Sunday 12 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 37

Rate this posting:
{[['']]}
தந்தை

அது நெல்லை மாநகரத்தின் மத்திய பகுதி. பாளையங்கோட்டை என்ற பெயருடைய நகரத்தில் கடனை விட ஆபத்தான உறவுகளின் சூதாட்டத்தில் ஒரு குடும்பம் சின்னாபின்னமான கதை இது.எனக்கு என் நண்பன் சொன்னான். அவனுக்கு அவன் நண்பன் சொன்னான். ஒரு சூதாட்டம் நடக்கிறது. பாசம் பகடைக்காயாக, பணம் பகடைக்காயாக, புகழ் பகடைக்காயாக உருட்டப்பட நடக்கும் சம்பவங்களை நாங்கள் பேசிக்கொள்வோம்.இப்போது அந்த சூதாட்ட சம்பவத்தை என் இன்னொரு நண்பனுக்கு கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

மாதவி அரசுத்தேர்வில் தொன்னூறுகளில் தேர்ச்சி பெற்று நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக பணி நியமனம் பெற்று வேலைக்கு போகாத,குடிப்பழக்கம் உள்ள சகா தேவனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டவள் .இப்போது இரண்டு மகன்கள் . மூத்தவன் பெயர் ராஜேஷ். இளையவன் பெயர் பிரசன்னா.இளைய மகன்  தந்தை மீது பிரியமுடையவன். மூத்த மகன் தாய் மீது பிரியமுடையவன். இதிலே தொடங்கியது சூதாட்டம். தந்தை மீது மூத்த மகனுக்கு கோபம் வளருகிறது . தன் தந்தை பாரபட்சம் பார்க்கிறார் என ராஜேஷ் நினைக்கிறான்.
இந்த குடும்பம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டை சந்திக்கிறது. அதிர்ச்சிகள் அனைத்தும் மயிலிறகால் வருடும் சம்பவங்கள் ஆன காலக்கட்டத்தை சந்திக்கிறது. இங்கே காலம் ஒரு மாபெரும் சூதாட்டம் ஆடுகிறது.
இது 2015 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி.

அன்று மாதவியிடம் இருந்து சகா தேவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
"ஏங்க அவசரமாக வங்கியில் இருந்து ஒரு நாற்பதாயிரம் எடுக்கனும் . கடன் அட்டையில்  இருந்து நீங்க எடுத்துவிடவில்லையே ? " என மிகவும் பதற்றக்குரலில் பேசினாள்.
சகா தேவன் "அய்யோ, நான் ஏற்கனவே பணத்தை எடுத்துவிட்டேனே! " என சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசி அழைப்பு நின்றுபோனது .

அதற்கு பிறகு சகா தேவனுக்கு தன் மனைவி மாதவியின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"சார், உங்க மனைவியை போலிஸ் விசாரிக்க ஸ்டேஷனுக்கு அழைத்து கொண்டு சென்றுவிட்டார்கள்,உடனே நம் ஊர் காவல்துறை அலுவலகத்துக்கு சென்று பாருங்கள் ."
போலிஸ் ஸ்டேஷனுக்கு உடனே கையில் கடன் அட்டையுடன்  விரைந்து போனார் சகா தேவன் தன் மூத்த மகன் ரகுராம் உடன்.
அங்கு போய் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் சென்று விசாரிக்கையில் தான் தன் மனைவி காசோலை மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது.
"ஐயா,தயவு செய்து கைது எல்லாம் செய்துவிடாதீர்கள். இப்போதைக்கு இதை ஈடுகட்ட என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள் செய்கிறேன் ." என அழாதகுறையாக பதற்றத்துடன் கெஞ்சுகிறார்.

உடனே புகார் பதிவு செய்த கடன் கொடுத்த ராஜசேகர் காவல்துறை உதவி ஆய்வாளர் உடன் கலந்து பேசி "இப்போதைக்கு ஒரு நாற்பதாயிரம் கொடுத்துவிட்டு உடன்படிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டு அழைத்துக் கொண்டு செல்லுங்கள்." என சொல்லுகிறார்.
உடனே சகா தேவன் தன் மூத்த மகன் ராஜேஸிடம் "இதோ கடன் அட்டை.போய் நாற்பதாயிரம் எடுத்து விட்டு வா. ஓடு!." என கட்டளையிடுகிறார். 
ராஜேஸ் பதற்றமாக ஒடுகிறான்.
அவன் சென்று கால் மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. 
அதற்குள் காவல்துறை ஆய்வாளர் வருகிறார்.
"அதுசரி கையில் தான் கைது செய்ய ஆணை இருக்கிறதல்லவா ? இன்னும் ஏன் தாமதம் செய்கிறீர்கள் ? சிறைக்கு அழைத்து செல்லுங்கள்." என கம்பீரக் குரலில் ஆணையிடுகிறார்.
அவ்வளவு தான் சகா தேவனுடைய கனவு கலைந்து போனது.
தன் மனைவி தன் கண் முன்னாலே கண்ணீருடன் கைது செய்யப்பட்டு அழைத்து  செல்வதை கண்ணீருடன் காண வேண்டியதாயிற்று.
அவ்வளவு தான் ஒரு குடும்பம் மீது கடன் அரக்கன் தன் முழு ஆட்சியையும் செலுத்த தொடங்க ஆரம்பித்து முதல் ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக சாதித்துவிட்டான்.

சகா தேவனும், ராஜேஸும் வீட்டுக்கு போகிறார்கள் மனம் உடைந்து கண்ணீர் உடைந்து.
சகா தேவன் வெளியூரில் படிக்கும் தன் இளைய மகனிடம் இந்த விஷயத்தை சொல்கிறான். இளைய மகன் பிரசன்னாவோ தனக்கு இந்த செமஸ்டருக்கான கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும்.இல்லையெனில் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு கிடைக்காது என சொல்கிறான்.இது சகா தேவனை மேலும் கவலைக்குள்ளாக்கிறது.சகா தேவன் தன் இளைய மகன் பிரசன்னாவை தேற்றுகிறான்.
சகா தேவன் வழக்கறிஞர் ராமசாமியை சந்திக்கிறார். வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடுகிறார். இதற்கிடையில் புகார் கொடுத்த ராஜசேகர், "கடன் தொகை இரண்டு லட்சத்தை கொடுத்துவிட்டு சமாதானமாக போய்விடுவோம்.அதற்கு பின் வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும்." என்கிறார்.

சகா தேவன் இரண்டு லட்சம் பணத்தை திரட்ட வேண்டிய கடினமான இலக்குடன் தன் உறவினர்களிடம் உண்மையை 
மறைத்து பொய் கூறி பணம் கடனாக கேட்கிறான். உறவினர்களோ சகா தேவனின் கடந்த கால பொறுப்பற்ற தன்மையை எண்ணிப் பார்த்து கேட்ட தொகையை தராமல் சொற்ப தொகையை தருகிறார்கள். இது சகா தேவனை உறவினர்கள் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இப்படியே ஒரு மாதம் சிக்கலாக நகருகிறது.
பணம் யாரும் தரவில்லை என வீட்டில் இருந்த பெரிய அலங்காரப் பொருட்களை விற்கிறார்.இதனால் சகா தேவனுக்கும் தன் மூத்த மகனுக்கும் விவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்படுகிறது.
வீட்டிற்குள்ளே ஒரு பனிப்போர் சூழல்.
தன் தாயை தன் முயற்சியால் தான் மீட்கப்பட வேண்டும் என ராஜேஸ் தன் தந்தையின் ஒவ்வொரு பணம் திரட்டும் முயற்சியை கெடுக்கிறான் . தன் மனைவியை தான் தான் மீட்க வேண்டும் என தன் மகனின் பணம் திரட்டும் முயற்சியை கெடுக்கிறார்.
இதைப்பயன்படுத்திக்கொண்டு வழக்கறிஞர் ராமசாமியும் அதிக பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய நாள் வருகிறது. வீட்டு உரிமையாளரிடம் தன் மனைவி பயிற்சி விஷயமாக சென்று உள்ளார் என சொல்லி சமாளிக்கிறார்.
இப்படியே புத்தாண்டு முடிகிறது துயரத்துடன். ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இடையே இடையே சிறைச்சாலைக்கு போய் தன் மனைவியை போய் பார்த்து ஆறுதல் சொல்லுகிறார்.

தன் இளைய மகன் பிரசன்னா கல்லூரி ஒரு வார விடுமுறைக்கு வீட்டிற்கு வருகிறான். அவனுக்கு வீட்டில் வெறுமையான சூழல் படுகிறது. 
வீட்டில் தன் தாயை வெளியில் எடுக்க முயலாமல் இப்படி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொள்கிறார்களே என வருந்துகிறான். பிரசன்னா எப்படியாவது தான் கல்லூரிக்கு போவதற்குள் தன் தாயை வெளியில் எடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்குகிறான் .
தன் நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி வீட்டில் யாருக்கும் தெரியாமல் கடன் வாங்குகிறான். அதன்பிறகு தான் இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகரை அணுகி  வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்கிறான்.இதற்கிடையில் சகா தேவனுக்கு கடும் விரக்தி ஏற்படுகிறது. என் மனைவியை வெளியில் எடுக்க என்னால் முடியவில்லையே என நினைத்து நினைத்து உள்ளூரில் கடன் வாங்கி குடிக்கிறார்.இதே மதுவால் தந்தையும் மகனும் சண்டையிட்டு கொள்கின்றனர்.

பிரசன்னா வீட்டில் தான் மேற்கொண்ட முயற்சியை பற்றி தன் தந்தையிடம் சொல்லி தேற்றுகிறான்.இதற்கிடையில் பிரசன்னா தன் சகோதரன் ராஜேஸிடம் நிலையை எடுத்து கூறி "இன்னும் ஐம்பதாயிரம் எப்படியோ கிடைத்துவிட்டால் போதும் வழக்கு எளிதாக முடிந்துவிடும்.அதற்கு மட்டும் ஈகோ இல்லாமல் முயற்சி செய்." என கேட்கிறான்.
வீட்டில் ஒரு ஒருமித்த சூழல் ஏற்படுகிறது. கடனாக பணம் சேருகிறது. பிரசன்னாவும் சகா தேவனும் கையில் மொத்த பணத்துடன் ராஜசேகரை பார்க்க போகிறார்கள். அதன்பிறகு கடன் தொகையை திருப்பி கொடுக்கிறார்கள். ராஜசேகர் சமாதானத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் சமாதானமாக போகிறோம் என சொல்கிறார்.வழக்கு முடிகிறது.

மாதவி சிறையில் இருந்து வெளிவருகிறாள்.
இப்போது மீண்டும் யார் வீட்டிற்கு அழைத்து வருவது என சண்டை வருகிறது. பிரசன்னா போகிறான். வீட்டிற்கு அழைத்து வருகிறான் .
வீட்டிற்கு வந்த மாதவி தன் கணவர் சகா தேவனிடம் ஒரு கேள்வி கேட்கிறாள். "நீங்கள் ஏன் கடன் அட்டையில் இருந்து பணத்தை எடுத்துவிட்டேன் என பொய் சொன்னீர்கள் ? "
சகா தேவனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. வீட்டில் இப்போது பல பொருட்கள் இல்லை. அதற்கு மேல் கடன் தொல்லை வீட்டை விட பெரிதாக இருந்தது. வீட்டு வாடகை மூன்று மாதமாக கொடுக்கப்படவில்லை. மாதவியின் வேலையை திரும்பிப் பெற மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது.பிரசன்னாவின் கல்விக் கட்டணம் வேறு கட்ட வேண்டியிருந்தது.ராஜேஸின் வேலைவாய்ப்புக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
ஒரு பொய் எப்படியெல்லாம் விளையாடும் என்பதை விட 
தந்தை-மகன் பனிப்போர் ஏற்படுத்திய சேதாரங்கள் காலத்திற்கும் அழியாமல் நிலைத்துவிட்டது இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சகா தேவன் ராஜேஷ் இருக்கலாம். ஆனால் பிரசன்னாக்கள் இருக்கும் வரை பிரச்சினையில்லை. இப்போது தொலைக்காட்சியில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தைக்கும் மகனுக்கும் ஆகாது என சொல்கிறார் சோதிட சிகாமணி. கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் சகா தேவனுக்கும்,ராஜேஸ்க்கும் சதய நட்சத்திரம்.
யாருக்கு தெரியும் .ஒருவேளை உண்மையாக கூட இருக்கலாம் .