Monday 6 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 33

Rate this posting:
{[['']]}
அப்பா.. அவ்வளவுதான்..

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உன்னை நினைத்துக்கொள்கிறேன் கௌரி. உடல்தான் வாழ்க்கை என்று நீ முடிவெடுத்துவிட்டபின்னர் உள்ளம் குறித்து எத்தனை பேசினாலும் உனக்குப் புரியாது. அல்லது புரிய மறுத்துவிட்டுப்போய்விட்டாய். உன்னை நான் புரிந்துகொண்ட அளவுக்கு என்னைப் புரிந்துகொள்ள விருப்பமில்லாது போய்விட்டாய். ஆனாலும் என்னைவிட்டு நீ விலகிப்போன வெள்ளிக்கிழமைதோறும் நாள்முழுக்க உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது ஒருநாள் நீ திரும்பிவருவாய் என்கிற நம்பிக்கை என்னுள் அணையாத சுடராய் எரிந்துகொண்டிருக்கிறது. இது என்ன பைத்தியக்காரத்தனம்?  எப்போது வருவாய்? என்ன பேசுவாய்? வருவாயா? மாட்டாயா? எதுவும் தெரியாமல் இப்படியொரு நம்பிக்கை எதன் அடிப்படையில் நான் வைத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை நீ வராவிட்டாலும் அல்லது நீ வரும்போது நான் உயிரோடு இல்லாமல் போனாலும் என் மனத்தில் நீதான் இருக்கிறாய் என்பதற்கு ஒரு சாட்சியாவது வேண்டாமா? அதனால்தான் இந்த நாட்குறிப்பை நாள்தோறும் விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். உடல் நோய்க்கு மருந்துகூட சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். சில பொழுது பசி மறந்து மரத்துப்போகிற அளவுக்குக்கூட சாப்பிடாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் நாட்குறிப்பு மட்டும் எழுத மறந்தது இல்லை. இதுதான் நான் என்ன வாழ்க்கை வாழ்ந்தேன் என்பதற்கான அத்தாட்சி.  நம்மிருவருக்கும் இடையே நர்மதாதான் காரணம் என்று ஊர் பேசுவதுபோலவே நீயும் நினைத்துக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை. காலம் உனக்கு உணர்த்தும். நீர் வற்றிவிடுவதுபோல உடல் தாகம் வற்றும்போது உனக்கு உள்ளத்தின் தாகம் புரியும். அதுவரை நான் காத்திருப்பேன். அதற்குப்பின் என் நாட்குறிப்பு காத்திருக்கும் உன் வாசிப்பிற்காக.. பிரதோஷப் பின்னிரவு நேரம் 2.30 மணி.  தாமோதரன்.
                                                       (2)

                        ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தார்கள். பந்தல் சற்று பெரிதாகவே போட்டிருந்தார்கள். கோடைக்காலம் வெயில் உறுத்தும் என்பதால்.  தெரிந்த சொந்தக்காரர்களுக்குத் தொலைபேசி வழி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
                        தெருவின் ஒரு ஓரமாக பாடை தயாராகிக்கொண்டிருந்தது.
                        வீட்டின் நடுக்கூடத்தில் தாமோதரன் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கு உயிர் போயிருந்தது. இதய அழுத்தத் தாக்குதல்தான். நர்மதா அருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பா..அப்பா.. என்கிற ஒரு சொல்லையே வெவ்வேறு உச்சரிப்பில் உச்சரித்து அழுதுகொண்டிருந்தாள்.
                        அவளால் தாமோதரனின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
                        அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தாமோதரன்தான் எல்லாமும். எதைக் கேட்டாலும் கிடைக்கும். என்ன கேட்டாலும் கிடைக்கும். சளைக்காமல் கேள்விகள் கேட்பாள். சலியாமல் பதில் சொல்லுவார் தாமோதரன். அவர் கையை எப்போதும் பிடித்துக்கொண்டுதான் இருப்பாள்.
                        இருடா.. அப்பா பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்..
                        என் கையப் பிடிச்சுக்கிட்டே போப்பா.
                        வேண்டாண்டா…  இரு.. நான் வந்துடறேன்.
                        எப்படா பாத்ரூம் கதவு திறக்கும் என்று அங்கேயே நின்றுகொண்டிருப்பாள்.
                        ஓடிப்போய் மறுபடியும் கையைப் பற்றிக்கொள்வாள்.
                        சனியன்.. காலை சுத்துன பாம்பு மாதிரி.. கெடக்குது.. செத்து ஒழிய மாட்டேங்குது என்பாள் கௌரி.
                        சமயங்களில் தாமோதரன் இல்லாத சமயங்களில் அடித்தும் இருக்கிறாள்.
                        எதையும் நர்மதா தாமோதரனிடம் சொல்லமாட்டாள்.
                        உச்சக்கட்டமாக ஒரு நாள் கௌரி நர்மதாவின் தொடையில் சூடும் போட்டுவிட்டாள். வலியைப் பொறுத்துக்கொண்டாளே தவிர தாமேதரனிடம் சொல்லவில்லை. அவளை குளிக்க வைக்கும்போது தாமேதரன் கவனித்துவிட்டுக் கேட்டார். என்னடா இது சூடு போட்டமாதிரி இருக்கு.
                        அப்பா.. சுட்டுக்கிட்டேம்பா.. என்றதோடு முடித்துக்கொண்டாள்.
                        தாமோதரன் கௌரியின் வேலை இது என்று சந்தேகப்பட்டுக் கேட்டார். என் மேலய சந்தேகப்படுறீங்க.. அந்த சனியன் கோள்மூட்டுச்சா.. மூணு வேளையும் பொங்கிப்போட்டுட்டு எனக்கு இந்தப்பேரு வேறயா.. பொய்யாய் அழுதாள்.
                        அதற்குமேல் தாமோதரன்.. அவ எதுவும் சொல்லலே.. தானா சுட்டுக்கிட்டேன்னுதான்  சொன்னா.. என்றதோடு நிறுத்திக்கொண்டார்.
                         இதற்கும் நர்மதா கவலைப்படவில்லை. அவளின் எல்லாமும் தாமோதரன்தான். தாமோதரன் இல்லையென்றால் நர்மதா இல்லைதான்.. அதற்குக் காரணம் இருக்கிறது.
                         குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்த தாமோதரன் முகம் பார்த்து அழுதாள். ஏம்பா என்ன விட்டுட்டுப் போயிட்டீங்க.. நான் என்னப்பா தப்பு பண்ணேன்.. நான் எப்படிப்பா இருக்கப்போறேன் நீயில்லாம.. என்று கதறினாள்.
                         கூட இருந்தவர்கள் அவளை சமாதானப்படுத்தினார்கள்.
                        சமாதானம் ஆகவில்லை. திமிறிக்கொண்டு அவள் கத்திய கதறல் கல் நெஞ்சையும் அறுப்பதாக இருந்தது.
                        அந்த வீட்டில் தாமோதரனும் அவளும்தான் இருந்தார்கள். ஒரு கூட்டுப் பறவைகள்போல அதற்குள்ளே அவர்கள் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
                        நர்மதாவிற்காகத் தன்னை அழித்துக்கொண்டவர் தாமோதரன்.
                        நர்மதா தாமோதரன் முகத்தைப் பார்க்கப் பார்க்க அழுகை அடக்கமுடியாமல் பொங்கியது.
                        தாமோதரன் கையைப் பிடித்து நடந்த அந்த நாளை நினைத்துப்பார்த்தாள். உள்ளமும் உடலும் நடுங்கியது.
                        நீதி மன்றத்தில் அன்று தீர்ப்பு நாள்.
                        தாமோதரனும் 3 வயது நர்மதாவும்  காத்திருந்தார்கள். தாமோதரன் மடியில் முகம் புதைத்துக்கிடந்தாள் பயத்தில் வெளிறிப்போய்.
                        எதிரே கூண்டில் நர்மதாவின் அப்பா ரத்தினம் நின்றுகொண்டிருந்தான்.
                        நீதிபதி வந்ததும் கோர்ட் தொடங்கியது.
                        நர்மதாவைக் கூண்டிற்குள் அழைத்தார்கள். முரண்டுபிடித்தாள். தாமோதரன் மெல்லத் தூக்கிக்கொண்டுபோய் கூண்டில் சேர்ந்து நின்றார்கள்.
                        வக்கீல் கேட்டார்.. உன் பேரு என்னப்பா?
                        சொல்லுடா என்றார் தாமோதரன்.. நர்மதா என்றாள்.
                        இது யாரு? என்று ரத்தினத்தைப் பார்த்துக் கேட்டார்.. உடனே நர்மதா எங்கம்மாவ அடிச்சவன்..
                        இல்லம்மா.. இவர் உன்னோட அப்பாதானே?
                        பேசாமல் இருந்த நர்மதா தாமோதரன் முகத்தைப் பார்த்தாள். ரத்தினத்தைப் பார்த்துப் பயந்துபோயிருந்தாள்..தாமோதரன் யாருன்னு சொல்லுடா..
                        அப்பா.. ஆனா அம்மாவ அடிச்சவன்..
                        சரி.. பயப்படாதே.. உங்கம்மாவ இவர் என்ன செஞ்சாரு..
                      படபடவெனப் பேசினாள் நர்மதா.
                      எங்கம்மாவ அடிச்சாரு.. கீழே புடிச்சி தள்ளினாரு.. அப்புறம் கத்தியால குத்தினாரு.. எங்கம்மா செத்துப்போச்சி.. அம்மா.. அம்மா அழ ஆரம்பித்தாள்.
                        சரி நீங்க போங்க.. என்றார் வக்கீல்.
                        தாமோதரன் மறுபடியும் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவர்  தோளில் சாய்ந்துகொண்டு அவரை இறுக்கிக்கொண்டாள்.
                        தாமோதரனின் தங்கை கீதாவின் மகள் நர்மதா.  அரசுப் பணியில் இருக்கிறான் என்றுதான் ரத்தினத்திற்கு எல்லாமும் செய்து திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் ரத்தினம் அடிப்படையில் சந்தேகப்புத்தியும் சைக்கோவாகவும் இருந்தான். எப்போதும் சண்டை. நர்மதா பிறந்தும் இது யாரோட குழந்தை. எனக்குப் பிறக்கல்லேன்னு தினமும் பிரச்சினையாகி கீதா அடியும் காயங்களுமாக நிலை குலைந்தாள். அதன் உச்சத்தில் மகள் கண் எதிரே கீதாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிட இப்போது நீதிமன்றத்தில் நர்மதா சாட்சியாக.
                         ரத்தினத்திற்கு ஆயுள் தண்டனை தந்தார்கள்.
                        என்ன தந்து என்ன ஆகப்போகிறது?
                        நர்மதா நிலைமை அழிந்துவிடக்கூடாது.. தாமோதரன் முடிவெடுத்தார். நான் அப்பா இருக்கேண்டா கவலைப்படாதே..
                        அன்றிலிருந்து பிடித்துக்கொண்டாள் தாமோதரனை அப்பாவாக.
                        தாமோதரா.. உனக்கு குடும்பம் இருக்கு.. அதுக்குப் பிரச்சினை வராம பாத்துக்க.. நாங்க வேணா நர்மதாவ வளக்கிறோம்.. உறவுகள் கேட்டார்கள்.
                        இல்ல.. நானே பாத்துக்கறேன். இவ என்னோட மகள்..  கடைசிவரைக்கும் இவளுக்கு நாந்தான் அப்பா..
                        முடிவெடுத்தார் தாமோதரன். பச்சைமண் நர்மதா.. என்ன செய்யமுடியும்?  ஆனால் பிரச்சினையானது கௌரிக்கும் அவருக்குமான வாழ்வில் பெரிய விரிசலாக நர்மதா நின்றாள். நர்மதாவிற்கு அது தெரியாத வயது. தாமோதரன் விரிசலை சரிசெய்துவிடலாம் என்று பேசிப்பார்த்தார் கௌரியிடம் ஆனால் அது நடக்கவில்லை.

                                                            (3)

                        அந்த சனியன தொலைச்சிட்டுவாங்க எங்காச்சும்..அப்பத்தான் நம்ப குடும்பம் நடக்கும்.
                        கௌரி.. சின்னக்குழந்தை.. எங்க கொண்டுபோய் விடுறது..
                        ஆயிரம் அனாதை விடுதி இல்ல.. அங்கதான்..
                        உயிரோட நான் இருக்கேன்.. அவ என்னோட தங்கச்சி மகள். அம்மாவ கொன்னுட்டாங்க.. அப்பா கொலைகாரன்.. அவளுக்கு எதுவும் புரியாத வயசு.. தனியா விட்டா இந்த சமூகம் பேசியே அவளக் கொன்னுடும்..
                        அதப்பத்தி கவலையில்லே.. அவ இருந்தா என்னால உங்களோட வாழ முடியாது..
                        ஒரு இரவில் உச்சமாகப் பேசினாள் கௌரி..
                        அந்த சனியனுக்கு இழவு கருமாதி எதுவோ பண்ணிட்டு வந்து அப்புறம் என்னை தொடுங்க.. அதுவரைக்கும் கிட்ட வராதீங்க.. அருவருப்பா இருக்கு..
                        நடுங்கிப்போனார் தாமோதரன் இந்தச் சொற்களால்.
                        ஆனால் கடைசிவரைக்கும் நர்மதாவை விடப்போவதில்லை எனும் முடிவோடு. அவளுக்கான வாழ்க்கை வாழத் தயாராகிவிட்டார்.
                        என்னப்பா? என்பாள் நர்மதா கௌரியுடன் சண்டை நடக்கும்போதெல்லாம்.
                        ஒண்ணுமில்லேடா.. உங்கம்மாவுக்கு என்னமோ கோவம் என்பார்.
                        யாருக்கு யார் அம்மா.. நான்.. பொறம்போக்குல பெத்துப்போட்டதுக்கு நான் அம்மாவா? அப்பன் கொலைகாரன்.. கொலைகாரன் பெத்துப்போட்டதுக்கு நான் அம்மாவா.. இன்னொருதடவ அம்மான்னா எனக்கு வாயில்ல என்ன வரும்னு சொல்லமுடியாது..
                        இப்படியே கழிந்த வாழ்வில் ஒருநாள் கௌரி எதிர் வீட்டிற்கு குடி வந்த ஒருவனோடு கிளம்பிப்போய்விட்டாள்.
                        உன்னோட மல்லுக்கட்ட முடியாது.. எனக்குப் பிடிச்ச வாழ்க்கை வாழப்போறேன்னு ஒரு சின்ன கடிதம் எழுதிவைத்துவிட்டு கௌரி போய்விட்டாள்.

                                                            (4)

                        இன்று கோயிலுக்குப் போய்விட்டு மருத்துவமனைக்குப் போகிறேன். உனக்குப் பிடித்த வாழ்க்கை வாழப்போகிறேன் என்று சென்றுவிட்டாய் கௌரி. எனக்கு வருத்தமில்லை.  ஆனாலும் சற்று அவசரப்பட்டுவிட்டாய். நமக்கான ஒரு அற்புத வாழ்க்கை இருப்பதை உன்னால் புரிந்துகொள்ளமுடியாமல்போனதுதான் வருத்தம். உறவுகளோடு அன்பும் பரிவும் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை கௌரி. பணமும், உடம்பு சுகமும் என்றும் நிரந்தரமல்ல. உறவுகளுக்காக வாழ்தலின் ரகசியம் உனக்குக் கிடைக்காதவள் நீ.  நர்மதாவைப் பாரு.. அம்மா இறந்துபோய் அப்பாவும் இல்லாமல் தவித்துக்கிடந்தவள் இன்று என்னையே அப்பா..அப்பா.. என்று சுற்றிசுற்றி வருகிறாள். இனி அவளுக்கு எல்லாமும் நானாகத்தான் இருக்கப்போகிறேன். அவளை ஒரு வாழ்வில் இருத்திவிட்டால் போதும் என் வாழ்க்கை நிறைவு அடைந்துவிடும். கௌரி ஆனாலும் உன்னை என் உயிர் இருக்கும்வரை நேசித்துக்கொண்டேயிருப்பேன். கொஞ்சம் அனுசரித்திருந்தால் நாம் வாழ்ந்திருக்கலாம். உன்னுடைய குழந்தையாக நம்முடைய குழந்தையாக நர்மதாவை நேசித்திருந்தால் இந்த வாழ்க்கை இன்னும் வரம்பெற்ற வாழ்க்கையாக இருந்திருக்கும். என்ன செய்வது? உனக்குப் புரியாத வரத்தை இறைவன் அளித்துவிட்டான் போலும். எதையும் சமாளிக்கும் திறனோடு எதற்கும் அஞ்சாமல் ஆண் பிள்ளைபோல நர்மதாவை வளர்த்து ஆளாக்கப்போகிறேன். நல்ல கல்வியைப் பெண்ணுக்குத் தரவேண்டும். நர்மதா விரும்பும்வரை படிக்க வைப்பேன்.அவள் விரும்பும் வாழ்க்கையையும் அமைத்துத் தரப்போகிறேன். என் தங்கை எனக்கு மகளாவாள். ஆனால் கீதா அப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டாள். அவளின் மகள் என் மகள்தான்.
                        உன்னைத் தவிர இனி யாரும் என் வாழ்வில் வருவதற்கு இடமில்லை. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளப்போகிறேன். இன்னொரு பெண்ணிற்கான இடத்தை அது தடுத்துவிடும். மனித மனம் சபலத்திற்கானது என்றாலும் நானும் மனிதன்தானே அதற்கு என்றேனும் ஒருநொடியில் பலியாகிவிடக்கூடாது என்பதால் இந்த முடிவு. சாலையில் ஓடும் குதிரைக்கு கண்மறைப்பு இடுவது சாலை மட்டுமே இலக்காக இருக்கவேண்டும் என்றுதான். நானும் நர்மதாவிற்காகக் கண் மறைப்பு போட்டுவிட்டேன். என்றாவது ஒரு நாள் வருவாய் கௌரி. நான் பார்க்காவிட்டாலும் நீ பார்ப்பாய். ஒருவேளை எனக்காக இறந்துகிடக்கும் என் உடல் முன்பாக இரு சொட்டு கண்ணீர் விட்டால்.. நான் உனக்குத் துரோகம் செய்ததாய் நினைத்துக்கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட அது மன்னிப்பதாக இருக்கும்.  நன்றாய் நிலவு காயும் பௌர்ணமி இரவு 11 மணி. தாமோதரன்.

                                                                (5)

                        தாமோதரன் அடிக்கடி நர்மதாவிடம் சொல்லுவார்.

                        உனக்கு ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டால் போதும். யாரை வேண்டுமானாலும் உன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்துகொள். எல்லாம் பார்த்து, சாதி பார்த்து, குலம் பார்த்து, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து எல்லாமும் செய்தாலும்அந்த வாழ்க்கை சிதைந்துவிடுகிறது. நர்மதா.. யாரையாவது காதலித்துத் திருமணம் செய்துகொள். ஆனால் அவனை நம்பிக்கைக்குரியவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்.. என்று.
                        அதன்படியே நர்மதா படிக்கும்போது அவளுடன் படித்த அப்பா, அம்மாவை இழந்துவிட்ட சங்கரனைக் காதலித்தாள். தாமோதரனுக்கும் அவனைப் பிடித்திருந்தது. கோயிலில் வைத்து எளிமையாகத் திருமணம் செய்து வைத்தார். அவர் வேலை பார்த்த அலுவலக நண்பர்கள் தெருவாசிகள் இவர்களுக்குமட்டும் விருந்து வைத்தார். முறையாகப் பதிவாளர் அலுவலகத்தில் நர்மதா சங்கரன் திருமணத்தைப் பதிந்துகொண்டார்.
                        எல்லாவ்ற்றையும் முடித்துவிட்டுதான் தாமோதரன் முடிந்துபோயிருக்கிறார்.
                        அடிக்கடி நர்மதாவிடம் சொல்லுவார்.
                        எனக்கு ரொம்ப பிடிச்ச நோய் ஹார்ட் அட்டாக்தாம்பா.. அதுதான் படுக்கையில விழாம.. நாலுபேருக்குத் தொந்தரவு இல்லாம.. பீ மூத்திரம் நான் அள்ளிப்போட்டேன்னு யாரையும் சொல்லி சலிச்சுக்காம.. பட்டுன்னு வந்து சட்டுன்னு முடிச்சிடும் வாழ்க்கையை.. எனக்கு ரொம்ப பிடிச்சநோய் என்னோட பேவரைட்னு.. இதய அழுத்த நோயைக் குறிப்பிடுவார்.
                        அப்படியேதான் நிகழ்ந்திருக்கிறது.
                     எல்லாவற்றையும் நினைத்துதான் நர்மதா கதறிக்கொண்டிருக்கிறாள். அவரின் நாட்குறிப்புகளை வாசித்து தனக்காக அவர் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி எண்ணிக் கதறியழுதாள்.
                        யாருப்பா கொள்ளி போடறது? என்று கூட்டத்தில் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார்கள்.
                        அப்போதுதான் தாமோதரனின் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை அனுபவித்துவிடலாம் என்று சிலர் முன்வந்தார்கள்.
                        வீர வசனம் பேசினார்கள்.
                        அவருக்கு நான் அண்ண மவன்.. நான் போடுவேன் கொள்ளி. எனக்கு உரிமையிருக்கு.. அவர் சொத்துல எனக்கு பைசா வேண்டாம்.. யாரும் கேட்காம லயே பேசினான் பைசா வேண்டாம் என்று குறிப்பாக.
                        எனக்கும்தான் உரிமையிருக்கு.. நானும் அவருக்குப் பங்காளி மவ உறவுதான்.
                        ஆளுக்காள் உரிமை கொண்டாடிப் பேசினார்கள்.
                        நர்மதா எழுந்து பந்தலுக்கு வந்தாள். 
                        யாரும்..போடத் தேவையில்லை.. என்னோட அப்பாவுக்கு நான் போடறேன் கொள்ளி..
                        சும்மா இரும்மா.. பொட்டப்புள்ள கொள்ளிப்போடற வழக்கமில்ல
                        நீ போடக்கூடாது.. நீ தங்கச்சிப் பொண்ணு.. மவ இல்ல
                        நாந்தான் அவரோட மவ.. நான்தான் கொள்ளிப்போடுவேன்.
                        சங்கரன் வந்து தடுத்தான் விடு நர்மதா.. யாராச்சும் போட்டுட்டு போவட்டும்.
                        நர்மதா கத்திப்பேசினாள்.
                        யாராச்சும் போடறதுக்கும்..போறவர்றவங்க போடறதுக்கும் எங்கப்பா அனாதை இல்ல.. நான் உசிரோடத்தான் இருக்கே.. இந்த உசிரு அவரு போட்ட பிச்சைதான்.. நான் எங்கப்பாவுக்குக் கொள்ளிப்போடுவேன்..
                        இது என்னப்பா பொம்பள கொள்ளிப்போடறேன்னு சொல்லுது.. சுடுகாடு வரைக்கும் பொம்பளங்க வர்றது இல்லதான?
                        சொத்துப்பா.. காசிருக்கறவ பொணமா இருந்தாக்கூட உலகத்துல மரியாததான்..
                        நர்மதா போடக்கூடாது என்று பலர் பேசினார்கள்.
                        யாரும் போடவேண்டாம்.. நான் இன்னும் சாகலே.. என்று குரல் கேட்க குரல் வந்த திசையைப் பார்த்தார்கள்.
                        அங்கே கௌரி நின்றுகொண்டிருந்தாள். அவளருகில் பத்து வயது பையன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.
                        நீ யாரும்மா? என்று தெரியாதவர்கள் கேட்டார்கள்.
                        அம்மா.. வாம்மா என்று அருகில் ஓடி கதறினாள் நர்மதா. அப்பாவ பாரும்மா.. நம்பள எல்லாம் விட்டுட்டுப்போயிட்டாரு..
                        தன்னைக் கட்டிப்பிடித்தவளை விலக்கித் தள்ளினாள்.
                        போடி.. நீ யாருடி உறவு கொண்டாட.. அவரு எம்புருஷன்.. அவரு கட்டுன தாலி இன்னும் எங்கழுத்துல இருக்கு.. உன்னாலத்தான் அவரு  இந்தகதிக்கு ஆளான்னாரு.. யாரும் கொள்ளிப்போட முடியாது.. எம்புள்ள இருக்கான் அவருக்கு அவன் கொள்ளிப்போடுவான்.. அவன்தான் அவருக்கு வாரிசு எல்லாமும்.. என்று அந்த பத்து வயசு பையனை இழுத்து சபைக்கு நடுவே நிறுத்தினாள்.
                        இது யாரு என்றார்கள் தெரிந்த உறவினர்கள்.
                        இது அவரோட பிள்ளைதான் என்று வாய்கூசாமல் பேசினாள் கௌரி.
                        சொத்து என்ன சொற்களை வேண்டுமானாலும் பிரசவிக்கும்போல.
                     நர்மதா அருவருப்போடு அவளைப் பார்த்தாள்.
                        நர்மதா மறுபடியும் குரல் உயர்த்தினாள். யாரும் இங்க வாரிசு இல்ல.. எனக்கு என் அப்பாவைத்தெரியும்.. நான் மட்டும்தான் அவருக்கு பிள்ளை எல்லாமும். நான்தான் கொள்ளிப்போடுவேன். அதுதான் அவருக்கும் பிடிக்கும்.. யாரும் இங்க உரிமை கொண்டாடமுடியாது.. மீறினா இங்க நடக்கறதே வேற..
                                    என்று கத்த.. கௌரி என்னடி சொன்னே? என்று கைய ஓங்கிக்கொண்டு வர.. ஓங்கிய கையைப் பிடித்து முறுக்கி.. பேசாம இருக்கணும்.. குரல உயர்த்தினே மரியாதைக் கெட்டுடும்.. இத்தன நாளு எங்க போன? இப்ப வர்றே கொள்ளிப்போடறேன்.. அள்ளிப்போட றேன்னு.. பத்து வயதுல இந்த புள்ள என் அப்பாவோட புள்ளயா? நடிக்கிறியா.. நாடகம் போடறியா.. எதுக்கு நீ வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும்..  நர்மதா சற்றுக் குரலை நிறுத்த பலர் எழுந்து கௌரியை மனம்போன போக்கில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
                         புருஷன் வேணாம்னு ஓடுன ஓடுகாலி நாயி.. எவனுக்கோ புள்ளய பெத்துக்கிட்டு அவருக்கு பெத்தேங்குது..
                        சிறுக்கி.. சொத்துக்கு இந்த நாடகம் போடுறா..
                        மானங்கெட்ட செறுக்கி சபைல கூச்ச நாச்சமே இல்லாம எவனுக்கோ பெத்தத இவனுக்கு பெத்தேன்னு சொல்றா பாரு..
                        இவள எல்லாம் வெட்டிப் பொலிபோடணும்யா..
                        கௌரி கூட்டம் தனக்கு எதிராகத் திரும்பியதைக் கண்டதும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.
                        நில்லுங்க என்று நர்மதா அவளைத் தடுத்தாள்.
                        நின்றாள்.
                        தன் கணவன் சங்கரனை விட்டு அந்த தாளை எடுத்து வரச்சொன்னாள். அது ஒரு வெற்றுப்பத்திரம்.
                        சபை நடுவே வைத்து அதில் கையொப்பமிட்டாள். அந்த பத்திரத்தாளை கௌரி கையில் திணித்து பேசினாள்.
                        இதுதானே உங்களுக்கு வேணும். எடுத்துக்கங்க. அப்பா என்பேர்ல எழுதி வச்ச அத்தனையையும் உங்க பேருக்கு மாத்திக்கங்க.. அப்பாவுக்கு வர்ற பென்ஷனக்கூட நீங்களே வாங்கிக்கங்க.. ஒவ்வொரு மாசமும்  பென்ஷன வாங்கும்போது உங்களுக்கு உறுத்தணும்.. நல்ல மனுஷங்கூட வாழமுடியாப் போயிடிச்சேன்னு.. எனக்கு என் அப்பாவைத்தவிர எதுவும்பெரிசில்ல.. எதுவும் வேண்டாம்.. அவரு உயிரோட இருந்தவரைக்கும் நான்தான் மகள்.. நான் உயிரோட இருக்கறவரைக்கும் அவர்தான் என்னோட அப்பா.. இத யாராலும் மாத்தமுடியாது. அழிக்கமுடியாது.. அப்பாங்கற வார்த்தைக்கு முன்னால எதுவும் பெரிசில்ல.. அப்பா…. அவ்வளவுதான் என்னோட உலகம்.. எனக்குத் தெரியும். வேற எதுவும் எனக்குத் தெரியாது. எத வேணாலும் எடுத்திட்டுப்போங்க.. நாந்தான் என்னோட அப்பாவுக்கு கொள்ளிப்போடுவேன்.. அத யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன். இத யாரும் தடுக்கமுடியாது..
                                    கூட்டமே அமைதியானது.
                                 தாமோதரனை பாடையில் ஏற்றி ஊர்வலம் கிளம்பியபோது முன்னால் உடலெங்கும் நீரால் நனைத்தபடி கையில் கொள்ளிச்சட்டியைப் பிடித்தபடி நடந்தாள் நர்மதா. கூடவே சங்கரன் தொடர்ந்தான். கூட்டமும் தொடர்ந்தது.