Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 45

Rate this posting:
{[['']]}
அருள்

அதுவரை மாரியோடு பேசிக்கொண்டிருந்த ராதிகா அக்கா கொட்டுச்சத்தம் கேட்டதும் எழுந்து வெளியே போனாள். பறையும் நையாண்டிமேளமும் ஆன வாத்தியங்களின் சத்தம். போகும் வேகத்தில் கதவைச் சரியாக மூடவில்லை. கதவு கொஞ்சமாய்த் திறந்திருந்தது. இடுக்கின் வழியாக சத்தம் ஒரு பாம்பு போல ஊர்ந்து வந்தது. தெருமுனை எல்லையம்மன் கோவிலில் மயானக்கொள்ளை. நேற்றே பந்தல் கட்டி சத்தமாய் பாட்டுப்போட ஆரம்பித்திருந்தனர். கூடவே அவ்வப்போது இந்தக் கொட்டுச்சத்தம்.சாமியோ இல்லை வேறெதுவோ பக்கத்தில் வரவர சத்தமும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மாரிக்கு எட்டிப்பார்க்கக் கூட விருப்பம் இல்லை.

மாரிக்குள் அந்த சத்தம் என்னவோ செய்தது.

பக்கத்து அறைக்குள் புகுந்துகொண்டு அதன் கதவுகளையும் மூடிக்கொண்டு விடலாமா… எந்தப் பகலிலும் கதவை மூடித் திரைச்சீலையைப் போட்டதும் ஒளி மறைந்துகொள்வது போல ஒலி ஒளிந்துகொள்வதில்லை. காற்றில் கசிந்து கசிந்து உள்ளுக்குள் உள்ளுக்குள் நுழைந்துகொண்டு தானிருக்கிறது.

மாரி மனதை அந்த இசையில் இருந்து திசை திருப்பப் பார்த்தாள். முடியவில்லை. தாளக்கட்டில் அது தடம் பிடித்துக் கொண்டுவிட்டது. சத்தம் அதிகமானால் கூடப் பரவாயில்லை,  வாசிப்பவனோ போகப்போக தாளத்தின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.

அதற்குள் சுவாசம் தாளக்கட்டுக்குப் பழகிவிட்டது. அதன் வேகம் மூச்சிற்குள் புகுந்து உடலுக்குள் சுழலத் தொடங்கியது. இருதயத்தின் ஒலி பறையின் சத்தத்தை விஞ்சி ஒலித்தது. நரம்புகளுக்குள் ஒரு சிறு அசைவுகளும் நெளிவுகளும் உருவானது. மாரி தான் தன் நிலை இழந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். வெளியில் இருந்து ராதிகா குரல் கொடுத்தாள்.

“ஏடி, சாமி கிட்டவந்திருச்சிடி வெளில வா…”

மாரி பதில் சொல்லாமல் கதவை அறைந்து சாத்தினாள்.
”பெரிய பெரியார் பேத்தி…” என்று சத்தமாகவே கத்தினாள்.

மாரியின் அவஸ்தை அவள் அறியாதது.

“ஏண்டி இன்னைக்கு வெள்ளிக்கிழமைதானே, எங்கூட எல்லம்மன் கோயிலுக்கு வா, வந்து ஆத்தாள ஒரு நிமிசம் பாத்து வேண்டிக்கினு போ, உன் கஷ்டம் எல்லாம் காணாமப் போயிரும்.” எத்தனையோ முறை கெஞ்சியிருக்கிறாள் ராதிகா.
ஆனால் மாரி அதைக் காதில் வாங்குவதேயில்லை.அவள் அறிந்த வரை சாமியும் இல்லை சாத்தானும் இல்லை. அது அவளுக்கு அவள் தந்தை தந்த ஞானம்.

மாரி அப்பாவை நினைத்துக்கொண்டாள். 

மாரிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். சில குழி நிலங்கள் சொந்தமாகவும் இன்னும் கொஞ்சம் குத்தகைக்கும் எடுத்து விவசாயம் செய்பவர்தான் மாரியின் அப்பா. குத்தகை நிலம் என்பது யாரோ பிறத்தியாருடையது இல்லை. சொந்த அண்ணன் தம்பிகளின் நிலம் தான். அவர்களில் ஒருவர் கவர்மெண்ட் வேலை கிடைத்து சென்னையிலேயே செட்டிலாகிவிட்டவர். அண்ணன் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோனார். அவருக்கு அண்ணனும் தம்பியுமாக இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் இருக்கவில்லை. கைக்காசு கொஞ்சம் போட்டுத் தஞ்சாவூரிலேயே ஒரு சின்ன மளிகைக் கடை போல ஆரம்பித்து இப்பொழுது பரவாயில்லை. ஆளுக்கு ஒன்றாகக் கடை பிரித்துக்கொண்டார்கள். மாரியின் அப்பாதான் விடாப்பிடியாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

சத்தம் அதிகமாகிக்கொண்டே யிருக்கிறது. தன்னையும் அறியாமல் கால் அசைகிறது போல மாரி உணர்ந்தாள். தலைக்குள் ஏதோ சுற்றுகிறது போல இருந்தது. மனதை இறுக்கினாள். விரல்களால் காதுகளைப் பொத்திக்கொண்டாள் இப்பொழுது காதுக்குள் விரல்கள் லேசாக அசைவது போலவும் அதன் ஓசையே மிகப் பெரிதாகவும் கேட்டது.
அம்மா சாமியாடிய ஒருநாள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. மேளச்சத்தம் கேட்டால் போதும் அம்மாவுக்கு சாமி வந்துவிடும். அன்றைக்கும் அம்மா சாமியாடி சாமியாடி சோர்ந்துபோய் துடைத்தெறியப்பட்ட ஒரு துணியைப்போலக் படிக்கட்டில் கிடந்தாள். அப்பா கண்டபடி வைதுகொண்டு இருந்தார்.

“இதெல்லாம் என்ன கருமம். சாமியாவது சாத்தானாவது. யோவ் பூசாரி, உமக்கு அறிவிருக்கா, எரியிற கற்பூரத்த அவ வாய்ல போடுதயே. இதெல்லாம் நரம்புவியாதி. கொட்ட இந்த அடி அடிச்சா எவனுக்குத்தான் ஆட்டம் வராது. இன்னொரு தடவ இந்த ரோட்டுல எவனாவது கொட்டடிச்சிக்கிட்டு சாமி கீமீ ன்னு வந்தீங்களோ அவ்வளவு தான்.” அன்று அப்பா ரொம்பநேரம் கத்திக்கொண்டு இருந்தார்.

மாரிக்கு அப்பாவை நினைப்பது தற்போது ஆறுதலாகவும் சிந்தனைக்கு மாற்றாகவும் இருந்தது. அப்பாவைப் பற்றி ஊருக்கே தெரியும். அப்பா பெரியார் கட்சி. அவருக்கு சாமி நம்பிக்கை அறவே கிடையாது. ஆனால் அம்மா அப்படியில்லை. வார்த்தைக்கு வார்த்தை மகமாயி மகமாயி என்று சொல்லும் அளவிற்கு நம்பிக்கைக்காரி. அப்பா அடிக்கடி அம்மாவோடு ‘‘இனி சாமி ஆடினையோ தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்” என்று சொல்லிச் சண்டை போடுவார். அதெல்லாம் அடுத்தமுறை கொட்டுச்சத்தம் கேட்கும்வரைதான்.

மாரியோடு பிறந்தவர்கள் இரண்டுபேர். மூன்றுமே பெண்ணாய்ப் பிறந்ததில் அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம். அடுத்து ஒரு ஆண் வேண்டுமென்று ஆசை. இதற்குமேல் தாங்காது என்று அப்பா அம்மாபக்கம் வருவதேயில்லை.அந்த வருஷம் கோவில் கொடையில் அம்மாவுக்கு அருள் வந்தது. அப்பாவை அம்மா பேர் சொல்லி அழைத்தது பார்க்க சிரிப்பை வரவழைத்தது.

“மூணு அக்காக்களுக்கு ஒரு தம்பி, உன் குலம் விளங்க ஒரு ஆண்பிள்ளை, ஆத்தா கண் திறந்திருக்கேண்டா, அடுத்த வருஷம் நீ ஆம்பளப்புள்ளையோட வந்து பொங்க வைக்கணும் சரியா…” அப்பாவுக்கு வந்த ஆத்திரத்துக்கு அப்படியே நாலு சாத்து சாத்தலாம் போலிருந்தது. ஆனாலும் ஊருக்கு பயந்து நடக்கிற மனிதர். தலை ஆட்டிக்கொண்டு அம்மா அள்ளித்தந்த திருநீற்றை வாங்கிக்கொண்டார்.

அடுத்த ஆண்டு கொடைக்கு அம்மா பொங்கல் வைக்கவந்தபோது கடைசி தங்கைபாப்பாவுக்கு ஒரு மாதம். அந்த வருஷம் எட்டையாபுரம் உருமி மேளம். தூரமாய் நின்று கேட்டாலே வயிறு கலக்கும். அம்மா பேசாமல் பொங்கல் வைத்தோமா சாமி கும்பிட்டோமா என்று எந்த ஆட்டமும் இல்லாமல் வீடுவந்து சேர்ந்தாள். அதற்குப்பின் அம்மாவுக்கு சாமி வந்ததாக நினைவில்லை.
அப்பா மாரியிடம் மட்டும் சொல்லிச் சொல்லி வளர்த்தார். மூன்று பேரில் மாரி தான் அச்சு அசல் அம்மா ஜாடை. எங்கே மாரியும் அம்மாவைப்போல மாறிவிடுவாளோ என்கிற கவலை அவருக்கு.

“உலகத்துல சாமின்னு ஒண்ணு கிடையாது புள்ள, சாமி பேரச்சொல்லி ஊர ஏமாத்திக்கிட்டுத் திரியறாங்க. உங்க அம்மாவுக்கு வர்றதெல்லாம் அருளுமில்ல மருளுமில்ல. வெறும் நரம்பு வியாதி. அவளும் தைரியசாலி இல்லை கேட்டியா.” வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பா பேசிக்கொண்டே இருந்தார். அவரைப் பொறுத்தவரை அம்மாவின் சிக்கல் மாரிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.
உண்மையில் அம்மா சாமியாடுகிற போதெல்லாம் மாரிக்குள்ளும் மெல்ல நடுக்கம் ஏற்படும்.அப்பொழுதெல்லாம் அவள் அப்பாவின் கையைப் பிடித்துக் கொள்வாள். அப்பாவின் சொரசொரப்பான கைகளைப் பற்றியதுமே அந்த நடுக்கம் நின்றுபோகும்.

இப்பொழுது அப்பா பக்கத்தில் இல்லை. அந்த நினைப்பில் கைகள் மெல்ல அசைகிறது. எங்கே சாமியாடித் தொலைத்துவிடுவோமோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தான் மட்டும் சாமியாடி, அதை ராதிகா அக்கா மட்டும்  பார்த்துவிட்டால் அவ்வளவுதான். தேங்காய் உடைத்துப் பூசையே பண்ணிவிடுவாள். சரியான சாமிப் பைத்தியம்.

பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்து இத்தனை நாட்களில் இப்பொழுது கொஞ்சநாட்களாகத் தான் மீண்டும் இது தொடர்கிறது. ஒரு முறை ஊர் வரை போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றும் தோன்றுகிறது. லீவு கிடைக்கமாட்டேன் என்கிறது. அப்பாவாவது வந்துபோனால் நல்லது. என்ன பெரிய விவசாயம். எப்படியும் இந்த அறுவடைக்குப் பின்னும் இன்னுமொரு பத்தாயிரமாவது கடன் கூடத்தான் போகிறதே யொழிய குறையப் போவதில்லை. இதில் என்ன பெரிய விவசாயி பெருமை.

அப்பா, மாரியின் மனத்துள் இப்பொழுது முழுமையாய் வந்துவிட்டார். கன்னம் ஒடுங்கிய கருத்த தலை கலைந்த கேசத்தோடு அப்பா. மாயமாய் காதுகள் அடைத்துக்கொண்டன. சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை சாமி கடந்து போய்விட்டதா, அப்படிப் போயிருந்தால் ராதிகா உள்ளே வந்திருப்பாளே. மாரிக்கு மனம் அப்பாவிடம் சரணடைந்துவிட்டது புரிந்தது. அவள் உதடுகள் அவளையறியாமல் அப்பா என்று உச்சரித்தது. கண்களிலிருந்து சில துளிகள் திரண்டு விழுந்தன. இப்பொழுதே அப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற வெறி எழுந்தது.‘ போங்கடா, நீங்களும் உங்க வேலையும் என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகவேண்டும்’ என்று தோன்றியது. அடுத்த நிமிடம் அப்படிப் போய்விட்டால் சின்னவள் கல்யாணத்துக்காக வாங்கிய கடனை அப்பா ஒண்டியாக அல்லவா கட்டியாக வேண்டும். பக்கத்தில் இருந்து கொஞ்சிக்கொள்வதை விட இப்படி எட்ட நின்று அவரின் பாரத்தைச் சுமப்பது எவ்வளவு நல்ல விசயம்.

இந்த ஆண்டில் எப்படியும் சின்னவளின் கல்யாணக் கடன் அடைப்பட்டுவிடும். சீட்டு மூடிய இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. முடிந்தால் சுளையாக லட்ச ரூபாய் கிடைக்கும். இரண்டு வருட சேமிப்பு. அப்படியே கடனை அடைத்துவிட்டால் அப்பாவுக்குக் கொஞ்சம் பாரம் குறையும்.அதுவரைக்குமாவது மனமும் உடலும் இப்படிச் சாமியாடாமல் இருந்தால் சரி.

மாரிக்கு தற்போது காதுகள் திறந்துக்கொண்டது போல இருந்தது. கொட்டுசத்தம் தூரமாய்க் கேட்டது. ராதிகா பக்திப் பரவசமாய் உள்ளே வந்தாள்.
“ஊரே திரண்டு நிக்குது. நீ என்னடான்னா எட்டிக்கூடப் பாக்கமாட்டேங்குற.”
மாரி பதில் சொல்லவில்லை. வேலைக்குப் புறப்படும் நேரமாகியிருந்தது. அவசர அவசரமாய்க் கிளம்பிப்போனார்கள். அந்த நாளில் மாரி மனம் பூராவும் அப்பா பற்றிய நினைவுகளே நிறைந்திருந்தது. 

சூப்பர்வைசரிடம் பேச்சுவாக்கில் அடுத்தமாசம் ஒரு நாலுநாள் லீவு வேண்டும் என்று சொல்லிவைத்தாள். கேட்ட நேரம், அவரும் மறுக்காமல் தலை ஆட்டினார்.

வீட்டுக்குப் புறப்படும் நேரம் ஆனதும் ராதிகா அக்கா வந்து கிளம்ப அவசரப் படுத்தினாள்.
“சீக்கிரம் வா பிள்ள, போற போக்கில கோவில எட்டிப்பாத்துட்டுப் போயிறலாம். “
”நான் வரல. நீங்க போயிட்டு வீட்டுக்கு வாங்க, நான் வீட்டுக்கு நேராப் போறேன்” என்றாள் மாரி.
ராதிகா விடுவதாக இல்லை.“ நீ ஒண்ணும் சாமி கும்பிடவேண்டாம்டி, சும்மா என் கூட வா, அதுக்கென்ன வலிக்குதா. ரொம்பப் பண்ணாத…” ராதிகாவின் குரலின் அழுத்தம் மாரிக்கு என்னவோ போல் இருந்தது. கூட இருப்பவள் அவளிடமும் வருத்தப்பட்டுக்கொண்டு எங்கு போவது.

எனக்காவது அப்பா இருக்கிறார். காசுபணம் இல்லை என்றாலும் ஆளாக என் கூட நிற்பார். அக்காவுக்கு? நம்பியவர்கள் எல்லாம் ஒருவரை ஏமாற்றும் போது கண்காணாத கடவுளிடத்தில்தான் எளிய மனங்கள் சரண் புக வேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கு எதாவது ஒரு பிடிமானம் வேண்டாமா என்ன?
“சரிக்கா, நானும் வர்றேன்”
ராதிகாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு கிளம்பினாள்.
“நீயும் வேணும்னாலும் ஒரு தடவ அம்மாவ வேண்டிக்கோ, கூடிய சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆயிரும்”

மாரி சிரித்தாள். “ஏண்டி சிரிக்கிற?” “பின்ன சிரிக்காம என்ன பண்றதாம், எனக்கு முன்னால கல்யாணம் பண்ணின எங்க சின்னக்கா, நீ எல்லாம் ரொம்ப நல்லா வாழ்றீங்க பாரு. நானும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட…”

“அடிப்போடி பைத்தியக்காரி, எனக்கு வாய்ச்சவன் ஒரு ஊதாரி, நாந்தான் தூக்கி எறிஞ்சுட்டு வந்தேன். உன் சின்னக்காவுக்கு வாய்ச்சவன் மாமனார் வீட்டுக் காசுக்கு அலையறவன். அதுக்காக எல்லாருமே அப்படியே இருப்பாங்களா என்ன? உன் குணத்துக்கு தங்கமான புருஷன் கிடைப்பான். நீ வேண்ணா எழுதிவச்சுக்கோ.”

மாரி வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. வெளியே வருகிறபோது வாசலில் அவன் நின்றான் அவனைப்பார்த்ததும் ராதிகா அக்காவுக்கு வியர்த்தது. அவன் குடி வெறியில் இருக்கிறான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அக்கா என் பின்னால் மறைந்து கொள்ள முயன்றாள். வீண்முயற்சி. அவன் ஊரே கேட்கும் அளவிற்கு சத்தமாய் ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்தான். இத்தனை நாளும் அக்காவேலைபார்க்கும் இடம் தெரியாமல் தேடி அலைந்திருக்கிறான். எப்படியோ கண்டுபிடித்துவிட்டான். பின்னே குடிக்கான காசினை உரிமையாய் பறித்துக்கொண்டு போவதென்றால் இவளிடம் மட்டும் தானே முடியும்.

சத்தம் கேட்டு செக்யூரிட்டி ஓடிவந்தார். ‘எதுபேசுறதுன்னாலும் வெளியே போய் பேசு, கஸ்டமர் வர்ற இடம்ல’ என்று சொல்லி அவனைப் பிடித்துத்தள்ளி தெருவுக்கு அனுப்பினார். அவன் நிறுத்தாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்தான். அக்கா என் கைகளைப் பற்றிக்கொண்டு அவனைக் கடந்துபோக முயன்றாள். நாராசமான அவன் பேச்சு சகிக்கமுடியாதிருந்தது. வேகமாய்க் கடந்தோம். பின்னாலேயே வந்தான். அக்கா சட் என்று திரும்பி, கைப்பையைத் திறந்து சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவன் மேல் வீசி அவனைப் பார்த்து உமிழ்ந்தாள். அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. ரூபாயைப் பொறுக்க ஆரம்பித்தான். நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அவன் பின் தொடரவில்லை. வழியெல்லாம் அக்கா அழுதபடியே வந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.

கோவில் இருக்கும் தெருவுக்குள் திரும்பியாயிற்று. எல்லாம் வல்ல தாயே, எங்கும் நிறைவாயே… என்று பாடல் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. சட் என்று பாடல் நிறுத்தப்பட்டு  யாரோ ஒரு பெரியவர் பாட ஆரம்பித்தார். நடுங்கும் ஒரு குரல். கூடவே அவ்வப்போது கையில் உடுக்கை வைத்து அடித்துக்கொண்டு பாடுகிறார்.

மாரிக்கு திக் என்றிருந்தது. என்ன சோதனை இது. கோவில் அருகே போவதா வேண்டாமா? நல்ல வேளை மேளம் ஏதும் இல்லை. இந்தக் குரல் அடிவயிற்றில் இருக்கும் அமிலங்கள் சிலவற்றை உயிர்ப்பிக்கும் குரல்தான் என்றபோதும் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்.

ராதிகா மாரியின் நடையில் கொஞ்சம் தொய்வு தெரிவதைக் கவனித்து அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். மாரிக்கு வேறு வழியில்லை.
மக்களைப் பிரித்துக்கொண்டு ராதிகா வழி ஏற்படுத்தி சந்நிதிக்குள் நுழைந்தாள். உடுக்கையடிப் பாடல் இப்பொழுது இன்னும் சத்தமாய்க் கேட்டது.
குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ
மகவு வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ
பாலகி வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ
கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி
சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே
வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்
தேடி யழைக்கின்றேன் நான் தேவிமுகங் காணாமல்
ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி
பாலகி குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி
மகவு குழந்தையம்மா மகராசி காருமம்மா
மாரிக்குக் கால்கள் நடுங்கியது. ராதிகாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். மனதைப் பாடலுக்கு விடாமல் இருக்க வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். நிறையப் பெண்கள் கொஞ்சமாய் ஆண்கள். ஆண்கள் அவசர அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு கிறுகிறுவெனச் சுற்றிக்கொண்டு வெளியே போபவர்களாக இருந்தார்கள். ஆனால் பெண்கள்… எல்லா வயதுப்பெண்களும் இருந்தார்கள். ஒரு சிலர் நன்கு உடுத்தி நகை அணிந்து அலங்காரமாக நகைகளை அணிந்து வந்திருந்தனர். பெரும்பாலான பெண்கள் மஞ்சள் உடையிலோ அல்லது சாதாரண சேலையையோ கட்டி இருந்தனர். கழுத்தில் கைகளில் எல்லாம் நகைகள் என்று ஒன்றுமில்லை. வயதான பெண் ஒருத்தி, கழுத்து நிறைய துளசி மாலை போட்டிருந்தாள். விரதம் இருக்கிறாள் போல. நிற்கவும் திராணி இல்லாமல் அமரவும் வழியில்லாமல் கிழவி ஒருத்தி சந்நிதிக்கு எதிரிலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். எல்லோரையும் பார்த்துக்கொண்டு எல்லையம்மன் கல்லாக அமர்ந்திருக்கிறது.

ஆண்களைவிடப் பெண்கள் தான் அதிகமாய் சாமி கும்பிடுகிறார்கள். தந்தை, சகோதரன், கணவன், மகன் மற்றும் பிற உறவினர்கள் என்று அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா ஆண்களுக்காகவும் ஆண்களின் சார்பாகவும் அவர்கள் சாமி கும்பிடுகிறார்கள். வீட்டு ஆண்பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதோ அல்லது அவர்களின் சிக்கல்களில் இருந்து அவர்களை மீட்பதோ அவர்கள் கையில் இல்லை என்று ஆனபின்பு தெய்வங்களை நாடி வருகிறார்கள்.
ராதிகா மாரியின் கையை விடுவித்துக்கொண்டாள். அவள் கரங்கள் கூப்பியபடி இருந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியபடி இருந்தது. மாலை போட்டிருந்த வயதான பெண்மணி சாமி பக்கத்திலிருந்து கை நிறைய வளையல்களை எடுத்து வந்தாள், அங்கு நின்று கொண்டிருந்த பெண்களுக்கு ஆளுக்கு நாலு வளையல்களாகத் தந்தாள். ராதிகா பயபக்தியோடு வாங்கிக்கொண்டாள். மாரி கைநீட்டாமல் இருந்தாள். அந்தப்பெண் வலுக்கட்டாயமாக அதை அவள் கையில் திணித்தாள். மாரி மூடியிருந்த கைகளைத் திறக்கவேயில்லை. அந்தப்பெண் தன் பிடியை இறுக்கினாள். அந்த அழுத்தத்தில் மாரியின் கைகள் விரிந்தன. அவள் வளையல்களை அவள் கைகளில் தராமல் அவளே மாரிக்கு அணிவித்துவிட்டாள்.
அவள் வளையல் அணிவிக்கவும் எங்கோ போயிருந்த மேளம் திரும்பிவரவும் சரியாக இருந்தது. தெரு முனை வரைக்கும் சாமி ஆடிவந்த பெண் வேக வேகமாக கோவிலுக்குள் வந்தாள். உடுக்கடிப்பாடல் உச்சஸ்தாயியில் இருந்தது. மாரிக்கு அந்த சூழல் சிறு மயக்கத்தை ஏற்படுத்தியது. பூசாரி சாமியாடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு திருநீறு பூசி மலையேற்றினார்.
அப்பா… அப்பா… நிலைமை கட்டுகடங்காமல் போகிறது. சீக்கிரம் என்னுள் வா அப்பா…
நினைவுகளுக்குள் அப்பாவித்தவிர அம்மா, ராதிகா, அவள் கணவன் என எல்லோரும் அவளைச் சூழ்ந்துக்கொண்டதுபோல இருந்தது. குறிப்பாக அவன்…அவனைக் கடக்கும்போது குடிவாசனை அவனிலிருந்து ஒரு சாக்கடையைப் போலக்கசிந்துக் கொண்டிருந்தது. ராதிகா அக்கா எப்படி இவனைப் பொறுத்துக்கொள்கிறாள். கோபம் வந்தது. ஓங்கி ஒரு அறை. நல்லவர்களின் உள்ளத்தைச் சீண்டிப்பார்ப்பவர்களை என்ன சொல்வது. அவன் மட்டும் இங்கு வந்தால் மாரி அவனை வதம் செய்யக்கூடத் தயங்கமாட்டாதவள் போல வெறிகொண்டாள்.
மேளத்தை நிறுத்தினால் தேவலை என்றிருந்தது ஆனால் அது நின்றபாடியில்லை. திடீர் என்று ஒருவன் வாங்கா எடுத்து ஊதினான். மாரிக்கு நரம்புகளில் எல்லாம் ஊசிகள் ஏற்றினார்போல ஆனது. தனது தலையைச் சிலுப்பிக்கொண்டாள். ராதிகாவைத் திரும்பிப் பார்த்தாள். அவளோ இன்னும் கண்களில் நீர் வழிய சாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள். வளையல் போட்ட பெண் ஒரு கணம் நின்று மாரியைப் பார்த்தாள். அவளுக்கு என்ன தோன்றியதோ ஓடிப்போய் குங்குமத்தை அள்ளிவந்து ஒரு பெரிய நாணய அளவிற்கு மாரியின் முகத்தில் பூசினாள். மாரியின் சுவாசம் கொஞ்சம் நீளமாக ஆனது. ராதிகா இப்பொழுது மாரியின் பக்கம் திரும்பியதும் திகைத்தாள். “அம்மா தாயே“ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
மாரிக்குத் தான் நிலைகுலைவதை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிதானம் மிச்சமிருந்தது. உடனடியாகத் தன் நினைவுகளை சீர்படுத்தியாக வேண்டும். அப்பா.. அப்பா.. என்னைக் கைவிட்டு விடாதீர்கள்…அப்பாவின் நினைவு முழுமையாய்க் கூடவில்லை.
உடல் மேலும் துவளத் தொடங்கியது. உடலின் மெல்லிய அசைவை எல்லோரும் கவனிக்கத் தொடக்கிவிட்டார்கள். ஒரு பெண்மணி தான் வாங்கி வந்திருந்த சம்பங்கி மாலையை அவள் கழுத்தில் போட்டாள். மாரியால் தடுக்க முடியவில்லை. ஒரு பெண் ஓடிவந்து அவள் பாதத்தில் விழுந்தாள். ராதிகாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாரியைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டாள்
மேளச்சத்தம் கேட்டதும் இப்படிப் பெண்கள் அருள்வந்து ஆடுவது ஒன்றும் பூசாரிக்குப் புதிதில்லை. அவசர அவசரமாக குங்குமத் தட்டில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு வந்தார். கற்பூரம் காட்டி திருநீறு இட்டாலே சில பேருக்கு அருள் மலையேறிவிடும். சிலருக்கு கற்பூரத்தை நாக்கில் ஏற்றியாக வேண்டும். அவர் மாரியின் பக்கம் வந்தார்.
மாரியால் தடுப்பதற்கு எதுவுமில்லை என்றிருந்தது. மாரி ராதிகாவைப் பார்த்தாள்.அவள் பக்கவாட்டில் நின்று தாங்கிப் பிடித்தவண்ணம் இருந்தாள். அவள் கண்களில் நீர் வடிவது மட்டும் நின்றபாடில்லை.
பூசாரி அருகே வந்தார். கற்பூரம் காட்டப்போனார். மாரி கைகளை நீட்டி அவரைத் தடுத்தாள். தனது வலது கரத்தை நீட்டி ராதிகாவின் தலைமேல் வைத்தாள். ராதிகாவை தன்முன் வரவைத்தாள். மாரியின் உடல் மெல்ல ஆடியது. பூசாரி மேளக்காரர்களுக்கு கைகாட்டி நிறுத்தச் சொன்னார்.
மாரியின் தொடுதலில் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கிடந்தது. மாரியின் உதடுகள் துடித்தன. அவள் ஏதோ சொல்ல விரும்பினாள். ராதிகா சன்னமான குரலில் “அம்மா…” என்றாள்.
மாரி ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள்.
“மகளே, துன்ப நிலை மாறிப்போச்சு உனக்கு, தொல்லை எல்லாம் ஓடிப்போச்சு உனக்கு, நடுக்க நிலை மாறிப் போச்சு உனக்கு நல்ல நிலை கூடிப்போச்சு உனக்கு. வருஷம் ஒன்று போவதற்குள் மகளே உன் வருத்தமெல்லாம் தீருதம்மா மகளே. தரித்திரமும் ஓடப்போது மகளே உன் தைரியமும் பெருகப்போது மகளே. நீ நினைச்சபடி வாழ்வாய் இது சத்தியம் கருமாரி சொல்வாக்கு நிச்சயம்”
ஒரு பாடலைப்போலப் பாடினாள் மாரி. தன் கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி ராதிகாவின் கழுத்தில் போட்டாள். பூசாரி கற்பூரம் காட்டி மாரி நெற்றியில் திருநீறு பூசினார். மாரிக்கு வியர்வை பெருக மெல்லக் கண்களை மூடிச் சரிந்தாள். சுற்றியிருந்த பெண்கள் அவளைத் தாக்கிப் பிடித்தனர்.
மாரி மீண்டும் கண் விழித்தபோது ராதிகாவின் மடியில் இருந்தாள். மாரிக்கு அம்மா மடியில் கிடப்பது போல் இருந்தது. ராதிகாவின் கண்களில் இப்பொழுது கண்ணீர் இல்லை. முகம் பார்க்க அவ்வளவு தெளிவாய் இருந்தது.
சற்றுமுன் நிகழ்ந்தவைகளை அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அப்பாவுக்கு மட்டும் தான் சாமியாடியது தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார். சொல்லிவிடவே கூடாது. மானசீகமாக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டாள்.
மாரிக்கு உடல் எல்லாம் வலித்தது. எழுந்துகொள்ள முயன்றாள். ராதிகா மாரி எழுந்துக்கொள்ள உதவினாள். சுற்றியிருந்த பெண்களில் ஒருத்தியும் வந்து தூக்கிவிட்டாள். மேளம் திரும்ப அடிக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு பெண்ணுக்கு அருள் வந்து ஆட ஆரம்பித்தாள். மாரிக்கு அப்பாவின் நினைப்பு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.