Thursday 2 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 28

Rate this posting:
{[['']]}
அப்பா எப்ப வருவீங்க???

அம்மா அப்பா எப்ப வருவாங்க”? சேலையின் தலைப்பைப் பிடித்து இழுத்தபடிக் கேட்க ஆரம்பித்தாள் ஜனனி,,, சமைத்துக் கொண்டிருந்தவள், ஜனனியை வாரி அணைத்துக் கொண்டாள்... “வருவாங்க செல்லம்” என்று சொல்லிவிட்டு அடுப்பை நிறுத்திவிட்டு ஜனனியைத் தூக்கிக்கொண்டு சோபாவிற்கு வந்தாள் கார்த்திகாயினி.. அருகில் அமரவைத்துக்கொண்டு கிச்சு கிச்சு மூட்டி விளையாடினாள்...

“அம்மா பப்பு கடைஞ்சி விளையாடலாமா”? “ம்ம் விளையாடலாமே” என அவளோடு விளையாட ஆரம்பித்தாள்... ஜனனி தூக்ககலக்கத்தில் எழுந்து கொண்டாலும் சரி, தூங்கும் முன்பும் சரி, அப்பாவைப் பற்றி கேட்பதைத் தடை செய்ய முடியவில்லை.. அதுவும் இந்த வாரக் கடைசியில் அப்பா வந்துவிடுவார் என்று சொன்னதிலிருந்து எப்போதும் இதே கேள்விதான்....அவள் பிஞ்சு மனதில் அப்பாவுக்கான ஏக்கம் இருப்பதை கார்த்திகா உணராமல் இல்லை... ஆனாலும் என்ன செய்வது இன்றோடு நான்கைந்து நாளுக்aகு மேல் ஆகிவிட்டது அவர் பேசியே... ஒவ்வொரு நாளும் யுகமாய் கழித்த போதும் மனம் ரணமாய்த்தான் இருந்தது... ஜனனி மட்டும் இல்லையேல் இந்த நாட்கள் வெகு கொடுமையாக இருந்திருக்கும் என்பது நிச்சயம்.... தனது கைப்பேசியில் இணையத்தில் தன் கணவனைத் தேடிப்பார்த்தாள்... அவரின் பெயருக்கு பக்கத்தில் பச்சை விளக்கு எரியவே இல்லை. இவள் அனுப்பிய எந்தக் குறுஞ்செய்தியும் வாசித்தது போலவும் தெரியவில்லை... வசிகீரன் பெயரில் மட்டுமல்ல, தோற்றத்திலும் வசீகரனே... ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றம், திரண்ட தோள்கள் என முதன் முதலில் கார்த்திகாவை கவர்ந்த ஆண் மகன்.... அதுவும் கார்த்திகாவை பெண் பார்க்க வந்திருந்த வங்கி அதிகாரியின் தோழனாய் வந்து கார்த்திகாவை மணந்து கொண்டவன்... இவனைத்தான் கட்டிக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்துக் கட்டிக்கொண்டவள்... அன்றைக்கு அவன் மீது இருந்த காதல் தான் அவன் இராணுவவீரன் என்று தெரிந்தும் நேசிக்கத் தூண்டியது.... இன்று வரை தன் நேசம் கொஞ்சமும் குறையாமல் தான் இருக்கிறாள்... வசீகரனும் கார்த்திகா என்றாலே கசிந்து உருகிவிடுவான்... கம்பீரத்துக்குள் இருக்கும் காதல் சில நேரங்களில் வியப்பாய்த்தான் இருக்கும் கார்த்திகாவுக்கும்... 

எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் வசீகரனின் வேலை அதற்கு இடம் கொடுத்ததில்லை ஆனால் சிறிது இடைவெளி என்றாலும் கூப்பிட்டு பத்து முத்தங்களையாவது பரிசளித்துவிடுவான் இணையம் வாயிலாக... எல்லை பாதுகாப்பு என்பதால் யுத்த நாட்களில் இவளுக்கு முள் மீது இருப்பதாய்த்தான் தவிப்பாள்... ஜனனியுடன் அதிகம் இல்லாத போதும் கூடத் தினம் ஜனனி அப்பா என்று கேட்காமல் இருக்க மாட்டாள்.... இரவில் வசீகரன் அலைக்கும் போது சில நாட்களில் ஜனனி தூங்கி விடுவதும் உண்டு.... பகலில் ஓய்வு கிடைத்தால் காணொளி மூலம் தன் கண்மணியோடு உறவாடி அகம் மகிழ்வான் வசீகரன்... எப்போதுமே வசீகரனுக்காய் காத்திருப்பதுதான் இவளின் வாடிக்கை... காத்திருக்கும் நேரங்கள் நாட்களாய் நீண்டுவிட்டதாள் தாங்க முடியா பாரமாய் உணர்ந்தாள்..... ஜனனியோடு விளையாடுவது மட்டும் தான் இவளுக்கு தற்போது இருக்கும் ஓரே ஆறுதல்... சரியாய் சமைத்து சாப்பிட்டு ஐந்து நாட்களைக் கடந்து விட்டது,, பாதி சமையல்,கருகிப் போதல்... பால் பொங்குதல் என அத்தனை பிழைகளும் சரியாகவே நடந்து கொண்டிருந்தது.... அம்மாவைத் துணைக்கு அழைக்கலாம் என்று எண்ணிய போதும் “வேண்டாம் அம்மா எதையாவது பேசி இன்னும் ரணப்படுத்துவாள்... நானே இந்தப் பையன் வேண்டாம்னு சொன்னேன் கேட்காம நீதானே கட்டிக்கிட்டு இப்ப அனுபவினு” சொல்லித் திட்டி திட்டி இன்னும் காயப்படுத்துவாள்..

கடவுளின் படத்துக்கு முன்பு சென்று அமர்ந்தாள் கண் மூடி வேண்ட ஆரம்பித்தாள் இறைவா இன்றைக்காவது அவர் ஒரு வார்த்தை பேசி விட வேண்டும்.. எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று கண்ணீர் மல்க வேண்டியவள்.... கைப்பேசியில் ஒலித்த பீப் சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்த்தாள்.. வசீகரன் தான் “ஹாய் டியர்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்... “ஹாய் டா, ஏன் இப்பிடி பண்ற, எனக்கு உசுரு போவுது ஒரு வார்த்தை ஒரே ஒரு செய்தி அனுப்பியிருக்க கூடாது?, நான் எப்படி துடிச்சேன் தெரியுமா? என தன் மனதைப் படம் பிடித்துக் காட்டினாள்... “அய்யோ லூசு இங்க இணையம் கிடைக்கலை... அதான் தொடர்பு கொள்ள முடியலை எப்படி இருக்க,, ஜனனி என்ன செய்யுறா”? “ ம்ம்ம் நலம் அவளும் உன்னை கேட்டுக்கிட்டே இருக்கா” பதில் அனுப்பி விட்டுக் காத்திருந்தாள்... மறுபடியும் இணையம் தொடர்பற்றுப்போக வெறுப்பாயிருந்தது.. மீண்டும் எப்போது தொடர்பு கொள்வார் எனக் காத்திருக்க வேண்டும்... ஆனாலும் ஆறுதலே இரண்டு வார்த்தையேனும் அவனின் இருப்பை அவளுக்கு உறுதிப் படுத்தியது.... துடித்துக் கொண்டிருந்த மனது கொஞ்சம் இலகுவாய் இருந்தது... சுவற்றில் சாய்ந்து பெருமூச்சொன்றை உதிர்த்தவள் வசீகரனைக் கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்திக் காதலை உயிர்ப்பித்து கவிதை வடிக்கத் தொடங்கினாள் ‘ எப்போது நீ வருவாய் என வினவும் மகளிடம் சொல்லி விடுகிறேன் நீ வந்து விடுவாய் என்று எப்படி வருவாயோ என ஏங்கும் என் இதயத்தை என்ன சொல்லி நான் சமாதானப்படுத்துவது” என இதயத்தில் எழுதிய கவிதையை அங்கேயே சேர்த்து வைத்துவிட்டு ஜனனியைத் தூக்கிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் உளவ ஆரம்பித்தாள்... 

அப்போதுதான் பக்கத்து வீட்டுப் பங்கஜம் பேசுவது காதில் விழுந்தது... கார்த்திகா என இவள் பெயர் அடிபடவும் இவளும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்... “உனக்கு தெரியாதுடி, முந்தா நாள் இரவு, நான் தூக்கத்தில் விழுச்சு பாக்குறேன், கார்த்திகா வீட்டில் இருந்து ஒருத்தன் முக்காடு போட்டுக்கிட்டு வெளியே போறத பாத்தேன்... என்ற அவளின் வார்த்தைகள் நெஞ்சை முள்ளாய் தைத்தது.... காபி பொடி கடன் கேட்டு வந்த போது இல்லை என்பதை இல்லை என்று சொன்னதன் விழைவு இந்தப் பேச்சு.. கோபமும் ஆத்திரமும் தலைதூக்கியபோதும் அவளிடம் சண்டைபிடிக்க தோன்றவில்லை.. அந்த நேரம் வந்த கார்த்திகாவின் தங்கை ஆர்த்தி காதிலும் அவ்வார்த்தை விழ ஆத்திரத்தில் கொதிக்களானால்... “என்ன அக்கா அந்த பொம்பளை இத்தனை மோசமா பேசுறா நீயும் கண்டுக்காம இங்க நின்னு கேட்டுக்கிட்டு இருக்க”.. நீ இரு நான் போயி கேட்டுட்டு வாரேன்... “ச்சே விடுடீ நீ போயி கேட்டா இன்னும் வஞ்சம் தீர்க்க மோசமா இதைவிடக் கேவலமா ஊர் முழுக்க சொல்லீட்டுத்திரிவா”... விடு எல்லாம் விதி... ஆண் துணை இல்லமா வீட்டில் இருக்கிற பொம்பளைங்க அத்தனை பேரும் அவுசாரியாத்தான் இந்த சமூகம் நினைக்கிது, நம்மை நீருபிக்க நாம அவுங்க கிட்ட போயி தரம் தாழ்ந்து பேசனும்னு அவசியமில்லை, நீ வா” என அவளை இழுத்து வீட்டுக்குள் போனாள்... “அக்கா அத்தான் எப்ப ஊருக்கு வாராங்க”? “இந்த வாரக் கடைசியில் வருவாங்க டீ”.., “சரி அவர் தொலைப்பேசிக்கு இணைப்பு கொடு, நான் பேசுறேன்”... “இல்லடி அங்க இணையம் வேலைச் செய்யலை போல அதனால் இப்போதைக்குப் பேச முடியாது... நீ இங்கையே இருடி இந்த வாரக் கடைசியில் அத்தான் வருவார் வந்த பின்ன கிளம்பிப் போ சரியா”? “ம்ம் வாரவரைக்கும் துணைக்கு நாங்க, வந்த பின்ன துரத்திவிட்டு ரெண்டு பேரும் டூயட் பாடனும் அப்படித்தானே”? “ச்சீ போடி நீ இரு நான் காபி போட்டுக் கொண்டு வாரேன்,” என உள்ளே போகும் அக்காவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ஆர்த்தி... எத்தனை வலி இருந்த போதும் அன்பை அடித்தளமாக்கி வாழும் இவர்களின் வாழ்க்கை எப்போதும் மனநிறைவோடு இருக்க வேண்டுமென வேண்டினாள் இறைவனிடம்... 

வசீகரனுக்குப் போராட்டமாகவே இருந்தது,,, இணையம் வேலை செய்யாதது கார்த்திகாவை விடப் பலமடங்கு வலித்தது வசீகரனுக்கு... “என்ன வசி மனைவிகூடவா சாட்டிங்”? “ஆமாம் திவா இணையம் கிடைக்கலை.. நிறையவும் கவலையா இருக்கா... எனக்கும் நிறையவே தவிப்பா இருக்கு... என்ன செய்யறதுன்னு புரியலை”.. “நோ... நோ... வசி டோண்ட் ஃபீல், வா அதிகாரிகிட்ட கேட்டுட்டு அங்க இருக்கிற போன் மூலமா வீட்டுக்குப் பேசு மனசு ரிலாக்ஸ் ஆகும்”....என்று நண்பனைத் தேற்றி கூட்டிப் போனான் திவாகர்... அதிகாரி ஒன்றும் போனதும் பேசிக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கப்போவதில்லை இருப்பினும் கேட்டுத்தான் பார்ப்போமே என்ற எண்ணமே அதிகாரியின் அறை நோக்கிப் போகவைத்தது.... “சார்” என்றதும் நிமிர்ந்து பார்த்தவர்,, “என்ன”? என்றார்... “வீட்டுக்குப் போன் பண்ணனும் சார்” ... “உங்க டூயிட்டி டைம்”? “சார் எனக்கு டூயிட்டிக்கு இன்னும் டைம் இருக்கு, ஒரு பத்து நிமிசம் பேசீட்டு கிளம்பிடுறேன்” என்று கேட்டதும் “ம்ம்” என்று சொன்னவர் அங்கேயே அமர்ந்திருந்தார்... வசீகரனுக்குக் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது திவாகர் வெளியில் நின்றிருந்தான்... திவாகர் மட்டுமல்ல அதிகாரியும் தமிழ் தெரிந்தவர் இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு பேசுவது கொஞ்சம் தயக்கமாக இருந்தது... ஆனாலும் வீட்டு எண்ணுக்குச் சுழற்றினான்... மறுமுனை ரிங் போய்கொண்டிருந்தது எடுத்ததும் “ஹலோ நான் வசி பேசுறேன்” என்றதும்... “இருங்க அத்தான், அக்காவை கூப்பிடுறேன்” என்றவள் “அக்கா, அக்கா, அத்தான் லைன்ல!! சீக்கிரம் வாங்க” என்று விட்டு “அத்தான் எப்படி இருக்கீங்க? இன்றைக்கு உங்க கிட்ட பேசனும் என்று நினைத்திருந்தேன் சரியாக நீங்களும் கால் எடுத்துட்டீங்க” என்று பேசிக்கொண்டே போனவளை இடைநிறுத்திவிட்டு “கார்த்திகாவிடம் கொடு” என்றான்... வேகமாய் வந்த கார்த்திகா ரிசீவரை பிடுங்கி “ஹலோ நான் கார்த்திகா” என்றாள்... “நான் இந்த வாரக் கடைசியில் வந்துடுவேன்... இங்க நான் நல்லா இருக்கேன் நீயும் ஜனனியும் எப்படி இருக்கீங்க எதாச்சும் பிரச்சனையா”? “இல்லைங்க ஒன்றும் இல்லை, ஜனனி சுகமா இருக்கா, உங்களையேதான் கேட்டுக்கிட்டு இருக்கா,ஒரு இரண்டு வார்த்தை அவகிட்ட பேசுங்க” என்று போனை ஜனனியின் காதில் வைத்தவள்,, “குட்டி அப்பா பேசுறாங்க பேசுடா”...என்றாள் “அப்பா எப்ப வருவீங்கப்பா”? “வந்துடுவேன் செல்லம்,, என்று முத்தமழை பொழிந்தான்” “சரி அம்மா கிட்ட குடுங்க” என்றதும் ஜனனி ரிசீவரை தாயிடம் கொடுக்க “இங்க இணையம் பிரச்சனையா இருக்கு நான் தொடர்பு கொள்ளலேனு நீ வருத்தப்படாதே வந்த பின்ன நேரில் பேசிக்கலாம் உடம்ப பார்த்துக்க, ஜனனியைப் பத்திரமா பார்த்துக்க நான் வைக்கிறேன் பை ,, ரீசிவரை வைத்தவன் நிம்மதி பெருமூச்சொன்று விட்டான்... 

அவன் விட்ட கடைசி மூச்சும் அதுவே... எதிரி நாட்டின் தீவிரவாத கும்பல் வீசிய குண்டு வெடித்துச் சிதறிப்போன உயிர்களில் அவனும் ஒருவனாய்... இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கிடந்தான்.... கண்ணில் கார்த்திகாவின் முகம் உறைந்து நின்றது... காதில் ஜனனியின் “அப்பா எப்ப வருவீங்க?” என்ற மழலைக்குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது....