Saturday 4 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 31

Rate this posting:
{[['']]}
காணவில்லை

"தாத்தா எங்கேயோ காணாம போயிட்டாங்க". சுமதி சொன்னதும் ஏதோ வீட்டில் யாருக்கோ நடந்த விசித்திர கதையை சொல்கிறாளாக்கும் என்று சுவாரசியமாக 'எந்த வீட்டுல?' என்றேன். 'நம்ம தாத்தா.. உன் தாத்தா' கண்கள் இந்த தடவை கலங்கியபடி இருந்ததும் தலை அனிச்சையாக தாத்தாவின் அறையில் இருந்த காலியான கட்டிலை நோக்கியது. வீட்டினுள் வெளிச்சம் திடீரென குறைந்து தெரிந்தது. அம்மாவை பார்த்தேன். அபிரிமித சோகமா மகிழ்ச்சியா என்று பிரித்தறியமுடியாத ஒரு முகக்கலவையில் 'ஆமாண்டா, சாயந்திரம் பார்க்குக்கு வாக்கிங் போனவரு இன்னும் திரும்பலை' என்றாள். அப்பாதான் இருப்பதில் ரொம்ப தோய்ந்திருந்தார் 'நாங்க இப்போ ஒரு எட்டு எட்டரைக்குதான் தேட ஆரம்பிச்சோம். அக்கம் பக்கம் முழுக்க தேடியாச்சு. நிச்சயம் பக்கத்துல எங்கயும் இல்ல, நீ ஆபீஸ்ல இருந்து வந்ததும் தூரமா தேடலாம்னு வெய்ட் பண்றேன்' என்றார். நான் விறுவிறுவென்று அலுவலகப்பையை அறையில் வைத்து விட்டு சாப்பிட உட்காருவேன் என அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. சற்றே தயங்கி பிறகு அதுவும் சரிதான் என சோற்றை எடுத்து வைத்தார்கள்.

இத்தனை வயசுக்கு மேல் தாத்தா ஓடிப்போய் விட்டார். நேற்று அவருக்கும் சுமதிக்கும் நடந்த சில்லறை வாக்குவாதத்தினால் இருக்குமா? போன மாதம் கூட அவருக்கு பிடிக்காத மாதிரி சமையலோ ஏதோ நினைவில்லை, அதை வைத்து ஒரு களேபரம் நடந்தேறியது: 'வேணும்னே செய்றீங்க, நான் இங்க உக்காந்து கொட்டிக்கிறது யாருக்கும் புடிக்கல' என்று கத்தினாரே ஒழிய எங்கும் மாயமாகவில்லை. சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்ததும் சுமதி அழ ஆரம்பித்தாள். 'நமக்கு கல்யாணமாகி மூணு மாசத்துல அவரு எங்கேயோ போனா எல்லாரும் என்ன தான தப்பா நினைப்பாங்க?'. 

'சே அப்படி ஏன் யோசிக்கிற? அவரப்பத்தி எல்லாருக்கும் தெரியும். நீ கவலைப்படாத, நானும் அப்பாவும் போய் தேடிட்டு வரோம்'. ஏப்பம் ஏப்பமாக வந்தது. இப்படி சம்பவங்களை எல்லாம் எங்கு தொடங்குவது? அசோசியேஷன் செயலாளர் பக்கத்தில் இருக்கும் கோவில்களில் தேடுமாறு சொல்லி நிகழ்வை துவக்கி வைத்தார். அடுத்தவர்களுக்கு சம்பவங்கள் நடக்கும்போது பார்வையாளராகவே கண்டுகளித்த எனக்கு காட்சிப் பொருளாக மாறியது சங்கடமாக இருந்தது. பைக்கில் நானும் அப்பாவும் கிளம்பினோம். முதல் காரியமாக பெட்ரோல் டாங்க்கை நிரப்பினேன்.

பக்கத்தில் திறந்திருந்த சில கோவில்களில் நிறைய வயோதிகர்கள் குவிந்திருந்தனர். இரவில் இத்தனை பேர் அந்த மண்டபங்களில் கிடப்பதை அன்றுதான் கவனித்தேன். இவ்வளவு பேரும் பகல் பொழுதுகளில் எங்கிருக்கிறார்கள்? தொலைந்தவரின் முகச்சாடையில், அவர் மண்டை நகலில், அவர் நடக்கும் பாவனையில் என்று கண்ட பலரை துரத்தி பிடித்து ஏமாந்து வீடு திரும்பினோம். பார்ப்பவரெல்லாம் தாத்தாவாக தோற்றம் தந்து அடிக்கடி வண்டி குலுங்கியது. இவ்வளவு தூரத்துக்கும் நானும் அப்பாவும் ஓரிரு வார்த்தைகள் தவிர எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

கலக்கம் தீவிரமடைய ஆரம்பித்து நாங்கள் முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டோம். அம்மாவும் சுமதியும்தான் பத்து பதினைந்து அடுத்த கட்ட திட்டங்களை முன்வைத்தார்கள். அதில் சிறந்ததாக நான் சென்ட்ரல் ஸ்டேஷன் சென்று துழாவுவது, அப்பா கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அவர் அப்பாவை கையும் களவுமாக பிடிப்பது என்று ஏக மனதாக தீர்வாகி உடனே கிளம்பியும் ஆகிவிட்டது. கோயம்பேட்டில் அவர் இறங்கியதும் 'மொபைல் வீட்டுல மறந்து வைக்கலல்ல? கிடைச்சா போன் பண்ணுங்க..' என்று சொல்லிவிட்டு நேராக சென்ட்ரல் விரைந்தேன். 

வெளியூர் பயணிக்க மட்டுமே சென்ற இடம், வண்டி எங்கு நிறுத்துவது எனத் தெரியாமல் தட்டுத்தடுமாறி பிளாட்பார டிக்கெடை வேடிக்கை பார்த்துக்கொண்டே வரிசையில் நின்று வாங்கியதும் உள்ளே ஓடி ஒவ்வொரு பிளாட்பாரமாக தேடிவிட்டு ஒரு காக்கியிடம் காவல் நிலையம் எங்குள்ளது என விசாரித்து சரவண பவன் அருகே இருந்த ஒரு அழுக்கு மாடியில் ஏறி அதைவிட அழுக்கான ஒரு அறைக்கு வந்து அங்கிருந்த பள்ளி கரும்பலகை அளவு பெரிய பலகையில் ஆயிரக்கணக்கான காணவில்லை அறிவிப்புகளை பார்த்து விதிர்த்து, தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம் அதிகாரியை கூப்பிட்டு அவர் எழாமல் போகவே அருகில் சென்று உலுக்கி எழுப்பி விஷயத்தை சொன்னதும் அவர் உடனே எழுந்து ஒரு தாளை கொடுத்து தாத்தா பற்றிய தகவல்களை வாங்கிக்கொண்டு வாக்கி டாக்கியில் இந்த அடையாளங்களுடன் முதியவர் யாராவது கண்ணில் பட்டால் சொல்லுமாறு அறிவுறுத்தி தூக்கத்தைக் கெடுத்ததை பற்றி எரிச்சல் கொள்ளாமல் கனிவாகப் பார்த்தார். 

ஆக மொத்தம் ஆள் கிடைக்கவில்லை. பெரும்பாலான இரவு ரயில்கள் ஏற்கனவே கிளம்பியிருந்தன. அப்பாவுக்கு எப்படியும் வெற்றி கிட்டியிருக்காது (தாத்தா பெயர் வெற்றிவேல்) என்று தெரியும். தாத்தா தொலைந்ததற்கு இவர்தான் காரணம் என்பது போல் தேவையில்லாத எரிச்சல் அவர் மீது வந்தது. அவரைப் பேருந்து நிலைய முகப்பில் நிற்குமாறு பணித்து விட்டு, வழியில் அவரையும் அழைத்துக்கொண்டு மறுபடியும் வீட்டுக்கு பேசாமல் கிளம்பினேன். அம்மாவும் சுமதியும் எங்கள் முகங்களை பார்த்துவிட்டு 'கிடைத்தாரா' என சம்பிரதாயத்துக்குக் கூட கேட்கவில்லை. அதற்குள் 'லீகல் ஒப்பினியனை' வக்கீல் சித்தப்பாவிடம் பெற்று போலீசில் சொல்வது என முடிவையும் எடுத்து வைத்திருந்தார்கள். அவர்தான் லோக்கல் ரோந்து போலீசிடம் முதலில் சொல்லித் தேடவேண்டும், பிறகு ஸ்டேஷனுக்கு சென்று புகாரளிக்க வேண்டும் என்றும் யோசனை சொல்லியிருந்தார். 

வீட்டருகே முச்சந்தியில் இருந்த அந்த போலீஸ் பூத்தில் ஆள் இல்லை. இரண்டு தொலைபேசி எண்கள் இருந்தன, முதலாவது ஸ்டேஷனுக்கு போனது. 
"ஹலோ"
"சார் எங்க தாத்தாவ சாயந்திரத்தில் இருந்து காணோம்"
"உங்க ஆயாவ காணோமா? உனக்கு இந்த நம்பர் யார் தந்தா?"
"பாட்டி இல்ல சார், தாத்தா.. அதான் இங்க பேட்ரல் பூத்ல வந்து பாத்தோம், இந்த நம்பர் இருந்துச்சு"
"ஆமாவா.. பக்கத்துல ஆறு, குளம் ஏதாச்சும் இருக்கா?"
"ரெண்டு ஏரி இருக்கு சார்"
"அதுல போய் விளக்கடிச்சி பாரு" 
"எதுக்கு?"
"எதுக்கா? நீயே புடிச்சி தள்ளி விட்ருப்ப"
"சார் இங்க பூதல ஒருத்தர் வந்துட்டார், தாங்க்ஸ்"

வந்தவரும் இளைஞர்தான், சென்ட்ரல் போலீஸ் போலவே இவரும் ஆறுதலாக நடந்தது அவர் கையை பிடித்து நெற்றியில் ஒற்றிக்கொள்ளலாமா என்று இருந்தது. தாத்தாவின் வயதை 'தோராயமாக எழுபத்தைந்து' என்று கேட்டுத் தெரிந்துகொண்டு போட்டோவும் விவரங்களும் வாங்கி வைத்துக்கொண்டார் (சுமதிதான் போட்டோவை ஞாபகமாக கொடுத்து விட்டது). உடனே பைக்கில் ரோந்துக்கும் கிளம்பி தகவல் கிடைத்தால் சொல்வதாக வாக்கு கொடுத்தார், புகார் ஒன்றை மறக்காமல் பதிவு செய்து விடுமாறு நினைவுறுத்தினார். இரவு இரண்டு மணி ஆகிவிட்டதால் வீட்டுக்கு போய் காலை வரை பார்த்துவிட்டு, அதன் பிறகு புகார் பதிவு செய்து கொள்ளலாம் என்று நாங்கள் மூன்றாம் தடவையாக வெறுங்கையுடன் வீடு திரும்பினோம். 

படுத்தவுடன் பயங்கலந்த தூக்கம் ஒன்று வந்தது. சிறிது நேரம் கழித்து வந்த பெருமழை எங்கள் எல்லாரையும் உலுக்கிவிட்டது. கையில் பணம், போர்வை என எதுவும் கிடையாது, எங்கிருக்கிறார், என்ன செய்கிறார்? போர்த்திக்கொண்டு படுக்கவே கூச்சமாக இருந்தது. மண்டபத்தில் பார்த்த கூட்டம் நினைவுக்கு வந்தது. 

காலையில் யோசனை சற்று தெளிவானது. தாத்தாவுடன் வாக்குவாதமென்பது தேன்கூட்டில் கைவைப்பது போல். எத்தனை பேர் வந்தாலும் கொட்டி எடுத்துவிடுவார். அதனால் அவரிடம் 'சாப்டியா' 'தூங்கிட்டியா' போன்றதைத் தவிர வேறு பேச்சு கிடையாது. ஆனால் குறைகள் வைப்பதில்லை. தனது உலகம் என நினைத்திருந்த பலரை, அவர் வயதில் கால் வாசியே உள்ளவர்களையும் கூட இழந்திருந்தார் என்பது அனுதாபம் தந்தாலும் நாங்களும் அந்த இழப்புகளை சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பது அவருக்கு உறைக்காதா? பார்க்கில் அவரைப் போலவே சில வயசர்கள் அவருக்கு வாய்த்ததும் எங்களுக்கு சிறிது விடுதலையாக இருந்தது. ஆனால் நன்றாக திட்டம்போட்டு இப்போது பழி வாங்கிவிட்டார். எவ்வளவு கோபம் இருந்தாலும் என்ன? அப்படி போயிருக்க வேண்டியதில்லை.

விடிந்து சற்று நேரத்திலேயே அக்கா, மாமா, சித்தப்பா எல்லாரும் வந்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு பக்கம், குறிப்பாக காப்பகங்களில் தேடினார்கள். புகைப்படத்தையும் தொலைபேசி எண்ணையும் பெரிதாக்கி நானே தயாரித்த காணவில்லை தாளை தெருத்தெருவாக ஒட்டினோம் (பின்னாளில் எந்த காணவில்லை சுவரொட்டியையும் சில நொடிகளாவது பார்க்கும் பழக்கம் இந்தச் சம்பவத்திற்கு பிறகே வந்தது), ஆட்டோ ஓட்டுனர்களிடமும் கொடுத்தோம். காவல் நிலையத்துக்கு நான் தான் போனேன். இரவில் போனில் திரைப்படப் போலீஸ் போன்றே பேசியவர் இன்னும் இருந்தார். இவர் என்ன ஷிப்டில் வேலை செய்கிறார் என்றே புரியவில்லை. நள்ளிரவு ஒரு மணிக்கும் இருந்தார். இப்போது மதியத்திலும் இருக்கிறார். நான் விஷயத்தை சொன்னதும் 'நீதானா அது? படக்குன்னு போன கட் பண்ற?"

காவல் நிலையத்தில் நுழைந்தவுடன் தவறாமல் முதலில் சுயத்தை உடைத்து 'நீ ஒரு அற்பன்' என்பதை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு சம்பளம் எவ்வளவு எனக் கேட்கிறார்கள். இந்த சம்பிரதாயங்கள் முடிந்ததும் தாத்தாவை நான் கொலை செய்யவில்லை, அவரே எங்கோ போய் விட்டார் என்பதை விலாவாரியாக விவரித்துவிட்டு, தகவல்களையும் புகைப்படத்தையும் சமர்பித்ததும் வீட்டுக்கு வந்தேன். FIR போடும் வரை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றார் சித்தப்பா. அதைப் போடுவதற்கான எந்த சமிக்ஞையும் அங்கு தென்படவில்லை. 

வீட்டில் எல்லாரும் கூடியிருப்பதால் அது ஒரு வைபவம் என்று நினைத்துக்கொண்டு அக்கா பையன் மட்டும் ஆனந்தக்களிப்பில், அவ்வப்போது 'டாட்டா வண்டுட்டாரா' என்றபடியே வளைய வந்தான். சிறிது நேரமேனும் அவனைக் கவனியாமல் இருந்தால் அலறி எதையாவது உடைத்து கீழே விழுந்து என கவனத்தை சிதறடித்து எரிச்சலை மூட்டிக்கொண்டிருந்தான், ஆனால் அவன் விளையாடிய கண்ணாமூச்சி எல்லோரையும் சிறிதேனும் இலகுவாக்கியது. 'சன்னு எங்க இருக்கான்?' என தேடுபவர் கேட்டால் 'ங்க இருக்கேன்' என தவ்வி முன்னே குதித்தான். அப்படி சிக்கக்கூடாது என சொன்னாலும் கேட்பதாகயில்லை. அவனைப் பொறுத்தவரை கிடைப்பதுதான் விளையாட்டு, ஒளிந்து வெல்வதல்ல.  

வெளியிலிருந்து யாரோ திடீரென கத்தினார்கள். 'தாத்தா வந்துட்டார்'. வீடே அடித்து புரண்டு வெளியே ஓடியது. அவர் திரும்பிய முதல் ஒரு மணி நேரம் அனைவரும் அபாரமான நிம்மதியுணர்வில் திளைத்திருந்தோம். பின் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு தலை தூக்கியது. ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை, அவரை நன்றாகவே நடத்தினோம்,

தாத்தாவுக்கு அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் பெரிய சந்தோசம். குளித்துவிட்டு வந்து ஒன்றுமே நடக்காதது போல் இருந்தார். பக்கத்தூரில் ஒரு கோவிலுக்கு போயிருந்தாராம், போன் எடுத்துப்போகாததால் தகவல் தெரிவிக்க முடியவில்லையாம். 'என்ன இவ்வளவு அக்கப்போர்?' என எங்களை கடிந்துகொண்டார். சன்னுதான் நாங்கள் கேட்கத் தயங்கிய கேள்விகளை சிறிதாவது கேட்டான். 'ஏன் டாட்டா இப்படி போன? நாங்கல்லாம் எப்படி பயன்டுட்டோம்? யூ ஆர் வெரி பேட்'. கெட்டவார்த்தையா பேசுவியேடா, இப்போ கொஞ்சம் திட்டேன் என அனைவருமே ஆவலாக எதிர்பார்த்தோம், ஆனால் அதோடு நிறுத்திக்கொண்டான்.

'ஆறு மாசமா அந்த கோயிலுக்குதான போகணும்னு சொல்லிட்டே இருக்கேன். அங்க வந்திருந்தா தெரிஞ்சிருக்குமேடா' என்றுவிட்டு தன் மகனைப் பார்த்தார். அவர் என்னை பார்த்தார்.