Tuesday 31 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 26

Rate this posting:
{[['']]}
இருப்புக் குழி 

திடீர்னு மனசுக்குள்ள இருப்புக் குழிங்குற வார்த்தை வந்து உக்காந்துட்டு ரொம்ப அவஸ்தைப்படுத்துதுஇந்த வார்த்தை ஏன் இந்த நேரம் என் மனசுல தோணிச்சுன்னு எனக்கு புரியவே இல்லஆனா இதுக்கப்புறம் எனக்கு தாத்தா நியாபகம் வந்துடுச்சு.

 தாத்தாவோட புகைப்படம் பாட்டி வீட்ல இருக்கும்அந்த போட்டோவுல தாத்தா நீளமா தலைமுடிய வளத்து விட்ருப்பார்கிட்டத்தட்ட அவர் முகத்துல பாகவதர் சாயல் தெரியும்அவரோட கண்ணு புன்னகைக்கும்அதுல ஒரு ஒளி தெரியும்.

தாத்தாவ பத்தின அவரோட பிம்பம் இவ்வளவு தான் எனக்கு தெரியும்ஆனாலும் இருப்புக் குழியை கேட்டதும் தாத்தா பத்தின நியாபகங்கள் ஒரு ஊதுபத்தில இருந்து கிளம்பின புகை மாதிரி மனசுல இருந்து வெளிவர ஆரம்பிக்குது
.
அன்னிக்கி அந்த வீடு அப்படி தான் இருந்துச்சுவீடுன்னு சொல்றத விட அது தாத்தாவோட மாளிகைநிலா முற்றம்நிலவறைஅடுப்பங்கரைஅரங்கு வீடு,அந்தப்புரம்னு தாத்தா வீட்டுல நாள் முழுக்க ஒளிஞ்சு விளையாடலாம்அப்படி அன்னிக்கும் ஒளிஞ்சு விளையாடலாம்னு பாத்தா வீடு முழுக்க ஆட்கள்.அதுவும் பெண்கள் கூட்டம் ரொம்ப அதிகம்தாத்தாவ மங்களா வீட்ல (ஹால்சம்படம் போட்டு உக்காத்தி வச்சிருந்தாங்கதாத்தா தலைல பெரிய கட்டு.அவர் முகமே தெரியாத அளவு நாமம் பூசி இருந்துச்சுஅறை முழுக்க நிறைஞ்சி நின்ன ஊதுபத்தி மணம்.

என் பக்கத்துல வந்து உக்காந்த கண்ணன் மாமா என் கைய அழுத்த பிடிச்சுட்டு “நம்ம அப்பாவுக்கு என்னடி ஆச்சு”ன்னு கேட்டுட்டு இருந்தார். என்னை விட நாலு வயசு அதிகம் மாமாவுக்கு. தாத்தாவோட பனிரெண்டு புள்ளைங்கள்ல அம்மா ரெண்டாவது. இவர் கடைக்குட்டி. மாமாகிட்ட எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல. தாத்தாவுக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு மட்டும் ரெண்டு பேருக்கும் நல்லாவே புரிஞ்சுதுதாத்தா இனி வர மாட்டார்செத்துப் போய்ட்டார்ன்னு புரிபட மனசு விரும்பவே இல்லதிடீர்னு எனக்கு அம்மாகிட்ட போகணும்னு தோணிச்சுஅம்மா எங்கன்னு எட்டிப் பாத்தேன்அம்மா தாத்தா கால் விரல பிடிச்சு வருடிட்டு இருந்தா.

எங்கப்பா செத்துப் போய்டனும்னு அம்மா முந்தின நாள் ராத்திரி அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தது நியாபகம் வந்துச்சுஅம்மா ஏன் அப்படி சொன்னா?இந்த அம்மாவுக்கு கிறுக்கு பிடிச்சிருக்குன்னு அப்ப நினைச்சுகிட்டேன்காலைல கூட தாத்தா வீட்டுக்கு கிளம்பி வர்றதுக்கு முன்னாடி கோழி கறி அடுப்புல கொதிச்சுட்டு இருந்ததுஎப்ப கோழி கறி சாப்பிடப் வீட்டுக்கு போகலாம்னு அம்மா கிட்ட கேக்க நினச்சேன்அப்புறமா என்னவோ தயக்கத்துல வேணாம்னு எச்சில முளுங்கிகிட்டேன்.

அடிக்கடி தாத்தா வீட்டுக்கு வரும் நீல சீலை பாம்பட பாட்டி தான் ஏ என்ன பெத்த ராசா போய்டியாஊருக்கே படியளப்பியேஇனி உன்ன எங்கப் போயி பாக்கப் போறோம்னு பலவிதமா ஒப்பாரி வச்சுட்டு இருந்தாங்கசுத்தி நின்னவங்க எல்லாம் அத கேட்டு இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சிருந்தாங்கஅந்த இடமே ஓலத்தாலயும் ஒப்பாரியினாலயும் நிறைஞ்சி இருந்துச்சு.

அத்தன பொம்பள கூட்டத்துலயும் தாத்தா தலைமாட்டுல முருகேசன் மாமா அடிக்கடி வந்து நின்னுட்டு நின்னுட்டு போயிட்டு இருந்தார்அவர் முகத்த பாக்க எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சுஎத்தனையோ நாள் அவர் கூட நான் விளையாடி இருக்கேன்னாலும் அந்த நேரம்... அந்த முகம்... அதுல ஒரு விகாரம் இருந்ததா தோணிச்சுஒரு பேரழுகை வந்து அத எப்படியாவது அடக்கியே ஆகணும்னு துடிக்குற ஒரு ஆணோட முகம் அது.

ஆஸ்பத்திரில இருக்குறச்ச முருகேசன் தான் அப்பாவ பாத்துகிட்டான்சோறு தின்னுகிட்டே இருப்பான்அப்பா முருகேசான்னு ஒரு வார்த்த கூப்டா போதும்,எச்சிக் கையோடவே ஓடி வந்து மோள் பிடிப்பான்கோப்பைய எடுத்து வச்சு அசிங்கம்னு பாக்காம எல்லாம் செய்வான்பெத்தப் பிள்ளைங்க நாங்க இப்படி செய்ததில்ல பாத்துக்க” அம்மா வேறொரு நாள் மாமிகிட்ட அவர பத்தி சொன்ன நியாபகம்முருகேசன் மாமா தான் எங்க எல்லாருக்கும் முடி வெட்டி விடுறவர்அது ஏனோ தெரியல எப்பவும் கக்கத்துல ஒரு தோல் பைய இடுக்கிகிட்டு பண்ணையாரே பண்ணையாரேன்னு தாத்தாவையே சுத்தி சுத்தி வருவார்.

மங்களா வீட்டுக்குள்ள பொம்பளைங்க லாந்த கூடாதுன்னு அம்மா சொல்லுவாபாட்டிக்கு மட்டும் அங்க ஒரு தேக்குமர கட்டில் உண்டுஆஜானுபாகுவா பாட்டி அதுல கைக்கு முட்டுக்குடுத்து படுத்து கெடந்தா ஒரு ஆனை சீலை கெட்டிக்கிட்டு படுத்துக் கெடந்த மாதிரி இருக்கும்பாட்டி சீலைக்கு ஒரு தனி மணம் உண்டுஅப்படியே அதுல மூஞ்சிய பொதச்சுச்கிடா ஜம்முன்னு ஒரு கிறக்கம் வரும்அடுத்த வினாடி கொறட்டை விட்ருவேன் நானெல்லாம்.

கடைசி வரைக்கும் பாட்டி அந்த நேரம் எங்க இருந்தாங்கன்னு நியாபகமே இல்லஒரு வேள அரங்கு வீட்டுக்குள்ள இருந்து விசும்பிகிட்டு இருந்துருக்கலாம்.ஏன்னா அங்க தான் எந்த விளக்கும் ஏற்றப்படாம கும்மிருட்டா இருந்துச்சுஇப்படி தான் மூத்த மாமாவுக்கு குறைப்பிரசவத்துல பையன் பொறந்தப்ப புள்ள செத்துட்டா தேவலன்னு பெத்தவங்க முதல் கொண்டு எல்லாரும் பேசஅவன அரங்கு வீட்டுக்குள்ள வெளிச்சம் படாம தொண்ணூறு நாள் நெஞ்சுல அணைச்சுக்கிட்டு அடைக்காத்து மீட்டெடுத்தது பாட்டி தான்பின்னொரு நாள் திடீர்னு அவன் செத்துப்போனப்ப இப்படி தான் பாட்டி அரங்கு வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம அழுதுட்டு இருந்தாங்கஅதிசயத்துலயும் அதிசயமா அம்மான்னு பாட்டிய வாய் தொறந்து கூப்ட்டுட்டு செத்துப் போயிருந்தான் அவன்.அவனையும் தாத்தாவோட இருப்பு குழிக்கு பக்கத்துலயே அடக்கம் பண்ணினாங்க.

நியாபகங்கள் திசை மாறிப் போகுதுலஆனா எனக்கென்னவோ எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையதாவே தோணுது.

திடீர்னு காளை பூட்டின தாத்தாவோட வில் வண்டிங்க நியாபகத்துக்கு வருதுகாளைங்களோட கொம்புல எல்லாம் கலர்கலரா பெயின்ட் அடிச்சு வச்சிருக்கும்.மாட்டு சக்கரத்துல கால் வச்சு மாட்டுவண்டிக்குள்ள ஏற முடியாம என் வயசு புள்ளைங்க எல்லாம் தத்தளிச்சுட்டு இருக்குறப்ப ஒத்த கால வச்சுகிட்டு சல்லுன்னு உள்ள ஏறி உக்காந்துருவேன். “ஏம் புள்ளைக்கு என்னத்துக்குலே காலுஅவ சக்கரத்த கட்டிகிட்டு உலகம் முழுக்க சுத்தி வந்துருவான்னு சொல்ற தாத்தா குரல் கூட இந்தா என் காதுல கேட்டுகிட்டே இருக்கு.

அப்பலாம் லாலி” தான் எங்களுக்கு ஆல் இன் ஆல். இருபது வயசுல விடியக்காலைல தாத்தா சந்தைக்கு காய்கறி லோடு இறக்க போயிருந்தப்ப லாரியோட வந்து இறங்கினவராம் இந்த லாலி”. அப்ப அவருக்கு பத்து வயசுக்கும் குறைவா தான் இருக்குமாம்ஆள் யார்என்னன்னு விசாரிக்கவும் முடியலஎது கேட்டாலும் பே பே” தான்இவன இப்படியே தொரத்தி விட முடியாதுன்னு வீட்டோட கொண்டு வந்துட்டார் தாத்தாசூடடிக்குற வெட்டைல நெல்லு பொடச்சுட்டு இருந்த யாரோ ஒரு கிழவி தான் லாலி லாலின்னு அவர கூப்பிடஅப்புறம் அதுவே அவர் பெயராகிடுச்சுகிட்டத்தட்ட அறுபது வருஷம் லாலி எங்க குடும்பத்துல ஒருத்தரா வலம் வந்துட்டு இருந்தார். அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாட்டி நிறைய தடவ முயற்சி பண்ணியும் ப்ரம்மச்சாரியாவே போய் சேர்ந்துட்டார்.

தாத்தாவுக்கு இருப்பு குழி வெட்டுறப்ப நான் லாலி தோள் மேல உக்காந்துட்டு இருந்தேன்ஒரு முழங்கால் அளவு தோண்டினதுமே தண்ணினா தண்ணி அப்படி ஒரு தண்ணிகுழி வெட்ட முடியாது போலருக்கேன்னு ஆளாளுக்கு தெகச்சி நின்னாங்க. அப்புறமா ரெண்டாவது மாமா தான் போய் ஒரு மண்ணெண்ன மோட்டார வாடகைக்கு எடுத்துட்டு வந்தாங்க. மோட்டார் போட்டு இறைச்சாலும் தண்ணி நின்னப் பாடில. முதல்ல நேரா குழிய வெட்டி, ஊறி வந்துட்டு இருந்த தண்ணிய சிமென்ட் போட்டு அடச்சு, அதுக்கப்புறமா பக்கவாட்டுல சதுரமா இருப்புக் குழிய வெட்டுனாங்க.

“இதெதுக்கு இப்படி வித்யாசமா ஒரு குழி”ன்னு மாமா கிட்ட கேட்டேன். “தாத்தா மேல யாரும் மிதிச்சுடக் கூடாதுல அதுக்குதான்”னு மாமா சொன்னார். லாலி இருப்புக் குழிய கைகாட்டி “ப்பா, ப்பா”ன்னு கண்ணீரோட சொல்லிட்டு இருந்தார். எனக்கு அந்த நேரம் அது வேடிக்கையா இருந்துச்சு.

தாத்தாவ பூ பல்லக்குல வச்சு தூக்கினப்ப அம்மா ஒரு சொட்டு கண்ணீர் விட்டா. அப்புறம் என்ன நினைச்சாளோ தெரியல, அழுதுட்டு இருந்த சித்திங்கள எல்லாம் பாத்து, “யாரும் அழாதீங்க, சந்தோசமா அப்பாவ வழி அனுப்பி வைங்க”ன்னு அதட்டிட்டு இருந்தா. யாரோ தாத்தா கால்ல கிடந்த “ஷூ”வ கழட்டப் போனாங்க. அம்மா அத கழட்ட வேணாம்னு தடுத்துட்டா. வழியெல்லாம் பூ தூவி, பெத்த பிள்ளைங்க மட்டுமில்லாம வளர்ப்பு பிள்ளைங்க மூணு பேரும் சேர்ந்தே தாத்தாவ இருப்புக் குழிக்குள்ள இறக்கினாங்க.

அப்படியே மடக்கி உக்கார்ந்த நிலைல தாத்தா ஜம்முன்னு இருப்புகுழிக்குள்ள  உக்காந்தாங்க. வாசல ஒரு பலகை வச்சு அடச்சு, அப்புறமா நேர் குழில மண்ணை வெட்டிப் போட்டு மூடிட்டாங்க. தாத்தா இனி இங்க தான் தவம் செய்யப் போறார்னு நான் நம்பிகிட்டேன். அப்படி தான் அவர் தோரணை இருந்துச்சு. தாத்தா மேல யாரும் மிதிச்சுடக் கூடாதுன்னு ராத்திரியோட ராத்திரியா அவர் மேல கிரானைட் கல்லை வச்சு நினைவு சின்னம் எழுப்பிட்டாங்க மாமாக்கள் அத்தனை பேரும்.

தாத்தா கால்ல ஒரு “ஷூ” இருந்துச்சுல, அந்த ஷூ” இல்லாம தாத்தா வெளிநடை  இறங்க மாட்டாராம்நாப்பது வயசுல சுகர் வந்து வலது கால் பெருவிரல எடுத்தே ஆகணும்னு டாக்டர் சொன்னப்ப இதுக்கு நான் செத்துப் போய்டலாம்னு வெளில கிளம்பி வந்துட்டாராம்நல்லவேளை லீபுரம் பெரிய டாக்டர் தான்ஷூ” போட்டுகிட்டா விரல் வெளில தெரியாதுன்னு சொல்லி விரலையும் அறுத்து, “ஷூவையும் மாட்டி விட்டுருக்கார்அதெப்படி ஒத்த பெருவிரல் போனதுக்கே உயிர விடணும்னு நினச்ச தாத்தா ஒரு காலே இல்லாத என்னை எம்புள்ளஎன்புள்ளன்னு நெஞ்சு மேல தூக்கிப் போட்டு சீராட்டினாரோ?

இல்லஅப்படி அம்மா சொல்லித் தான் நான் கேள்விப்பட்ருக்கேன்எனக்கு நினைவுத் தெரிஞ்சி தாத்தா என்னை தொட்டுத் தூக்கி கொஞ்சின நியாபகமே இல்லஎல்லாமே தூரமா நின்னு சொல்றது தான்எனக்கு அவர் உருவத்த விட குரல் தான் அதிக பரிட்சயம்என்னைத் தாங்கிப் பிடிச்சது எல்லாம் அப்பா தான்இன்னிக்கி வரைக்கும் குறையோட பொறந்துட்டான்னு ஒரு வார்த்த என்னை பேசினது இல்லஅப்படி வேற யாரையும் பேச விட்டதும் இல்ல. “தாத்தாவோட கம்பீரமும் அப்பாவோட அதிகாரமும் கொஞ்சம் கூட குறையாத ஏக்கியம்மைன்னு அம்மா அடிக்கடி என்னைப் பாத்து சொல்லுவாஉக்கிர காளியாம் நான்

ஏம்மாவலது காலை எடுத்தே ஆகணும்னு நிலை வந்தப்ப நீ ஏன் எங்கப்பா செத்துப் போகணும்னு சாமிகிட்ட வேண்டிகிட்ட? கால் இல்லனாலும் தாத்தா நம்ம கூட இருந்துருப்பாங்கல”ன்னு என்னோட இருபது வயசுல அம்மாகிட்ட கேட்டேன் ஒருநாள்.

“எங்கப்பா யாரு தெரியுமா? ஊருக்கே படியளக்குற சாமி. அவர் ஒரு குறையோட மத்தவங்க முன்னால நிக்குறத நினைச்சுக் கூட பாக்க முடியாது மோளே. இதெல்லாம் சொன்னா உனக்கு புரியவும் புரியாது. எங்கப்பா செத்தது எனக்கு சந்தோசம் தான். என்ன அந்த பாழாப்போன சக்கர வியாதி வராம இருந்துருக்கலாம்”ன்னு அம்மா கண்கலங்கி சொன்னாலும் அதுல ஒரு நிறைவு இருந்துச்சு. செங்கல் தடுக்கி புண் வந்த காலை முட்டுக்கு கீழ எடுத்தே ஆகவேண்டிய நிலைல தான் மக்களை எல்லாம் கூட்டி உக்கார வச்சு தேறுதல் சொல்லிட்டு தாத்தா ஆப்பரேசனுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி செத்துப் போனார்.

அது ஒரு தெய்வீக சாவுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. தன் அப்பாவோட சாவை கொண்டாடுற அம்மா எனக்கு எப்பவும் விசித்திரம் தான்.

யோசிச்சுட்டே இருந்ததுல என்னையறியாம “இருப்புக் குழி”ன்னு புலம்பிட்டேனோ என்னவோ, இருப்புக் குழினா என்னம்மான்னு கேட்ட மகள்கிட்ட விளக்கம் சொல்ல ஆரம்பிச்சேன்.

ஒரு மனுஷன் முழுமையா தன்னோட வாழ்க்கைய திருப்தியா வாழ்ந்துட்டு ஒரு நிறைவோட இங்க இருந்து போறான் பாத்தியாஅந்த மனுசன அப்படியே கிடையில போடாம உக்காத்தி வச்சு கும்பிடுறது தான் இருப்புக் குழி. அந்த பாக்கியம் என் தாத்தனுக்கு உண்டு

அப்ப நம்ம தாத்தாவுக்கும் இருப்புக் குழி உண்டுல”. அவ அப்படி கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன்.

அடித்து துவைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பைத்தியக்காரி ஆக்கப்பட்டு, “வெளிலப் போடி”ன்னு தொரத்தப்பட்டு, ரெண்டு பிள்ளைங்களோட நான் வந்து நடுவீட்டுல நின்னப்பவும், நீ உள்ள போ, பாத்துக்கலாம்ன்னு சொன்னவர் தான். இன்னிக்கி வரைக்கும் “திரும்பிப் போ”ன்னு சொன்னது இல்ல. என்னோட பால்யத்த நான் மீட்டெடுத்துட்டேன்னு இப்ப வரைக்கும் நம்பிகிட்டு இருக்கேன்.

அப்பாவோட சாவை எப்படி கற்பனை பண்ண? என்னவோ என் அம்மாவோட தைரியம் எனக்கு இல்ல போலஅப்பா இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுக் கூட பாக்க முடியலஇருப்புக் குழில நிம்மதியா இருக்குற அளவு அப்பா நிறைவோட தான் இருக்காரான்னும் தெரியல.

“ஆனா ஒண்ணுமா, என் அப்பன் இருக்கானே, அவன எல்லாம் துண்டு துண்டா வெட்டி சாக்குல போட்டு தான் அடக்கம் பண்ணுவாங்க. நீ வேணா பாரேன்”ன்னு சொன்ன மக வாய பதறிப் போய் மூடினேன். “அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா”ன்னு அவள சமாதானம் பண்ணினாலும் மனசுக்குள்ள என்னமோ அந்த காட்சி ஒரு பெரிய நிம்மதியான பெருமூச்சை தந்தது. அவன அப்படி தான் நான் வெட்டிப் போட்டுருக்கணும். இன்னமும் வெளில சொல்ல முடியாத ரணம்.

எல்லாம் கொஞ்ச நேரம் தான். பத்து வயசு மகளோட மனசுல ஒரு தகப்பனா தோத்துப் போன அந்த மனுசன நினச்சு பரிதாபம் தான் வந்துச்சு. எங்கிட்ட இருந்து சொத்து பத்தெல்லாம் பிடிங்கிட்டு இன்னொருத்தியோட ராஜபோக வாழ்க்கை வாழுறதா அவன் நினச்சுட்டு இருக்கான். இருந்து என்ன பிரயோஜனம், செத்தா நினச்சு அழ அவனுக்கு ஒரு மக இல்லையே. வேணா பாருங்க, அவன பாடைல தூக்கிக் கொண்டுப் போய் குழில போட்டு நல்லா நங்கு நங்குன்னு சவுட்டப் போறாங்க. ஹாஹாநான் ஏக்கியம்மையாம்உக்கிர காளியாம்இந்த அம்மாவுக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்கு. நான் நீலிலா.