Tuesday 3 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 5

Rate this posting:
{[['']]}
சீனிவாசபுரம்
அப்பா இறந்துவிட்டார். ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. 28 வயது மகன், ஒரு வீடு, அவரது ஹோன்டா ஆக்டிவா எல்லாமும் அப்படியே இருக்கிறோம். எனக்கு போதுமானதை செய்துவிட்டதாக அவருக்கு தோன்றியப்பின்தான் அவரின் உயிர் பிரிந்திருக்கவேண்டுமெனில், அவருக்கு சாவே இருந்திருக்காது என நினைக்கிறேன்.

வாழ்க்கையைப் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்கியதாக அடிக்கடி சொல்லுவார். அவருக்கு பதினான்கு வயதாக இருக்கும்போது, தாத்தாவின் மரணப்படுக்கையில் அவரது சின்ன அண்ணன் மொத்த சொத்தையும் தாத்தாவின் கை நாட்டுடன் சாதித்துக்கொண்டார். ஏதோ கேஸ் கூட நடந்ததாம். அப்பா கோர்ட் வாசலில் தன் அண்ணனை செருப்பால் அடித்ததை சொல்லி நிறுத்திக்கொள்வார். நானும் அதைத்தாண்டிக் கேட்டுக்கொண்டதில்லை. தியேட்டரில் டிக்கெட் கிழித்திருக்கார். டீ க்ளாஸ் கழுவியிருக்கிறார். படித்திருக்கிறார். அங்கிருந்து துவங்கியவருக்கு ஒரு வீடும் ஹோண்டா ஆக்டிவாவும் எத்தனை பெரிய சொத்து. படிக்கவும் வைத்துவிட்டார். இங்கிருந்துதான் என் பாய்ச்சல் இருக்க வேண்டும். சுலபம்தான். அவரது மகன்.

அப்பாவிற்கென சில பிரத்யேக பழக்கங்கள் உண்டு. காலையில் வரும் செய்தித்தாளை நள்ளிரவில் கண்விழித்து உட்கார்ந்து படிப்பார். டிவியில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பார்த்துவிடுவார். எதையும் ஆனால் முயற்சிக்க மாட்டார். மனதளவில் தன்னை எப்போதும் இளைஞனாக பாவித்துக்கொள்வார். அதற்கு நேர்முரணாக சிவாஜி கணேசன் பாடல்கள் டிவியிலும், ஏ.எம்.ராஜா பாடல்கள் காசெட் ப்ளேயரிலும். அரசியலைப் பற்றி எந்த பேச்சை எடுத்தாலும் ராஜீவ் கொலையை உள்ளே கொண்டுவந்துவிடுவார். கொலையைப் புலனாய்வு செய்த ரகோத்தமனைவிட இவருக்கு அதிக தகவல்கள் தெரியுமென எனக்கு தோன்றியதுண்டு. 44 வயதில் வந்துவிட்ட முதல் மாரடைப்பை ஒரு முறையாவது தினமும் நினைவுக்கூர்ந்து, உணவை விட மாத்திரைகள் எடையிலும் விலையிலும் அதிகம் என அலுத்துக்கொள்வார். அவ்வளவு மாத்திரைகள். மழையோ புயலோ.. மாலையில் கட்டாயம் வாக்கிங் உண்டு. வீட்டிலிருந்து சீனிவாசபுரத்து பூங்கா வரை. மூன்றரை மைல்கள் தொலைவு. போக வர நல்ல உடற்பயிற்சிதான்.

சீனிவாசபுரம் ஏனென்று நானும் கேட்டதில்லை அவரும் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் காலம்தொட்டு அவருடன் நானும் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு காலத்திலும் எனக்கு அந்த நடை நேரத்தில் ஏதோவொரு ஸ்வாரஸ்யம் இருக்குமாறு அப்பா பார்த்துக்கொள்வார். எனக்கும் அப்பாவிற்குமான 18 வருட நினைவுகளை அந்த சீனிவாசபுரத்து பூங்கா தாங்கி நின்றுக்கொண்டிருக்கிறது.  பூங்காவில் வடக்குப்புற விளிம்பில் மதில் சுவரை நோக்கி ஒரு கான்க்ரிட் இருக்கை இருக்கும். அங்குதான்  எப்போதும் உட்காருவோம். ரொம்ப சந்தோஷமான தருணங்களில் சிவாஜி நடை வந்துவிடும். ஏ.எம்.ராஜா'வின் 'மாசிலா உண்மை காதலி...' பாடலை சிவாஜி ஸ்டைலில் செய்துக்காட்டுவார். முடிவில், தொப்பிக்காரன் பாட்டையே சொதப்பிட்டான் என்று பொறுமுவார்.

பெரும்பாலான நாட்களில் பள்ளிமுடிந்து விட்டிற்கு திரும்புவதில் இருக்கும் ஆர்வம் சீனிவாசபுரத்தை மையப்படுத்தியே இருக்கும். அப்பாவை அந்த இடத்தில் மட்டும் ஏதோவொன்று ஆட்கொண்டுவிடுவதாக தோன்றும். உலகத்தில் எதையும் சாதித்துவிடும் இயல்பானவர் போல புத்துயிர் பெறுவார். அது ஒரு தொற்றுவியாதியைப் போல எனக்கும் ஒட்டிக்கொண்டது. மிக அரிதாக அங்கு செல்வது தடை படும். அன்று ஏதோ இருவரும் வாதம் வந்தவர்கள் போல முடங்கிப்போவோம். மாரடைப்பிற்கு பின்னர் அப்பாவை மருந்துகளைவிட சீனிவாசபுரம்தான் மீட்டெடுத்தது என நம்புவேன். எப்படி இந்த இடத்தைக் கண்டுப்பிடித்தீர்கள் என அவரிடம் கேட்டிருக்க வேண்டும். அங்கிருக்கும் புளியமரங்கள் எல்லாமே போதிமரங்கள் என தோன்றும்.
பதினோறாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா என்னிடம், 'காதலிக்றியா யாரையும்' என்றார். சொல்லப்போனால் அவர் எப்படி அதற்கு முன் அத்தனை வருடங்கள் அதனைக் கேட்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். வடக்கு மதில் சுவரைப் பார்த்தப்படியே 'இல்லப்பா' என்றேன். 'அந்தந்த வயசுக்கு ஒரு அச போடற நெனவு வாழ்க்கேல எப்பவுமே இருக்கனும். சந்தோஷமா அச போடற மாதிரி.. நீ காலேஜ் முடிக்கிற வயசுல ப்ரியாவ நெனச்சுப்பார்த்தா எப்படியிருக்கும் உனக்கு.. அது.. அந்த மாதிரி..' என்று சட்டென சொல்லிவிட்டார். அப்பாவை ஒரு பிரமிப்புடன் திரும்பிப்பார்த்தேன். அவர் சன்னமாக அந்த மதில் சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ரியாவைப் பற்றி இத்தனைக்கும் அவரிடம் நான் அதிகமாக சொன்னதும் இல்லை. அப்பா அப்படியானவர். அல்லது அந்த இடத்திற்கு வந்துவிட்டால் அவருக்கு அப்படியொரு தரிசனம்.

அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் பூங்காவில் பிடித்ததே இல்லை. அவரிடம் ஏன் என்று எனக்கும் கேட்கத் தோன்றியதில்லை. மாறாக அவர் அங்கு புகைத்திருந்தால்தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன். அந்த இடத்தில் இருக்கும்போது அப்பாவின் மெளனத்தைக்கூட ரசிப்பேன். கொஞ்ச நேர அமைத்திக்கு பின் என்னைப் பார்த்து சிரிப்பார். நானும் சிரிப்பேன். அது ஒரு சம்பாஷனை. ஏதோ பெருங்கதையைப் பேசி தீர்த்த திருப்தி அந்த சிரிப்பில் இருக்கும். ஒரு நாள் ச்சோவென மழை. இருவரும் அசையவே இல்லை. மழை தோல்வியை ஒப்புக்கொண்டு நின்றுவிட்டதாகத்தான் எனக்கு தெரிந்தது. அப்பா வாய்விட்டு சத்தமாக சிரித்தார். நானும் சேர்ந்துக்கொண்டேன். அப்பாவை சிவாஜி நடை நடந்துக்காட்ட சொன்னேன். அந்த தூறலில் அவர் நடந்த கம்பீரத்தை சிவாஜி பார்த்திருக்க வேண்டும்.

அப்பா மரணப்படுக்கையில் இருந்த 22 நாட்களும் சீனிவாசபுரத்தைப் பற்றி யோசித்தாலே தனிமையின் கொடூரம் என்னை அச்சப்படுத்தியது. அப்பா இல்லாத வாழ்க்கை என்பதைவிட, அப்பா இல்லாத மாலை, அப்பா இல்லாத சீனிவாசபுரம் இதெல்லாம்தான் என்னை இறுக்கிப்பிடிக்கும் பயங்கரங்களாக நின்றது. இடையில் ஒரு நாள் அவரால் பேசமுடிந்தது. 'எல்லாத்துக்கும் பழகிக்கோ' என்று சொல்லி நிறுத்தி சிரித்தார். நான் சிரிக்கவில்லை. 'உன்ன தயார் பண்ணிக்கோ, ஒலகம் பெருசு, அப்பா உனக்கு காமிச்சதவிட...' அவர் விழியின் ஓரத்தில் நீர் இருந்தது. நான் உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். தலையைக் கோதி என்னை நிமிர்த்தி, 'ப்ரியாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா' என்றார். அவர் கண்களில் எனக்கான புன்னகை இருந்தது.
அன்று மாலை, தனியாக பூங்காவிற்கு சென்றேன். நிசப்தமாக இருந்தது. அல்லது எனக்கு அப்படி தோன்றியது. மிக மெதுவான நடையில் வடக்கு மூலைக்கு போனேன். எல்லாவற்றையும் பழகிக்கொள்ள அப்பா சொல்லியதில் கடினமான ஒன்று அந்த இடத்தில் அவரில்லாமல் இருப்பதுதான். இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். எவ்வளவு நேரம் ஆகியிருக்குமென தெரியவில்லை. உறங்கிவிடவும் இல்லை. திருஞானம் மாமா பக்கத்தில் வந்து உட்காந்தார். அப்பாவிற்கு எப்படியிருக்கு என்று என் மெளனத்தை உடைத்தார். ஒரு விதத்தில் அப்படி யாரோ ஒருவர் எனக்கு அப்போது தேவைப்பட்டார்.

அப்பாவின் பால்ய நண்பர். கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். அவர் இரண்டு நாட்கள் முன்பு வந்து பார்த்துவிட்டு போகும்போது அப்பா அவரை அருகில் அழைத்து காதில் ஏதோ சொல்லியனுப்பினார். ஏதோ பேசி இடைவெளியை நிரப்ப எண்ணி, 'அப்பா உங்கக்கிட்ட என்ன சொன்னாரு' என்றேன். அவர் அதன் பிறகு பேசிய எந்த வார்த்தையுமே என் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. அவர் என்னிடம் தடுமாறி எதையோ மறைக்கிறார் என்று துணுக்குற்றேன். சுரத்தே இல்லாமல் கேட்ட அந்த கேள்வியை மீண்டும் அதீத ஆர்வத்துடன் கேட்டேன். 'அப்பா நீங்க அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லேந்து கெளம்பும்போது என்ன சொன்னாரு' அவர் பேசிக்கொண்டிருந்த ஏதோவொன்றை அப்படியே நிறுத்திவிட்டு, என் கண்களைப் பார்த்தார். அவரிடம் அவை உண்மையை எதிர்ப்பார்த்தது அவருக்கு புரிந்திருக்கவேண்டும். 'உங்கப்பாவோட ஒலகம், இந்த பார்க்ல இல்ல, அந்த காம்ப்பவுன்ட் தாண்டி தெரியுதுல்ல ஒரு மாடிவீடு... அதுல மொத மாடில இருக்கு... ஜென்ஸி.. எங்க காலேஜ்மேட்' என்று முடித்துக்கொண்டார். ஒரு வினாடி எனக்கு காதுகள் அடைத்து, பார்வையிழந்து, குரல்வளை நெறிந்து மூச்சு விடவே திணறினேன். நிலையுணரவே ஒரு யுகம் கடந்ததுப் போல இருந்தது. அந்த பக்கம் பார்க்கவே ஏதோ பயமாக இருந்தது. அப்பட்டமான உண்மை அத்தனை வலிமையானது போலும். 'செயிண்ட் பால்ஸ் காண்வென்ட்ல ஹெட்மிஸ்ட்ரெஸ். சிஸ்டர்.ஜென்ஸி. கல்யாணம் பண்ணிக்கல அவ. பொண்ணு இப்பிடி ஆனதுக்கு காரணம் தாந்தான்னு யோசிச்சு யோசிச்சு அந்த வீட்ல ஒரு கெழவன் புத்தி சுவாதீனம் தவறி இருக்காரு. அதெல்லாம் விடு.. உனக்கு அதெல்லாம் தெரியனும்ன்னு உங்கப்பா விரும்பல.. விடு' என்றார் மாமா.

மாமா கிளம்பிவிட்டார். இரவு ஒன்பதரை மணிக்கு மருத்துவமனைக்கு சென்றேன். அப்பாவிற்கு சுய நினைவு குறைவதாக சொன்னார்கள். உள்ளே சென்று பார்த்தேன். கண்களில் அந்த புன்னகை அப்படியே இருந்தது. பேச முயற்சித்தேன். முடியவில்லை. அந்த புன்னகையை அப்படியே பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும் போல இருந்தது. அப்பாவை அப்படியே தூக்கிக்கொண்டு அந்த வடக்கு மதிலோர இருக்கைக்கு செல்லவேண்டும். அப்பாவை அங்கே வைத்து அந்த புன்னகையோடு நான் பார்க்கவேண்டும். ஏ.எம்.ராஜா குரல் வேண்டும். சிவாஜி வேண்டும். மாமா சொன்ன விஷயத்தின் சாரத்தோடு அப்பாவை நான் கொண்டாடவேண்டும். பெருங்குரலெடுத்து அழவேண்டும் போல இருந்தது. மருத்துவமனையின் யாருமில்லா ஒரு மூலைக்கு சென்று சுருண்டு படுத்துவிட்டேன்.

விழித்துப்பார்க்கையில் மணி ஒன்பதாகியிருந்தது. அப்பாவைப் பார்க்க சென்றேன். படுக்கை காலியாக இருந்தது. காலை ஆறே முக்காலுக்கு அப்பா இறந்துவிட்டதாகவும், அவர்கள் என்னைத் தேடிப்பார்த்துவிட்டு, என் மொபைல் எண்ணையும் முயற்சி செய்துவிட்டு வேறுவழியின்றி சடலத்தைப் பிணவறைக்கு மாற்றிவிட்டதாக சொன்னார்கள். அப்பாவின் அந்த கடைசி புன்னகை அப்படியே நினைவிருந்தது. கடைசியாக என்ன பேசினார், 'ப்ரியாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா'. அதன் பிறகு? அதன் பிறகு? எதுவுமேயில்லை. பெற்ற குழந்தையின் அழுக்குரலைக் கேட்காமலே அம்மா இறந்தாள். அப்பா நான் தூங்கும் போது எதுவுமே சொல்லாமல் போயிருக்கிறார்.

பிணவறைக்கு போனேன். கொடுக்கப்பட்ட காகிதத்தைக் காட்டி அப்பாவின் உடலைப் கேட்டேன். அங்கிருந்த ஊழியர், ஏதேதோ பேசிக்கொண்டே அப்பாவின் உடலை எனக்காக ஒரு துணியை சுற்றிக் கட்டினார். 'காலேல சொன்னாங்கப்பா, பையன் ஒருத்தன் இருக்கான், பாடி கேட்டு வருவான்னு... கட்டி வச்சுட்டேன்.. எடையில ஒரு மதர் வந்து பிரிச்சுக் கேட்டு ஏதோ ப்ரேயர் பண்ணுச்சு.. நெத்தியில சிலுவ போட்டுச்சு.. செத்ததுக்கு பொறவு என்னத்த ப்ரேயரோ' என்றார். ஜென்ஸியம்மாவாக இருக்கவேண்டும். அப்பா மாமாவின் காதில் இதைத்தான் சொல்லியனுப்பியிருக்க வேண்டும். அப்பாவின் முகத்தில் அந்த புன்னகை அப்படியே இருந்தது.

முற்றும்