Friday 17 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 52

Rate this posting:
{[['']]}
அப்பாவும் இரண்டு கனவுகளும்

எப்போதும் படிக்கும் செய்தித் தாள் தான்., இன்று அதைப் படிக்க விரித்த
போது அதிலிருந்து விழுந்த ஒரு துண்டுப் பிரசுரம் என் வாழ்க்கயையே மாற்றப்
போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
"கனவுகளை நிஜமாக்க வேண்டுமா?" என்ற பெரிய தலைப்பைப் பார்த்ததும் ஏதோ
சுயமுன்னேற்ற வகுப்புக்கான விளம்பரம் போல எனக் கொட்டாவியுடன்
புறக்கணிக்கப் போனவனைத் தடுத்தது அந்த வாசகம்.
சற்றே சிறிய எழுத்தில், "நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமா? அல்லது
ஜெனிஃபர் லாரன்ஸுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமா? அனுகுங்கள் உங்கள் ட்ரீம்
மேக்கரை" அதன் கீழே இன்னும் சிறியதாய் "உறக்கம் இல்லாமல்
துன்பப்படுபவர்களுக்கு உறக்கத்தோடு நல்ல கனவுகளையும் அருளும் உங்கள்
ட்ரீம் மேக்கர், அருளானந்தம்" அனுகவும் என்று போட்டு போல்ட் எழுத்தில்,
நம்பர்21, குஜராத்தி தெரு, வட்டம்-16, நெய்வேலி நகரியம். என்றிருந்தது
வாட்ஸாப் எண்ணுடன்.
எனக்கு ஏன் இந்தக் ட்ரீம் மேக்கர் இவ்வளவு முக்கியமான செய்தியாகப்
படுகிறார் என்பதற்கு அதிமுக்கியமான காரணம் உண்டு.
அது அகல்யா..
இந்த உலகத்திலுள்ள முன்னூற்றி என்பது கோடிக்கும் சொச்ச பெண்களில் நான்
எனக்கெனத் தேர்ந்தெடுத்தப் பெண்.
“அழகான பெண்கள் எல்லாம் எனக்கு உன் சாயலிலே இருக்கின்றனர்., உன்
சாயலிலுள்ளவர்கள் எல்லோருமே பேரழகிகளாக இருக்கின்றார்கள்” என நான்
அவளிடம் சொன்ன போது வெட்கத்துடன் புன்னகைத்தாள். ஆம், என்னைப் போலவே
அவளுக்கும் என் மேல் காதல் உண்டு. ஆனால் நாங்கள் காதலர்களாக இல்லை.
காரணம் அவள் அப்பா..
எஞ்சினியரிங் ஃபைனல் இயரில் சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து வந்திருந்த
கல்ச்சுரல் அழைப்பிற்கு ப்ராஜக்ட் வேலைகளைத் தள்ளி வைத்து விட்டு வேக
வேகமாக மைக்ரோ, நானோ அண்ட் மோர்.. என்னும் தலைப்பில் ஆர்டிகல் தயார்
செய்து கொண்டு போனது வெறும் பேப்பர் பிரசண்டேஷனுக்காக மட்டுமில்லை அங்கு
படிக்கும் அனைத்திந்திய அழகிகளுக்காவும் தான்.  அடர்ந்த பூவரசு
மரங்களுக்கு இடையில் கதிரவன் பொன்னொளி பாய்ச்சும் எற்பாடு காலத்தில்
நான்கு அழகிகளுக்கு நடுவே பேரழகியாக அவளைப் பார்த்தேன். பார்த்துக்
கொண்டிருக்கும் போதே அவளை தவற விட்டேன். கண்டதும் காதலெல்லாம் படங்களில்
மட்டுமே என எண்ணுபவன் நான், ஆகவே மறுபடியும் காண இன்னும் இரண்டு நாட்கள்
அந்த வளாகத்திலேயே சுற்றினேன் அவளைக் காண முடியவில்லை, ஆனால் சில
தோழிகளின் நட்பு கிடைத்தது இருந்தும் அவள் பேர் தெரியாமல், ஊர் தெரியாமல்
அவர்களாலும் ஏதும் உதவ முடியவில்லை. சில மாதங்கள் கழித்து தோழி ஒருத்தி
கட்செவி அஞ்சலில் அனுப்பிய குரூப் போட்டோவில் சற்று ஓரமாய் அவள் முகம்..
"கடவுள் இருக்கான் குமாரு" என ஃபீல் பண்ண வைத்த நிமிடம். பின் தொடர்பு
என் வாங்கினேன். நேர்மையான ஒரு ப்ரபோசல், உண்மையான சில வார்த்தைகள்,
நம்பிக்கைக்குரிய சில நண்பிகளின் உதவி மூலமாக எனக்கும் அவளுக்குமான நட்பு
காதல் என ஆரம்பித்தால் நட்பு முறிந்துவிடும் என்ற உறுதிமொழியொடு வேர்
விட்டது ஆழமாக.. ஆம் கன்னியம் தவறாத வெறும் நட்பு மட்டுமே..
ஓராண்டுக்கும் மேலாய் எங்களின் நட்பு உறுதியாக போய்க்கொண்டிருந்தது..
அவளுக்கும் என் மேல் விருப்பம் வளர்வதாய்த் தோன்றியது, நான் படிப்பை
முடித்து வேலைக்காக முயன்று கொண்டிருந்தேன். வேலை மட்டும் கிடைத்து
விட்டால் அவள் வீட்டில் நேராகப் போய் பெண் கெட்டுவிடலாம் என்று இருந்த
போது..  வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாள் ஆப்பினை.,
"எங்க வீட்ல எனக்கு பையன் பாத்திருக்காங்க"
திக்கென இருந்தது, இருந்தும் சமாளித்து "எங்க வீட்ல கூட எனக்கு பொண்ணு
பாக்குறாங்க நா பேச சொல்லட்டுமா வீட்லேர்ந்து?" என்றேன்.
"வெளையாடாதீங்க.. அம்மாவோட ஃப்ரண்டோட பையன்.. எஞ்சினியரிங் முடிச்சிட்டு
சொந்தமா பிசினஸ் பண்றாங்க போல.. அம்மாக்கு ரொம்ப புடிச்சிருக்கு..
படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்றாங்க "
"பையன் பேரென்ன?" என்றேன்.
"திலீப் குமார்"
"உனக்கு புடிச்சிருக்கா?"
பதில் ஏதும் இல்லை அவளிடமிருந்து.
"ஒரு அஞ்சு நிமிஷம் பேசனும், கால் அட்டெண்ட் பண்றியா?"
"ஹ்ம்ம்.." என்றாள்.
போன் செய்தேன், எடுத்தாள்.
"உனக்கு என்ன புடிக்குமா?"  என்றேன் எடுத்த எடுப்பிலேயே..
"ஏன் கேக்குறீங்க?"
"புடிக்குமா புடிக்காதா? பதில சொல்லு.."
"புடிக்கும்..."
" நா உன்ன கல்யாணம் செஞ்சிகிட்டா உன்ன நல்லா பாத்துப்பேன்னு நம்புறியா?"
"ஹ்ம்ம்ம்.."
"ஹ்ம்ம்ம்னா என்ன அர்த்தம்? நம்பிக்க இருக்கா இல்லையா?"
"உங்கள விட என்ன நல்லா புரிஞ்சிக்க, பாத்துக்க யாராலயும் முடியாது.."
:அப்போ என்ன கல்யாணம் பன்னிக்க.. நா வீட்டுக்கு வந்து பேசுறன்.."
"நடக்காது.. ஒத்துக்க மாட்டாங்க.." அவள் குரல் கம்மியது.
"ஏன் வீட்டுக்கு லவ்லாம் புடிக்காதா?"
"அப்படி இல்ல.. அப்பா அம்மாவே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
அம்மாவ கட்டிக்கிட்டா சொத்துல ஒரு பைசா கூட தர மாட்டேன்னு தாத்தா
சொன்னப்ப அப்பா தன்னோட கோடிக்கணக்கான சொத்து தனக்கு வேண்டாமுன்னு
சொல்லிட்டு வந்து எங்க அம்மாவ கல்யாணம் கட்டிகிட்டாரு.. ஆனா என்னோட
ரெண்டு வயசுலயே அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டாரு.. சொந்தக்காரங்க
யாருமே உதவிக்கு வராதப்போ அம்மா மட்டுமே இரும்பு மனுஷி போல நின்னு என்ன
வளர்த்து ஆளாக்கியிருக்காங்க`` அவங்க கஷ்டபடுராப்ல நா ஏதும் பண்ண
மாட்டேன்.." குரல் உடைந்து அழுகையை விழுங்கினாள்.
"அப்போ நான் அம்மாகிட்ட பேசுறன்.. உங்கள போல நா ரெட்டியார் கெடையாது..
நாங்களாம் வன்னிய குல ஷத்ரியாஸ், ஆனா நீங்க பாக்குற எந்த ரெட்டியார் பையன
விடவும் உங்க பொண்ண நான் நல்லா பாத்துப்பேன்னு உங்க அம்மாகிட்ட சொல்றன்..
அவங்க புரிஞ்சிப்பாங்க.."
"எங்க குடும்பத்துல வெளில யாரும் பொண்ணு கொடுத்ததோ எடுத்ததோ இல்ல, என்னால
சொந்தக்காரங்க முன்னாடி எங்க அம்மா தலை குனிஞ்சி நிக்கறத நா விரும்பல..
புரிஞ்சிக்குங்க"
"ஒருவேளை இப்போ உன் அப்பா இருந்திருந்தா கண்டிப்பா அவரு
புரிஞ்சிகிட்டிருப்பாரு" என்றேன் நிதேச்சையாய்..
"இருந்திருந்தா நிச்சயம் நம்மள ஒத்துகிட்டிருப்பாரு தான்.. ஆனால்
இல்லையே.. இப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு தான் நான் அவ்வளவு
வெலகியிருந்தேன்,, ஆனா....." வார்த்தைகள் அழுகையில் கரைந்து
விட்டிருந்தன..
எனக்குப் புரிந்தது.. தன் வாழ்க்கையையே தன் மகளுக்காக அர்ப்பணித்த ஒரு
தாயின் மனதை வதைக்க விரும்பாத ஒரு பெண்ணின் அன்புக்குரியவனாக இருக்கிறேன்
என்பது ஒரு புறம் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒருங்கே கொடுத்தது.
அதன் பின் நான் அவளிடம் பேசவில்லை.. அவளிடமிருந்து வந்த அழைப்புகளுக்கும்
பதிலளிக்கவில்லை.. ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக ஏங்கிக்
கொண்டிருந்தது, என் கனவிலும் நினைவிலும் அவளே நிறைந்திருந்தாள்..
என்னுடன் பழகிய நாட்களில் எந்த ஒரு நிலையிலும் தன் நிலை மாறாத,
பெண்மை எல்லை மீறாத, தன் குடும்பத்தின் பெருமை காக்க நினைக்கும் தங்கம்
போன்ற இந்தப் பெண்ணை எவ்வாறு நான் இன்னொருவனுக்கு விட்டுத் தருவேன்?

 ஆயிற்று ஆறு மாதங்கள்.. இன்று இந்த விளம்பரம் எனக்குக் கொஞ்சம்
நம்பிக்கையை அளித்தது.. முயற்சி செய்து தான் பார்ப்போமே..
ட்ரீம் மேக்கர் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன், வரச் சொல்லியிருந்தார்..
போனேன்..
நீளமான வராந்தாவில் ஐந்து பேர் காத்திருந்தனர். 40 நிமிடங்கள்
காத்திருப்பிற்குப் பின் உள்ளே அழைக்கப் பட்டேன். அருளானந்தம் நினைத்ததை
விட இளமையாய் இருந்தார், கடவுளின் தூதரைப்போலத் தோன்றினார் எனக்கு..
தன்னுடைய ப்ராஜெக்ட் ரியாலிடி ட்ரீம் பற்றி சுருக்கமாய் விளக்கினார்..
அடுத்த வருட நோபலுக்கு தன் பேரைப் பரிந்துரைக்க விவாதம் நடப்பதாகக்
கூறினார்..
பின் "இப்போ நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?" என்றார்.
நான் அகல்யா அனுப்பியிருந்த அவளின் அப்பாவின் புகைப்படத்தை
எடுத்துக்காட்டி, இந்த மனிதரை ஒருவரின் கனவில் புகுத்தி எனக்கு சிபாரிசு
செய்ய வேண்டும். சாத்யமா?" என்றேன்.
"அது நீங்க எதுக்காகக் கேக்குறீங்கங்கறத பொருத்தது" என்றார்.
மொத்தமும் சொன்னேன்.. மனிதர் உற்சாகமானார்..
"மொத தடவையா ஒரு லவ் மேட்டருக்கு நம்ம டெக்னாலஜி ஹெல்ப் செய்யப் போகுது..
இப்போ இது எப்படி வேலை செய்யுது, இதுக்கு என்னலாம் தேவைன்னு சொல்றன்,
ஒருத்தங்க கனவுல ஒரு கேரக்டர அனுப்ப வெறும் போட்டோ மட்டும் இருந்தா
போதும் நாம என்ன கனவ உருவாக்க நெனைக்குறோமோ அத ப்ரோக்ராம் செஞ்சி ஒரு
கேப்ஸ்யூல் மாத்திரை போல ஆக்கிடுவோம், அத கனவு காண வேண்டிய நபரை சாப்பிட
வெச்சிட்டா போதும்,. அந்த கேரக்டரோட குரல், நடை, உடை பாவனைகளெல்லாம்
அவங்க மனசுல இருக்குற சப் கான்ஷியஸ் மைண்டே கொண்டு வந்துடும்,
அவ்ளோதான்.. சிம்பிள்.. சரி பெயர் அட்ரெஸ்லாம் சொல்லுங்க.."
சொன்னேன்.
"அட பாண்டிச்சேரியா!! உங்க வேலை முடிஞ்சுதுன்னே வெச்சிக்கோங்க.. நம்ம
டிரைவர் கம் அஸிஸ்டெண்ட் கந்தசாமி அந்த ஏரியாவாச்சே.. அங்க எல்லா எடமும்
அவனுக்கு அத்துப்படி.. ரெண்டு நாள் கழிச்சி இதே நேரம் வாங்க.."
இரண்டு நாட்கள் கழித்து போனேன்.
அங்கு அந்த கந்தசாமி நின்றிருந்தான்.. பேரைக் கேட்டு ஒரு 50 வயது ஆளைக்
கற்பனை செய்திருந்தேன். அவனுக்கு வெறும் 22, 23 தான் இருக்கும்..
பார்த்ததும் வணக்கம் வைத்தான், அருளானந்தம் சிரித்தபடியே, ரெண்டே நாளில்
கந்தசாமி மொத்த விசாரணையும் முடித்துவிட்டான்,
“கந்தசாமி நீ என்னலாம் டீட்டெயில் கொண்டு வந்திருக்க சொல்லு பாப்போம்!"
"சார் அந்த அம்மா பேரு சுமதி, அரியான் குப்பத்துல ஃபேன்சி ஸ்டோர் ரன்
பண்ணிட்டிருக்காங்க,டெய்லி சாயங்காலம் ஆறு மணிக்கு பக்கத்து வீட்டுப்
பாட்டியோட ஆஞ்சனேயர் கோயில்லேர்ந்து தெப்ப கொளம் வரைக்கும் வாக்கிங்
போவாங்க.. வெள்ளிக் கிழமை மட்டும் விரதம் அப்டிங்கரதால ஆஞ்சனேயர் கோயில்
பக்கத்துல சானக்யா கஃபேயில ஒரு கப் பால் சாப்பிடுவாங்க.. கடையில வேல
பாக்குற ரங்கராஜ் நம்ம ஃப்ரெண்டு தான் சார்.. வேலைய ஈசியா முடிச்சிடலாம்"
என்று முடித்தான்.
ஒரு மனிதனால் இரண்டே நாட்களில் இவ்வளவு விவரங்களை திரட்ட முடியுமா?
ஆச்சரியத்துப் போனேன்.
"அது தான் கந்தசாமி.. வேலைன்னு வந்துட்டா நெருப்பு மாதிரி.. என்ன
..கொஞ்சம் நியாபக மறதி.. அப்பப்போ, ஷாப்பிங்க் கூப்பிட்டு போயிட்டு நாம
கடைக்குள்ள போயிட்டா திருப்பி வந்து ஆஃபீஸ்ல தேடிட்டிருப்பான்" என்று
சிரித்தார்.
"நாளன்னிக்கு வெள்ளிக்கிழமை.. அன்னிக்கே உங்க வேலையை முடிச்சிடலாம்
போயிட்டு வாங்க தம்பி" என்று அனுப்பினார்.
"எனக்குப் பெரிதாய் நம்பிக்கை இல்லை.. என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்
என்று இருந்தேன்.
ஆயிற்று வெள்ளிக்கிழமை, சனியும் வந்தது..
மாலை ஐந்து மணி இருக்கும் அகல்யாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது..
கிட்டதட்ட ஆறு மாதங்களுக்குப் பின்..
"ஹலோ.." என்றேன்.
"எப்படி இருக்கீங்க?" குரலில் உற்சாகம் தொனித்தது.. என் பதிலுக்கு
காத்திருக்கவே இல்லை.. "நேத்து என் கனவுல அப்பா வந்திருந்தாரு.." நான்
ஆச்சரியமடைந்தேன்
தொடர்ந்தாள், "கூடவே நீங்களும் வந்திருந்தீங்க..அவர் மொகம் எனக்கு சரியா
தெரியவே இல்ல,, ஆனா அது அப்பா தான்.. என் கைய உங்க கைல புடிச்சி
கொடுத்தாரு.. சட்டுன்னு முழிச்சிகிட்டேன்.. காலையில அம்மாகிட்ட என் கனவில
அப்பா வந்தத சொன்னேன்..அம்மா ஷாக் ஆயிட்டாங்க.. உன் கனவிலயும் வந்தாரா
அம்முன்னு கேட்டாங்க.. அப்பா அம்மா கனவில வந்து, " என் பொண்ணுக்கு நான்
பையன் பாத்திட்டன்.. நீ வேற பையன தேடாத.. அவ சொல்லுற பையன கட்டி வைன்னு
சொன்னாராம்"
"எனக்கு நெஜம் போலவே இருந்துச்சி அம்மு.. கனவு போலவே இல்லன்னு.." அம்மா
கண்ணெல்லாம் தண்ணி.. அப்புறம் நா உங்களப் பத்தி சொன்னேன்.. அம்மா
ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்கு வேலை கிடைச்சதும் வீட்டிலேர்ந்து  வந்து
பாக்க சொன்னாங்க.." அவளின் சந்தோஷம் எனக்கும் பற்றிக்கொண்டது..இதைப் போல
இனிய மொழிகள் உண்டோ? இதைப் போல் இனிய நாள் உண்டோ? அருளானந்தத்தைப்
பார்த்து விஷயத்தைக் கூறி நிற்க வைத்து நெடுஞ்சாங்கிடையாய் விழுந்து
எழுந்தேன்.. புன்னகையுடன் ஆசிர்வதித்தார்..

 சிறிது நேரத்திலெ அருளானந்தத்தின் போன் அழைத்தது, மறுமுனையில்
கந்தசாமியின் மனைவி..
“மாடியிலேர்ந்து விழுந்து காலை ஒடச்சிக்கிட்டாருங்க.. ஜிப்மருல சேத்திருக்கோம்..."

அடப்பாவி இந்த நேரத்தில இப்படியா ஆகனும் இவனுக்கு என எண்ணிக்கொண்டார்.
ஹாஸ்பிடலில் கந்தசாமியின் வலது காலைக் கட்டி மேலே நிறுத்தியிருந்தனர்...
இவரைப் பார்த்ததும் பரிதாபமாய் சிரிக்க முயன்றான். டாக்டர் பெரிதாய்
ஏதும் அடி இல்லை ஓரிரு வாரங்கள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றார்..
பாவம் கந்தசாமி மனைவி, ரொம்பவும் சின்ன வயது.. பயந்திருந்தாள். கொஞ்சம்
பணத்தைக் கந்தசாமி மனைவியிடம் தந்து பார்த்துக்கொள்ளும்படி
சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
 வழியில் ஆஞ்சனேயர் கோயில்., அருகே சானக்கியா கஃபே தெரிந்தது.. காரை
நிறுத்தி இறங்கி உள்ளே நுழைந்து ஒரு இஞ்சி டீ ஆர்டர் செய்தார்,
கொண்டு வந்தவனுக்கு கந்தசாமி வயது தான் இருக்கும்,, "ரங்கராஜா?" என்றார்
"உனக்கெப்புடி சார் தெரியும்" என்றான் விழிகள் விரிய.
கந்தசாமி தன்னிடம் வேலை பார்ப்பதைச் சொன்னார்.
"ஆமாம் எப்படியப்பா கந்தசாமிக்குக் கால் ஒடஞ்சிது?" என்றார்.
"அத்த ஏன் சார் கேக்குற.. அன்னிக்கு வெள்ளிக்கெழமை காத்தால வந்து ஒரு
மாத்திரைய கொடுத்து அந்த ஜிகினா பொட்டு கடை வெச்சிருக்கிற அம்மா
சாப்புடுற பாலுல கலந்து தந்துடுன்னு சொன்னாப்டி..நா முடியாதுன்னுட்டேன்..
அப்புறம் பிரச்சனைல்லாம் ஏதும் வராது, அது சும்மா சத்து மாத்திரை தான்னு
சொல்லி ஆயிரம் ரூவா காசும் தந்தாப்டி.. சரி நானும் ஃப்ரெண்டு
சொல்லுறானேன்னு ஒத்துகிட்டேன் சார்.. அந்த அம்மா வந்தப்போ நானும்
மத்திரைய கலக்கி ரெடியா வெச்சிருந்தேன், அந்த நேரம் பார்த்து கரெக்டா
கந்தசாமி வந்து ஒரு கப் பால் வேனும்னு கேட்டாப்டி.. நா
போட்டுத்தரதுக்குள்ள அந்தம்மாவுக்கு போட்டப் பால சாப்டுட்டு அவசர அவசரமா
காசு கூட கொடுக்காம ஒயின் ஷாப் பக்கமா கெளம்பிட்டாப்டி.. என்னாத்த
சொல்லுறது.. காத்தால பாத்தா அவன் பொண்டாட்டி வந்து கதறுது..என்னான்னு
போயி கேட்டா, நைட் மாடியில படுத்துக்கிட்டிருந்திருக்கும் போது
செத்துப்போன அவங்க அப்பா மகனே கீழ குதி கீழ குதி நா புடிச்சிக்கிறேன்னு
சொன்னாப்டியாம் இவனும் குதிச்சிட்டானாம்.. நெசத்துல நடந்தாப் போலவே
இருந்துச்சின்னு சத்யம் பன்னுறாப்டி.. குடிக்கலாம், அதுக்காக மனுசன்
இப்டி நெலவரம் தப்புராப்போலவா குடிக்கிறது? நீயே சொல்லு சார்..!"
Read more...

Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 51

Rate this posting:
{[['']]}
அப்பாவோடே இருப்பேன்

தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அப்பாவை அப்படி பார்க்க. வாசலில் கவிழ்ந்து கிடந்தார். என் பைக்கை அவசர அவசரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, தூக்கி அமர்த்தினேன். “டேய் ... உங்கம்மா பண்ண வேலைய பார்த்தியாடா...?” சத்தமாகவே அழுதார், அவர். சிறுபிள்ளைப்போல.

வயதாக ஆக குழந்தைபோல் ஆகிவிடுவார்கள் என்று கேள்விபட்டிருந்த எனக்கு நேரடியாக அதை பார்த்து அனுபவிக்கும்படி ஆக்கிவிட்டிருந்தார், அப்பா. எழுவது வயதில் இப்படி தேம்பி தேம்பி அவர் அழுதது மனசை கரைத்தது. சிறுவயதில் என் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் கூட வராதபடி பார்த்து பொத்தி பொத்தி வளர்தவராயிற்றே! அப்படியும் மீறி ஓரிரு சமயம் எதிர்பாராதவிதமாக நான் எங்கேனும் அடிப்பட்டு வலி தாங்க முடியாமல் அழுத தருணங்களில் என்னோடு சேர்ந்து கண்ணீர்விட்டவராயிற்றே!  
“ முகிலா ... உங்க அம்மா இப்படி பண்ணிட்டாளேடா... இதுக்கு அவ என் கழுத்த நெறிச்சி கொன்னே போட்டிருக்கலாம்டா...” புலம்பியபடியே என் தோளில் சாய்ந்து அழுதார்.

அம்மா, அப்பாவிற்கு அப்படி பயப்படுவாள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது .  அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, தெருமுனையிலிருந்து அவர் எழுப்பும் சைக்கிள் பெல் சத்தம் கேட்டு அப்படி நடுங்குவாள். படித்துக்கொண்டிருக்கும் வார இதழை தூக்கிப்போட்டுவிட்டு அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் ரேடியோவை நிறுத்திவிட்டு,  ஓடிவந்து பாடம் சொல்லிகொடுப்பதுபோல் என் அருகில் வந்து அமர்ந்துகொள்வாள். அல்லது அடுப்படிக்கு ஓடிவிடுவாள். அவ்வளவு பயமும் அவர் ரிட்டையர்ட் ஆகி  வீட்டிலேயே இருக்கத்தொடங்கிய நாட்களிலிருந்து குறையத்தொடங்கியது. சின்ன சின்னதாக எதிர்த்துப்பேசத்தொடங்கி, இந்த பத்தாண்டுகளில் அவரையே மிரட்டிப்பேசுமளவுக்கு மாறிப்போயிருந்தாள். இப்போதெல்லாம் தினமும் ஏதேனும் ஒரு வழக்கு, இவர்களுக்குள்.  மத்தியில் மாட்டிக்கொண்டு  நான் யார் பக்கம் பேசினாலும், அதற்கொரு தனி  வழக்கு என் மனைவியிடம் நடக்கும். வயதானால் என்ன... கணவன் மனைவி என்பவர்கள் எந்த வயதானாலும் கருத்து வேற்றுமையோடே காலம் கழிபவர்கள்தானே?

சித்திரை வெய்யிலில் நாற்பது நிமிடம் பைக் பயணம் எனக்கே லேசான மயக்கத்தை ஏற்படுத்தி, “எப்படா வீட்டுக்கு போவோம்... ஏ.சி போட்டு கொஞ்ச நேரம் படுப்போம்னு (கரண்ட் இருக்கவேண்டும் என்பது தனி பிரார்த்தனை) ஒரு உணர்வை எனக்குள் விதைத்திருக்க, வாசலிலேயே அப்பா இப்படி விழுந்து பிரண்டு அழுததைப்பார்த்து தலைசுற்றியது.  

“என்னாச்சிப்பா ?”

“ ஐயையோ... அத எப்டிடா உன்கிட்ட சொல்ல... படுபாவி... சொல்ல சொல்ல கேக்காம.. எறநூறு ரூபா காசுக்கு ஆசைப்பட்டு, என்னையே வித்துட்டாடா.”

எனக்கு எதுவும் சரியாக புரியவில்லை. நேராக அடுப்படியில் வேலையாக இருந்த அம்மாவிடமே வந்து கேட்டேன்.

“ என்னம்மா பண்ண... ஏம்மா அவர இந்த வயசுல இப்படி கஷ்டப்படுத்தரே? என்னத்தமா வித்து தொலைச்சே..?

“ஐயையோ... அவுருதான் புண்ணியமத்த ஒன்னுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணராருணா... நீயும் வந்ததும் வராததுமா குதிக்கறே...  “ அப்பா விஷயத்தில் அவள் காட்டும் வழக்கமான அலட்சியதோடே இப்போதும் பதில் சொன்னாள்.

“ ஒண்ணுமில்லடா. அவரு இப்போ சைக்கிள் ஒட்றாரா? இல்ல.. இல்ல. அது சும்மா தெண்டத்துக்கு எதுக்கு நிக்குதுன்னு நம்ம மாடசாமி வந்தான். அவன்கிட்ட எடைக்கு போட்டுட்டேன். எறநூறு ரூவா கொடுத்தான். அதுக்குபோய் இந்த மனுஷன்... “

அம்மா சொல்லி முடிப்பதற்குள் ... “ ஏம்மா... அவுரோட உயிர்மா அது. அதையா காசுக்கு போட்டுட்ட? எப்டிம்மா உனக்கு மனசு வந்தது..?”

நான் இப்படி கேட்பேன் என்று துளியும் அவள் எதிர்பார்க்கவில்லை.என்னைக்கூட கேட்காமல் கொள்ளாமல் இப்படி பழைய பாத்திரகாரனுக்கு அப்பாவின் அடையாளமான சைக்கிளை போடுவாள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளோடு மனைவி தாய்வீட்டிற்கு சென்றிருந்தாள். இல்லையெனில் அவளாவது இந்த கூத்தைப் பற்றி செல்போனில் தகவல் சொல்லி இருப்பாள். நானும் உடனே தடுத்திருப்பேன்.

நான் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக மாடசாமி குடோன் நோக்கி பயணித்தேன். எப்படியாவது அப்பாவின் சைக்கிளை மீட்டு கொண்டுவந்துவிடவேண்டும் என்கிற  வெறி எனக்குள் பரவியது.

அப்பாவின் சைக்கிள் மிகவும் கம்பீரமானது. பழைய ‘ராலே’ வண்டி. நான் படிக்கிற காலத்தில் அப்பா என்னை அதில்தான் அழைத்துப்போவார். அப்போதெல்லாம் அது அடர்பச்சை நிறமாக இருந்ததாக ஞாபகம். ஆனால் பின்னாளில் அது பெயிண்ட் உரிந்து கருப்பாக மாறிவிட்டிருந்தது. குரங்கு பெடல் போடச்சொல்லி  அதில்தான் எனக்கு அப்பா சைக்கிள் ஓட்ட கற்றுத்தந்தார். அப்பா வீட்டில் இருக்கிறார் என்ற அறிவிப்பு தரும் சாதனமாக பலருக்கு திகழ்ந்திருக்கிறது, அது. இன்றும் , அந்த சைக்கிளை பார்க்கும்போது அப்பாவின் பிம்பம் அதனோடே ஒட்டிக்கொண்டு தெரியும்.

இப்போதும் வெய்யில் சுட்டெரித்தது. ஆனால், எனக்கு அயர்வோ எரிச்சலோ ஏதும் தெரியவில்லை. என்னோடைய தற்போதைய கவலையெல்லாம் மாடசாமி அதை ஊர்பேர் தெரியாத  வேறுயாரிடமாவது கொடுத்துவிட்டிருக்கக்கூடாது. ஒருமுறை என் கதைவந்த புத்தகமொன்றை தவறுதலாக அவனிடம் போட்டுவிட்டு அன்று மாலையே போய் கேட்கும்போது அது வேறு ஒரு மொத்தவியாபாரியிடம் போய்விட்டிருந்தது.

செல்போன் சிணுங்கியது. எடுத்தேன். அப்பா தான் பேசினார்.

“ முகிலா... நீ வீணா அந்த சைக்கிள தேடி அலையாதடா. சாப்டாம கூட இந்த வேவாத வெய்யில்ல உன்ன அலைய வச்சிட்டேன். நீ திரும்பி வந்து சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீஸ் போடா.”

இந்த நிலையிலும் என் பசியைப்பற்றி அவர் கவலைப்பட்டு பேசியது எனக்கு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டியது. அவர் உயிருக்குயிராய் பாதுகாத்து வைத்திருந்த  சைக்கிளை மீட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்தேன்.

மாடசாமி குடோனை அடையும்போது படபடப்பு கூடியது. தூரத்திலிருந்தே என் கண்கள் அப்பாவின் சைக்கிளைத்தேடியது. பழைய இரும்பு குவியல்களும் புத்தகக் குவியல்களுமாய் கிடந்த அந்த குடோனின் ஒரு மூலையில் கிடந்தது அந்த பொக்கிஷம்.

“அண்ணே... என்ன..? சைக்கிளா? நான் அப்போவே நெனச்சேன். அம்மா உன்கிட்ட கலக்காம சைக்கிள எடைக்கு போட்டுடுத்துன்னு. “நான் கேட்கும் முன் மாடசாமி சொன்னான்.

“ சரிண்ணே.. நீங்க போங்க. நான் சாயங்காலம் வீட்டுப்பக்கம் வருவேன் அப்போ கொண்டு வந்து போட்டுடறேன்.”

“இல்ல மாடசாமி. அப்பா இத கண்ணால பார்த்தாதான் மதியான சாப்பாடே சாப்பிடுவார். நான் இத ஆட்டோல வச்சி இப்போவே ஏத்திட்டு போறேன். “
மாடசாமியிடம் நான் ஐநூறு ருபாய் நோட்டை கொடுத்தேன். அவன் கொடுக்கவந்த மீதியைகூட வேண்டாமென்று சொல்லிவிட்டு சைக்கிளை ஆட்டோவில் ஏற்றினேன்.

வீட்டில் பொய் அதை இறக்கிவைத்ததும் அப்பா ஓடிவந்து என்னை இறுக்கி கட்டிகொண்டார். “நான் செய்த தவம்டா நீ . முகிலா... இந்த காலத்துல பெத்த .தகப்பனையே பசங்க மதிக்கிறதில்ல. ஆனா நீ என் சைக்கிளுக்கு இவ்ளோ...” அவர் தழுதழுத்தார்.

அப்பாவிற்கு தெரியாது. அவருக்காக மட்டும் நான் இந்த சைக்கிளை தேடிப்பிடித்து கொண்டு வரவில்லை. எனக்காகவும்தான். ஆம். அப்பாவிற்கு பிறகும் நான் அப்பாவோடே இருப்பேன்.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 50

Rate this posting:
{[['']]}
அப்பா சாண்ட்டா



”இல்லை நீங்கள் இந்த விமானத்தில் ஏறமுடியாது. நான் சொல்வது புரிகிறதா” செக்-இன் கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்திலிருந்து தெள்ளத்தெளிவாக சொன்னாள் கருநீல ப்ளேசர் அணிந்த அமெரிக்கள்.

அவளுக்கு என்ன வயதிருக்கும், எப்படி இருந்தாள் என விவரிக்க இச்சிறுகதையில் இடமுமில்லை, நேரமுமில்லை. என் ஊர் பார்க்க ஓடிக்கொண்டிருந்தேன் . சுற்றிலும் பார்க்க மொத்த சான்ப்ரான்சிஸ்கோ ஏர்ப்போர்ட்டுமே தீபாவளிக்கு முதல்நாள்கோயம்பேடு போல பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. விடிந்தால் கிருஸ்மஸ் என தொடர்ந்த விடுமுறை வாரம் என்பதால் ஏகக்கூட்டம்.

”அதான் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

இம்முறை என்னையறியாமல் என் குரலில் கடுமை சேர்ந்துகொண்டது.

”25 நிமிஷம் தான் இருக்கு உங்க ஃப்ளைட் கிளம்ப. குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு முன்னால செக்-இன் செய்யனும். அதுமில்லாம இருக்குற செக்யூரிட்டி லைன் கூட்டத்துக்கு நீங்க நிச்சயமா ஃப்ளைட்டை பிடிக்க முடியாது” என் கடுமையைஉணர்ந்தது போன்ற தொனியில் சொன்னாள்.

சுர்ரென்று கோபம் ஏறியது. இத்தனை கஷ்டப்பட்டு அடித்துபிடித்து வந்தது இதுக்குத்தானா? இல்லை கூடாது. முன்கோபத்திற்கான நேரமில்லை இது. காரியத்தை கெடுக்காதடா பாவி.

”ஏதாவது செய்ய இயலுமா ப்ளீஸ்?” வலிந்த செயற்கை புன்னகையோடு கேட்டேன்.

ஓரிரு நிமிடங்களுக்கு என்னிடம் பேசவில்லை அவள். என் பின்னால் வரிசையில் நின்றிருந்த வெள்ளைக்காரன் காதுபட ப்ச் என்றது காதில் விழுந்தது. நான் திரும்பவில்லை.

”ஒரே வழிதான் இருக்கிறது. நீங்கள் மினியாபோலீஸ் போகவேண்டும் அதானே? சான் ஹோசே ஏர்போர்ட்டிலிருந்து டென்வர் போய், அங்கிருந்து மினியாபோலீஸுக்கு கனெக்டிங் விமானம் இருக்கிறது. அதற்கு டிக்கெட மாற்றித்தரலாம்”

“ஏங்க, நான் போக இருக்கும் டைரக்ட் ஃப்ளைட் இன்னும் இதே ஏர்போர்ட்ல தான் இருக்கு. இப்ப விட்டாலும் உள்ள போயி 3 மணிநேரத்துல மினியாபோலிஸ்”

“ஆனால் என்னால் போர்டிங் பாஸ் தர இயலாதே. சரி உங்கள் முடிவை சீக்கிரம் சொல்லுங்கள்”

“ஓகே வில் டேக் இட்” என தோற்ற குரலில் ஒத்துக்கொண்டேன்.

வேறு வழில்லை. நான் ஃப்ளைட் கிளம்ப அரைமணி நேரம் முன்னே வந்திருக்கலாம். இவளிடம் நிற்கவேண்டிய தேவையில்லாது போர்டிங் பாஸ் கொடுக்கும் தானியங்கி டெர்மினல் வேலை செய்திருக்கலாம். வரும் வழியில் கோல்டன் கேட்பாலத்தில் அத்தனை நெருக்கடி இல்லாதிருந்திருக்கலாம். கிளையண்ட் அலுவலகத்தில் ப்ரிண்டர் சொதப்பாதிருக்கலாம். ஊருக்கு கிளம்பலாம் என நினைக்கையில் முகுந்த் உட்காரவைத்து படுத்தாது போகவிட்டிருக்கலாம்.

முகுந்த். முகுந்த் சுந்தரம். கிளையண்ட் அன்னதாதா. இந்த ப்ராஜக்டை பொருத்தவரை அவன் சொல்லே கடைசிச்சொல். ”மூனே மாச CRM ப்ராஜக்ட். . ஃபிக்ஸ்டு ப்ரைஸ். ஈசியான குக்கி கட்டர் ப்ராஜக்ட். நீ ஒருத்தன் தான் கிளையண்ட் சைடுல. நாங்கஎல்லாத்தையும் பார்த்துக்கறோம். டெலிவர் பண்ணிட்டு இன்வாய்ஸ் அப்ரூவல் வாங்கு. நானே உன்னை மறுபடி மினியாபோலீஸ்ல போடுறேன். வோ முகுந்த் பி மதராசி ஹே யார்..” என ஆஃப்ஷோர் மேனேஜர் அகர்வால் ஆசைக்காட்டி அனுப்பிவைத்தான்.

இப்படித்தான் இதற்கு முன் நேஷ்வில்லுக்கு அனுப்பும்போதும் சொன்னான். அதற்கு முன்பு ரிச்மண்டுக்கு அனுப்பும்போதும் சொன்னான். கம்யூட்டர் துறையை பொட்டி தட்டுவது என்ற வழக்கில் சொல்வார்கள். எனக்கு பொட்டி தட்டவே பொட்டிதூக்க வேண்டியிருந்தது. 8 மாதங்கள் முன்பு ஆரம்பித்தது. இன்னமும் சூட்கேஸ் வாழ்க்கை, ஹோடடல் வாசம், காஃபி மெஷினில் தண்ணி காப்பி, கூகிள் மேப்பில் தேடிய இந்திய ரெஸ்டாரண்ட்டில் முழித்துக்கொண்டிருக்கும் பாஸ்மதி சோறு,குவளை இல்லாத ஹோட்டல் கக்கூஸில் சிறு கப்பை கொண்டு சமாளித்தல் என வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

மினியாபோலிஸில் இருக்கும் வரை மதியத்திற்கு குழம்புச்சாதம் எடுத்துப் போய்க்கொண்டிருந்தவன். அதுவும் மனைவியே எனக்கும் சேர்த்து எடுத்து வந்துவிடுவாள். ஒரே அலுவலகம். அக்கவுண்ட் மேனேஜர் “அடேய் ஆபீஸ்லயே குடும்பம் நடத்தறஒரே நாள் நீ தான்” என சிரிப்பான். காலையில் எட்டரைக்கு எங்கள் மூன்றரை வயது பாப்பாவை டே கேரில் விட்டுவிட்டு 35 மேற்கு ஃப்ரீவேயை பிடித்தால் டவுண்ட்டவுன். மாலை நாலரைக்கு “கிளம்பலாமா” என மெசஞ்சரில் கேட்டு கிளம்பினால்,ஐந்து மணி பாப்பாவின் டே கேர். மதியம் அவர்கள் தந்த மீன் அல்லது டர்க்கி சாண்ட்விச் வாசனையோடு எங்களிடம் ஓடிவருவாள். ஆறுமணிக்கு வீடைடைந்தால், 7.30 வரை உலாத்தல், எட்டரைக்கு டிஷ் டிவியில் சூப்பர்சிங்கர் பார்த்துகொண்டேஇரவுணவை முடித்து, ஆஃப்ஷோரிடமோ, அப்பா அம்மாவுகோ ஃபோன் பேசி, மனைவியை அணைத்துக்கொண்டே தூங்கினால் நாள் திவய்மாய் முடியும். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இந்த ரிசஷன் வரும்வரை. சடசடவெனப்ராஜக்டகளையும், எங்கள் ஆட்களையும் குறைக்க ஆரம்பித்தனர்.

”தம்பி, நீ கன்சல்ட்டிங் ஸ்ட்ரீம்ல இருக்க. உன் பில்லிங்குக்கு இங்க வேலையில்லை. பொட்டி தூக்கியே ஆகனும். ரொம்ப பிகு பண்ணாதே. அவனவனுக்கு வேலையே போகுது. நியூஸ்லாம் படிக்கிறியா இல்லியா” என தனியே கூப்பிட்டுசொல்லப்பட, அன்றிலிருந்து மனைவி,மகள் ஒரு ஊரிலுமாக, நான் நான் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருக்கிறேன்.

“இந்தாங்க உங்க போர்டிங் பாஸ்” என்ற முதல்வரி யுவதியின் குரல் என்னை கலைத்தது.

“டென்வர் ஃப்ளைட் அதிகாலை 3 மணிக்குன்னு போட்டுருக்கு?”

“ஆமா, red eye தான். கிருஸ்மஸ் முதல்நாள் இது கிடைத்ததே உன் அதிர்ஷ்டம். சான் ஹோசே ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பும் ஃப்ளைட்டை பிடிக்க நீ இப்போதே கிளம்ப வேண்டும்”

வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். ஆபீசிலிருந்து கிளம்பும்போதே நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்கிற போது முகுந்த் பிடித்துக்கொண்டு ஸ்டேடஸ் கேட்டான். “வேலை முடியும் முன்பே அதிகமாக பில் செய்கிறீர்கள். இண்டியஆஃப்ஷோரிங் கம்பெனிகளே இப்படித்தான்” என வார்த்தை விட்டான். ஐந்து வருடம் முன்பாய் வந்து க்ரீன்கார்டும் அமெரிக்க சிடிசன்ஷிப்பும் வாங்கிவிட்ட திமிர். பொறுமையாக விளக்கினேன். ஏதும் முறைத்துக்கொண்டால் “என்னத்தகிளையண்ட்டை சமாளிக்கற” என அப்ப்ரைசலில் கைவைக்கப்படும். வேலையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

விமான நிலையம் வரும் வழியிலாவது சாப்பிட்டிருக்கலாம். வழியில் டாய்ஸ் ஆர் அஸ் பொம்மைக்கடை கண்ணில் பட, “எல்லாம் வாங்கியாச்சு..ஏதோ ஃப்ளையிங் டிங்க்கர் பெல் பொம்மையாம். அது தான் பாப்பாவுக்குசாண்ட்டாகிளாஸ்கிட்டருந்து வேணுமாம். ஆனா இங்க கிடைக்கல” அனு சொன்னது ஞாபகத்துக்கு வர, பாப்பாவுக்கான பொம்மை தேடலில் 30 நிமிடம் போனது. அதை தவிர்த்திருந்தால் ஒழுங்காய் விமானத்தை பிடித்திருக்கலாம். இப்போதுயோசித்து பயனில்லை.

வெளியே டாக்சிகள் தட்டுப்பாடாய் இருக்க, சான் ப்ரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து சான் ஹோசே விமான நிலையம் செல்பவர்களை 3,4 பேர்களாய் சேர்த்து அனுப்பிக்கொண்டிருந்தனர். ஒரு நடுத்தர வயது வெள்ளைக்காரர்,கறுப்பினத்தவரோடு இணைத்து அனுப்பப்பட்டேன்.

”நான் இங்க ஓபாமா கன்வென்ஷனுக்கு வந்தேன். லேசுப்பட்ட ஆளில்லைப்பா அவரு. அவரு வந்தாருன்னா ரிசஷன்லாம் மூனே மாசத்துல காலி” என வெள்ளைக்காரர் கறுப்பரோடு பாரதவிலாஸ் கொண்டாடிக் கொண்டிருந்தார். கசப்பாய் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். டாக்சியில் மூன்றாவதாக ஒரு இந்திய பிராகிருதி இருப்பதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. கடிகாரத்தில் ஒரு கண்ணும், அவர்கள் பேச்சில் ஒரு காதும் வைத்து பசியை மறக்க முற்பட்டேன். டென்வர்விமானத்தையும் தவறவிட்டுவிடுவேனோ என டிராபிக் பயமுறுத்தியது. மொத்த சான்ஃப்ரான்சிஸ்கோவும் ஊருக்கு போவது போல் தோன்றியது.

நல்லவேளை, டென்வர் விமானத்தை பிடிக்க முடிந்தது. விமானம் ஏறும் முன்னே வயிற்றை குமட்டியது. ”காஃபி ஆர் ஜூஸ்?” என கேட்கப்பட எதற்கோ காப்பி பெற்றுக்கொண்டேன். அதோடு சாப்பிட ஏதும் இருக்குமா எனக்கேட்க, இந்த காபிசர்வீசே என்று நிறுத்தப்படும் எனத்தெரியவில்லை என ஏர் ஹோஸ்ட்டஸ் சிரித்தாள். காப்பி இன்னமும் வயிற்றை பிரட்டி, விமானத்தின் கழிப்பறையில் வாந்தியெடுக்க வைத்தது.

டென்வர் ஏர்போர்ட்டில் இறக்கிவிடப்படும் போது மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. விமான நிலைய உணவகங்கள் அத்தனையும் மூடியிருக்க, தானியங்கி மிஷின் சிப்ஸ் சாப்பிடுகிறாயா எனக்கேட்டு தேமேயென நின்றது. சிப்ஸை சாப்பிட்டுஇன்னமும் வயிற்றை கெடுத்துக்கொள்ள தோன்றவில்லை. இன்னமும் 6 மணிநேரம் இருந்தது மினியாபோலீஸ் விமானத்திற்கு. என்னை போல் நள்ளிரவு, அதிகாலை விமானம் பிடிக்க காத்திருந்த பலரும் இருக்கும் சேர்களில் காலை நீட்டி, முடிந்தஅளவு தூங்க முற்ப்பட்டனர். ஹூடி அணிந்திருந்த ஒரு யுவ,யுவதி குழாம் தூங்காமல் சிரித்துக்கொண்டு மற்றவர்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தனர்.

இருக்கையில் உட்கார்ந்துகொண்டே தூங்க முடியவில்லை. சுற்றும் முற்றும் கவனிக்க பலர் தரையிலேயே படுத்து உறங்குவதை கவனித்தேன். சேர்களுக்கும் கண்ணாடிச்சுவருக்குமான நடுவிலான சற்றே மறைவான இடைவெளியில் நானும் தரையில்படுத்தேன். அணிந்திருந்த ஜெர்கினை போர்வை போல் ஆக்கி அதற்குள் முடிந்தளவு உடலை குறுக்கிக்கொண்டேன். தலைக்கு என் கணினி பையை இருந்ததுக்குள் வாகான விதத்தில் வைத்துக்கொண்டேன். சற்று தேவலாம் போல இருந்தது. ஆனால்தூங்குவதற்கு ஏதுவான அமைதி கிட்டவில்லை. திடீரென ஏதேனும் ஒரு மைக்கில் அறிவிப்பும், இல்லை ஆட்கள் நடக்கும் சப்தம், வெளியிலிருந்து பளீரென ஒரு விமானத்தின் வெளிச்சம் என தொடர்ந்த தொந்தரவுகள். விமான நிலையத்துக்கு உள்ளேஇருந்தாலும் குளிர் வேறு போகப்போக அதிகமானது போல் தோன்றியது.

எப்போது அசந்தேன் என தெரியவில்லை. அலைபேசியில் வைத்த அலாரம் ஒலிக்க திடுக்கிட்டு எழுந்தேன். பாத்ரூமுக்குள் சென்று முகம் அலம்பி வெளியில் வந்தபோது ஒரு காபி சாப்பிடலாம் போல இருந்தது. ஆனால் காபி கிடைக்கவில்லை.தூக்கம் அப்பிய கண்களோடு என்னை போல பலரும் அதிகாலை மினியாபோலீஸ் ஃப்ளைட்டில் ஏற, “மெர்ரி கிருஸ்மஸ் எவ்ரிஒன்” என்ற விமானியின் உற்சாக குரலின் ஊக்கத்தில் பேரிரைச்சலோடு விமானம் கிளம்பியது.

சான்பிரான்சிஸ்கோ நகர தட்பவெட்ப நிலைக்கு முற்றிலும் வேறாக, உறையச்செய்யும் குளிரோடு மினியாபோலிஸ் வரவேற்றது. மணி அப்பொழுதே ஐந்தரை. பாப்பா பொதுவாய் 7 மணிக்கு எழுந்திருப்பவள் தான். ஆனால் கிருஸ்மஸ் அன்று சீக்கிரம்எழுந்துவிடுவாள் எனத்தோன்றியது. காலையில் எழுந்த முகூர்த்தத்தில் வீட்டின் கிருஸ்மஸ் மரத்தின் கீழ் சாண்ட்டா வைத்துவிட்டுப்போன பரிசை பிரிப்பது தான் இந்நாளின் ஆகப்பெரிய கொண்டாட்டம்.

அவசர அவசரமாய் டேக்சி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மென்மையாக சத்தம் போடாது கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன்.

”பாப்பா எழுந்துட்டாளா?” வா என வரவேற்ற மனைவியிடம் சன்னமாய் கேட்டேன்.

”இன்னும் இல்ல, ராத்திரி தூங்கறதுக்கு முன்ன பூரா அதே புராணம். சாண்ட்டா எப்ப வருவாரு, நான் இந்த வருஷம் குட்கேர்ளா இருந்தேனா, என் லெட்டர் போய் சேர்ந்திருக்குமா, அவர் எப்படிம்மா ஒரே நைட்ல எல்லா வீட்டுக்கும் போவார், என்னைமறந்துருவாரான்னு கேள்வியான கேள்வி கேட்டுட்டு தூங்கியிருக்கா” என சிரித்தாள்.

மனைவி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுகளோடு, நான் வாங்கிய டின்க்கர் பெல் பொம்மையையும் கிருஸ்மஸ் மரத்துக்கு அடியில் வைத்தேன். நல்லவேளை பாப்பா விழிப்பதற்கு முன் வந்துவிட்டேன்.

“ஒரு காபி போடுறியா” என அசதியும், தூக்கமும், பசியுமாய் சோஃபாவில் சாய்ந்தேன். பக்கத்திலிருந்த மேஜையில் ஒரு தட்டில் இரு சிறிய கேரட்டுகளும், ஒரு பிஸ்கட்டும் பாப்பா சாண்ட்டா கிளாஸ் சாப்பிடவென வைத்திருந்தாள். தனிச்சையாகஅதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

பசி இப்போது சற்றே தேவலாம் போல இருந்தது.

பாப்பா எப்போது விழிப்பாளென காத்திருக்க ஆரம்பித்தேன்.
Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 49

Rate this posting:
{[['']]}
தந்தை
                                                               

அப்பாவின் கன்னத்தில் அறைந்து நெஞ்சில் கை வைத்து உந்தித் தள்ள அவர் சோபாவில் சரிந்த போதுசங்கரனுக்கு முதலில் உறுத்தியது அவரின் முதுமை. தோள்பட்டையில் இருந்து புஜம் இறங்கும் இடம் எல்லாம் வெறும்  எலும்பாய் துருத்திக் கொண்டிருந்தது. கோபத்தில் இன்னும் இரண்டு அறை வைக்க நினைத்தவனை தடுத்து நிறுத்தியது அவரின் மெலிந்த கைகளே ஒழிய பின்னால் கேட்கும் அம்மாவின் அலறல் அல்ல.வயோதிகமும் உள்ளே போன பிராந்தியும் ஒன்றாய் அழுத்த அப்படியே சோபாவில் கண்ணயர்ந்து விட்டார். அவிசாரி முண்டே என்று வாய் மாத்திரம் முனகிக் கொண்டிருந்தது. இப்போது விழுந்த அறை கூட அந்த வார்த்தைக்காகத் தான். 

"என்னத்தையோ சொல்லிட்டு போறாரு. நீ எதுக்கு கோபப்பட்டுகிட்டு.இந்த பாவம் எல்லாம் உனக்கு வேணாண்டா" என்று 

அம்மா புடவை தலைப்பால் கண்ணீர் துடைத்து மூக்கையும் சீந்தியபடிமாவு கெட்டியாகிப்போய் இழுபட்டுக் கொண்டிருந்த கிரைண்டரில் நீர் தெளிக்க அது இன்னும் வேகமாய் சுற்ற ஆரம்பித்தது. பொழுதானால் வரும் குறு வண்டுகள் குழல் விளக்கில் மோதுகிற ஒலி கேட்கும் அளவிற்கு நிசப்தமாய் இருந்தது வீடு. வீதியில் கிணுகிணுத்த மணியோசைக்கு எட்டி பார்க்கலாந்தர் விளக்கும்மூடிய மரப்பெட்டியுமாய்ட்ரைசைக்கிளில் ஹுக்கும் சந்த் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான். பதினைந்து நிமிடத்திற்கு முன்பிருந்த கலவரம் இப்போது இல்லை. அப்பாவின் மெல்லிய குறட்டை ஒலி மின் விசிறியின் ஓசையுடன் கலந்து ஹாலெங்கும் பரவிக்கொண்டிருந்தது, கூடவே பிராந்தி நெடியும்.. கால்கள் கீழே சரிந்திருக்க சோபாவில் கிடந்தவரை  நேராக படுக்க வைத்து தலைக்கு தலையணை  வைத்தான்.இன்னும் கூட உடலில் பதட்டம் மிச்சமிருந்தது. பின்னங்கழுத்திலும் காது மடல்களிலும் சூடாய் வெப்பம் உணர்ந்தான். 
 
அறைந்த போது அவர் கன்னத்தில் இருந்த தாடியின் குறு குறுப்பை உள்ளங்கைகளில் உணர முடிந்தது. கடைசியாய் அப்பாவை எப்போது தொட்டுப் பார்த்து ஸ்பரிசித்தோம் என்று யோசித்துப் பார்த்தான். நியாபகம் வரவில்லை. சங்கரன் அப்பாப் பிள்ளை இல்லைஅவர் கரம் கோர்த்து கடைதெருவிற்கு சென்றதில்லை. அவர் மேல் கால் போட்டுத் தூங்கியதில்லை. இருசக்கர வாகனத்தில் அவரை பின்புறமாய் அணைத்துக் கொண்டு காற்றை கிழித்தபடி பயணித்ததில்லை. இன்னும் கொடுமைஅவரை கடைசியாய் எப்போது  அப்பா என்று அழைத்தோம் என்பதே நினைவில்லை. மௌன கீதங்களில் வரும் டாடி டாடி பாடலைக் கேட்டுவிட்டு சௌந்தரி அக்காதான் அவரை முதலில் டாடி என்று அழைத்தாளாம். அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான்.
 
 
அநேகமாய் பள்ளி இறுதிக்குப்  பிறகு அப்பாவுடனான அவனது சம்பாஷனைகள் எல்லாம் தொடக்கமும் முடிவும் இல்லாதத் துண்டுத் துண்டு வார்த்தைகளில் தான். "சாப்பிட கூப்டாங்க", "பீஸ் கட்டனும்" இத்யாதி. அவனுடைய வியப்பெல்லாம் சௌந்தரி அக்கா மாத்திரம் எப்படி அப்பாவிடம் அதே பிணைப்போடு இருக்கிறாள். இத்தனைக்கும் அவள் திருமணத்திற்கு கூட பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை. செலவெல்லாம் அவளின்  சேமிப்பில் பாதியும்சங்கரனின் நான்காண்டு கால சேமிப்பின் மொத்தமும் சேர்த்து தான் சமாளிக்க முடிந்தது. "படிக்க வச்சாரு இல்லஅது போதும் .. வேற எதுவும் நான் எதிர்பாக்கல". அப்பாவைக் குறை சொல்லும் போதெல்லாம் சௌந்தரி சொல்லும் சமாதானம்.
 
அப்பாவுமே கூட தன் சுபாவத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கரிசனத்தை அவளிடம் காட்டவே செய்தார். அதில்  முக்கியமானது அம்மாவை நோக்கிய காது கூசும் வசைச் சொற்கள்அவை பெரும்பாலும் சௌந்தரி இருக்கும் போது இறைபடாது. அம்மாவை அடிக்க பாய்கிற தருணங்களில் சங்கரன் குறுக்கே புகுந்தால் புல்லுக்கு பாய்கிற நீராய் அவனுக்கும் ஒன்றிரண்டு விழும். அதுவே சௌந்தரி லேசாய் கமருகிற  குரலில் "டாடி ... வேணாம் ப்ளீஸ்" என்றால்,மெதுவாய் பின் வாங்கிலுங்கியை இறக்கி விட்டு எல்லாரையும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு படுக்கை அறை போய் கதவு சாத்தி கொள்வார். இப்போது அவளும் திருமணமாகி போய்விட யாருக்கும் அடங்கமறுத்து ஆடிகொண்டிருந்தார். சங்கரன் யோசித்ததுண்டுஎன்ன தான் குறை இந்த கிழவருக்கு.
 
மூன்று வேலை சோற்றுக்கு உத்தரவாதம் அளித்த நகராட்சி அலுவலக குமாஸ்தா வேலை. சொத்தைக் கறிகாய்களை வாங்கிப் போட்டால் கூட எந்த புகாரும் இல்லாமல் வக்கணையாய் ஆக்கிப் போடும் மனைவி. பெரிதாய் எந்த செலவும் வைக்காமல் படித்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியையாய்  சௌந்தரியும் ஐ.டி. துறையில் சங்கரனும். அப்பா ஓய்வு பெற்று இன்றோடு எட்டு மாதம் ஆகிறது. பணிக் காலத்தில் கொஞ்சம் பொறுப்பாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு வீடே கட்டி இருக்கலாம். அது கூட பரவாயில்லைஇப்போது இருக்கும் நிலைக்கே அமைதியாய் வாழ்ந்துவிட்டு போகலாம். எது உறுத்துகிறது இந்த மனிதரை ?
 
 அடிக்க போனது கொஞ்சம் அதிக பட்ச செயலோ ??. குற்ற உணர்வு ஒரு சிறிய பாம்பாய் உருவெடுத்து பூதாகரமாய் வளர்ந்து அவன் முன் நாக்கை நாக்கை நீட்டி பழிப்புக் காட்டி கொண்டிருந்தது. சங்கரன் அத்தனை வேகமானவன் அல்ல. வரிசையில் காத்திருக்கையில் யாரும் இடைபுகுந்துஅவசரம் என்றால் அனுமதிப்பவன். முன் பதிவு செய்த ஜன்னலோர இருக்கையை புதுமணத் தம்பதிகள் சேர்ந்து உட்காரக் கொடுத்துவிட்டு எந்த சுணக்கமும் இல்லாமல் இடம் மாற்றி அமர்பவன். திருப்பத்தில் ஒலி எழுப்பாமல் எதிரே வரும் இருசக்கர ஓட்டியை எந்த சலனமும் இல்லாமல் கடப்பவன். மொத்தத்தில் அம்மாவின்மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பு தான். ஆனால் எத்தனை நாள் தான் வெறும் ஜடமாய் வேடிக்கை பார்ப்பது.
 
        அம்மாவை பார்த்து அந்த தகாத சொல் வீசப்படும் போதெல்லாம் அவனுக்குள் கோபம் ஒரு நெருப்புப் பந்தாய் சுருளும். பல்கடித்து அடக்கிக் கொள்வான். அன்றைக்கு சண்டை வலுக்கவே எல்லாம் எல்லை மீறி விட்டது. எங்கேனும் கவனத்தை திசை திருப்ப நினைத்தவன் தொலைகாட்சியை ஓட விட்டான். ரிமோட்டில் ஒன்றில் இருந்து தொண்ணூறு வரை சேனல்கள் தாவி மீண்டும் கடைசியில் இருந்து முதலுக்கு திரும்பினான். பாடல் காட்சிகள் வந்தால் சுத்தமாய் ஒலியே இல்லாமல் பார்த்தான். எந்த இசையும் இல்லாமல் வெறுமென நடிப்பவர்களின் முக பாவம் மட்டும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவன் செய்கை அந்த சூழலுக்கு அபத்தமாய் பட்டாலும் அது வேண்டியதாகவும் இருந்தது. தற்செயலாய் மணி பார்க்க பதினொன்றே முக்கால். அம்மா எப்போது மாவரைத்துஎப்போது சாப்பிட்டு உறங்கப் போனாள் என்று தெரியவில்லை. வழக்கமாய் ஒன்பது மணிக்குள் இரண்டு மூன்று தடவையேனும் சாப்பிடக் கூப்பிட்டு விடுவாள். இன்று அவளுக்குமே கூட ஒன்றும் தோன்றவில்லை. தன் பொருட்டுத் தகப்பனுக்கும் பிள்ளைக்குமான கைகலப்பில் அவளும் கொஞ்சம் அதிர்ந்து விட்டாளோ என்னவோ.
 
சங்கரன் தொலைகாட்சியை அணைத்தான். சமையலறை சென்று தட்டில் சோறு போட்டு குழம்பூற்றி  பிசைந்து, நின்றவாரே நான்கு வாய் அவசர அவசரமாக உண்டான். கை கழுவி சொம்பில் நீர் குடித்து மீண்டும் ஹாலுக்கு வரஅப்பா வாய் பிளந்த நிலையில் உறங்கி கொண்டிருந்தார்.கொஞ்சம் நேரம் முன்பு வரை வீட்டில் அவ்வளவு பெரிய கலவரம் செய்தது இவர் தானா. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தானோ ?? என்கிற சந்தேகம் அவர்கள் ஆழ்ந்து தூங்கும் போது எழத்தான் செய்கிறது. மெதுவாய் அவர் கீழ் தாடையை பிடித்து அவருடைய வாயை மூட முயற்சி செய்தான் அது மீண்டும் திறந்து கொண்டது.மேற்கொண்டு முயற்சிக்கவில்லை. வாசல் கதவை திறந்து வெளியே வந்து கேட்டில் சாய்ந்தவாறு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். காம்பௌண்ட் சுவரோரமாய் பெருச்சாளி ஒன்று நகர்ந்து எங்கோ போய்க் கொண்டிருந்தது. மெலிதாய் காற்று வீசும் ஓசையை தவிர வேறு அரவம் இல்லாத பன்னிரண்டு மணி இரவு. காவல் துறையின் இரவு நேர ரோந்து வண்டி சைரன் ஒலியுடன் தெருவை கடந்து சென்றது. அந்த இரவு நேரத்திலும் ஒன்றிரண்டு வீடுகளில் வெளிச்சப் பொட்டாய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
 
மளிகைக் கடை சேர்மத் துரை தெரு திரும்பி வந்து கொண்டிருந்தார். கடையின் கணக்கு முடித்து வீடு திரும்ப அவருக்கும் இந்நேரம் ஆகிவிடும். "இன்னும் தூங்கலையா ??" என்று பதிலுக்கு கூட காத்திராமல் விசாரித்து விட்டு கடந்து போய் விட்டார். மாலையில் இருந்த படபடப்பு எல்லாம் அடங்கி மனசு இப்போது இலகுவாக இருந்தது. நல்லது தகப்பனேநம்முடைய சண்டை இன்னுமொரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. இது இத்தோடு முடியவில்லை,நாளை காலை நீ போதை தெளிந்து எழும்போது மீண்டும் தொடர்வேன். குடிப்பது உன் சொந்த சௌகரியம், அதற்கு விலை நிச்சயமாய் ஒரு குடும்பப் பெண்மணியின் நிம்மதியும், சுய கௌரவமும் அல்ல. ஏதோ முடிவு செய்தவனாய் உறங்கச் சென்றான்
 
காலையில் மிக்ஸியின் அலறலில் விழிப்பு தட்ட கண் விழித்த போது மணி ஏழரை. மெதுவாய் பல் விளக்கி  சமையலறை செல்ல அம்மா ஏற்கனவே போட்டிருந்த தேநீரை சுட வைத்துக் கொடுத்தாள். அப்பா இன்னும் தூங்கிகொண்டு தான் இருந்தார். எட்டு மணி வாக்கில் எழுந்து சோபாவில் அமர்ந்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தவர், சுதாரித்தவராய் எழுந்து குளியலறை சென்று பல் விளக்கிகுளித்துமுடித்துஇஸ்த்திரி போட்ட பேன்ட் சடை அணிந்து கொண்டு தலை சீவி கொண்டிருந்தார். இது வழக்கமாய் கடைபிடிக்கும் உத்தி தான். முதல் நாள் இரவு எப்போது தகராறு நடந்தாலும்,அடுத்த நாள் காலை யாரிடமும் பேசாமல் வெளியே கிளம்பிவிடுவார். தன்னை யாரும் கேள்வி கேட்பதை தவிர்க்க அவர் பின்பற்றும் முறை. அன்றைக்கும் அப்படி கிளம்பியவரை 

அதுக்குள்ள எங்க கிளம்பியாச்சி” என்று 

சங்கரன் வாசலிலேயே வழி மறித்தான்.  அவனைத் தாண்டி கிளம்ப எத்தனித்தவரை 

இருன்னு சொல்றேன் இல்ல” என்று  கொஞ்சம் அழுத்தமாய் தடுக்க.

பள பளத்த கண்களுடன்

"அப்பனை கை நீட்டி அடிச்சிட்டா நீங்க எல்லாம் பெரிய புடுங்கிங்களாடா ?? 
என்றவாறு அவனை விலக்கி மீண்டும் கடந்து போனார், தொண்டைக்குள் எதையோ அடக்கிக்கொண்டு.

"நீ மாத்திரம் தண்ணியப் போட்டுட்டு வந்து அம்மாவைப் பாத்து  அவிசாரி முண்டைன்னு பேசறது ரொம்ப யோக்கியமான காரியமா ??"

கேட்டை திறந்து வெளியே போக இருந்தவர் திரும்பி அவனை பார்த்து சொன்னார்.

"இல்லதான் … எங்க அம்மாளைப் பாத்து சொல்ல முடியாமப் போச்சே …"
Read more...