Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 48

Rate this posting:
{[['']]}
கருக்கலைப்பு

வந்தது தனலட்சுமி என்று அடையாளம் தெரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு நிமிடம் பிடித்தது. பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு இது. கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் ஆழத்தில் விழித்துக் கிடந்தன. அவளை நான் மறந்தே போயிருந்தேன் என்றாலும் இப்படியான ஒரு நிலையில் அவளைப் பார்ப்பேனென்று நினைத்ததில்லை. நானும் அவளும் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்தோம். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனது அம்மா ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டாள். எட்டாம் வகுப்பு முடிக்கும் வரையிலுமான ஆறுமாதங்கள் மட்டும் நானும் என் அப்பாவும் அந்த ஊரில் இருந்தோம். தொடர்ந்து அங்கேயே இருந்தால் அம்மாவின் நினைவுகள் எங்களை நிம்மதியிழக்கச் செய்துவிடுமென்று முடிவெடுத்து எங்கள் ஊரிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்குக் குடி பெயர்ந்துவிட்டோம். எனது அப்பா அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் ஒரு வாடகை வீட்டில் நானும் அப்பாவும் மட்டும் தனியாக வாழ்ந்துவந்தோம். சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் எழாதவாறு பார்த்துக் கொண்டோம். நாங்கள் புது ஊருக்கு வந்துவிட்ட இந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டும் சொந்த ஊருக்குப் போய் வந்தோம். அப்பொழுதும் கூட நெருங்கியவர்களின் வீடுகளுக்கு மட்டுமே போய் வந்ததால் தனலட்சுமியைப் பற்றி எந்தத் தகவலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

எனது அப்பாவும் தனலட்சுமியின் அப்பாவும் ஒரே பிராஞ்சில் வேலை பார்த்துவந்தார்கள். அப்பொழுதெல்லாம் தனலட்சுமி அப்பா புராணம் பாடிக்கொண்டே இருப்பாள்.  ஊரே தனலட்சுமியின் அப்பாவைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தகாலம் அது. மகளை வளர்த்தால் அப்படி வளர்க்க வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள். அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். போவோர் வருவோரிடத்தெல்லாம் என் மகளுக்கு அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பெருமையாகப் பேசிக் கொண்டே இருப்பார். என் நட்பு வட்டத்தில் இருந்த எல்லோருக்குமே தனலட்சுமியின் அப்பாவைப் போல ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை இருந்தது. என் அப்பா அத்தனை செல்லமெல்லாம் கொடுக்கவில்லை. ஐந்து வயதிற்கும் மேலாக என் வேலைகளை நானே செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஐந்தாம் வகுப்பினைத் தாண்டியபிறகு என் துணிகளை நானே துவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அறிவுறுத்தி அதை ஒரு சட்டமாகவே எங்கள் வீட்டில் போட்டிருந்தார். யார் வீட்டிலும் இப்படி நடக்காது. பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லித்தான் நச்சரிப்பார்கள். தலைவாரிவிடுவதில் இருந்து எத்தனையோ வேலைகளை அம்மாக்கள் செய்வது உண்டு. எங்கள் வீட்டின் சட்டம் அவரவர் செய்யமுடிகின்ற வேலையை அடுத்தவர் தலையில் கட்டக் கூடாது என்பதுதான். ஆறாம் வகுப்புப் படிக்கும் போதிருந்தே நானே தலைவாரிக் கொள்வேன். என் துணிகளை நானே துவைத்து, அயர்ன் செய்து வைத்துக் கொள்வேன். மதிய உணவினைக் கூட நானேதான் போட்டுக் கொள்வேன். எட்டாம் வகுப்பு முடியும்போது யார் உதவியும் இன்றி சமைக்கவோ, பாத்திரம் கழுவவோ, துவைக்கவோ நான் கற்றுக் கொண்டிருந்தேன். இல்லை, கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தேன்.  வீட்டில் என்னைக் கொடுமைப்படுத்தினார்கள் என்று சொல்லமுடியாது. என்னைக் கண்டிக்கமாட்டார்கள். அதிக செல்லமும் கிடையாது. நான் விரும்பிக் கேட்ட எதையும் மறு கேள்வி கேட்காமல் வாங்கித் தர மாட்டார்கள். நான் கேட்கிற பொருள் எனக்கு எந்த விதத்திலெல்லாம் தேவைப்படும் என்று விளக்கிச் சொன்னால்தான் கிடைக்கும். தனலட்சுமியின் அப்பாவுடன் ஒப்பிட்டு எனக்கு என் அப்பாவின் மீது கோபம் வந்ததுண்டு. ஆனால், இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் என் வாழ்க்கைக்கான வழிகாட்டல் என்று என் அப்பாவின் மீது பெரும் மரியாதை வந்துவிடுகிறது. அவருக்கு மரியாதை என்று சொன்னால் பிடிக்காது. அவரைப் பார்த்துப் பயந்தாலோ, எதையாவது மறைத்தாலோ கூட பிடிக்காது. பெற்றோர்கள் மேல் இருக்கும் அன்பிற்கு மரியாதை என்றெல்லாம் பெயர் சூட்டக்கூடாது என்பார். எதிர்த்துப் பேசலாம்; கேள்வி கேட்கலாம்; சண்டை போடலாம்; இதற்கெல்லாம் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்கு அப்பொழுது இதெல்லாம் தேவைப்படவும் இல்லை. எனக்கு அப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் தனலட்சுமியின் அப்பாவைப் போல கேட்டதைக் கேட்ட நேரத்தில் வாங்கிக் கொடுக்கிற அப்பாவைத்தான். தினமும் சாக்லேட் வாங்கவும், தின்பண்டங்கள் வாங்கவும் நிறைய காசு கொடுக்கும் அப்பாவைத்தான். இவரைப் போல ஒவ்வொன்றிற்கும் காரணம் கேட்கும் அப்பாவையல்ல.

எங்கள் வகுப்பில் இருந்த மாணவிகளிலேயே தனலட்சுமி சூட்டிகையான பெண்ணாகத்தான் இருந்தாள். எல்லோருக்குமே அவளைப் பிடித்திருந்தது. படிப்பிலும் முதல் மூன்று இடங்களுக்குள் அவள் பெயர் இருக்கும். அப்பொழுதெல்லாம் நான் அவ்வளவாகப் படிக்க மாட்டேன். பார்டர் பாஸ் அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுமாராகப் படிப்பேன். என் பள்ளிப்பருவ தோழிகளைப் பற்றி அவ்வப்போது நினைத்துக் கொள்ளும்போது தனலட்சுமி அவள் ஆசைப்பட்டதைப் போலவே டாக்டராகவோ அல்லது குறைந்தபட்சம் எஞ்சினியராகவோ ஆகியிருப்பாள் என்று நான் நினைத்துக் கொள்வேன். அவள் அப்பாவும் இவள் விரும்பியதைப் எப்படியேனும் இவளுக்குப் பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைத்து சில சமயம் பொறாமைப்பட்டது கூட உண்டு. அவளை நினைத்துப் பொறாமைப்படக் காரணம் என் அப்பா என்னிடம் எத்தனை அன்பாக இருந்தாலும் அடிக்கடி சொல்லுகிற வசனம்தான். “ இது உன்னோட வாழ்க்கை, நீதான் அதுக்குப் பொறுப்பேத்துக்கனும். நான் உனக்கு பெருசா எதையும் செஞ்சுதர மாட்டேன். உனக்கு வழி காட்டுறதோட என்னோட கடமை முடிஞ்சிடும். எது உனக்கு வேணுமோ அதுக்கான உழைப்ப நீதான் கொடுக்கனும்”

என் கிராமத்தைப் பற்றியோ, அங்கே நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியோ நான் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். அதனால் அங்கே என்னுடன் படித்த மற்ற பெண்களைப் பற்றியெல்லாம் பெரிய அக்கரை இருக்கவில்லை. இப்பொழுது திடீரென தனலட்சுமியை இந்தக் கோலத்தில் பார்த்ததும்தான் அதிர்ச்சியாக இருந்தது. இவள் எப்படி இந்த நிலைமையில்? என்னைவிட நன்றாகப் படித்தவள்; அவள் குடும்பமும் எங்கள் குடும்பத்தை விடவும் ஓரளவு வசதியான குடும்பம்தான். என்னைப் போலவே அவளும் வீட்டிற்கு ஒரே பெண். அப்பொழுது நான் படித்த அரை வேக்காட்டுப் படிப்பிற்கு இப்பொழுது டாக்டராக இருக்கிறேன். அதாவது அந்த வயதில் நான் மோசமாகப் படித்தாலும் அதற்கடுத்து பதினொன்று பனிரண்டாம் வகுப்புக்களில் நன்றாகப் படித்துவிட்டேன். சுமாராகப் படித்த நானே இப்படியென்றால் என்னை விட நன்றாகப் படித்த தனலட்சுமி என்னைவிடப் பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருந்தால் இத்தனை அதிர்ச்சியாகி இருக்காது. ஆனால், இத்தனை அலங்கோலமாக அவளைப் பார்த்ததுதான் என்னை இம்சித்தது. அவளுக்காக உயிரைக் கூடக் கொடுக்கும் அத்தனை அன்பான அப்பா என்ன ஆனார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அவளுக்கு அவளோடு படித்த, அவளது மிக நெருங்கிய தோழியான நான் டாக்டராக இருந்ததைக் கண்டு அழுகை வந்ததாகத் தெரிந்தது. மகிழ்ச்சியாகவோ பொறாமையாகவோ இயலாமையாகவோ இருந்திருக்கலாம். அவளும் இங்கே என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். பெண்கள் நல மருத்துவத்தில் ஸ்பெஷலிட்டாகத் தேறி அரசு வேலை கிடைத்து எங்கள் கிராமத்தை உள்ளடக்கிய நகராட்சியில் இருந்த அரசுப் பொது மருத்துவமனையில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். இங்கே வேலையில் இணைந்து இரண்டு வாரம்தான் ஆகியிருந்தது. இந்த இரண்டு வார காலத்தில் கிராமத்திற்குப் போகவும் முடியவில்லை. அப்பா பணி ஓய்வு பெற்றதும் கிராமத்திற்குச் சென்று அம்மாவின் நினைவாக ஒரு வீடு கட்டலாம் என்று மட்டும் ஒரு எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்துவருகிறது. பணி ஓய்விற்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் வி.ஆர்.எஸ் வாங்குவதில் அப்பாவிற்கு விருப்பமில்லை. அதனால் என்னை மட்டும் இங்கே அனுப்பிவிட்டு அங்கே அவர் தனியாக இருக்கிறார். இதனால் எங்கள் கிராமத்தைப் பற்றிய செய்திகள் எதுவுமே எங்களுக்கு எட்டுவதில்லை.

பதினைந்து நாட்களாக நிற்காமல் போய்க்கொண்டிருக்கும் உதிரப் போக்கினைப் பற்றிய மருத்துவ ஆலோசனைக்கும், ஆய்விற்காகவும்தான் தனலட்சுமி அங்கே வந்திருந்தாள். வந்த இடத்தில் என்னைப் பார்த்ததும் அவளது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது. கூட்டமாக இருந்ததால் அப்போது எதுவும் பேச முடியவில்லை. என் பணி நேரம் முடிய இன்னும் அரை மணிதான் இருந்தது. இருவருக்குமே நிறையப் பேச வேண்டும் என்று தோன்றியதால் அவளது கைகளைப் பிடித்து அழுத்தி என் அருகில் இருந்த இன்னொரு நாற்காலியைக் காட்டி காத்திருக்கச் சொன்னேன். ”வெளிய நிக்கிறேனே?” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே இருந்த திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

மருத்துவமனையில் இருந்து நான் தங்கியிருக்கும் அறைக்கு வரும் வரையிலும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கொண்டே வந்தாள். எத்தனையோ பிரயத்தனங்களுக்குப் பிறகுதான் அவளது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் அழுகையும், கண்ணீருமாக அவளது வாழ்க்கையைக் கேட்டேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அதே பிரச்சினை அவள் வாழ்க்கையிலும் நடந்திருந்தது. அது கருக்கலைப்பு.

பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் அவள் கருவுற்றிருந்தது வீட்டில் தெரியவந்தது. பதினைந்து வயதான திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி அவளது குடும்பத்தை எத்தனை வேதனைப்படுத்தும் என்று சொல்ல வேண்டியிருக்காது. ஊரில் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்புச் செய்துவிட்டார்கள். அன்றிலிருந்து அவளது குடும்பம் அவளுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. கடவுள் என்பவர் எல்லாம் தன் அப்பாவிற்கு அடுத்த ஒன்றுதான் என்று நம்பியிருந்த அவளது அப்பா இப்பொழுது முழு எதிரியாகியிருந்தார்.  இத்தனை நாளும் தேவதை என்று கொஞ்சியவர் அதற்குப் பிறகு குடும்பத்தைக் கெடுக்க வந்த மூதேவி என்று திட்ட ஆரம்பித்தார். குடும்ப நிம்மதியைக் கெடுக்க வந்தவள் என்றும், ஒழுக்கம் கெட்ட ஜென்மம் உருப்படாமல்தான் போகுமென்றும் நேராகவும், அடிக்கடி குத்திக் காட்டியும் பேசினார்கள். அதற்குக் காரணம் யாரென்றும் ,எங்கே எப்போது அது நடந்தது என்று கேட்டு திட்டியும், அடித்தும் மிரட்டினார்கள். அதைச் சொல்லவே இவளுக்கு கேவலமாக இருந்தது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் இணைந்ததில்தான் அவள் கருவுற்றாள் என்று தெரிந்ததும் அந்த மாணவனை அடையாளம் காட்டச் சொல்லி மிரட்டி, அவனை அடையாளம் காட்டினபிறகு அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை அவளது அப்பா நான்கைந்து வாரங்கள் கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததும் இவளை மேலும் மேலும் பயமுறுத்தியது. அவனை அடித்தாலோ, மிரட்டினாலோ விசயம் வெளியே கசிந்துவிடுமென்று அவளது அம்மா மன்றாடி அப்பாவின் கோபத்தினைக் கட்டுப்படுத்தியிருந்தாள். 

“ நம்ம புள்ளைக்குப் புத்தி கெட்டுப் போனதுக்கு அடுத்தவன அடிச்சு என்னாகப்போவுது? உன்ற புள்ள ஒழுக்கமான்னு கேட்டா என்ன சொல்லமுடியும்?” என்பதோடு அப்பாவும் அமைதியாகியிருந்தார். அதற்குப் பிறகு அப்பாவை இவளோ, இவளை அப்பாவோ நேராகப் பார்ப்பதே இல்லையாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். ஆனால், அந்தச் சந்தோசமெல்லாம் அவளது குடும்பத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. மேற்கொண்டு படிப்பதைப் பற்றி யாருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இவளாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் கேட்டதற்கு “ அதான் இப்பவே பெரிய படிப்பு படிச்சுட்டு வந்துட்டீல? இனி எதுக்கு படிப்பு?” என்று பதில் வந்திருக்கிறது.

அதன்பிறகு நான்கைந்து மாதத்தில் தூரத்து உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்களாம். மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் 20 வருடங்கள் வயது வித்தியாசம். கல்யாணம் வேண்டாமென்று சொல்லிப் பார்த்திருக்கிறாள். “இன்னும் பேரக் கெடுக்கனும்னு எதாச்சும் எண்ணமா?” என்று கேட்டு கிட்டத்தட்ட அவளது மனதை முழுதாக ஊனமாக்கித்தான் அந்தக் கல்யாணமே நடந்திருக்கிறது. பிறகு ஒரே ஆண்டில் கருவுற்று, அதுவும் தங்காமல் அபார்சன் ஆகியிருக்கிறது. பதினேழு வயதில் உடலிலும் வலுவில்லாமல், மனதிலும் வலுவில்லாமல் வயிற்றில் மட்டும் எங்கிருந்து கரு தங்கும் என்று கூட யாரும் அவளுக்குக் கூறவில்லை. அவளுக்கும் அதையெல்லாம் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ எந்த வசதியும் இருக்கவில்லை. ஊருக்கு வந்தபோது “ கொழந்தையெல்லாம் சாமி குடுக்குறது. அதுக்கெல்லாம் ஒழுக்கமா இருந்திருக்கனும் “ என்று அப்பா குத்திக் காட்டியிருக்கிறார். அவளுக்கே தான் ஒழுக்கம் கெட்டவள் என்கிற எண்ணம் வந்துவிட்டது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறபோதெல்லாம் காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. பின் மீண்டும் ஒரு குழந்தை இறந்து பிறந்த பிறகு, மூன்றாவது முயற்சியில் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். உண்மையில் எதற்குக் குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்றெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்கவோ, அதைப் பற்றிச் சிந்தித்திருக்கவோ இல்லை. கிட்டத்தட்ட அவளது அப்பா வயதிலிருந்த கணவனுக்கும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு, இவளுக்கும் தொடர் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு குடும்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே போயிருந்தது. ஒரே மகளென்பதால் அவளது அப்பாவின் சொத்துக்களை வைத்துத்தான் இப்பொழுது குடும்பம் நடந்துவருவதாகச் சொன்னாள். இந்த வறுமைக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் கூட அவள் திருமணத்திற்கும் முன்பே கருவுற்றதால் ஏற்பட்ட பாவம்தான் என்று அவளது அப்பாவும் அம்மாவும் அடிக்கடி புலம்புவதுண்டு என்று சொன்னாள்.

இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியாகச் சொன்னாள் “ எல்லாத்துக்கும் நான் ஒருத்திதான காரணம்; நான் மட்டும் ஒழுக்கமா இருந்திருந்தா நல்லா இருந்திருப்பேன்ல?” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் அதீத மன அழுத்தத்தில் இருந்தாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. 

அவளது கதையைக் கேட்டதும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் போலவும், அவரைக் கட்டிக் கொண்டு, அவர் என் நெற்றியில் தரும் முத்தத்தைப் பெற வேண்டும் என்று தோன்றியது.

நானும் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது கருவுற்றேன். பதினொன்றாம் வகுப்பிற்குப் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தேன். பரஸ்பரம் இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பில் கவரப்பட்டு, அதில் ஒருவன் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி, நான் ஒப்புக் கொண்டு, ஒன்றிரண்டு மாதத்தில் நாங்கள் எதிர்பாலின ஈர்ப்பின் இறுதிக் கட்டத்தினை எட்டியிருந்தோம். 

ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் நான் கருவுற்றிருக்கிறேன் என்று தெரியவந்தது. மருத்துவமனையில் அது என்னுடைய ரிசல்ட் தானா என்று என் அப்பா அழுத்தமாகக் கேட்டு, அது உறுதியானதும் “ஓ, ஓகே. நாங்க வீட்டுக்குப் போயிட்டு மறுபடி வர்றோமே” என்றார்.

பின் வீடு வந்து சேரும் வரையிலும் அவர் இதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. ஆனால், என்னுடன் பேசாமலும் வரவில்லை. வேறெதோ தொடர்பில்லாத விசயங்களைப் பேசிக் கொண்டுவந்தார். வீட்டில் தரையிரங்கியதும் என்னைப் பெரும் கோபம் கொண்டு அடிக்கப்போகிறார் என்று பயந்து ஆட்டோவில் வரும்போதே தொண்டையில் கட்டியிருந்த அழுகையை வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் பெரும் சப்தமிட்டு அழத் தொடங்கினேன். அப்பா என்ன கேட்கப்போகிறார் என்று ஒரு பக்கம் பயமாகவும், அவரது கோபத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நடுக்கமாகவும் இருந்தது. 

அப்பாவும் கிட்டத்தட்ட அழுதார். நான் சத்தமாக அழுவதைப் பார்த்ததும் என்னை மிக மிருதுவாக அவரது மார்போடு அணைத்துக் கொண்டு என் நெற்றியில் முத்தமிட்டு “ஏன் அழுற?” என்றார்.

எனக்கு என்ன பதில் சொல்லுவதென்றெல்லாம் அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. நான் ஏதோ ஒரு பெரிய தவறினைச் செய்துவிட்டதாகவே நினைத்து இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்திருந்தேன். கண்களில் தாரையாய் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு “ நீ ஒரு தப்பும் பண்ணலடா, எதுக்கு அழுற? இதெல்லாம் இந்த வயசுல இயல்பானதுதான். இதுல இருந்து எப்டி வெளில வர்றதுன்னு யோசிக்கலாம். பயப்படாத, நான் கூடத்தான இருக்கேன்” என்று மறுபடியும் முத்தமிட்டார். இதற்கான காரணம் யாரென்றோ, ஏன் இப்படிச் செய்தேன் என்றோ ஒரு வார்த்தை கூட அவர் கேட்டிருக்கவில்லை. தன் ஒரே மகள் இந்த வயதில் கருவுற்றிருக்கிறாள் என்ற அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் எப்படி என்னை ஆறுதல்படுத்தினார் என்று இப்பொழுதும் கூட ஆச்சர்யமாக இருக்கிறது.

பின் அபார்ஷன் செய்துகொண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பள்ளிக்குப் போனேன். அந்த இரண்டு வாரங்களும் அப்பாவும் வேலைக்குப் போகவில்லை. ஆனால், இதைப் பற்றி அவர் என்னிடம் எதுவுமே கேட்டிருக்கவோ, பேசவோ இல்லை. வேறென்னென்னவோ பேசிப் பேசி என் கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருந்தார். வலி தாங்காமல் நான் அழும் நேரங்களில் அவரும் அழுதார். ஆனால், அவரது கண்களில் இருந்த கருணையும், அன்பும் என்னை தேவதையாக உணரவைத்தது. சினிமாவே பிடிக்காத அவர் அந்த நாட்களில் நான்கைந்து முறை என்னை திரையரங்கத்திற்குக் கூட்டிச் சென்றார். நான் அதற்கு முன்பு கேட்டு நச்சரித்து அவர் தேவையில்லை என்று நிராகரித்த சில பொருட்களையும் வாங்கிவந்து நான் சிரிக்கிறேனா என்று பார்த்தார். அவருக்காகவே எனக்குச் சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு மாதத்தில் நான் கிட்டத்தட்ட எனது நார்மலான நிலையை அடைந்திருந்தேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பா என்னிடம் கேட்டார். “ அது உனக்குத் தெரிஞ்சுதான நடந்துச்சு? ஐ மீன், உன்னோட விருப்பத்தோட? அப்படின்னா அதப் பத்தி எதுவும் எனக்குச் சொல்ல வேண்டாம். அப்படியில்லாம உன்னை யாராச்சும் மிரட்டியிருந்தாலோ, உனக்குத் தெரியாம நடந்திருந்தாலோ யார்னு சொல்லு, நாம இதுக்கு எதாச்சும் செஞ்சாகனும்”

அந்தக் கருக்கலைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு என் அப்பா எனது மிக நெருங்கிய ஒரே நண்பனாக மாறியிருந்தார். இப்பொழுது அவரிடம் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால் காலை ஆட்டிக் கொண்டே, “ என் விருப்பத்தோடத்தான்பா நடந்துச்சு. எங்க ஸ்கூல்ல ஒரு...”

“ஓகே. அந்தப் பையன்கிட்ட இதப் பத்தி சொன்னியா?”

” எதப்பத்தி?”

“இந்த அபார்ஷன். அதனால நீ அனுபவிச்ச அந்த வலி, வேதனை. இதெல்லாம்”

“இல்லப்பா, அவன்கூட நான் பேசுறதே இல்லை. அவன் பேச ட்ரை பண்ணான். நான் இக்னோர் பண்ணிட்டேன். இப்ப பசங்களோட பேசுறதே இல்லை.”

“ அதான் பிரச்சினையே. அவன்கிட்ட இதப் பத்தி சொன்னாத்தானே அவனுக்குப் புரியும். இன்னொரு முறை அப்படி எதும் செய்யும்போது அடுத்த மனுசனுக்கு நம்மால இத்தனை கஷ்டம் வருதான்னு யோசிப்பான்? நல்ல பையனா இருந்தா உனக்கு ஒரு நல்ல ஃப்ரண்டா இருப்பான். அவன் உன்னை இப்படி கஷ்டப்படுத்திப் பார்க்கனும்னு மனசுல நெனச்சுட்டா செஞ்சிருப்பான்? ஒரு குறுகுறுப்பு, அப்படி என்ன இருக்குன்னு பார்க்கிற எதிர்பார்ப்பு. இதானே காரணம். அட்லீஸ்ட் சேஃப்டியா இருக்கிறது பத்தியாச்சும் யோசிப்பான்ல?”

“ பசங்களோட பேசலாமாப்பா?”

“ பசங்களோடதான் நிறையப் பேசனும். அப்படிப் பேசினாத்தான் உன்னால ஆப்போசிட் செக்ஸ் பத்தி புரிஞ்சுக்க முடியும். அவுங்க மேல இருக்கிற ஈர்ப்பு கொறையும். பயம் போகும். இதெல்லாம் நாம கடந்து போக வேண்டிய விசயங்கள். இங்கயே நின்னுட்டா எப்படி?”

“ நான் பண்ணது தப்பில்லையாப்பா?”

“ நிஜமாவே நீ ஒரு தப்பும் பண்ணல. பதிமூனு வயசுல உடம்பு சிக்னல் அனுப்பிடுது. உனக்கே தெரிஞ்சிருந்தாலும் வெளிப்படையா இங்க யாருக்கும் அத தெளிவா சொல்லித்தரனும்னு அக்கறையில்லை. இப்படி எதாச்சும் நடந்துட்டா ஒழுக்கம் கெட்டுப்போயிட்டான்னு குதிக்கிறானுங்க. பசி வந்தா சாப்பிடுறோம், தூக்கம் வந்தா தூங்குறோம். அதே மாதிரிதான் இதுவும் இயற்கை. இதை எப்படிக் கையாளனும்னு சொல்லித்தரனும். பசி வந்தவுடனே எதிர்ல யாராச்சும் சாப்பிட்டுட்டு இருக்கிறத புடுங்கித் தின்னுடறதில்லை. அதே மாதிரித்தான் இதுவும்.  ஆனா, அதப் பத்தி பேசுறது தப்பு; தெரிஞ்சுக்கிறது தப்புன்னு சொல்லிக்கிறோம்; நம்ம ஒடம்பப் பத்தி நாம தெரிஞ்சுக்காம வேற யார் தெரிஞ்சுக்குவா? நம்ம கொழந்தைங்களுக்கு நாம சொல்லித்தராம வேற யார் சொல்லித்தருவா?. உண்மைல நான் தான் தப்புப் பண்ணிட்டேன்”

”நீங்க என்னப்பா தப்புப் பண்ணுனீங்க?”

“ உன் வாழ்க்கைல ஒரு விசயம் நடந்திருக்கு. அது ஒரு பிரச்சனையாகி முனு மாசத்துக்கு அப்புறமாத்தான் எனக்கே தெரியவருது. அந்த மூனு மாசமும் நீ எத்தனை பயந்திருப்ப? எப்படியெல்லாம் அழுதிருப்ப? இதப் பத்தி எங்கிட்ட பேசுற அளவுக்கு நான் உன்னை வளர்க்கலைன்றதுதான் நான் பண்ணின தப்பு. ஏன் இதப் பத்தி பேசக்கூடாதுன்னு உனக்குத் தோனுச்சு? எதுக்காக மறைக்கனும்னு நினைச்ச? பயம்? அப்படிப் பயத்தோட ஒரு அப்பாகிட்டா வாழ்ற அளவுக்குத்தான் இங்க வாழ்க்கை இருக்கு. அதுதான் தப்பு”

இப்படித்தான் அவர் என் வாழ்க்கையை மிகத் தெளிவாக வழிநடத்தினார். என் எதிர்காலம் பற்றி நிறையப் பேசினார். பொழுதுபோக்காகப் படித்துக் கொண்டிருந்த நான் யோசிக்க ஆரம்பித்து நன்றாகப் படித்து இப்பொழுது மருத்துவராக மாறினதுவரையிலுமான என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் என் அப்பாவின் அன்பும் வழிகாட்டுதலும் இருக்கிறது. என் மகள் மீது கொள்ளைப் பிரியம் இருப்பதாக அவர் எப்பொழுதுமே யாரிடமுமே சொன்னதில்லை. அதைச் சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.