Thursday 16 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 50

Rate this posting:
{[['']]}
அப்பா சாண்ட்டா



”இல்லை நீங்கள் இந்த விமானத்தில் ஏறமுடியாது. நான் சொல்வது புரிகிறதா” செக்-இன் கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்திலிருந்து தெள்ளத்தெளிவாக சொன்னாள் கருநீல ப்ளேசர் அணிந்த அமெரிக்கள்.

அவளுக்கு என்ன வயதிருக்கும், எப்படி இருந்தாள் என விவரிக்க இச்சிறுகதையில் இடமுமில்லை, நேரமுமில்லை. என் ஊர் பார்க்க ஓடிக்கொண்டிருந்தேன் . சுற்றிலும் பார்க்க மொத்த சான்ப்ரான்சிஸ்கோ ஏர்ப்போர்ட்டுமே தீபாவளிக்கு முதல்நாள்கோயம்பேடு போல பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. விடிந்தால் கிருஸ்மஸ் என தொடர்ந்த விடுமுறை வாரம் என்பதால் ஏகக்கூட்டம்.

”அதான் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

இம்முறை என்னையறியாமல் என் குரலில் கடுமை சேர்ந்துகொண்டது.

”25 நிமிஷம் தான் இருக்கு உங்க ஃப்ளைட் கிளம்ப. குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு முன்னால செக்-இன் செய்யனும். அதுமில்லாம இருக்குற செக்யூரிட்டி லைன் கூட்டத்துக்கு நீங்க நிச்சயமா ஃப்ளைட்டை பிடிக்க முடியாது” என் கடுமையைஉணர்ந்தது போன்ற தொனியில் சொன்னாள்.

சுர்ரென்று கோபம் ஏறியது. இத்தனை கஷ்டப்பட்டு அடித்துபிடித்து வந்தது இதுக்குத்தானா? இல்லை கூடாது. முன்கோபத்திற்கான நேரமில்லை இது. காரியத்தை கெடுக்காதடா பாவி.

”ஏதாவது செய்ய இயலுமா ப்ளீஸ்?” வலிந்த செயற்கை புன்னகையோடு கேட்டேன்.

ஓரிரு நிமிடங்களுக்கு என்னிடம் பேசவில்லை அவள். என் பின்னால் வரிசையில் நின்றிருந்த வெள்ளைக்காரன் காதுபட ப்ச் என்றது காதில் விழுந்தது. நான் திரும்பவில்லை.

”ஒரே வழிதான் இருக்கிறது. நீங்கள் மினியாபோலீஸ் போகவேண்டும் அதானே? சான் ஹோசே ஏர்போர்ட்டிலிருந்து டென்வர் போய், அங்கிருந்து மினியாபோலீஸுக்கு கனெக்டிங் விமானம் இருக்கிறது. அதற்கு டிக்கெட மாற்றித்தரலாம்”

“ஏங்க, நான் போக இருக்கும் டைரக்ட் ஃப்ளைட் இன்னும் இதே ஏர்போர்ட்ல தான் இருக்கு. இப்ப விட்டாலும் உள்ள போயி 3 மணிநேரத்துல மினியாபோலிஸ்”

“ஆனால் என்னால் போர்டிங் பாஸ் தர இயலாதே. சரி உங்கள் முடிவை சீக்கிரம் சொல்லுங்கள்”

“ஓகே வில் டேக் இட்” என தோற்ற குரலில் ஒத்துக்கொண்டேன்.

வேறு வழில்லை. நான் ஃப்ளைட் கிளம்ப அரைமணி நேரம் முன்னே வந்திருக்கலாம். இவளிடம் நிற்கவேண்டிய தேவையில்லாது போர்டிங் பாஸ் கொடுக்கும் தானியங்கி டெர்மினல் வேலை செய்திருக்கலாம். வரும் வழியில் கோல்டன் கேட்பாலத்தில் அத்தனை நெருக்கடி இல்லாதிருந்திருக்கலாம். கிளையண்ட் அலுவலகத்தில் ப்ரிண்டர் சொதப்பாதிருக்கலாம். ஊருக்கு கிளம்பலாம் என நினைக்கையில் முகுந்த் உட்காரவைத்து படுத்தாது போகவிட்டிருக்கலாம்.

முகுந்த். முகுந்த் சுந்தரம். கிளையண்ட் அன்னதாதா. இந்த ப்ராஜக்டை பொருத்தவரை அவன் சொல்லே கடைசிச்சொல். ”மூனே மாச CRM ப்ராஜக்ட். . ஃபிக்ஸ்டு ப்ரைஸ். ஈசியான குக்கி கட்டர் ப்ராஜக்ட். நீ ஒருத்தன் தான் கிளையண்ட் சைடுல. நாங்கஎல்லாத்தையும் பார்த்துக்கறோம். டெலிவர் பண்ணிட்டு இன்வாய்ஸ் அப்ரூவல் வாங்கு. நானே உன்னை மறுபடி மினியாபோலீஸ்ல போடுறேன். வோ முகுந்த் பி மதராசி ஹே யார்..” என ஆஃப்ஷோர் மேனேஜர் அகர்வால் ஆசைக்காட்டி அனுப்பிவைத்தான்.

இப்படித்தான் இதற்கு முன் நேஷ்வில்லுக்கு அனுப்பும்போதும் சொன்னான். அதற்கு முன்பு ரிச்மண்டுக்கு அனுப்பும்போதும் சொன்னான். கம்யூட்டர் துறையை பொட்டி தட்டுவது என்ற வழக்கில் சொல்வார்கள். எனக்கு பொட்டி தட்டவே பொட்டிதூக்க வேண்டியிருந்தது. 8 மாதங்கள் முன்பு ஆரம்பித்தது. இன்னமும் சூட்கேஸ் வாழ்க்கை, ஹோடடல் வாசம், காஃபி மெஷினில் தண்ணி காப்பி, கூகிள் மேப்பில் தேடிய இந்திய ரெஸ்டாரண்ட்டில் முழித்துக்கொண்டிருக்கும் பாஸ்மதி சோறு,குவளை இல்லாத ஹோட்டல் கக்கூஸில் சிறு கப்பை கொண்டு சமாளித்தல் என வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

மினியாபோலிஸில் இருக்கும் வரை மதியத்திற்கு குழம்புச்சாதம் எடுத்துப் போய்க்கொண்டிருந்தவன். அதுவும் மனைவியே எனக்கும் சேர்த்து எடுத்து வந்துவிடுவாள். ஒரே அலுவலகம். அக்கவுண்ட் மேனேஜர் “அடேய் ஆபீஸ்லயே குடும்பம் நடத்தறஒரே நாள் நீ தான்” என சிரிப்பான். காலையில் எட்டரைக்கு எங்கள் மூன்றரை வயது பாப்பாவை டே கேரில் விட்டுவிட்டு 35 மேற்கு ஃப்ரீவேயை பிடித்தால் டவுண்ட்டவுன். மாலை நாலரைக்கு “கிளம்பலாமா” என மெசஞ்சரில் கேட்டு கிளம்பினால்,ஐந்து மணி பாப்பாவின் டே கேர். மதியம் அவர்கள் தந்த மீன் அல்லது டர்க்கி சாண்ட்விச் வாசனையோடு எங்களிடம் ஓடிவருவாள். ஆறுமணிக்கு வீடைடைந்தால், 7.30 வரை உலாத்தல், எட்டரைக்கு டிஷ் டிவியில் சூப்பர்சிங்கர் பார்த்துகொண்டேஇரவுணவை முடித்து, ஆஃப்ஷோரிடமோ, அப்பா அம்மாவுகோ ஃபோன் பேசி, மனைவியை அணைத்துக்கொண்டே தூங்கினால் நாள் திவய்மாய் முடியும். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இந்த ரிசஷன் வரும்வரை. சடசடவெனப்ராஜக்டகளையும், எங்கள் ஆட்களையும் குறைக்க ஆரம்பித்தனர்.

”தம்பி, நீ கன்சல்ட்டிங் ஸ்ட்ரீம்ல இருக்க. உன் பில்லிங்குக்கு இங்க வேலையில்லை. பொட்டி தூக்கியே ஆகனும். ரொம்ப பிகு பண்ணாதே. அவனவனுக்கு வேலையே போகுது. நியூஸ்லாம் படிக்கிறியா இல்லியா” என தனியே கூப்பிட்டுசொல்லப்பட, அன்றிலிருந்து மனைவி,மகள் ஒரு ஊரிலுமாக, நான் நான் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருக்கிறேன்.

“இந்தாங்க உங்க போர்டிங் பாஸ்” என்ற முதல்வரி யுவதியின் குரல் என்னை கலைத்தது.

“டென்வர் ஃப்ளைட் அதிகாலை 3 மணிக்குன்னு போட்டுருக்கு?”

“ஆமா, red eye தான். கிருஸ்மஸ் முதல்நாள் இது கிடைத்ததே உன் அதிர்ஷ்டம். சான் ஹோசே ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பும் ஃப்ளைட்டை பிடிக்க நீ இப்போதே கிளம்ப வேண்டும்”

வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். ஆபீசிலிருந்து கிளம்பும்போதே நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்கிற போது முகுந்த் பிடித்துக்கொண்டு ஸ்டேடஸ் கேட்டான். “வேலை முடியும் முன்பே அதிகமாக பில் செய்கிறீர்கள். இண்டியஆஃப்ஷோரிங் கம்பெனிகளே இப்படித்தான்” என வார்த்தை விட்டான். ஐந்து வருடம் முன்பாய் வந்து க்ரீன்கார்டும் அமெரிக்க சிடிசன்ஷிப்பும் வாங்கிவிட்ட திமிர். பொறுமையாக விளக்கினேன். ஏதும் முறைத்துக்கொண்டால் “என்னத்தகிளையண்ட்டை சமாளிக்கற” என அப்ப்ரைசலில் கைவைக்கப்படும். வேலையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

விமான நிலையம் வரும் வழியிலாவது சாப்பிட்டிருக்கலாம். வழியில் டாய்ஸ் ஆர் அஸ் பொம்மைக்கடை கண்ணில் பட, “எல்லாம் வாங்கியாச்சு..ஏதோ ஃப்ளையிங் டிங்க்கர் பெல் பொம்மையாம். அது தான் பாப்பாவுக்குசாண்ட்டாகிளாஸ்கிட்டருந்து வேணுமாம். ஆனா இங்க கிடைக்கல” அனு சொன்னது ஞாபகத்துக்கு வர, பாப்பாவுக்கான பொம்மை தேடலில் 30 நிமிடம் போனது. அதை தவிர்த்திருந்தால் ஒழுங்காய் விமானத்தை பிடித்திருக்கலாம். இப்போதுயோசித்து பயனில்லை.

வெளியே டாக்சிகள் தட்டுப்பாடாய் இருக்க, சான் ப்ரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து சான் ஹோசே விமான நிலையம் செல்பவர்களை 3,4 பேர்களாய் சேர்த்து அனுப்பிக்கொண்டிருந்தனர். ஒரு நடுத்தர வயது வெள்ளைக்காரர்,கறுப்பினத்தவரோடு இணைத்து அனுப்பப்பட்டேன்.

”நான் இங்க ஓபாமா கன்வென்ஷனுக்கு வந்தேன். லேசுப்பட்ட ஆளில்லைப்பா அவரு. அவரு வந்தாருன்னா ரிசஷன்லாம் மூனே மாசத்துல காலி” என வெள்ளைக்காரர் கறுப்பரோடு பாரதவிலாஸ் கொண்டாடிக் கொண்டிருந்தார். கசப்பாய் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். டாக்சியில் மூன்றாவதாக ஒரு இந்திய பிராகிருதி இருப்பதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. கடிகாரத்தில் ஒரு கண்ணும், அவர்கள் பேச்சில் ஒரு காதும் வைத்து பசியை மறக்க முற்பட்டேன். டென்வர்விமானத்தையும் தவறவிட்டுவிடுவேனோ என டிராபிக் பயமுறுத்தியது. மொத்த சான்ஃப்ரான்சிஸ்கோவும் ஊருக்கு போவது போல் தோன்றியது.

நல்லவேளை, டென்வர் விமானத்தை பிடிக்க முடிந்தது. விமானம் ஏறும் முன்னே வயிற்றை குமட்டியது. ”காஃபி ஆர் ஜூஸ்?” என கேட்கப்பட எதற்கோ காப்பி பெற்றுக்கொண்டேன். அதோடு சாப்பிட ஏதும் இருக்குமா எனக்கேட்க, இந்த காபிசர்வீசே என்று நிறுத்தப்படும் எனத்தெரியவில்லை என ஏர் ஹோஸ்ட்டஸ் சிரித்தாள். காப்பி இன்னமும் வயிற்றை பிரட்டி, விமானத்தின் கழிப்பறையில் வாந்தியெடுக்க வைத்தது.

டென்வர் ஏர்போர்ட்டில் இறக்கிவிடப்படும் போது மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. விமான நிலைய உணவகங்கள் அத்தனையும் மூடியிருக்க, தானியங்கி மிஷின் சிப்ஸ் சாப்பிடுகிறாயா எனக்கேட்டு தேமேயென நின்றது. சிப்ஸை சாப்பிட்டுஇன்னமும் வயிற்றை கெடுத்துக்கொள்ள தோன்றவில்லை. இன்னமும் 6 மணிநேரம் இருந்தது மினியாபோலீஸ் விமானத்திற்கு. என்னை போல் நள்ளிரவு, அதிகாலை விமானம் பிடிக்க காத்திருந்த பலரும் இருக்கும் சேர்களில் காலை நீட்டி, முடிந்தஅளவு தூங்க முற்ப்பட்டனர். ஹூடி அணிந்திருந்த ஒரு யுவ,யுவதி குழாம் தூங்காமல் சிரித்துக்கொண்டு மற்றவர்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தனர்.

இருக்கையில் உட்கார்ந்துகொண்டே தூங்க முடியவில்லை. சுற்றும் முற்றும் கவனிக்க பலர் தரையிலேயே படுத்து உறங்குவதை கவனித்தேன். சேர்களுக்கும் கண்ணாடிச்சுவருக்குமான நடுவிலான சற்றே மறைவான இடைவெளியில் நானும் தரையில்படுத்தேன். அணிந்திருந்த ஜெர்கினை போர்வை போல் ஆக்கி அதற்குள் முடிந்தளவு உடலை குறுக்கிக்கொண்டேன். தலைக்கு என் கணினி பையை இருந்ததுக்குள் வாகான விதத்தில் வைத்துக்கொண்டேன். சற்று தேவலாம் போல இருந்தது. ஆனால்தூங்குவதற்கு ஏதுவான அமைதி கிட்டவில்லை. திடீரென ஏதேனும் ஒரு மைக்கில் அறிவிப்பும், இல்லை ஆட்கள் நடக்கும் சப்தம், வெளியிலிருந்து பளீரென ஒரு விமானத்தின் வெளிச்சம் என தொடர்ந்த தொந்தரவுகள். விமான நிலையத்துக்கு உள்ளேஇருந்தாலும் குளிர் வேறு போகப்போக அதிகமானது போல் தோன்றியது.

எப்போது அசந்தேன் என தெரியவில்லை. அலைபேசியில் வைத்த அலாரம் ஒலிக்க திடுக்கிட்டு எழுந்தேன். பாத்ரூமுக்குள் சென்று முகம் அலம்பி வெளியில் வந்தபோது ஒரு காபி சாப்பிடலாம் போல இருந்தது. ஆனால் காபி கிடைக்கவில்லை.தூக்கம் அப்பிய கண்களோடு என்னை போல பலரும் அதிகாலை மினியாபோலீஸ் ஃப்ளைட்டில் ஏற, “மெர்ரி கிருஸ்மஸ் எவ்ரிஒன்” என்ற விமானியின் உற்சாக குரலின் ஊக்கத்தில் பேரிரைச்சலோடு விமானம் கிளம்பியது.

சான்பிரான்சிஸ்கோ நகர தட்பவெட்ப நிலைக்கு முற்றிலும் வேறாக, உறையச்செய்யும் குளிரோடு மினியாபோலிஸ் வரவேற்றது. மணி அப்பொழுதே ஐந்தரை. பாப்பா பொதுவாய் 7 மணிக்கு எழுந்திருப்பவள் தான். ஆனால் கிருஸ்மஸ் அன்று சீக்கிரம்எழுந்துவிடுவாள் எனத்தோன்றியது. காலையில் எழுந்த முகூர்த்தத்தில் வீட்டின் கிருஸ்மஸ் மரத்தின் கீழ் சாண்ட்டா வைத்துவிட்டுப்போன பரிசை பிரிப்பது தான் இந்நாளின் ஆகப்பெரிய கொண்டாட்டம்.

அவசர அவசரமாய் டேக்சி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மென்மையாக சத்தம் போடாது கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன்.

”பாப்பா எழுந்துட்டாளா?” வா என வரவேற்ற மனைவியிடம் சன்னமாய் கேட்டேன்.

”இன்னும் இல்ல, ராத்திரி தூங்கறதுக்கு முன்ன பூரா அதே புராணம். சாண்ட்டா எப்ப வருவாரு, நான் இந்த வருஷம் குட்கேர்ளா இருந்தேனா, என் லெட்டர் போய் சேர்ந்திருக்குமா, அவர் எப்படிம்மா ஒரே நைட்ல எல்லா வீட்டுக்கும் போவார், என்னைமறந்துருவாரான்னு கேள்வியான கேள்வி கேட்டுட்டு தூங்கியிருக்கா” என சிரித்தாள்.

மனைவி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுகளோடு, நான் வாங்கிய டின்க்கர் பெல் பொம்மையையும் கிருஸ்மஸ் மரத்துக்கு அடியில் வைத்தேன். நல்லவேளை பாப்பா விழிப்பதற்கு முன் வந்துவிட்டேன்.

“ஒரு காபி போடுறியா” என அசதியும், தூக்கமும், பசியுமாய் சோஃபாவில் சாய்ந்தேன். பக்கத்திலிருந்த மேஜையில் ஒரு தட்டில் இரு சிறிய கேரட்டுகளும், ஒரு பிஸ்கட்டும் பாப்பா சாண்ட்டா கிளாஸ் சாப்பிடவென வைத்திருந்தாள். தனிச்சையாகஅதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

பசி இப்போது சற்றே தேவலாம் போல இருந்தது.

பாப்பா எப்போது விழிப்பாளென காத்திருக்க ஆரம்பித்தேன்.