்போதிலிருந்து அவளது குரல் மனசெங்கும் நிறைந்து வழிந்தபடியே இருக்கிறது.
ஆடிட் முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மு இதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப் படுவாள். அப்போது அவள் முகத்தில் தெரியும் அந்தக் களையைப் பார்க்க வேண்டுமே. நாட்காட்டியைப் பார்த்தேன். அம்மு வருவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. நிமிடங்களை எண்ணத் துவங்கினேன்.
-------------------------------------
உள்ளே நுழையும் போதே சின்னவளுடன் அம்மு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். சின்னவள் அப்படி வாயெல்லாம் பல்லாக இருந்து நான் பார்த்தது அபூர்வம். அவள் மேல் புகாரே வந்திருக்கிறது பள்ளியிலிருந்து. ரொம்பவும் ஒதுங்கியே இருக்கிறாள், யாரிடமும் சரியாகப் பேசுவதே இல்லையென.
அம்முவின் முறையே தனி. எப்போதும் சின்னவளுக்கு அம்மா போலவே நடந்து கொள்வாள். நான் வந்ததை கவனிக்காமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். “ டாக்டருக்கு மட்டும் இல்லடி. நான் லங்க்ஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆகப் போறேன் படிச்சு. உன்னை மாதிரி யாரும் கஷ்டப் படாம பாத்துப்பேன்.என்ன... செலவு தான் அதிகமா ஆகும். எப்படியும் மாமா ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காருடி” என்றாள் சின்னவள்.
மெல்ல அவள் கையைப் பற்றிய அம்மு, “ மாமா ஏற்கனவே நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்றாரு. இன்னும் கேக்கணுமா, உனக்கு தான் இன்னும் ரெண்டு வருஷம் டைமிருக்கே. அதுக்குள்ள நான் சி ஏ படிச்சி முடிச்சிடுவேன். நான் நல்ல வேலையில சேர்ந்து நல்லா சம்பாதிச்சு நான் படிக்க வெச்சிடுறேன் உன்ன” என்று மூச்சிறைப்பினூடே சொல்லி முடித்தாள்.
மெல்லத் திரையை விலக்கிக் கொண்டு அவர்களருகே நான் வருவதைப் பார்த்ததும் பேச்சு தடைப்பட்டது. எனக்கு அம்முவை அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. மெல்ல அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
--------------------------------
“அப்பா என்னை பாருங்கப்பா” தீனமான குரலில் அம்மு அழைத்தபடி இருந்தாள். அவளிடம் கோபமாக இருப்பது போல் நடிப்பது ஆகப் பெரும் சிரம்மான காரியமாயிருந்தது. பல முறை இறைஞ்சியபின் மெல்லத் திரும்பினேன். “எனக்கு புரிஞ்சிடுச்சுப்பா. நான் இனிமே ஒழுங்கா சாப்பிடறேம்ப்பா... உடம்புல இம்யுனிட்டி ஜாஸ்தியானா தான் வேலைக்குப் போக முடியும். சீக்கிரம் சரியாகணும். நான் இனிமே ஒழுங்கா சாப்பிடறேன்பா” என்றாள் கெஞ்சலுடன். அவள் மூச்சிறைப்பது சற்றுத் தள்ளி நின்றிருந்தும் துல்லியமாய்க் கேட்டது.
பொறுக்க முடியாமல் திரும்பி அவளை அழுத்தாமல் மெலிதாய் அணைத்துக் கொண்டேன். சில நிமிடங்கள். பின் விடுவித்து, நெகிழப் பிசைந்திருந்த ரசம் சோற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊட்டத் துவங்கினேன்.என் மீதிருந்த பார்வையை விலக்காமல் சாப்பிட்த் துவங்கினாள் அம்மு. அவள் கண்ணோரம் கண்ணீர் காய்ந்து வெள்ளையேறிக் கிடந்தது.
----------------------------------
டாக்டர் சொல்லும் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மு. “ சரியான நேரத்துக்கு சாப்பிட்டுரணும். மெடிசின்ஸ் கரெக்டா எடுத்துக்கணும். நல்லா வீட்டுக்குள்ளேயே நடக்கணும். அப்போதான் யு வில் பி ஆல்ரைட் சூன்” ..... அறைக்கு வெளியே டாக்டர் என்னிடம் சொன்ன விஷயங்கள் மனதில் அலை மோதியபடி இருந்தன.
“ அம்முவுக்கு இன்னும் முழுசா க்யூர் ஆகல. பட் இப்ப டிஸ்சார்ஜ் பண்றது ஒரு வேளை சேஞ்ச் ஆப் ப்ளேஸ் நடந்தா அதனால அவ கண்டிஷன்ல ஏதும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு பாக்கத்தான். வீட்ல இருக்கும் போது எப்ப மூச்சுத் திணறல் வந்தாலும் இம்மீடியேட்டா வந்து அட்மிட் ஆக வேண்டியிருக்கும். பாத்துகோங்க. டேக் கேர்”......
சட்டென்று தலையை உலுக்கி நிகழுக்கு வந்தேன். டாக்டர் போய் விட்டிருந்தார். “என்ன அம்மு வீட்டுக்குப் போயிடலாமா” என்று அவளைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தேன். பதிலுக்கு அம்முவும் சிரித்துக் கண்ணடித்தாள்”.
------------------------------
உள்ளங்கைகள் வியர்வையில் நனைந்திருந்தன. போனே விடாது இறுக்கமாகப் பிடித்திருந்தேன். அம்மு முகத்தைப் பார்க்க முடியவில்லை. மூச்சை இழுத்து விட சிரமப்படுவதில் கண்கள் இரண்டும் காற்றில் அலைந்தன. ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளத் துடிக்கும் கொடி போல அங்குமிங்கும் இலக்கின்றி.
போனை டயல் செய்வதைப் பார்த்துப் புரிந்து கொண்டவள், இறைப்பினூடே சொன்னாள் “ அப்...பா..... ஆம்...புலன்ஸுக்காப்....பா...... சைரன்லாம்......எதுவும் .....வ்வ்வ்.....வேண்டாம்னு சொல்ல்.....லுங்கப்பா...... அக்கம்.....ப்ப்ப்...பக்கத்துல யா....ரும்.. ட்ட்ட்டிஸ்ட்ட்டர்ப் ஆக வ்வ்வேண்டாம்...ப்பா என்றாள்.அவள் தலையைக் கோதுவதைத் தவிர வேறேதும் செய்து விட முடியவில்லை என்னால்.
-----------------------------------
இப்போதெல்லாம் நிறையக் கவனம் தப்புகிறது. எந்த வேலை செய்தாலும் தனியே பின் மனசில் அம்மு ஓடிக் கொண்டே இருக்கிறாள். சமயங்களில் நினைவுகளில் ரொம்பவும் அமிழ்ந்து போய் கவனம் தவறி விடுகிறேன். அடிக்கடி மூக்கில் பஞ்சடைத்த அம்முவின் சலனங்களற்ற நிம்மதி தவழும் முகம் நினைவில் வந்து இம்சிக்கிறது.
வீட்டில் மாட்டியிருக்கும் பிரம்பு ஊஞ்சல், லேசாய்க் காற்றுக்கு ஆடும் போதெல்லாம் ஆபீசில் இருந்து அம்மு வீட்டுக்கு வந்தவுடன் அதில் சோர்ந்து சாய்ந்து சரிந்து உட்கார்ந்து கொண்டு “அம்மா...ஐஸ்கிரீம் கொண்டு வாம்மா என்று சொல்வது நினைவுக்கு வந்து விடுகிறது.
ஏதோ யோசனையாக நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று ஏதோ தடுக்கிச் சாலையில் கவிழ்ந்து விழுந்து விட்டேன். நடந்ததைப் புரிந்து சுதாரிக்கும் முன் “அச்சச்சோ.... அங்கிள் என்னாச்சு எழுந்திருங்க...”என்ற குரலுக்குச் சொந்தமான ஒரு பிஞ்சுக் கை என்னைப் பற்றி எழுப்பியது. அம்மு.
எழுந்து அமர்ந்த என்னை மேலும் கீழும் பார்த்து, “ எங்கேயாவது அடி பட்டிருக்கா அங்கிள்?” என்று கேட்டபடியே, என் சட்டை மேல் ஒட்டிக் கிடந்த புழுதியைத் தட்டி விட்டாள் அம்மு.” இல்லம்மா” என்றேன். “ நான் வேணா வீடு வரைக்கும் கொண்டு வந்து விடட்டுமா அங்கிள்? வீடெங்க?” என்றாள். “ பக்கத்துல தாம்மா. நானே போயிடுவேன். நோ வொர்ரீஸ்” என்னும் என் பதிலில் அம்மு சமாதானமாகவில்லை.
“போயிடுவீங்கள்ல?” என்று திரும்பத் திரும்ப நான்கைந்து முறைகள் கேட்டுக் கொண்டு அப்போதும் திருப்தியில்லாமல் திரும்பிப் பார்த்தபடியே மெல்ல நகர்ந்தாள்.”எங்க போற அம்மு?” என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த அம்முவைப் பார்த்து மென்மையாகக் புன்னகைத்துக் கையசைத்தேன்.
அம்மு தெரு திரும்பிப் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.பார்வையிலிருந்து மறைந்த பின்பும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
--------------------------