Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 40

Rate this posting:
{[['']]}
ஒரு கேள்வி

 “என்னை மட்டும் வீட்டை விட்டுப் போகச் சொல்லுதீங்கல்ல?” அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் ஆவுடைநாயகி. திருமணம் நிச்சயமானதிலிருந்து இதே கேள்வியை ஆயிரம் முறை தம்பியிடம் கேட்டிருப்பாள்.
நடிக்கிறியா? ம்ம்?” உதட்டைக் கடித்துப் பொய்க்கோபம் காட்டினான் அவன். முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு மறுபடியும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். தமிழ் சற்று அருகே வந்தான்.
என்னது இது?” அப்போது தான் சீவியிருந்த அவளது சிகையலங்காரத்தைக் கைகாட்டிக் கேட்டான். “அமலா பால்? ம்ம்?” மறுபடியும் பொய்க்கோபம் காட்டியவாறு அக்காவை அடிக்கக் கை ஓங்கினான்.
வெட்கச் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் திரும்பி அமர்ந்தாள். “அமலா பால் எல்லாம் நமக்குத் தேவையா? ஒளுங்கா உச்சியெடுத்துத் தலை சீவு. இல்லன்னா அம்மாவ கூப்டுவேன்”`
கூப்டுக்கோ. அவரே ஒன்னும் சொல்லலஅழகிய பற்கள் தெரிய சிரித்தாள்.
ஓஹோ.. அப்பம் இனிமே அம்மா சொன்னா கேக்க மாட்ட?” என இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்தான்.
ரெண்டு பேரும் சும்மா பழக்கம் விட்டுட்டு இருக்காம ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கஎன பீரோவிலிருந்து பணம் எடுக்க வந்த அம்மா எரிச்சலோடு சொல்லிச் சென்றாள்.
என்ன இந்த அம்மா? இந்த நிலைமைல என் மனசு எப்படியிருக்கும்னு கூட நினைச்சிப் பார்க்காம எப்பம் பார்த்தாலும் சிடு சிடுனு இருக்குஎன நினைத்தாள் ஆவுடைநாயகி. ‘அப்பா அப்படி இல்லை.’

சரீ.. கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படி ஜாலியா இருக்க? நாங்கல்லாம் ஓடியோடி எவ்வளோ வேலையைப் பாத்துக்கிட்டு இருக்கோம்? பியூட்டி பார்லருக்கு சொல்லிட்டியா?”
இன்னும் இல்ல
இங்க பாரு... கடைசி நேரத்துல சொதப்பி வைக்காத. நல்ல இடமா பார்த்து புக் பண்ணு. நாளை கழிச்சி கல்யாணம்
ம்ம்
செண்டா மேளம் சொல்லுவோமா?”
வேண்டாம் தமிழு.. அது ரொம்ப காஸ்ட்லி. நாப்பதாயிரம் அம்பதாயிரம் சொல்லுவான்.”
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன்ட்ட சொல்லி பத்து டூ பன்னெண்டுக்குள்ள முடிச்சிறலாம்
சீ.. நல்ல இருக்காது.. குவாலிட்டியா. அதோட அது கேரளா
சரி. அப்பம் வேற வழியே இல்ல. நம்ம தமிழ்நாட்டுப் பறை அடிக்கச் சொல்லுவோம்
நோஓஓஓ
ஏன் வேண்டாம்?” அவளது பின் கழுத்தை நெருக்கி அடிக்க வந்தான்.
எதுவும் வேண்டாம். சும்மா ஸ்பீக்கர் வெச்சிப் பாட்டு போட்டுடலாம். பறை அடிச்சி மானத்தை வாங்காத. மாப்பிள்ள வீட்டுல என்ன நினைப்பாங்க? கல்யாணத்துக்குப் பெரிய  ஆளுங்கல்லாம் வாறாங்க
படிச்ச நீயே இப்படிச் சொல்லலாமா? அவ்வளோ தான் உனக்கு அறிவு. இது தமிழர்களோட பாரம்பரியம்னு உனக்குத் தெரியுமா தெரியாதா? கோயில் கொடைல அடிப்பாங்க பார்த்திருக்கியா? சும்மா பிரிச்சி மேயுவான். என் ஃப்ரெண்ட்ஸே நூறு இரநூறு பேரு வருவாங்க. எங்க ஆட்டத்தை மட்டும் பாரு
ஐயோ.. வேண்டாம். இது ஏன் கல்யாணம். நான் சொல்றபடி தான் கேக்கணும். உன் கல்யாணத்துல நீ என்ன வேணா வெச்சிக்கோ. அது வெச்சோம்னா நம்மள வேற ஜாதினு நினைப்பாங்க. அன்னைக்கே விக்கிப்பீடியால பாத்தேன். Thappattam is practiced among the suppressed Dalit classes of the people of Tamil Nadu ன்னு போட்ருந்தான். சாவு வீட்டுல அடிக்கிறத என் கல்யாணத்துல அடிக்கச் சொல்லுதியா?
கல்யாணத்துக்கெல்லாம் வேற மியூசிக் அடிப்பாங்க லூசு.. அதுல ஏகப்பட்ட விதம் இருக்கு. எவன் எப்படி நினைச்சாலும் எனக்குக் கவலையில்ல. இது தான் நம்ம பாரம்பரியம். ஆதி தமிழர்களோட ஆட்டம். ஆஃப்ரிக்காலயும் ஆஸ்திரேலியாலயும் இருக்குற அபாரிஜின்ஸ் கூட இதே தான் தங்களோட பழங்காலத்து இசைனு சொல்றாங்க. இந்த இரண்டு கண்டங்களும் இந்தியாவோட சேர்ந்து பாஞ்சியா சூப்பர்கான்டினெண்ட்டா இருந்தப்பத்துல இருந்தே பறை இருந்திருக்கணும்
ஆவுடைநாயகி தயங்கினாள்.
இரு. யூடியூப்ல போட்டு விடுறேன். உனக்கு ஆடத் தோனலனா மட்டும் சொல்லு”. இருவரும் பார்க்கத் தொடங்கினார்கள்.
இதென்ன மியூசிக் கேட்டு ஆடச் சொன்னா அழுதுகிட்டு இருக்கா இவஎன்று தலையில் தட்டியவாறே, “இப்போ புரியிதா பறையோட பவர் என்னானு?” என்று கேட்டுச் சிரித்துவிட்டுச் சென்றான்.
வீட்டில் தடல்புடலாக வேலைகள் நடந்தேறின. மண்டபத்துக்கு முன்பணம் கொடுத்தாகிவிட்டது. சாப்பாடு, மேடையலங்காரம், பூ, வீடியோ எனச் சகலமும் ஏற்பாடு செய்யப்பட்டு முகூர்த்தப் புடவை, நகைகள் எல்லாம் வாங்கியாகிவிட்டது. பத்திரிகை விநியோகம் தான் இன்னும் முடிந்த பாடில்லை. ஆயிரம் பத்திரிகைகள் போதாமல் மேலும் முந்நூறு பத்திரிகைகள் அடித்து வாங்கிவந்தார் அப்பா. வீட்டின் முதல் விசேசம்.
கண் மூடித் திறப்பதற்குள் திருமணமும் சடங்குகளும் முடிந்துவிட்டன. தொடர்ந்து ஐந்து மணி நேரம் நின்று கொண்டேயிருக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு நிமிடம் உட்கார முடியவில்லை. திட முகூர்த்தமாக இருந்தாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. சாதாரண அரசு ஊழியராக இருந்தாலும் அப்பாவின் தொடர்புகள் மலைக்க வைத்தன. வெளியூர்களிலிருந்து மெனக்கெட்டு திருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை பெண்ணை வரவேற்ற போதும் கேக் வெட்டிய போதும் தாலி கட்டி அமர்ந்திருந்த போதும் எல்லாம் பறை அடித்தார்கள். கேட்கக் கேட்க ஆவுடைநாயகிக்குக் கண்ணீர் வந்தது. மேடையில் சிரித்து மலுப்பினாள். சாப்பாடு அருமை என அனைவரும் சொல்லிச் சென்றார்கள். மேடையலங்காரம் சற்று சொதப்பியது, இடையில் தண்ணீர் போத்தல்கள் மற்றும் இலைகள் தட்டுப்பாடு தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருமணம் முடிந்தது. முன்தின நிச்சயதார்த்தத்திற்கும் சரி, திருமணத்திற்கும் சரி சாப்பாடு சொல்லும் அளவு மிஞ்சியது.
கூட்டம் வராமயிருந்து மிஞ்சியிருந்தா பரவால்ல. இத்தனைக் கூட்டம் வந்தும் சாப்பிட்டும் சாப்பாடு மிஞ்சியிருக்குன்னா நீ கோடீஸ்வரியா வாழுவஎன கோமதி ஆச்சி சொன்னாள்.
வீட்டுக்கு வந்ததும் ஆவுடைநாயகி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். திருமண வாழ்த்துகளை விட முதலிரவு வாழ்த்துகள் குவிந்து கிடந்தன. சிரித்துவிட்டு அதை அணைத்துப் போட்டாள்.
மாப்பிள்ளை வீட்டுக்கு மறுவீடு செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்தன. ஆவுடைநாயகிக்கு அழுகை அழுகையாக வந்தது. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டும். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நல்ல மனிதர்கள் தான். அவளை மகள் போலப் பார்த்துக் கொள்ளப்போவதாக நம்பிக்கை அளித்திருந்தார்கள். அவரும் கூட தாங்கு தாங்கு என்று தாங்குகிறார் தான். ‘இருந்தாலும்..’ என மனது உருகியது. அதை அவள் மட்டுமே உணர முடியும் என அவளுக்குத் தோன்றியது.
கல்யாணத்தன்று கால் கடுக்க நின்று கொண்டேயிருந்ததால், ஆவுடைநாயகிக்கு அன்றைய இரவில் ஒரே அசதி மற்றும் கால் வலி. இருந்தாலும் புது சூழலில் உறக்கம் வரவில்லை. மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டேயிருந்தது. அடுத்த நாளில் பிறந்த வீட்டை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ‘இவளுக்கு எப்படியாது கல்யாணத்தை முடிச்சு தள்ளி விடணும்என அம்மா தினமும் கூட சொல்லியது உண்டு. ஆனால் அப்பா? இது ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷனா? நினைத்துப் பார்த்தால் இல்லையென்று தோன்றியது. தம்பியாக இருந்தாலும் அப்பா இப்படித் தான். கலந்த உணர்வுகளால் மனது கனமாக இருந்தது. மங்கிய இரவு விளக்கொளியில் பையில் இருந்த தனது மடிக்கணினியை எடுத்துத் தட்டச்சு செய்யத் தொடங்கினாள்.

அன்புள்ள அப்பா,
சிறு வயதில் தமிழை நீங்கள் கையில் தூக்கி வைத்திருக்கையில் அவனை இறக்கி விட்டுவிட்டு என்னைத் தூக்கச் சொல்லி அடிக்கடி அடம் பிடித்தது எனக்கு நினைவிருக்கிறது. சோறு சாப்பிடச் செய்வது, சேட்டை பண்ணினால் கண்டிப்பது, குளிக்க வைப்பது, தலை பின்னிவிடுவது போன்றவை மட்டுமே அம்மாவின் வேலைகளாக இருக்க, இந்த உலகத்தை நான் உங்கள் கண்களால் தான் பார்க்கத் தொடங்கினேன். நான் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறியது நினைவிலிருக்கிறது. எனக்கு ஒரு மூன்று வயதிருக்கும். ஒரு நாள் இரவில் உறக்கத்தில் பாத்ரூம் கூட்டிப் போக உங்களை அழைத்தேன். வீட்டின் முற்றத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தோம்.
அது என்ன சத்தம் பா?’
அது லாரி போற சத்தம்டா
அப்பம் வானத்துல இருந்து கேக்கு?’
வானத்துல தான் போய்ட்டு இருக்கு
அன்றிலிருந்து லாரிகள் வானத்திலும் பறப்பதாக ஓரளவு வளர்ந்த பின்னரும் கூட நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வண்டி சைலன்சர் காலில் சுட்டுக் காயம் ஏற்பட, சைக்கிள் கூடையில் என்னை உட்காரவைத்துத் தினமும் மாலையில் தச்சநல்லூரிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்துச் செல்லும் வழியில் தான் மின்மினிப் பூச்சிகள் எனக்கு அறிமுகமாயின. எங்கே சென்றாலும் வழியில் இருக்கும் பெயர்ப்பலகைகளை எழுத்துக் கூட்டிப் படிக்கச் சொல்லுவீர்கள். தொலைந்து போனால் சொல்லுவதற்காக உங்களது பெயர், அலுவலகம், தொலைபேசி எண் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தீர்கள்.
அலுவலகத்திலிருந்து பக்கத்திலிருக்கும் சொசைட்டி பால்பண்ணைக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து, பேசிவிட்டு வைத்ததும்தான் பேச மறந்த விசயங்கள் எனக்கு நினைவுக்கு வரும். மறுபடியும் எடுத்துக் காதில் வைத்தால் மறுமுனையில் அழைப்பைத் துண்டிக்காமல் பக்கத்தில் நண்பர்களுடன் பேசியபடியே எனக்காகவோ அம்மாவுக்காகவோ லைனிலேயே நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள். புகைப்படங்களுக்கு இடுப்பில் கைவைத்து எல்லாம் போஸ் கொடுக்கக் கற்றுத் தந்தீர்கள்.
என் படிப்பிற்காக நீங்கள் பட்ட பொருளாதாரச் சிரமங்கள் அனைத்தும் சொல்லி மாளாது. நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போட்டு, லேபில் ஒட்டி, அழகான கையெழுத்தில் பெயர் எழுதித் தருவது, ரெக்கார்ட் நோட்டில் படம் வரைந்து தருவது, உடன் படிப்போர் அனைவரும் கடையில் ஸ்டிக்கர்கள் வாங்கி ஆல்பம் தயாரிக்க, பழைய செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களிலிருந்து படங்களைக் கத்தரித்து, பழைய நோட்டுப் பக்கங்களில் ஒட்டி, சுவாரசியமான ஆல்பம் ஒன்றை நீங்கள் தயாரித்துக் கொடுத்தீர்கள். போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஆர்வமூட்டினீர்கள். அழிப்பான் இல்லாமல் அழகாக எழுதக் கற்றுக் கொடுத்தீர்கள். இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே எனக்குப் பாடம் கற்றுத்தர உங்களால் உதவி செய்ய முடிந்தது. அதன் பிறகு என் பாடங்களை நான் உங்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கியதாக நினைக்கிறேன்.
நான் வயசுக்கு வந்த போது, தலைக்குத் தண்ணீர் ஊற்றி, புடவை கட்டி மாலையிட்டு என்னை அழைத்து வந்தபோது நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்ததும் முதல் முறையாக நான் நாணியதும் நினைவிருக்கிறது. இடையில் சில காலம் நான் உங்களிடமிருந்து தூரம் காத்ததும் அம்மாவிடம் நெருங்கிப் பழகியதும் உண்மைதான். எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்காக தேசிய விருது வாங்க உங்களோடு டெல்லிக்குச் சென்ற போது சுற்றுலா பேருந்தில், இரவில், உடலைச் சுருட்டி உங்கள் மடியில் படுத்திருந்தது நினைவிருக்கிறதா? அது தான் முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து நான் உங்கள் மடியில் படுத்திருந்தது.
படிப்பில் மேலும் மேலும் நான் உயர்ந்து சென்ற போதும், அரசு பணிகளில் அமர்ந்த போதும் நீங்கள் பட்ட மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் அளவேயில்லை. நான் இதுவரை என்ன கேட்டும் நீங்கள் வாங்கித் தர மறுத்ததில்லை. உங்களைக் கேட்டால், நான் எதுவும் வேண்டுமென்று உங்களிடம் கேட்பதில்லை என்று பிறரிடம் சொல்லுகிறீர்கள். எல்லா விஷயங்களிலும் நீங்கள் இப்படித்தான். அடுப்படியில் நின்று நான் சப்பாத்தி உருட்டும் போது எனக்கு வியர்ப்பதைப் பார்த்து நீங்கள் கேட்ட போது, ‘இப்பமெல்லாம் கிச்சன்லயே ஃபேன் மாட்டுதாங்கப்பாஎனச் சொல்லவும்அதெப்படிடா, அடுப்பு அணைஞ்சிறாது?’ எனக் கேட்டீர்கள். திருமணத்துக்காக விடுப்பு எடுத்து நான் வீட்டுக்கு வந்தபோது சமையலறையில் மின்விசிறி மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அப்பா, என்னை வேற வீட்டுக்கு அனுப்பிவைக்கப் போறீங்கங்கிறத மறந்துட்டீங்களா?
எனக்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து, என்னை உருவாக்க உங்களையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, நான் வளர வளர நீங்கள் தேய்ந்து போவதை நான் பார்க்கத்தான் வேண்டுமா? உங்களுக்காக என்னால் இயன்றதைச் செய்ய நான் காத்திருக்கும் இந்நேரத்தில் என்னை வேறொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது என்ன நியாயம்? காலம் முழுவதும் எனக்காக உழைத்து, கல்யாணத்திலும் எனக்காகக் கடன்பட்டு, இன்னும் என்னென்ன சீர்களையும் செய்யக் காத்திருக்கும் உங்களோடு சொந்தம் கொண்டாடவோ, உதவியாக இருக்கவோ முடியாத இடத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறீர்கள்.
நீங்கள் செய்த பலவற்றை நான் சொல்லிக் காட்டிவிட்டேன். ஆனால் உங்கள் மேல் ஒரே ஒரு கோபம் மிச்சமிருக்கிறது. ஒரே ஒரு கேள்வி தான்.
என்னை ஏன் பொண்ணா பெத்தீங்கப்பா?”

புரண்டு படுத்த கணவன் தன்னை அழைக்கவும், மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு அவனருகே சென்று படுத்துக் கொண்டாள் ஆவுடைநாயகி.