Friday 3 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 30

Rate this posting:
{[['']]}
தந்தை எனும் போதினிலே….

 கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தார் நாராயணன். இன்னும் திறக்கவேயில்லை. ஐந்தாம் முறையாகத் தட்டிவிட்டுக் காத்திருந்தார். கதவையொட்டிய சன்னல்களும் மூடப்பட்டிருந்தன. எப்படியும் திறப்பார்கள் என்ற நம்பிக்கை குறையாமல் காத்திருந்தார் நாராயணன். ஆனால் பெரும்பாலான கதவுகள் தட்டியவுடன் திறப்பதில்லை என்பதுதான் உண்மை. மனக்கதவை இறுக்கமூடிக்கொண்டவர்கள் மரக்கதவை எப்படி திறப்பார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்று யேசு சொன்னதெல்லாம் பலிக்க வெகுகாலங்கள் ஆகும்.
                   உள்ளே குரல் கேட்க சிந்தை கலைந்து ஆர்வமானார் நாராயணன்.
                   கதவு திறந்தது. தலையை நுழைக்குமளவுக்குக் கதவு திறந்து ஒருவர் எட்டிப்பார்த்தார்.
                   என்ன வேணும்?
                   என்போட பேர் நாராயணன்.. நான் தாமரையோட அப்பா கிட்டப் பேசணும்.
                   நீதான் நாராயணனா?
                   ஆமாம்.
                   போய்யா வெளியே.. என்றார் எடுத்தவுடன்.  நாராயணனுக்குப் புரிந்தது. அவர்தான் தாமரையின் அப்பா.
                   சார்.. ஒருநிமிஷம் என்னை உள்ளே வர அனுமதி தாங்க.. உங்ககிட்ட அரைமணி நேரம் பேசிட்டு உடனே போயிடறேன்..
                   ஒரு தடவ சொன்னா உனக்கு உரைக்காதா? போய்யா.. உன் கிட்ட பேச எதுவுமில்ல..
                   உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனாலும் என்பக்கம் நியாயத்தையும் கேளுங்க.. அதுக்கப்புறம் எந்த முடிவு எடுத்தாலும் சம்மதம்தான்.
                   அவர உள்ள கூப்பிடுங்கப்பா.. என்று ஒரு பெண்குரல் உள்ளே கேட்டது. தாமரையாகத்தான் இருக்கும்.
                   போடி.. குடிய கெடுத்தவளே..செருப்படி விழும்.. போ..
                   நாராயணன் பிடிவாதமாகக் கெஞ்சினார்.
                   என்ன நினைத்தாரோ தாமரையின் அப்பா உள்ளே அனுமதித்தார் வேண்டாவெறுப்பாக.
                   உள்ளே தாமரை நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகே அவளின் அம்மா. வயதான ஒரு பாட்டி தரையில் அமர்ந்திருந்தார். நாராயணன் தயக்கமாக நின்றுகொண்டிருக்க தாமரையின் அப்பா உக்காரு.. என்றபடி ஒரு சேரை எடுத்துப்போட்டு தானும் அருகிலிருந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டார்.
                   நாராயணன் பேச ஆரம்பித்தார்.
                   சின்ன வயசுலேயே நான் தாயை இழந்தவன். என்னோட அப்பாதான் எனக்கு எல்லாமும். தாய்க்குத் தாயா தகப்பனுக்குத் தகப்பனா நின்னு வளர்த்தாரு.. எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தாரு.. சாதி, மதம் எல்லாத்தையும் தாண்டி மனுஷங்கதான் முக்கியம்னு சொல்லி வளர்த்தாரு. உறவுகள் காசிருந்தா தூக்கி வச்சிக் கொண்டாடும்.. காசில்லாதவன் இந்த உலகத்துலே வாழ தகுதியற்றவன்.. கிட்டத்தட்ட அவன் அனாதை மாதிரி.. அதனால கௌரவத்தோட வாழற அளவுக்கு சம்பாதிக்க ஒரு வேலை தேடிக்கன்னு சொன்னாரு.. நான் ரொம்ப படிக்க விரும்பலே.. காச சம்பாதிக்கணும்னு சின்ன வயசுலேர்ந்து எங்கப்பா சொன்னதையும் கேட்காம சம்பாதிக்கிற ஆசையிலே பல வேலைக்குப் போனேன். இப்ப ஒரு நிலையான பிசினஸ். எங்கப்பா சொன்னதால சாதி, மதம் முக்கியமில்லேன்னு ஒரு அனாதை விடுதிக்குப்போய் என்னோட மனைவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சங்கரன் ஒரே பையன். அவனோட  போதும்னு நிறுத்திக்கிட்டோம்.. பத்து வருஷம் ரத்தப் புற்றுநோயோட போராடி என் மனைவி இறந்துபோயிட்டா..  அவனுக்கு விவரம் தெரியறப்பா அவனுக்கு அம்மா இல்லாமபோயிட்டா என்ன மாதிரியே. நான் எங்கப்பா மாதிரி என் புள்ளய வளர்த்தேன். ஆனா படிப்பு முக்கியங்கறத உணரவச்சி படின்னு வற்புறுத்திப் படிக்கவச்சேன்.. படிக்கறப்பதான் உங்க பொண்ணு தாமரையோட பழக்கம்.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்பறாங்க.. நாம ஏன் தடையா இருக்கணும்.. உங்ககிட்டே நேர்மையா பொண்ணு கேட்க என் புள்ள வந்தான்.. ஆனா அவன பலரும் பாக்க செருப்பால அடிச்சி விரட்டிட்டீங்க..
                சற்று நிறுத்தினார் நாராயணன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
                   மறுபடியும் தொடர்ந்தார்.
                   அவன் மனசால ரொம்ப பாதிச்சிட்டான். காதலிக்கறது தப்பாப்பா.. எல்லாத்தையும் விட அன்பு முக்கியம் இல்லியாப்பான்னு.. கேட்டுக்கிட்டு புலம்பிக்கிட்டேயிருந்தான்..
                   எவ்வளவோ சொல்லியும் மனசாறல..
                   மறுபடியும் பேச்ச நிறுத்தி அழுதார் வாய்விட்டு.
                   தாமரை நாராயணன் அருகே ஓடிவந்தாள்.. அங்கிள் அழாதீங்க  சங்கரனுக்கு என்ன ஆச்சு?  என்றாள் பதட்டமாக.
                   மானங்கெட்ட செறுக்கி.. உள்ள போடி.. அங்கிளாம்.. உறவு கொண்டாடறா.. யோவ் உங்கதய கேட்டவரைக்கும் போதும். அழுது நடிக்காதே எழுந்திரிச்சி  போயா வெளியே.. தாமரையின் அப்பா வந்து நாராயணன் தோளைப்பிடித்துத் தள்ளினார்.. நாற்காலியில் சற்று தடுமாறினார் நாராயணன்.
                   நாராயணன் எழுந்து போவதாக இல்லை.
                   கொஞ்சம் பொறுமையா இருங்க.. நான் நடிக்கல்லே.. ஒரு தகப்பனா நின்னு பேசறேன்.. எதுக்கு நடிக்கணும்.. நான் சொல்லி முடிச்சுட்டுப் போயிடறேன்..
                   பேசினார் விட்ட இடத்திலேர்ந்து.
                   எவ்வளவு சொல்லியும் கேட்கலே.. விட்டுடுவோம்பா.. தாமரையும் நானும் உண்மையான அன்போடதான் காதலிக்கிறோம்.. அத புரிஞ்சுக்கல்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க போதும்பான்னு.. நேத்து ராத்திரி விஷத்தை குடிச்சிட்டா.. வாழ்ந்தது போதும்பான்னான்.. அதான் அவன் கடைசியா பேசின பேச்சு.. இப்போ உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கான் எம் புள்ள.. நான் சம்பந்தம் பேச இப்ப வரலே.. சமாதானம் பேச வந்திருக்கேன்.. தயவு செஞ்சு ஒருமுறை தாமரையை ஆஸ்பிட்டலுக்கு அனுப்புங்க.. அவ வந்தா என் புள்ள பொழச்சுக்குவான்.. எனக்கு என்னோடபுள்ள உயிரோட வேணும்.. அவ பொழச்சுக்கிட்டா போதும்.. எங்காச்சும் போயிடறோம்.. ஆம்பளயா நின்னு மடிப்பிச்சை கேக்கறேன்.. என்னோட புள்ளய எனக்குக் காப்பாத்திக்கொடுங்க சார்..
                  வாய்விட்டுக் கதறியழுதார் நாராயணன்.
                    அய்யய்யோ சங்கரா.. என்றபடி தாமரை மயங்கி விழுதாள்.
                   அவளின் அம்மா உள்ளே ஓடினாள் தண்ணீர் கொண்டுவர.
                   தாமரையின் அப்பா எழுந்தார் கோபமாக.. அட கொலைகார உன் புள்ள சாகக் கிடக்கறான்னு எம்பொண்ண காவு கொடுக்க வந்தியா? போடா நாயே.. வெளியே.. மகன் வாங்கினது பத்தாதுன்னு நீ வேறயா.. என்றபடி செருப்பை எடுத்து நாராயணனை அடிக்கப்போனார்.. ஒரு அடியும் விழுந்தது.. அதற்குள் தாமரையின் அம்மா ஓடிவந்து.. விடுங்க.. என்ன இது?  அவரு வயசுல பெரியவரு.. விடுங்க..  என்று தடுத்தாள்.
                   நாராயணன் கெஞ்சினார்.. எப்படியாச்சும் என் மகன காப்பாத்திக் கொடுங்கம்மா போதும்.. எனக்கு சாதி, மதம் முக்கியமில்லே.. என் புள்ள முக்கியம்.. உங்க சாதின்னு எங்கள சொல்லிக்கங்க.. ஆனா எம்புள்ளய காப்பாத்துங்க.. என்று சொல்லி அழுதார் நாராயணன்.
                    தாமரை மயக்கம் தெளிந்திருந்தாள்.
                   தாமரை.. உன்னோட கால்ல வேணா விழறேம்மா.. நீ எம்புள்ளய கல்யாணம் பண்ணிக்கவேண்டாம்.. எப்படியாச்சும் காப்பாத்திக்கொடும்மா.. என்னோட  உயிரே அவன்தான்.. அவனுக்காத்தான் இந்த உயிர வச்சிருக்கேன்.. பெத்த பிள்ளையைவிட இந்த உலகத்துலே எனக்கு எதுவும் வேண்டாம்மா.. பெத்த புள்ள நல்லாயிருந்து பார்க்கறதவிட ஒரு தகப்பனுக்கு வேற என்னம்மா வேணும்?  பெத்தபுள்ள மனசு பார்த்து நடக்கறவன்தானே தகப்பன்.. அவனுக்காக என்ன வேணாலும் செய்யறேம்மா.. சொல்லிவிட்டு அழுதார்.
                   சற்று நேரத்தில் வீடே அமைதியானது. நாராயணன் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார்.
                   மருத்துவமனையின்  அவசரப்பிரிவில் சங்கரனைக் கிடத்தியிருந்தார்கள்.
                   டாக்டரை தேடி ஓடினார்.
                   எங்க போயிருந்தீங்க நாராயணன் என்று டாக்டர் கேட்டார்.
                   என் புள்ளய காப்பாத்த போனேன் சார்.. என்ற நாராயணனை விசித்திரமாகப் பார்த்தார் டாக்டர்.
                   என்ன சொல்றீங்க நாராயணன்?
                   நாராயணன் சுருக்கமாக காதலால் அவன் விஷம் குடித்த கதையைச் சொல்லி முடித்தார்.
                   பிட்டி கேஸ் என்று டாக்டர் முணுமுணுத்துக்கொண்டார்.
                   டாக்டர் எம்புள்ள பொழச்சுக்குவானா?
                   சொல்லமுடியாது நாராயணன்.. லிக்கர்ல விஷத்தைக் கலந்து குடிச்சிருக்கான். அது ரொம்பக் கஷ்டம். ஆனா லிக்கர் அளவு கொஞ்சமா இருக்கு.. முயற்சிப் பண்ணிக்கிட்டிருக்கோம்.. எப்படியும் ஐந்து மணிநேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்லமுடியும்.. வி டிரை அவர் லெவல் பெஸ்ட்.. மனதை தேத்திக்கங்க..
                   அப்படியே நொடிந்துபோய் தரையில் சரிந்தார்.
                   என்ன இது நாராயணன்?
                   டாக்டர் வார்டு பாயைக் கூப்பிட இருவர் ஓடிவந்து நாராயணனைக் கைத்தாங்கலாக அழைத்துப்போய் அருகேயிருந்த பெஞ்சில் அமர வைத்தார்கள்.
                   ஐயா.. ஏதுனாச்சு காப்பி கீப்பி சாப்புடுறீங்களா? வாங்கியாரட்டா? என்றான் வார்டு பாய். வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தார் நாராயணன். அவருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் உடன் தேவை ஒரு காபி போதும். என்றாலும் சங்கரனை நினைத்து மறுத்துவிட்டார்.
                   தண்ணீர் வாங்கி குடித்தார்.
                   அங்கே தாமரை வீட்டில் தாமரை மயக்கம் தெளிந்து அவள் அப்பாவின் அருகே வந்தாள்.
                   அப்பா.. நான் சங்கரனைப் பார்க்கப் போணும்..
                   செருப்பு பிஞ்சிடும்.. போய் உக்காரு.. மானங்கெட்டவளே..
                   என்ன மானம் கெட்டுப்போச்சு என்னால? என்றாள்.
                   என்ன கெடணும் இனியும்?
                   அங்கிள் என்ன கண்ணியமா வந்து கேட்டுட்டுப்போறாரு.. ஏன் உங்களால அப்படி நடந்துக்க முடியல்லே.. காதல் என்ன தேசக்குற்றமா?
                   உன்ன படிக்க அனுப்புனதே தப்பு.. அதான் திமிறு பேச்சு பேசறே. காதல் மண்ணாங்கட்டின்னு..
                   அதுல என்னப்பா தப்பு.. உண்மையான வாழ்க்கை உண்மையான அன்புலே தானே இருக்கு.. அத சங்கரன் கிட்ட பார்த்தேன். அவனை விரும்பினேன்..
                   அவ என்ன சாதி தெரியுமா?
                   இருக்கட்டுமே…
                   இருக்கட்டுமா. எனக்கு மட்டும் வாய்ப்பும் வசதியுமிருந்தா.. இந்நேரம் அந்தப்பய உடம்பு எங்காச்சும் ரயில் டிராக்குல இல்லாட்டி புதர்ல கெடக்கும்.. பண்ணிடுவேன் தெரியுமா..
                   அப்படி ஒரு சாதிவெறி இல்லப்பா…
                   அதுல என்னடி தப்பு? காலங்காலமா இருந்துகிட்டு வர்றது. நாலு சாதி சனம் இல்லாம வாழமுடியாது..
                   சரி.. ஆக்சிடெண்ட் ஆகி ஆறுமாசம் கெடந்தீங்களே.. எத்தனை கடன்னு.. எத்தனை கடங்காரன் செருப்பால அடிக்காத குறையா பேசிட்டுப்போனான்.. அப்ப உதவறதுக்கு ஒரு சாதி சனம் வரலியே..  அன்பு காட்டத் தெரியாம.. ஆபத்துலே உதவாம.. நாலு வார்த்தை ஆறுதல் பேசத் தெரியாம அந்த சாதிசனம் தேவையா?
                   வியாக்கியானம் பேசாதே.. நீ போகக்கூடாது.. உள்ள போடி.. அப்படி மீறிப்போன.. பெத்த பொண்ணுன்னுகூட பாக்கமாட்டேன்.. வெட்டிப்போட்டுட்டு ‘ஜெயிலுக்குப் போயிடுவேன்.. இது என்னால முடியும்.
                   உள்ள போடி.. என்றாள் தாமரையின் அம்மா.
                    போக மாட்டேம்மா.. வெளியத்தான் போகப்போறேன். சங்கரன பார்க்கத்தான் போறேன்.  எனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்குதோ இல்லியோ என்னாலத்தான் அவன் இப்ப சாகக்கிடக்கான்.. அவன் உயிரக் காப்பாத்துங்கன்னு பெத்தவரு மடிப்பிச்சை கேட்டுட்டுப்போயிருக்காரு.. அதுக்காகப் போவப்போறேன்.. உங்களால என்ன முடியுமோ செஞ்சுக்கங்க.. என்றபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே போக முயன்ற தாமரையின் தலைமுடியைக் கொத்தாக் பிடித்து உள்ளே இழுத்தார்.. கேடு கெட்ட நாயி.. அலையுது பாரு.. அவர் இழுத்த வேகத்தில் உள்ளே விழுந்தவள் அதே வேகத்தில் எழுந்தாள்.. இனிமே என் மேல கைய வச்சிங்க நடக்கறது வேறு என்று துர்க்கைப் போல நின்றாள் தாமரை.. மிரண்டு ஒதுங்கினர்.. திறந்த கதவைத் தள்ளி வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வேகமாக போங்க என்றாள்.. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
                   எங் குடும்ப மானமே போச்சு.. இன்னிக்கு அவளாச்சு நானாச்சு பாத்துட்டு வந்துடறேன்.. என்றபடி சட்டையை மாட்டிக்கொண்டு தாமரையின் அப்பா வெளியே வந்து வண்டியை வேகமாக உதைத்துக்கொண்டு கிளம்பினார்..
                   மருத்துவமனையின் வாசலில் தாமரை  போய் இறங்கி வேகமாக உள்ளே ஓடினாள்.
                   அதற்குள் எல்லாமும் முடிந்துபோயிருந்தது.
                   சங்கரன் இறந்துபோயிருந்தான்.
                   நாராயணன் தாமரையைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுதார். எம்புள்ள போயிட்டான் தாமரை.. அதற்குமேல் பேசமுடியாமல் கதறிக்கதறி அழுதார்.
                   சங்கரா… என்று கத்தியபடி தாமரை மயங்கி விழுந்தாள்.
                  மயக்கம் தெளிவித்தார்கள். அதற்குள் தாமரையின் அப்பா உள்ளே வந்தார்.
                   குடிகெடுத்தவளே.. எம் மானமே போவுது.. வாடி என்றபடி தாமரையின் கையைப்பிடித்து இழுக்க. தாமரை அப்படியே அசையாமல் நின்றார்.
                   நாராயணன் மருத்துவமனையின் நடைமுறைகளைச் சரிசெய்துகொண்டிருந்தார்.
                   சங்கரன் உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.
                   நாராயணன் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறப்போனார்.
                   அப்பா..நில்லுங்க என்று குரல் கேட்கத் திரும்பினார். தாமரை.
                   நானும் வரேன்.
                   எங்கடி  போற?

                   இனி நீங்க யாரும் எனக்கு வேண்டாம்.. சங்கரன் போயிட்டான். ஒரு நல்ல தகப்பனோட நல்ல பிள்ளையா இருந்து போயிட்டான். அவன மாதிரி எனக்கு ஒரு நல்ல தகப்பன் கிடைக்கல்லே.. சாதிதான் முக்கியம்னு வாழற சாக்கடைக்கூட்டத்தோட நிக்கற ஒரு ஆளு நீங்க.. உங்களுக்கு அன்பு, பாசம் எல்லாம் புரியாது.. மகனை இழந்துட்டாரு. தெரிஞ்சோ தெரியாமலோ நான் காரணம் ஆயிட்டேன்.. எனக்கு நல்ல கணவனா சங்கரன் இருப்பான்னு நம்பினேன்.. ஆனா அதுக்குக் கொடுத்து வைக்கலே.. ஆனா எனக்கு  நல்ல தகப்பன் கெடச்சிருக்காரு.. அத யாரும் தடுக்கமுடியாது.. நான் அவருக்கு நல்ல மகளா இருப்பேன்.. இனி அவர்தான் எனக்கு அப்பா எல்லா உறவும் .. நான் அவருக்கு துணையா இருப்பேன்.. வாங்க அப்பா என்றபடி தாமரை நாராயணன் கையை இறுகப் பற்றி அவருடன் ஆம்புலன்சில் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டுவிட்டது புதிய காற்றில் புதிய உறவுடன்.