Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 43

Rate this posting:
{[['']]}
துணை

இந்த இரவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அம்மா இறந்து ஒன்றரை வருடம் ஆன இரவை. நான் வயதிற்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியிருக்கும் இரவை. அத்தனை உறவுக்காரர்களும் வீட்டிலிருந்து கிளம்பிய பின்னான இந்த இரண இரவை. எங்கோ தெருவோரத்தில் ஒரு பெட்டை நாயின் சம்போக ஈன குரல் ஒளித்துக்கொண்டிருக்கும் நிசப்த இரவை. பத்தரை மணியளவில் அப்பாவின் அறையில் கதவு தாழிடும் ஓசை மிகத்தெளிவாய் எனக்கு கேட்கும் இந்த இரவை. ஆம்.. அப்பாவின் வாழ்வின் இந்த இரண்டாவது முதலிரவை.
எப்படி யோசித்தாலும் இதை என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. அம்மா இறந்த அன்று, மாவுக்கட்டு போட்டிருந்த உடைந்த கையுடன், இடுக்காட்டிற்கு போய்விட்டு வீடு திரும்பிய அப்பா, ஓடிவந்து என்னைக்கட்டிக்கொண்டு கதறியது இன்னும் இங்கே எனக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது. தலைமயிரும், மீசையும் மழிக்கப்பட்டு அவர் அமர்ந்திருந்த தோரணைகள் அப்படியே நினைவிருக்கிறது.  பழக்கமே இல்லாத மதுவை கொண்டுவந்து அறைக்குள் வைத்து குடிக்க முயற்சித்தப்போது, நான் உள்ளே சென்றுவிட, தன் தோள்துண்டை வைத்து முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதார். இதெல்லாமும் இந்த தாழிட்ட சத்தத்தில் கலைந்து, அப்பாவின் பிம்பம் இங்கே நொறுங்கி கிடக்கிறது. சிதிலங்களில் தெரியும் அப்பாவின் மிச்சங்கள் என்னை ஏளனம் செய்கின்றன.
சத்தமே இல்லை. தூங்கியிருப்பார்களோ? நிச்சயமாக சத்தமேயில்லை. வெளியே சென்று நின்று கேட்டுப்பார்க்கலாமா? ஏதேனும் கட்டில் சத்தம், தெருவோர பெட்டை நாயைப்போல வந்திருப்பவளின் குரல், அப்பாவின் இருமல், அல்லது தூங்கிவிட்டார்கள் என ஊர்ஜிதப்படுத்த ஒரு குரட்டை சத்தம்... ஏதேனும்.. ஏதேனும் ஒரு சத்தம். இந்த அமைதியில் நான் நிலை கொள்ளமுடியாது. அல்லது மேசையில் இருக்கும் கண்ணாடி குவளையை எடுத்து கீழேப்போட்டு நொறுக்கி அவர்களை வெளியே வரவைக்கவா? இந்த இரவை எப்படி கடக்க போகிறேன்.
நடுவீட்டில் நின்று உரக்க கத்தவேண்டும் போல இருக்கிறது. வந்திருக்கும் பெண்ணை எப்படி புரிந்துக்கொள்வது. 27 வயதாகிறது என்றாள் அத்தை. நடுவாந்திர வயது ஆண், திருமணமாகி மனையை இழந்தவன், வயதிற்கு வந்த மகளின் அப்பன் இவை எதுவுமே பொருட்படுத்தாமல் எதற்கு வந்திருக்கிறாள். அப்பாவின் நடுவண் அரசு சம்பளத்திற்கா? இருக்கும் சொத்துகளுக்கா? புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் வந்த முதல் நாளே இப்படி கதவை தாழ்ப்பாள் போடுவதை சுத்தமாக புரிந்துக்கொள்ளமுடியவில்லை.
ஒரு குவளை நீரை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டு அம்மாவின் புகைப்படத்தை கட்டிகொண்டு அழுகிறேன். ஆற்றுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. வந்திருப்பவளை விட்டுவிடுகிறேன். அப்பா எப்படி இதற்கு தயாரானார். அம்மாவுடன் வாழ்ந்த வீடு, அம்மாவுடனான இரவுகளை கண்ட அறை... அவர்களின் குறும்புகள், முத்தங்கள், கிசுகிசுப்புகள், விசும்பல்கள், அழுகைகள் என எல்லாமும் கண்ட அறை... அங்கே எத்தனை கனவுகளை பகிர்ந்திருப்பார்கள்.. எனக்கு தொட்டில் கட்டியிருந்த கொக்கி கூட அந்த அறையில்தான் இருக்கிறது. அம்மா குளித்துவிட்டு மஞ்சள் மேனியுடன், மாரளவில் கட்டப்பட்ட உள்பாவாடையுடன் வந்து நின்று புடவையணிந்து அலக்கரித்துக்கொள்ளும் அந்த ஆளுயர கண்ணாடி அந்த அறையில்தான் இருக்கிறது. அதற்கு சற்றே மேலே தொங்கும் அம்மா-அப்பாவின் திருமண புகைப்படத்தை நேற்று அறையை சுத்தம் செய்கிறேன் என்று அத்தை அகற்றியிருக்கிறாள். அப்பாவின் கண்ணில் அந்த இடத்தின் வெறுமைகூட உறைக்கவில்லையா? அப்பா அவ்வளவு மலினமானவரா?
எத்தனை இரவுகள் வீட்டு மொட்டைமாடியில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டு அப்பாவும், அம்மாவும், நானும் விடிய விடிய பேசியிருக்கிறோம். அம்மா இறந்ததிற்கு பின் அந்த மொட்டை மாடிக்கு அப்பா என்னையோ, நான் அப்பாவையோ தனிமையில் அனுமதித்ததே இல்லை. அத்தனை நினைவுகளைத் தாங்கி நின்ற அப்பா இன்று எப்படி இப்படி சாதாரணர் ஆனார். அப்பா திருமணத்திற்கு சம்மதித்த போது இல்லாத நெருடல் அம்மாவின் படுக்கையை ஒருவள் பகிரும்போது, அதுவும் திருமணம் ஆன முதல் இரவிலேயே, அதுவும் கதவை தாழிட்ட சத்தம். அப்ப்ப்பாாாா....
எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் பைத்தியம் பிடித்துவிடலாம். இல்லை சின்ன வயதில் முன்னெப்போதோ வந்த காக்கா வலிப்பு வந்துவிடலாம். அல்லது மூச்சு திணறி முட்டியெழுந்து அப்படியே மூர்ச்சையாகிவிடலாம். அல்லது வீட்டை விட்டு இப்போதே எங்காவது நான் ஓடிவிடவேண்டும். இந்த இரவை நிச்சயம் இங்கே என்னால் கடத்தமுடியவில்லை. அல்லது குறைந்தபட்சம் நான் தற்கொலை செய்துகொண்டுவிடலாம். நானும் அந்த பயணத்தில் இருந்திருந்தால் அம்மாவுடன் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தால், இந்த இரவு என் வாழ்வில் இல்லாமலே போயிருந்திருக்கும். நான் இல்லாதிருந்தால், யார் கண்டார், அப்பாவின் வாழ்வில் இந்த இரவு இன்னும் சீக்கிரமாக வந்திருக்கலாம். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கதவு தாழிடப்பட்டிருக்கலாம்.
நான் அம்மாவைப் பார்க்கவேண்டும். இந்த ஒன்றரை வருடங்களில் என்றுமில்லாமல் இந்த எண்ணம் வந்து அப்படி அடைக்கிறது. இந்த ஒன்றரை வருடமும் அப்பா என்னை அப்படிதான் பார்த்துக்கொண்டார். அத்தை வீட்டிலிருந்து எப்போது சாப்பாடு கொண்டுவருவார், எத்தனை மணிக்கு காலையில் எழுந்து எனக்காக வெந்நீர் போட்டார் எதுவுமே தெரியாது. மாதவிடாய் வரும் நாட்களை என்னிடம் கேட்க தயங்கி, அந்த வாரம் முழுதுமே குளியலறையில் சானிட்டரி நாப்க்கின் வைத்திருப்பார். அம்மா இல்லாத வாழ்க்கைக்கு எனக்கு அப்பா போதுமாக இருந்தார். ஆனால் அம்மா இல்லாத வாழ்வில் அப்பாவிற்கு துணை? எனக்கு திருமணம் முடிந்துவிட்டால். அப்பாவிற்கு துணை? அப்பாவிற்கு துணை வேண்டும்தான். ஆனால் இந்த இரவு.. அதுவும் முதல் நாளே இந்த இரவு.
நான் அம்மாவிடம் பேசவேண்டும். மொட்டை மாடிக்கு போய்விடுகிறேன். ஒரு பாயை எடுத்துக்கொண்டு. அங்கே அம்மா எனக்காக காத்திருக்கலாம். அங்கே போவதை தடுக்க இப்போது அப்பா இல்லை. அவர் புதுமனைவியுடன் முதலிரவில் இருக்கிறார். முதலை மறந்த முதலிரவு. அவருக்கு நான் மாடிக்கு போவதா பொருட்டு. அல்லது அங்கிருந்து நான் கீழே குதித்தால்தான் பொருட்டா. இல்லை. அங்கே கதவு இறுக்கமாக தாழிடப்பட்டுள்ளது. அந்த அறை கதவைப் பார்த்துக்கொண்டே மொட்டை மாடிக்கு போகிறேன். கோவம் இல்லை. அழுகையும் வரவில்லை. மரத்துப்போய்விட்டேன். அல்லது மரணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால்.. மொட்டை மாடிக்குள் நான் நுழைந்ததும், மொட்டை மாடியில்.. ஆனால்... அப்பா... அங்கேயிருக்கிறார். அப்பா.. எனக்கு வார்த்தையே வரவில்லை. மூச்சடைப்பது போல இருக்கிறது. என்னைப் பார்த்த வேகத்தில் தோளில் கிடந்த நூல் துண்டையெடுத்து முகத்தை மூடிக்கொண்டு அப்பா கதற ஆரம்பித்துவிட்டார். அருகில் காலியான ஒரு மது பாட்டிலும், அத்தை அகற்றிய அந்த அவர்களின் கல்யாண புகைப்படமும், ஒரு சுருட்டிய பாயும் கிடந்தன. எனக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. அப்ப்ப்பாாாா...
முற்றும்.