Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 44

Rate this posting:
{[['']]}
மாலதி

“ அப்பா, நீ படிக்கிறகதல்லாம் ஏம்ப்பா “ஒரு ஊர்ல... அப்டிலாம் ஆரம்பிக்கவே மாட்டேங்குது ? பாதில இருந்து ஆரம்பிக்கிற மாதிரியே இருக்கு... சுத்தBoreரு, ஒன்னுமே புரிய மாட்டேங்குது !“

கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பறித்துப் பிரித்துப் படித்து மறுபடியும் என் கைகளிலேயே திணித்துவிட்டு , இருபுறம் கால்போட்டு என் வயிற்றின் மீதேறி அமர்ந்துகொண்டாள் மாலதி.

“அப்பா எனக்கொரு டவுட் ?”

“உனக்கு எல்லாமே டவுட் தான் “

“அதில்ல ப்பா... இப்ப இந்த வீட்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் தானே இருக்கோம், எதுக்கு இவ்ளோ பெரிய்ய வீடு”, கையிரண்டையும் முடிவிலிகளின் திசையில் நீட்டியபடி கழுத்தை சாய்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.

என் மாலதி கொள்ளை அழகி. அப்படியே மேகலாவின் அச்சு அசல் குட்டிப் பிரதி.

“எங்க ஸ்கூல் பக்கத்துல நெறய பேரு பாலத்துக்கு கீழயே தூங்குறாங்க, அவங்களுக்கலாம் வீடு ஏன்ப்பா இல்ல ?”

“ம்..” நான் புத்தகத்தைப் படிப்பது போல பாவனை செய்து வெறுமனே எழுத்துக்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.

“இந்த புத்தகம்லாம் எங்கப்பா வாங்குற ?, எனக்கும் புரியுற மாதிரித்தான் வாங்கிட்டு வாயேன்..”.

மாலதி – கேள்விகளின் நாயகி

அவளால் கேள்வி கேட்காமல் இருக்கவே முடியாது, பேச ஆரம்பித்த நாள் முதலாக ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டிருப்பாள். பதில் சொன்னால் பதிலையும் கூட கேள்வியாக்கி விடுவாள். எல்லா கேள்விகளும் அவள் முன்னே பதில்கள் இல்லாமல் நிர்வாணமாய் நிற்கும் !

 என்ன ? , ஏன்?, எப்படி?  என எங்கே எப்போது யார் கேட்டாலும் எனக்கு எப்போதுமே மாலதி மட்டும்  தான் நினைவிலாடுகிறாள்.
நிறைய பேசுவாள் , நிறைய கேள்விகள் கேட்பாள் அதேசமயம் நிறைய பிடிவாதமும் பிடிப்பாள்.

அன்றைய தினத்தின் காலையில் கூட, “சைக்கிள் வேண்டும் , சைக்கிள் இருந்தால் தான் பள்ளிக்கூடம் செல்வேன் “ என்று அழுது அடம் செய்து பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள். அவளது பள்ளிக்கூடம் வீட்டிற்கு பக்கத்தில் தான் இருந்தது, மெதுவாக நடந்தால் கூட ஐந்து நிமிடத்தில் அடைந்துவிடலாம்.

சைக்கிளோடு வந்து நின்ற போது .. “வளர்ந்த கொழந்தைக்கு இத்தன செல்லம் கொடுக்கக் கூடாது...  அதுவும் ஒரு பொட்டப்புள்ளைக்கு இத்தன செல்லம் ஆகவே ஆகாது” என ருக்குப்பாட்டி அரைமணிக்கு பக்கமாக அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள். மாலதியை குறை சொல்லி ருக்குப் பாட்டி இலவச அறிவுரை சொல்லும் போதெல்லாம் எனக்கு ருக்குப்பாட்டி மீது தான் கோபம் வரும்., விளையாட்டுக்கு கூட மாலதி மீது கோபம் வந்ததில்லை.

மேகலா செத்துப்போன போது மாலதி ஒரு மாதக் குழந்தை, ஏதுமறியா பிஞ்சு, இரண்டு வயது வரைக்கும் மேகலாவின் வீட்டில் தான் வளர்ந்தாள், மகளை இழந்த இழப்புக்குக்கு ஆதரவாக என் மாமனாரும்-மாமியாரும் மாலதியை அவர்களுடனேயே வைத்துக்கொள்கிறோம் என்றார்கள். நான் தான் பிடிவாதமாக இங்கு தூக்கி வந்துவிட்டேன்.

கைக்குழந்தையோடு வீட்டிற்கு வந்த எனக்கு உதவியாக இருந்து, சாப்பிடாத தினங்களில் சாப்பாடு கொடுத்து, அழும் குழந்தையை தூங்க வைத்து  பேருதவியாக இருந்தது ருக்குப்பாட்டி தான் .

என் வீட்டைவிட ருக்குப்பாட்டியின் வீட்டில் தான் மாலதி அதிகமாய் இருப்பாள், அவளை கவனிப்பும், அக்கறையும் , அன்பும் ஊட்டி வளர்த்த பாட்டி அவளைப்பற்றி அக்கறையோடு சொல்லும் அறிவுரைகள் ! ஏற்றுக்கொள்ள வேண்டும் தான் , ஏனோ! என்னால் மாலதியைப் பற்றி யார் குறைசொன்னாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“அப்பா”..

“ம்..”
“அப்பா”

“ம், சொல்லு”

“அப்பா ! எங்க ஸ்கூல்ல எல்லாருக்குமே அம்மா இருக்காங்க, எனக்கு மட்டும் ஏன்ப்பா இல்ல? ” அமர்ந்திருந்தவள் , மேலே சரிந்து முகத்தின் அருகே வந்திருந்தாள்.

அவள் அதிகமாக கேட்ட கேள்வி “அம்மா எங்கப்பா இருக்காங்க?” என்பதுதான்.

சாமி ரூமில் சாமிப்படங்களுக்கு மேலாக பொட்டு வைத்து, மாலையிட்டு , மின்னிமின்னி எரியும் சீரியல் லைட்களுக்கு நடுவே, கருப்பு வெள்ளையாய் மேகலா புன்னகைத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைக் காட்டி இது தான் உன் அம்மா , செத்துப்போய்விட்டாள் என அப்போது என்னால் சொல்லியிருக்க முடியும் தான். “சாவதென்றால் என்ன?, ஏன் செத்துப்போயிட்டாங்க? எப்படி செத்துப்போனாங்க ? , கூட்டிட்டு வாங்க... நீயும் செத்துப்போயிருவியா? செத்துப்போனா அம்மாட்ட போய்டலாமா ப்பா “ அவளது கேள்வித்தொடர் என் கற்பனைகளை ஆக்கிரமிக்க, அவளாகவே தெரிந்து கொள்ளட்டும் என அப்போது சொல்லமல் விட்டுவிட்டேன்.

“புது சைக்கிள் எப்படிம்மா இருக்கு ?” என பேச்சை மாற்ற முயன்றேன்.

“அப்பா நான் அப்பவே உன்னட்ட சொல்லனும் நெனச்சேன், மறந்துட்டேன்., அன்னைக்கு சொல்லியிருந்தேன்ல அந்த ரேவதி, அவ இருக்கால., அவ இன்னிக்கு என்னட்ட சைக்கிள ஓட்டிப்பாக்குறேன் னு கேட்டா ! நான் தரமாட்டேனு சொல்லிட்டேன் , நான் கேட்டப்ப அவ தரலைல.. அதான்    ! “

“அப்படிலாம் சொல்லக்கூடாது மா! அவ உன் ஃபிரன்ட் தான , நாளைக்கு அவட்ட சாரி சொல்லிட்டு ஒரு ரவுன்ட் குடு” பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்செ என்றது என் மனதிற்குள் பாரதியாரின் அசரீரி .

“ம்”

“சைக்கிள் எப்படி இருக்கு”

“நல்லா இருக்கு, அப்பா... ஆனா ,சைக்கிள்ள முன்னாடி இருக்குற கூட தான் லேசா ஆடுது”.

புத்தகத்தை தலையணை அருகே வைத்துவிட்டு , வயிற்றில் அமர்ந்திருந்தவளை கீழே இறக்கி வைத்துவிட்டு , கையோடு ஸ்பானரையும், ஸ்கிரூ ட்ரைவரையும் எடுத்துக்கொண்டு சைக்கிள் பக்கம் நகன்றேன். பின்னாலேயே மாலதியும் ஓடி வந்தாள். சைக்கிளில் இருந்த கூடையை டைட் செய்துவிட்டேன். சைக்கிளை நகற்றி இன்னொருமுறை எனக்கு ஓட்டிக் காண்பித்தாள். 

இன்னமும் என் கண்களுக்குள் அந்த காட்சி பத்திரமாய் இருக்கிறது. சிவப்புநிற பெட்டிகோட் பாவடை, அந்த குட்டிவிரல்கள் ஹேன்டில்பாரை பிடித்துக்கொள்ள,  செருப்பில்லாத பிஞ்சுக் கால்கள், கொலுசின் சத்தத்தோடு சைக்கிளின் பெடலை மிதித்து நகற்ற , அவளுக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத்தெரியும் என்றாலும் சைக்கிளின் சீட்டை அவளோடு சேர்த்துப் பிடித்தபடி நிலவோடு அந்த ராத்திரியில் ஓடிய அந்த காட்சி, இன்னமும் என் கண்களுக்குள் பத்திரமாக இருக்கிறது.

குழந்தைகளின் கேள்விகள் பதில்களுக்காக காத்திருப்பவை கிடையாது, அவற்றை மிக சாதூர்யமாக, சாமர்த்தியமாக, சாதரணமாக சமாளித்துவிடலாம் என்றுதான் அப்போதைய என் அறிவு அசரீரி அறிவுரைத்தது.

அன்றைக்கு சைக்கிளைக் காட்டி ஏமாற்றியது போலவே தான் ,எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவளது கேள்விகளை திசைதிருப்பி, மட்டுப்படுத்தி ஐஸ்கிரீம்களாக, சாக்லேட்களாக, பள்ளிக்கூட நியாபகங்களாக, அவள் விரும்பின பொருட்களாக, கதைகளாக, கார்டூன்களாக... காணாமல் போகச்செய்திருக்கிறேன்.
***************

அவளோடான அன்யோன்யமான நாட்களை நினைக்கையில் என்னையுமறியாமல் என்னை மீறி கண்ணீர் வழிகிறது, அழுகை வருகிறது.
குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்துவிட்டால்  எந்த பிரச்சினைகளுமே இல்லை.

அவள்  பெரியவளாக ஆனது தான் அதன் பிறகான அத்தனை பிரச்சினைகளுக்குமான காரணம் என நினைக்கிறேன்.

மேகலாவின் அம்மா-அப்பா மாலதியை அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்து படிக்கவைக்கிறோம் என்றார்கள். நான் தான் வீம்புக்கு “உங்க ஊர்ல எஜுகேசன் இங்க சிட்டில கெடக்கிற அளவுக்கு நல்லா இருக்காது” என காரணம் சொல்லி அவளை ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வகையிலான பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டேன்.  அவ்வப்போது மேகலா குடும்பத்தினரும் மாலதியைப் பார்த்துச் செல்ல ஹாஸ்டல் வருவதுண்டு. தொடர் விடுமுறை நாட்களில் மட்டும் தான் மாலதி வீட்டுக்கு வருவாள், மற்றபடி ஹாஸ்டலிலேயே இருந்து விடுவாள். இடையிடையே சில தினங்களில் போனில் பேசுவாள். பெரும்பாலும் அவளது அழைப்புகள், பணம் சம்பந்தப்பட்டதாகவோ, தேவைகளுக்கானதாகவோ , ஏதேனும் பொருள் வேண்டும் என்பதாகவோ தான் இருக்கும். நலம் விசாரிப்புகள் ஒப்புக்குத்தான் இருக்கும்.

பிடிவாதக்காரி...

ஒரு முழு ஆண்டு பரிட்சை விடுமுறை தினத்தில் “ஏம்ப்பா என்னைய ஹாஸ்டல்ல சேர்த்துவிட்ட, என்ன உனக்கு பிடிக்கலயா, நான் உனக்கு தொல்லயா இருக்கிறேனா” என தேம்பி தேம்பி அழுது வடித்தபடி கேட்டாள். எனக்கும் அவளை என்னுடனேயே வைத்திருக்கவேண்டும் என்றுதான் ஆசை.

அம்மா மட்டுமே இருந்து கவனித்துக்கொள்கிற விசயங்களையெல்லாம் என்னால் அவளுக்கு அத்தனை நெறுக்கமாய் செய்ய முடியாது என்பதை அவளுக்கு என்னால் புரிய வைக்க முடியுமா என தெரியவில்லை.

அவள் மீதான அக்கறை எனக்கு குறைந்துவிட்டது என அவள் நினைத்திருக்கலாம், அவள் மீது எனக்கு அன்பே இல்லை என அவள் நினைத்திருக்கலாம்.

“மாலதிம்மா ஹாஸ்டல் பிடிக்கலைனா ,அம்மாச்சி-தாத்தா வீட்ல தங்கி படிக்கிறியா எனக்கேட்டேன்”.

“ஏம்ப்பா என்னை உனக்கு பிடிக்கலையா ? “ என்றாள். அழலாம் போலிருந்தது.

அவளை மேகலாவின்  வீட்டில் விட்டுவிட்டு தனியாளாக வீடு திரும்புகையில் வாழ்க்கையின் அர்த்தத்தையே இழந்துவிட்டது போல இருந்தது.
பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்களை விட அப்பாக்கள் மீதுதான் பாசம் இருக்கும் என்பார்கள், அதெல்லாம் சுத்தப்பொய். குழந்தைகளுக்கு அம்மா - அப்பா என பிரித்தெல்லாம் பாசம் கொள்ளத் தெரியாது, யார் அதிக பிரியமாய் இருக்கிறார்களோ அவர்கள் மீது அவர்களும் பிரியமாய் இருக்கிறார்கள் அவ்வளவுதான். அப்போதைய தினங்களில் மாலதி என்னைக்காட்டிலும் அவளது அம்மாச்சி-தாத்தா மீது தான் பிரியமாக இருப்பது போலிருந்தது.

மேகலாவின் மறைவுக்கு பின்னால் எனக்கு யாவுமாக,  என்னுடனேயே இருந்த மாலதி மீது , ஏன் முன்பிருந்த மாதிரி என்னால் பாசம் காட்ட முடியவில்லை ?  என தெரியவில்லை, என் வயிற்றில் ஏறி அமர்ந்துகொண்டு கதை கேட்ட அந்த பழைய மாலதி எங்கே போய்விட்டாள். இந்த பெரிய மனுஷியை எப்படி நான் பக்கத்தில் கிடத்திக்கொண்டு ஆரத்தழுவி அன்பு செய்ய முடியும். இதெல்லாம் ஏன் இவளுக்கு புரியாமாட்டேன் என்கிறது !, பாசமில்லையா, அன்பில்லையா என சின்னப்பிள்ளையைப் போல கேட்டுக்கொண்டிருக்கிறாளே என மாலதி மீது முதன்முறையாக கோபம் கொண்டேன்.

***************

அதன் பிறகான காலம் அதிவேகமாக நகர்ந்திருந்தது. மாலதி இப்போது பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதியிருக்கிறாள்.. நேற்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளிவந்திருந்தது, போன் செய்து பேசிய போது மாலதி “ எல்லா பரிட்சையிலும் பாஸ் செய்து விட்டேன் 410 மதிப்பெண் ”  என்றிருந்தாள்.

மிகுந்த சந்தோசமாய் இருந்தேன்.

இன்று விடிந்தும் விடியாததுமாக அதிகாலையில் எனக்கு மாலதியிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது.

“அப்பா..”

“ம், நல்லாருக்கியாம்மா !”

“ம்...”

“என்ன இது ! இந்த நேரத்துல கால் பண்ணிருக்க”

“ம், நான் ஒன்னு கேப்பேன் மறைக்காம உண்மைய சொல்லுவியாப்பா”

“ம்,கேளும்மா”

“அம்மா எப்படி செத்தாங்க ?”

“இப்ப எதுக்குமா திடீர்னு! இதெல்லாம் கேக்குற!”

“இல்ல, நீ சொல்லித்தான் ஆகனும்”

“ஏன் மா திடீர்னு கால் பன்னி இப்படிலாம் கேட்டுட்டு இருக்க !”

“இல்ல,  நீங்க தான் அம்மாவ கொண்ணுட்டீங்கனு சொன்னாங்க !
அதான்...”

“யாரு சொன்னது..” எனக்குள் கோபம் கொந்தளித்தது.

“யார் சொன்னதுன்லாம் தேவை இல்ல”

“நான்... நான்... இல்ல”

“நீங்கதான்.. நான் பொறந்த கொஞ்ச நாள்லயே நீங்க பிடிவாதமா அம்மாவ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப்போய் வச்சிருந்து வீட்டு வேலைலாம் செய்ய வச்சிருக்கீங்க !, அப்புறம் அவங்ககூட சண்ட போட்டுருக்கீங்க, அதனால மனசு பாதிக்கப்பட்டு உடம்பு சரியில்லாம போயிருக்கு, அவங்க அப்பா-அம்மா வீட்டுக்கும் விடல  ,அதனால தான் செத்துப்போயிருக்காங்கனு சொல்றாங்கப்பா !”

“உங்கம்மாக்கு உடம்பு சரியில்லாம போனது வரைக்கும் உண்மை, ஆனா அதுக்கு நான் தான் காரணம்ங்கிறது உண்மையில்ல”

“அம்மாக்கூட சண்ட போட்டீங்க தானே”

“ஆனால் நாங்க அப்பவே சமாதானம் ஆகிட்டோமே”

“நீங்க சண்ட போட்ட அன்னிக்கு அம்மாக்கு உடம்பு சரியில்லாம போனது உண்மைதான”

“ஆனா அதுக்கு காரணம் ஃபுட் பாய்சனிங்க், அவ சாப்பிடக்கூடதத சாப்பிட்டதால தான் உடம்பு முடியாம போயிருக்கு, சிஷேரியன் செஞ்சதுனால ஏற்கனவே அவ வீக்கா வேற இருந்தா, அதனால தான்..”

“நீங்க ஏன் அம்மாவ அம்மாச்சி வீட்ல இருந்து கூப்டுட்டு போனீங்க ?”

“....”

“உங்க தேவைக்காக அம்மாவ நீங்க அவங்க அம்மாட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிருக்கீங்க, அதனால வந்த பாதிப்புல என்னையும் என் அம்மாட்ட இருந்து பிரிச்சிருக்கீங்க...”

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

மாலதி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாள் !, வேண்டுமென்றே என்னையும் ,மாலதியையும் மேகலாவின் குடும்பத்தினர்கள் திட்டமிட்டு பிரிக்கப் பார்க்கிறார்களா ! இல்லை மேகலாவை நான் தான் கொலை செய்துவிட்டேனா , மேகலா செத்துப்போனதற்கு நான் தான் காரணமா ?.
அன்று அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு உடனடியாக மேகலாவின் வீட்டுக்குச் சென்றேன்.
வீடே அழுகையில் மூழ்கி இருந்தது.

திறந்து கிடந்த கதவின் வழியாக தெரிந்த அறையில் மாலதியின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.
“ராத்திரியே தூக்கு மாட்டி இருக்கா !..”  அழுதபடியே , அறையில் அவள் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை மேகலாவின் அம்மா எடுத்து என் கையில் கொடுத்தார்.
***************
அன்புள்ள அப்பா,

நான் இந்த விபரீத முடிவு எடுப்பதற்குக் காரணம் நான் தான், நீங்கள் என் மீது எத்தனை அன்பு வைத்து இருந்தீர்கள் என்பது எனக்கு சத்தியமாய் புரியவில்லை, என் மீது உங்களுக்கு அன்பு, பாசம் ,அக்கறை எதுவுமே இல்லை என நானாகவே கற்பனைகள் செய்து கொண்டேன்.
அம்மாச்சி எடுத்து சொல்லித்தான் நான் உங்களை புரிந்து கொண்டேன். அம்மா இல்லாத குறை தெரியாமல் என்னை எத்தனை கஷ்டப்பட்டு வளர்திருக்கிறீர்கள். இதை உங்களிடம் சொல்லுமளவுக்கு எனக்கு தைரியமில்லை.,
நீங்கள் நான் நன்றாக படிக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள், என்னால் தான் உங்கள் ஆசையை
                                                               -மாலதி.


“பாவி முண்ட பரிட்சையில பெயில் ஆனதுக்குலாமா தூக்குல தொங்குவா!!! ” என என் மாமனார் அழுது கொண்டிருந்தார்
மாலதியின் அத்தனை கேள்விகளும் அவளைச் சுற்றிலும் ஈக்களைப்போல உலவிக்கொண்டிருந்தன.

“உங்களுக்கு யாரு மாப்பிள்ள சொல்லி விட்டது” என்றார் தேம்பலும் விசும்பலுமாக.
கண்கள் நிறைய  கண்ணீருடன் மாலதியை கட்டித் தழுவியபடி

“மாலதி” என்றேன்.