Thursday 2 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 29

Rate this posting:
{[['']]}
தந்தை 

"எதிரிக்கு எதிரி நண்பன்டா... "

"இருந்துட்டு போங்க"

அப்பாவும் மகனும் இப்படியா பேசிக்கொள்வது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தபடி நான்.

முதலில் பேசியது என் தாத்தா. நானும் என் தாத்தாவும் நண்பர்கள் என்ற தொனியில் எக்காளமிட்டபடி...

என் மகன் எனக்கு எதிரி இல்லை என்பது போல் உதட்டில் புன்முறுவலை தாங்கியபடி இரண்டாவதாக பேசியது என் தந்தை.

எதிரும் புதிருமான, இரு துருவங்களிக்கிடையே தத்தளித்தபடி நான்...

அப்பாவின் அப்பா, என் தாத்தா, முன்னோர்கள் சொல்லியது தான் வேதவாக்கு என்று நிற்பவர். முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று பழங்கால கதைகளில் ஊறி திளைப்பவர். மழை எதனால் வருகிறது என்றால் வருண பகவானால் வருகிறது என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர். அவரது நம்பிக்கையே அவரின் இருப்புக்கு ஆதாரமாகியதால், அஸ்திவாரத்தை ஆட்டினால் ஆடிப் போய் கோபத்தின் உச்சியில் சென்று அமர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

அப்பாவோ எதையும் ஆய்வு செய்யாமல் அதை நம்ப மாட்டார். அனைத்தையும் படிப்பார். படித்ததை மறு ஆய்வு செய்து, புரிதலை மேம்படுத்தி கொள்வார். அதற்கு ஒரு வகையில் உதவி புரிவது அவரது அப்பாவுடன் அவர் நடத்தும் வாதங்கள்.

"பேராண்டி, மழை எங்கிருந்துடா வருது?"

"அது வந்து தாத்தா, தண்ணி எல்லாம் ஆவியாகி மேலே போய் குளிர்ந்து திரும்பவும் தண்ணியாகி கீழே வருது" என்றேன் நான்.

"நம்ம ஊரு ஏரிக்கரை தண்ணி தினமும் தான் ஆவியாகுது, ஏன் தினம் பெய்ய மாட்டேங்குது?"

"அது தெரியலியே தாத்தா?"

"அப்படி வாடா பேராண்டி வழிக்கு... இப்ப தெரியுதா வருண பகவான் மகிமை"

இரு தாத்தா அப்பா கிட்ட கேட்டுட்டு வரேன். 

தாத்தா சொன்னதை கேட்டதும் அப்பா சிரித்தார்.

"அது தினமும் தாண்டா பெய்யுது, ஆனா இங்க பெய்யல, அடிக்கிற காத்துல வேற எங்கேயோ பெய்யுது"

"அப்ப தினமும் மழை பெய்யுதாப்பா?"

"மழை தினமும் தாண்டா பெய்யுது. நிலத்துல பெய்யும் மழைய விட கடல்ல பெய்யும் மழை அளவு அதிகம்டா. அது நமக்கு தெரியறதில்ல. அதனால தாத்தா அப்படி சொல்றார்."

தாத்தாவிடம் சென்று தந்தை சொன்னதை சொன்னதும் சிறிது எரிச்சலடைந்தார் தாத்தா. 

"சரிடா பேராண்டி நீ சொல்றதே கரெக்டுன்னு வச்சுக்குவோம். இந்த மழை தண்ணி எல்லாம் காத்துல எப்படி மிதந்துகிட்டு இருக்குது. சில நேரங்களில் ஐஸ் கட்டி மழை கூட பெய்யுது. புவி ஈர்ப்பு விசை அப்படி இப்படின்னு அளப்பீங்களே, இந்த ஐஸ் கட்டிகள் எல்லாம் எப்படி அந்தரத்துல நிக்குது."

அதானே என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

தாத்தாவுக்கு ஒரே குஷி. மீண்டும் வருண பகவான் கதையை எடுத்து விட்டார்.

நேராக தந்தையிடம் வந்தேன். நடந்ததை சொன்னதும் மீண்டும் புன்னகைத்தார். தன்னுடைய லேப்டாப்பில் கூகிள் பக்கத்தை வரவழைத்தார். எப்படி மழை அந்தரத்தில் நிற்கிறது என்று விளக்கி சொன்னார். 

"ஏம்பா, தாத்தா புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்."

"ஒவ்வொருவர் சுயமும் எதோ ஒரு அடையாளத்தில் தொங்கியபடி இருக்குது டா. அந்த அடையாளம் தொலைஞ்சுடுச்சுன்னா வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு சிலர் நம்புறாங்க. அதனால அந்த அடையாளத்தை கெட்டியா புடிச்சுகிட்டு அதை விட முடியாம அவஸ்தை படுறாங்க. இது எல்லோருக்கும் பொருந்தும்."

"நீ சொல்றது எனக்கு புரியல பா"

"உனக்கு ஒரு காலம் வரும் அப்ப புரிஞ்சுக்குவ."

"சரி தாத்தாவை மடக்க ஏதாவது ஒரு கேள்வியை சொல்லேன். நான் போய் அவரை நோன்டுறேன்."

"பாவம்டா அவரு"

"பரவாயில்ல, நீ சொல்லு பா."

"நீ முடிவு எடுத்திட்ட, சரி சொல்றேன் கேட்டுக்க."

"நெருப்பு இல்லேன்னா சூரியன் இல்ல, அப்ப சூரிய பகவான் வேற அக்னி பகவான் வேற அப்படின்னு ஒன்னு கிடையாது. அப்புறம் ரெண்டு பேரையும் தனி தனியா கும்புடுறீங்க? சூரிய பகவான் பெரியவரா அல்லது அக்னி பகவான் பெரியவரா?"

இதை கேட்டால் நானும் அவருக்கு எதிரி ஆகி விடுவேனா என்று யோசித்தபடி அப்பாவின் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் நான்.